Subscribe

BREAKING NEWS

13 April 2017

கண்ணனுக்கு சொன்ன கதை

கதை கேட்பதென்றால் நம் எல்லோருக்கும் அலாதிப்பிரியம். கதை கேட்டு வளரும் பிள்ளைகளிடம் அபரிமிதமான ஆற்றல்கள் தோன்றுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. உழைப்பு, வீரம், உதவி, உண்மை, அறம், நேர்மை என்று தனிமனிதனுக்கு தேவையான சத்விஷயங்களை உள்ளடக்கியவை - கதைகள்.
நல்ல கதைகள் காட்டும் நீதிப்படி அறம் தவறாமல் நடந்து, எந்த ஒரு கஷ்டத்தையும் தாங்கி வளரும் பண்பை, கதை கேட்டு வளர்ந்தவர்களால் பெற முடியும். இது போன்ற கதைகளை நம்முடைய முன்னோர்கள் சொன்னதால் தான் அந்த தலைமுறை பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மை, பழிவாங்கும் எண்ணம், தற்கொலை போன்ற எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் வாழ்ந்தார்கள்.
அது போன்ற ஒரு கதை தான் இது!
கண்ணனுக்கு சொன்ன கதை:
கண்ணன் தன் தாத்தாவிடம் கதை கேட்பது தினசரி வழக்கம். கதை சொல்லுமாறு தாத்தாவிடம் கேட்டு தினமும்  அன்புத் தொந்தரவு செய்வான். தாத்தாவும் தனக்குத் தெரிந்த நீதி போதனைகளை கற்பிக்கும் கதைகளை கண்ணனுக்கு சொல்வார். கண்ணன் கவனமாக கேட்டுக் கொள்வான்.
ஒரு நாள் மாலை, சொர்க்கம் நரகம் பற்றிய ஒரு கதையை தாத்தா சொன்னார். கண்ணன் வியப்போடு ரசித்துக் கேட்டான்.
-----------
ஒரு ஊரில் பெரிய பணக்காரர் வாழ்ந்து வந்தார். அவர் தற்பெருமை கொண்டவர். ஆடம்பரத்திற்காகவும், வீண் பெருமைக்காகவும் பல தான தர்மங்களைச் செய்தார். அவரால் பலனடைந்தவர்கள் அவரைப் புகழ்வதைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.
சில வருடங்களுக்குப் பிறகு முதுமை அடைந்து அந்தப் பணக்காரர் இறந்து போனார். பிறகு அவர் சொர்க்கத்திற்கு சென்றார்.
சொர்க்கத்தின் காவலர்கள் அவரை தங்க வைப்பதற்காக கூட்டிச் சென்றார்கள். அவர் சென்ற வழியெல்லாம் அழகான மாட மாளிகைகள் காணப்பட்டன. இப்படி ஒரு மாளிகையில் தான் தன்னை தங்க வைக்கப் போகிறார்கள் என்று உள்ளூர மகிழ்ந்து கொண்டு அந்தப் பணக்காரர் அவர்களோடு சென்றார்.
ஆனால் அந்த மாளிகைகளையெல்லாம் கடந்து சென்று, ஒரு குடிசைக்கு முன் பணக்காரரை அழைத்துச் சென்றனர்.
“இதுதான் நீங்கள் தங்கவேண்டிய இடம்..!’ என்று அந்த குடிசையைக் காட்டினார்கள்.
பணக்காரருக்கு கோபம் வந்துவிட்டது.
"எத்தனையோ மாளிகைகள் இருக்கின்றன.
அதைத் தராமல் ஏன் இப்படி ஒரு குடிசையில் இருக்கச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"அம்மாளிகைகள் மனப்பூர்வமாக தான தர்மங்கள்  செய்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டவை".
காவலர்கள் சொல்ல பணக்காரர் தலை குனிந்தார். பிறகு அமைதியாக குடிசைக்குள் சென்றார்.
---------------------
கதை முடிந்த பிறகு தாத்தாவிடம் "உண்மையிலேயே சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா, தாத்தா?” என்று கண்ணன்  கேட்டான்.
"இரண்டுமே இருக்கிறது கண்ணா", என்று தாத்தா சொன்னார்.
"அப்படியென்றால், அங்கெல்லாம் எப்படி செல்வது?", என்று கண்ணன் வினவினான்.

"புண்ணியங்கள் செய்தால் சொர்க்கத்திற்கும், பாவங்கள்-தீமைகள் செய்தால் நரகத்திற்கும் செல்லலாம். சொர்க்கத்திற்கு செல்வது மிக எளிது. சொர்க்கத்திற்கு இலவசமாகவே செல்லலாம்."
கண்ணனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
"அது எப்படி தாத்தா ?"
"சூதாட்டத்திற்கு செல்ல பணம் வேண்டும். மது அருந்த பணம் வேண்டும். சிகரெட் புகைக்க பணம் வேண்டும்.
கேட்க கூடாத இசையினை கேட்க பணம் வேண்டும்.
பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்க்க பணம் வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால்...
பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்.
ஆனால் அன்பு பேரனே!...
அன்பு காட்ட பணம் தேவையில்லை.
சேவை செய்வதற்கு பணம் தேவையில்லை.
நேர்மையை நிலைநாட்ட பணம் தேவையில்லை.
நேசக்கரம் நீட்ட பணம் தேவையில்லை.
இறைவனை வணங்குவதற்கு பணம் தேவையில்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவனுடைய நாமத்தை சொல்ல வேறெதுவும் தேவையில்லை.

இப்போது சொல், சொர்க்கத்திற்கு இலவசமாகவே போக முடியும் தானே?", தாத்தா தன் நீண்ட விளக்கத்தை முடித்துவிட்டு கண்ணனைப் பார்த்துக் கேட்டார்.
தாத்தா சொன்னது உண்மை என்பதை கண்ணன் புரிந்து கொண்டான். தாவிப் போய் தன் தாத்தாவைக் கட்டிக் கொண்டான்.
உங்களுக்கும் புரிந்தால், இந்தக் கதையை எல்லோருக்கும் சொல்லுங்கள்.
சொர்க்கத்தைப் போலவே இந்த கதையும் இலவசம்!
=========
இதுபோன்ற நீதிக்கதைகளைச் சொல்ல தாத்தா பாட்டிகள் வீட்டில் இல்லை. அன்புக்கு ஏங்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களை வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள்.
இன்று தாத்தா பாட்டிகள் முதியோர் இல்லத்தில் தான் இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்காக தாத்தா பாட்டிகளை முதியோர் இல்லத்தில் இருந்து மீட்டுகொண்டு வந்து கொடுங்கள். உங்கள் குழந்தைகள் பரந்துபட்ட இச்சமுதாயத்தில் நல்லவர்களாக உருவாகட்டும்.

No comments:

Post a Comment