Subscribe

BREAKING NEWS

10 May 2018

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (10)

அனைவருக்கும் வணக்கம்.

சும்மா விளையாட்டு போக்கில் ஆரம்பித்த வாழ்வாங்கு வாழ என்ற தொடர்பதிவு இன்று பத்தாவது பதிவை எட்டி உள்ளது. இந்த தொடர்பதிவை தொடர்ந்து வாசித்து அதனை கருத்தில் கொள்பவர்கள் கண்டிப்பாக ஆன்மிகத்தில் புதிய நிலை தொடுவார்கள் என்பது உறுதி. நாமும் இங்கேதான் உளியால் செதுக்கப்பட்டு வருகின்றோம். இந்தப்பதிவில் இரண்டு கேள்விகள் அதற்கான பதில்களை திரு.இராம் மனோகர் ஐயா அவர்கள் வாயிலாக கேட்க இருக்கின்றோம்.


கேள்வி - உண்மையான பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? பக்தனுக்கு சோதனை தராமல் அரள் செய்யும் கடவுளே இல்லையா?



இராம் மனோகர் - ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லிக் கடன் வாங்கிச் செலுத்திக் கொண்டே வருகிறோம். வட்டியைத்தான் செலுத்த முடிகிறதே தவிர, கடன் அடைந்த பாடில்லை. குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி அதை, இதை விற்றாவது முழுக் கடனையும் அடைத்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். நகை நட்டு, நிலபுலன்கள் என்று அனைத்தையும் விற்றுக் கடனை அடைத்து விட்டு அமைதியடைகிறோம். மொத்த கடனையும் அடைக்க வேண்டும் எனும் பொழுது மிகுந்த சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனினும் கடனை அடைத்து விட்டால் பெரிய நிம்மதி வந்து விடுகிறது. அது போலத்தான் உண்மையான பக்தன் நிலையும் இருக்கிறது.

மாதா மாதம் வட்டி செலுத்துவது போல, வினைகளை அனுபவிப்பதும், மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்வதும் சராசரி மனிதனின் நிலையாக இருக்கிறது. ஆனால், பக்தன் அவ்வாறு அல்லவே ? அவன் மொத்த வினைகளையும் வேரறுக்க நினைக்கிறான். இந்தப் பிறவியிலேயே வினைகளைக் கடந்து, வினையற்ற நிலைக்குப் போகத் துடிக்கிறான். எனவே வினைகள் விரைவு பெற்று வந்து அழுத்துகின்றன. மனம் தளராமல் நம்பிக்கையோடு எதிர் கொள்பவனை தெய்வம் கை விடுவதில்லை. சோதனைகள் சூழ்ந்தழுத்தும் பொழுது இறையருள் அவனுக்குத் துணையாகவும், பாதுகாப்பாகவும் நின்று நல்வழிப்படுத்துகிறது. ஆனால், அவநம்பிக்கை கொண்டாலோ தெய்வ அருளை அவன் அடைய முடியாமல் போய் விடுகிறது. இதற்குப் புராணங்களில் பல உதாரணக் கதைகள் உண்டு.

பொதுவாகவே அவரவர் வினைகளின் விளைவைத்தான் அவரவர் அனுபவிக்கிறார்கள். அப்படியானால் கடவுள் காப்பாற்ற மாட்டாரா ? கேள்வி எழும். நிச்சயமாகக் கடவுள் காப்பாற்றுவார். ஆனால் அதற்குத் தகுதியானவர்களாக நம்மை நாம் திருத்தியமைத்துக் கொள்வது அவசியம். முதலில் நமக்குள் இருக்கும் கடவுள் தன்மையை நாம் உணர வேண்டும். புற வழிபாடுகளால் மகிழ்ந்து கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று எண்ணிக் கொள்வது அறியாமையே. நாம் மேலும் மேலும் பாவங்களைச் செய்து வினைகளைப் பெருக்கிக் கொண்டே போக, கடவுள் நம்மைக் காக்கவில்லையே என்று கருதுவது கள்ளத் தனமாகும்.
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதோடு கடவுளையே ஏமாற்றும் கயமைத் தனமாகும் அது. இத்தகைய குரங்கு மனதின் கள்ளத்தனங்களுக்கு ஞானிகளும் விதி விலக்கல்ல. இந்த மனதின் மாயப் பிடியிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது அவர்கள் பாடல்களைப் படிக்கும் பொழுதே தெரிகிறது. இதனால்தான் மனதைக் குரங்கு என்றும், மதம் பிடித்த யானை என்றும், காட்டுக்கடங்கா குதிரை என்றும், காட்டாற்று வெள்ளமென்றும் பலவாறாக உதாரணப் படுத்திப் பேசுகிறார்கள்.

வள்ளல் மணிவண்ணனே என்றென்றேயுனையும் வஞ்சிக்கும்,
கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்தொழிந்தேன், - நம்மாழ்வார்.
கள்ள மனம் துள்ளும், தன்னுள்ளம் தனையே தின்னும். - மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.

கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்?
- பத்ரகிரியார்.

கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக்
கள்ளமெத் தனையுள்ளசற்
காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை ?
- தாயுமானவர்.

இப்படி மனதின் கள்ளத் தனத்தைக் குறித்து எல்லோருமே பாடியிருக்கிறார்கள். இந்த மனம் என்பது கண்ணாடிக்கு ஒப்பானது. பரிபக்குவம் அடைந்த மனம் தூய கண்ணாடியை ஒத்தது. அழுக்கில்லாத, வளைவுகள் இல்லாத கண்ணாடி மறுபுறத்தில் உள்ளவற்றைத் தெளிவாக, உள்ளதை உள்ளபடி காட்டும். அழுக்கடைந்த, வளைந்து, நெளிந்த கண்ணாடி மறுபுறத்தில் உள்ள பொருட்களை உள்ளபடி காட்டாது. இந்த மனம் என்ற கண்ணாடியின் மூலம்தான் ஆன்மாவானது புறத்திலுள்ள உலகைப் பொருள் படுத்துகிறது.

மனதில் கள்ளத்தனம் என்கிற குறைபாடு இருப்பதால் புறவுலகமும் அதற்கேற்றபடி குறைபாடு உள்ளதாகத் தோன்றுகிறது. எனவே மனதை மாசற்றதாக மாற்றியமைக்க வேண்டியது தலையாய கடமையாக இருக்கிறது. திருத்தி அமைத்தவன் மேலோனாகிறான். கள்ளத் தனம் என்கிற மாசு படியும்படி விட்டு விடுகிறவன் கீழ்மையடைகிறான். கெட்டுப் போன மனது பிறர் கூறும் நல் உபதேசங்களை ஏற்றுக் கொள்ளாது. நல்ல விஷயங்களைக் கூறினாலும் அதைப் பொலாங்காகப் பொருட்படுத்துவது சிறுமதி படைத்தவர்களின் இயல்பாகும்.

கல்வியிலும், கேள்வியிலும் மேன்மையுற்று இருப்பவர்களுக்கே நல்ல காரியங்களை எடுத்துச் சொல்லும் பொழுது, அவர்கள் மனம் அதை ஏற்றுக் கொள்கிறது. வாலி கல்வி, கேள்விகளிலும், தவத்திலும் சிறந்தவன்தான் என்றாலும் கூட அவன் மனதில் ஆசையும், காமமும் கள்ள தனத்தை ஏற்படுத்தி விட்டன. உடன் பிறந்தவனோடு பிணக்கம் வேண்டாம் என்றும், தம்பியோடு போர் புரிய வேண்டாம், தலைக்கு மேல் ஆபத்து காத்திருக்கிறது என்றும் மனைவி தாரை எடுத்துக் கூறிய பொழுது அவன் கள்ள மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ராமனின் அம்பு இதயத்தில் புகுந்த பிறகுதான் கள்ளத் தனங்கள் மனதினின்று விலகி நல்லறிவு அவனுக்கு ஏற்பட்டது.

துரியோதனனின் கூடவே இருந்து கொண்டு, தக்க சமயங்களில் எல்லாம் நல்லுபதேசங்களை பீஷ்மர் கூறினாலும் கூட அவன் கள்ள மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சகுணியின் சூழ்ச்சி வலையில்தான் வீழ்ந்தான். வேறு எத்தனையோ நற்குணங்களைப் பெற்றிருந்த போதிலும் சகோதரர்களிடத்தில் அதாவது பங்காளிகளை வெறுத்தல் எனும் துர்குணத்தால் அவன் மனம் முழுவதும் கள்ளம் புகுந்து விட்டது. சில நேரங்களில் பக்தர்களுக்கும் கூட இறைவன் இல்லையோ என்கிற சந்தேகம் வந்து விடும். கடவுள் இருந்தால் தனக்கு ஏன் இத்தனை துன்பங்கள் வருகின்றது ? நாம் யாருக்கும் தீங்கு செய்யவே இல்லையே ? என்று தோன்றுகிறது. கடவுளே இல்லை என்று நம்புகிறவனுக்கு ஒரு வேளை கடவுள் இருக்கிறாரோ என்ற சந்தேகம் வரக் கூடும். ஆனால், கடவுள் இருக்கிறார் என்று முழுமையாக நம்புகிறவர்களுக்கு இந்த சந்தேகம் வரலாமா ?

ஆனாலும், வினைகளின் பரியந்தம் அனுபவிக்கும் துன்பத்தின் வெம்மை தாளாமல் அந்நிலை வந்து விடுகிறது. என்றாலும், அவர்கள் கடவுளை. வள்ளலே, மணி வண்ணா என்று வெளியே சொல்லிக் கொள்வார்கள். இந்தக் கள்ளத் தனமெல்லாம் கடவுளுக்குத் தெரியாதா என்ன ? தானும் அப்படிப்பட்ட நிலையில் இருந்ததாகச் சொல்லி ''உன்னை உண்மையான அன்போடு வேண்டாமல், வெளி வேசமாக, அவநம்பிக்கையோடு, கள்ள மனத்தோடு புகழ்ந்து என்னை நானே ஏமாற்றிப் கொண்டேன். பிறகு என் கள்ள மனதை பக்குவப்படுத்தி, திருத்திக் கொண்டதால் உன்னைக்(உண்மையை) கண்டு கொண்டேன். இனி உன்னை விடமாட்டேன்" என்று நம்மாழ்வார் சொல்கிறார்.

உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடைக் கல்வி இலோரே. - திருமந்திரம்.

மனதின் வசப்பட்ட இந்த உடலில் மூலாதாரம் முதலாகச் சகஸ்ராரம் வரை ஏழு தீர்த்தங்கள் உள்ளன. வினை நீங்க இவ்வாதாரங்களில் பொருந்தி தியானித்து சந்திர அமுதமெனும் ஞான தீர்தத்தை அருந்த மாட்டாமல் பூமியில் பள்ளத்திலும், மலை மேட்டிலுள்ள சுனைகளையும் தேடி அலைவார்கள் கல்வியறிவு இல்லாத கள்ள மனம் படைத்தவர்கள் என்கிறார் திருமூலர். எத்தனை எத்தனையோ நூல்களைப் படித்து என்ன பயன் ? அவற்றால் மனமானது பரிபக்குவம் அடைவது இல்லையே ? கடவுள் ஒருவரே மெய்ப் பொருள் மற்ற அனைத்தும் நிலையற்றவை என்கிற பேருண்மையை கற்று, அறிந்து உணர்ந்தவனே கல்வி கற்றவனாவான். மற்றவரெல்லாம் கல்லாத கள்ள மனம் படைத்தவரே என்பது உட்கருத்து.

நம் உள்ளத்திலேயே இறைவன் உறைந்திருக்க, அதை நாம் அறியாமல் போவதின் காரணமென்ன ? கள்ள மனம்தான் காரணம். பக்தி கொள்கிறோம், தவம் செய்கிறோம் எனினும், அவ்வப்போது உலகாய தேவைகளுக்காக பாவங்களையும் செய்கிறோம். நாம் பக்தி கொள்வதால், தவம் செய்வதால் நம் பாவங்களை இறைவன் கண்டு கொள்ள மாட்டார் என்று எண்ணிக் கொள்கிறோம். அப்படியே இறைவன் தெரிந்து கொண்டாலும் நம்மை மன்னித்து விடுவார் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். இதுதான் கள்ள மனம். சத் காரியங்களுக்கு விரோதமாக நடந்து கொள்பவர்களை இறைவனே கூட காப்பாற்ற முடியாது.

ஒருவன் அறியாமை எனும் அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடந்ததால் பாவம் செய்தான் என்று வைத்துக் கொள்வோம். அவன் மனம் திருந்தி இறைவனிடம் மன்றாடும் பொழுது அதை அவர் மன்னிக்கக் கூடும். மன்னித்தால்தான் அவர் இறைவன். ஆனால், பக்தி, தவம் முதலியவற்றைச் செய்கிற ஒருவன் தெரிந்தே பாவங்களைச் செய்யும் பொழுது இறைவன் எப்படி அதை மன்னிப்பார் ? எனவே மனதில் உள்ள கள்ளத் தனங்கள் அனைத்தும் மறைந்து போகின்ற அளவுக்குத்தான் ஒருவன் தன் உள்ளத்தில் உறையும் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.
கள்ளத் தனங்களை மனதில் வளர்த்துக் கொண்டே பக்தி செய்பவன் ஒரு நாளும் இறையருளுக்குப் பாத்திரமாக முடியாது. இதையே, ''கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு

உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம் ?
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம் ? '' என்று பத்திரகிரியார் தன் மெய்ஞானப் புலம்பல் மூழமாகச் சூக்குமமாகச் சொல்லுகிறார். எனவே நான் பக்தி செலுத்துகிறேன், தியானம் செய்கிறேன் ஆனால், எனக்கு துன்பங்களே தொடர் கதையாக இருக்கிறது என்று சொல்பவர்கள் முதலில் தன் மனதின் கள்ளத் தனங்களை வேரறுக்க வேண்டும். எல்லா பாவங்களையும் செய்வதோடு, கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்து கொண்டு, பக்தியும், தியானமும் செய்வதால் யாதொரு பயனுமில்லை. இதுவே கள்ள மனதின் அடையாளம்.

இவர்களுக்கு கடவுளே இல்லை என்று சொல்கிற அஞ்ஞானி எவ்வளவோ மேல். தெரிந்தே பாவங்களைச் செய்கிற கள்ள மனம் படைத்தவர்களை எந்தக் கடவுளும் காப்பாற்ற மாட்டார். அவர்களுக்குத்தான் பல கடவுள்கள். கள்ள மனம் அற்றவர்களுக்கு கடவுள் ஒருவரே. அவர்களை எந்தப் பாவமும் பற்றுவதில்லை, அவர்களுக்கு எந்தத் துன்பமும் நேர்வதில்லை, அவர்களை கடவுள் வந்துக் காப்பாற்ற வேண்டிய அவசியமுமில்லை. ஏனென்றால் அவர்களும் கடவுளும் வேறல்ல.


கேள்வி - எனது கிருத்தவ நண்பன் நமது இந்து மதத்தை மூடப் பழக்க வழக்கங்கள் உடைய மதம் என்று கூறுகிறான். என்னால் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை. நான் அவனுக்கு என்ன பதில் சொல்வது ?



இராம் மனோகர் - நான், எனது, தனது என்கிற எண்ணம் இருக்கிறவர்கள் மட்டுமே இப்படிப் பேசுவார்கள். அறிவுள்ளவர்கள், இறையுணர்வாளர்கள் யாரும் இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. எந்த குருமார்களும் தனக்கென்று ஒரு மதத்தைப் படைத்துக் கொண்டதேயில்லை. அவர்கள் சொல்கிற, செல்கிற வழியைப்(மார்க்கம்) பின்பற்றியவர்கள் காலப் போக்கில் மார்க்கத்தை மதமாக்கி என் மதம், உன் மதம் என்று முரண்பட்டுக் கொள்கிறார்கள். மகான்கள் அவரவர்கள் தோன்றிய இடத்தில் வாழ்ந்த மக்களின் அறியாமையைப் போக்கி, இறையுணர்வை ஏற்படுத்துவதற்காக ஒழுக்கங்களை, அறநெறியை, வழிபாட்டு முறைகளை போதித்தார்கள். வெவ்வேறு தேசங்களில் வாழ்கிற மக்களது வாழ்க்கை முறையும், கலாச்சாரங்களும் வெவ்வேறு விதமாக இருந்தன. எனவே மகான்களது போதனைகளும் இடத்திற்குத் தகுந்தாற் போல மாறுபாடு உடையதாகவே இருந்திருக்கும்.

உதாரணமாக நம் தமிழ் நாட்டில் ஐவகை நிலங்கள் இருந்தன என்றும், அந்த ஐவகை நிலங்களில் வாழ்கிற மக்களின் வாழ்க்கை முறையும், கலாச்சாரமும், உணவு முறையும், தொழில்களும், வணங்கும் தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் வேறு வேறாக இருந்தன என்றும் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. காலப் போக்கில் அவை வெவ்வேறு சமயங்களாக வடிவெடுத்து அவர்களே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள் என்பதெல்லாம் நாம் அறிந்ததே. தமிழ் நாட்டுக்குள்ளேயே இத்தகைய சமய கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள், உன் சமயம், என் சமயம் என்றெல்லாம் சண்டைகள் இருக்கும் பொழுது, எங்கோ தொலை தூரத்தில் வேறு ஒரு கண்டத்தில் தோன்றிய ஒரு மார்க்கம் இங்கே பரவும் பொழுது, அதிலுள்ள எல்லா கோட்பாடுகளும் இங்கிருக்கும் சமய நம்பிக்கைகளோடு எப்படிப் பொருந்தும் ? பொருந்தாது.
பொருத்திப் பார்ப்பதே தவறு. எல்லாம் இறைவனால் படைக்கப்பட்டது என்றால், படைக்கப்பட்ட எதன் மூலமாகவும் நாம் இறைவனை அடைய முடியும் என்பதுதான் நிதர்சனம். எனவே அவரவர்களுக்கு ஒரு பண்பாடு, கலாச்சாரம், வழிபாட்டு முறைகள் இருக்கும். அதை நாம் மதிக்க வேண்டுமேயல்லாது. அதைக் குற்றம் சொல்லக் கூடாது. ஏதோ ஒரு வழிபாட்டு முறையின் மூலமாக மனதைப் பக்குவப்படுத்தி மேன்மையடைய வேண்டும் அவ்வளவுதான். இப்படித்தான், இதுதான் என்பதெல்லாம் தேவையற்ற வீணர்களின் வேலையாகும். மூடப் பழக்கம் என்றால் என்ன ?
 உண்மையறியாது இருப்பது அல்லது உண்மைக்குப் புறம்பாகச் செயல்படுவது மூடப் பழக்கமாகும். ஒரு விஷயம் யாருக்கு அறிவில் தெரியாமல் மூடப்பட்டுக் கிடக்கிறதோ அவர் அந்த விஷயத்தைப் பொருத்த வரை மூடப்பட்ட ஆள். அதுதான் முட்டாள் எனப்படுகிறது.


ஆக உண்மைக்குப் புறம்பாகச் செயல்படுவதுதான் மூடப் பழக்கமாகும். இறைவனால் படைக்கப்பட்ட ஏதோ ஒரு உண்மையைப் பற்றி, மனப் பக்குவம் அடைந்து மேன்மையுற வேண்டும் அவ்வளவுதான். உதாரணமாக ஒரு லாலா கடையில் பல வகையான இனிப்புகளைப் பார்க்கிறோம். எல்லாம் சர்க்கரையில் செய்ததுதான். நிறங்களும், வடிவங்களும், சேர்க்கை காரணமாக கொஞ்சம் மாறுபட்ட சுவையும் இருக்குமே தவிர, எல்லாம் இனிப்புதான். எல்லாவற்றையும் பகுத்து, ஒதுக்கிக் கொண்டே போனால் கடைசியில் அனைத்திற்கும் பொதுவானது சர்க்கரை என்பது தெளிவாகி விடும். அது போலவே மார்க்கங்களும். செல்லும் அல்லது கடைபிடிக்கும் வழிமுறைகள் மாறுமேயல்லாது, சென்றடையும் முடிவான இடம் மாறாது. ஆணவ மறைப்பு, அகங்காரம் நான் எனது, தனது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, நான் கடைபிடிக்கும் வழிமுறையே சிறந்தது என்ற முரண்பட்ட உணர்வை உருவாக்கி விடுகிறது.

நான் உங்கள் நண்பரிடம் கேட்கிறேன். இந்து மதம் மூடப் பழக்கமுடையது என்று சொல்கிறீர்கள். அதாவது உண்மையை விட்டு விலகிய செயல் முறைகளை உடையது என்று கூறுகிறீர்களே ?

 ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதே விபச்சாரம்(மத் - 5.28),
தன் சகோதரனைப் பகைப்பதே கொலை பாதகம்(யோவா - 3.15),
 விருந்துகளுக்கு பணக்காரனை விட ஏழைகளையே அழைக்க வேண்டும்(லூக் - 14;12. 14), எல்லோரையும் மன்னிக்க வேண்டும்(மத் - 18.35),
தீமை செய்தவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டும்( உரோ - 12.14),
வரதட்சிணை கேட்டு வாங்குவது குற்றம்(கொலோ - 3.5),
பழிக்குப் பழி வாங்கக் கூடாது( உரோ - 12.19),
எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடுக்க வேண்டும்(உரோ - 12.20),
ஜாதி பார்ப்பது குற்றம்(யோவா - 17 - 21, 22)

இப்படி ஒவ்வொரு கிருத்தவரும் கடைபிடிக்க வேண்டிய தருமங்கள் பைபிளில் நிறைய இருக்கிறது.
வசனத்தை கை கொள்ளுபவனே பாக்கியவான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நான் ஒரு இந்துவாக இருந்தாலும் பைபிளில் உள்ள பல கருத்துகளை மதித்துப் போற்றி, அதை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்து நடக்கிறவன். உதாரணமாக பகைவனிடத்திலும் அன்பு கூறுங்கள், வெறுப்போருக்கும் நன்மை செய்யுங்கள், சபிப்போருக்கு ஆசி கூறுங்கள், உங்களை இகழ்ந்து பேசுபவர்களுக்காகவும் இறைவனிடத்தில் வேண்டிக் கொள்ளுங்கள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு, உங்கள் மேலாடையை எடுக்கிறவன் அங்கியையும் எடுத்தாலும் அவனைத் தடுக்காதிருங்கள், உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள், திரும்பக் கிடைக்கும் என்று எண்ணிக் கடன் கொடுக்காதீர்கள், மற்றவர்களைக் கண்டனம் செய்யாதிருங்கள் இப்படி நிறைய வசனங்கள் எனது விருப்பத்திற்குரிய, வழிகாட்டும் வசனங்களாக இருக்கின்றன.

நான் இப்பொழுது கேட்கிறேன். உங்களில் யாரேனும் ஒருவர் நான் மேலே குறிப்பிட்டுள்ள வசனங்களை அப்படியே கடைபிடிக்கிறேன் என்று சத்தியப் பிரமாணம் செய்யுங்கள், நான் ஏற்றுக் கொள்கிறேன், இந்து மதம் மூடப் பழக்க வழக்கங்களை உடையது என்று. இதை யாரையும் குற்றப்படுத்தவோ, உயர்த்தி, தாழ்த்திப் பேசவோ இங்கே குறிப்பிடவில்லை. இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கில் செய்யப்படும் எந்த வழிபாட்டு முறையுமே மூடத்தனமில்லை என்பதைச் சொல்லவே இதைக் குறிப்பிடுகிறேன். ஏதோ ஒரு வழிபாட்டு முறையைக் கைகொண்டு, தான் செய்யும் வழிபாட்டு முறையை மற்றவர்கள் குறை கூறுவார்களே என்று கூடக் கவலைப்படாமல் ஒரே மனதோடு, ஆழ்ந்த நம்பிக்கையோடு செயல்படுவது மூடத்தனமா ? தனக்கு விதிக்கப்பட்ட கட்டளைகளை, வசனங்களை படிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு, அதை வாழ்வில் கடைபிடிக்காமல், சொல்லொன்றும் செயலொன்றுமாக நடப்பது மூடப் பழக்கமா ? அவரவர் வழி அவரவர்களுக்கு. அடுத்தவர்கள் மனதைக் காயப்படுத்துவதும், அவர்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதும், அடுத்தவர்கள் உரிமைகளில் தலையிடுவதும்தான் மூடப் பழக்க வழக்கம் என்பதை உணருங்கள்.


நன்றி - திரு.இராம் மனோகர் ஐயா அவர்கள்

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9) - http://tut-temple.blogspot.in/2018/04/9.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (8) - http://tut-temple.blogspot.in/2018/02/8.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment