Thursday, May 31, 2018

வெள்ளியங்கிரி ஈசனே போற்றி !

அனைவருக்கும் வணக்கம்.

வெள்ளியங்கிரி மலையேற்ற பதிவில் ஆறாவது மலை சென்று நாம் தங்கி இருப்பது வரை கூறி இருந்தோம். இதோ அங்கிருந்து இந்த பதிவில் தொடர விரும்புகின்றோம். அடுத்த நாள் காலை எழுந்து விடியலிலே செல்ல விரும்பினோம். ஆனால் நம்மால் எழ முடியவில்லை. குளிர்..குதூகலித்துக் கொண்டிருக்க, கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. காலை 5 மணிக்கு எழுந்து முகம் கை,கால் அலம்பி விட்டு, சுமார் 8 பேரோடு ஏழாவது மலை நோக்கி நடந்தோம்.


முந்தைய நாள் சூரியன் மறைவு....இதோ அடுத்த நாள் காலை மலையேற்ற காட்சிகள்.

குளிர் என்றால் அப்படி ஒரு குளிர். கை கால்கள் மறத்து இருந்தது. அப்படியே நடையைக் கட்டினோம். இப்படி ஒரு இன்ப நிலையை நாம் இது வரை அனுபவித்ததில்லை.
நேரம் ஆக ,ஆக சூரிய பகவான் தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடந்து, மலை ஏறினோம். கற்கள், பாறைகள் என அனைத்தும் கலந்து ஏழாவது மலை இருந்தது. அப்போது மலை ஏற, ஏற மனம் இன்னும் விரிந்தது. சொல்லில் அடங்கா சுகானுபவம் அது. இப்போது நினைத்தாலும் அந்த காற்று,குளிர்,பனி என்ற இயற்கையின் இன்பம் கண்ணுள் விரிகின்றது. நகர இரைச்சலில் இருந்து விலகி, இரண்டு நாட்கள் ..இயற்கையோடு பின்னி, சித்தர்களுடன் சிந்தித்து..நடையாய் நடை நடந்து என இன்பமான இரண்டு நாட்கள்.

அப்போது நமக்கு முன்னர் ஒரு குட்டிப் பாப்பா அவளது தாத்தாஉடன் சென்று கொண்டிருந்தார். விசாரித்ததில் சென்னை ஊரப்பாக்கம் என்று சொன்னார்கள். நாமும் அறிமுகம் செய்து விட்டு, பின் தொடந்து மலை ஏறிக் கொண்டே இருந்தோம்.ஆங்காங்கே சில கடினமான பாதைகள். இருப்பினும் கை கொடுத்து உதவி மேலே ஏறினோம். இந்த யாத்திரையில் புதிதாக நம்முடன் இணைந்த திருமதி. உமா அவர்களை நம் தம்பி வினோத்குமார் அவர்கள் யாத்திரை முடியும் வரை உடனிருந்து அழைத்து வந்தார். அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இதோ..ஏழாவது மலையை நெருங்கி விட்டோம். மனமெங்கும் உற்சாகம் பற்றிக் கொண்டது. இதற்குத் தானே இரண்டு நாட்களாய் பயணித்து வருகின்றோம். முப்பட்டை போட்ட கல் பாறை கண்டதும் நாம் நெருங்கிவிட்டோம் என்று உணர்ந்தோம். பெண்களை அழைத்து சென்றால் மேலே திட்டுவார்கள் என்று கூறினார்கள். மேலும் பூசைக்கென்று வஸ்திரம் உட்பட பொருட்கள் வைத்து இருந்தோம். நம்முடன் வந்தவர்கள் நிறைவான  தரிசனம் பெறவும், அவருக்காக கொண்டு வந்த பூசை பொருட்களை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டி மனதுள் பிரார்த்தித்தோம்.

திருக்கோயில் செல்ல உள்ள நுழைவாயில் கண்டதும் அனைவரும் ஆனந்தம் கண்டோம். அப்படியே குழு காட்சிப்படம் எடுத்து விட்டு அங்கிருந்த அந்த பெரிய பாறையைப் பார்த்து, அங்கு எத்தனை எத்தனை சூலாயுதம் மற்றும் மணிகள் என கண்டு, பார்த்து அப்படியே உள்ளே சென்றோம். பனி தன் பணியை செய்து கொண்டிருந்தது.

ஒவ்வொருவரும் பிரம்மிப்போடு நடந்து வந்தார்கள். நம் தம்பி சிவ சங்கரன் பதிகங்கள் பாடிக் கொண்டே நடந்து வந்தார். ஒவ்வொருவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். பின்னே. இருக்காதா? எவ்வளோ பேரில். நம்மை அந்தப் பெருமான் தேர்வு செய்து இங்கு வரவழைத்து ஆனந்தக் கண்ணீரில் மிதக்க விடுகின்றார் என்றால் நாம் செய்த புண்ணியமே இது. வெள்ளியங்கிரி அடிவாரக் கோயில் தான் பெரிது. இங்கே கோயில் என்றதும் பெரிதாக கற்பனை செய்ய வேண்டாம். சிறிய குடிசையில்,எளிமையாக எம் பெருமான் வீற்று இருக்கின்றார். நாம் சில காணொளிகள் கண்ட போது இங்கு பூசை செய்வதற்கென்றே பழுத்த அடியார் இருப்பதாக கேளிவிப்பட்டோம்.சென்ற ஆண்டு அவரைக் காண முடியவில்லை. இந்த ஆண்டு நிச்சயம் அவரிடம் ஆசி பெறலாம் என உள்ளுணர்வு உணர்த்தியது. அங்கே சென்றதும் திருநீறு இட்டு, அப்படியே ஒவ்வொருவராக சென்றோம். பார்ப்பதற்கு சிவகணங்கள் போன்று நாங்கள் உணர்த்தப்பட்டோம்.


சிறிது நேரத்தில் அந்த அடியார் அங்கு வந்து, சாம்பிராணி போட்டு, வெளியே வந்து காண்பித்தார். வாத்தியங்கள் முழங்க, பதிகங்கள் பாட, அந்த இடமே கைலாயமாக இருந்தது. நல்ல மலை உச்சி, எம்பெருமான் தரிசனம், உடலை உலுக்கும் குளிர், சாம்பிராணி வாசம், மிதமான சூடு, அடியார் கூட்டம், பதிகங்கள் நம் காதில்...சொல்ல சொல்ல இனித்துக் கொண்டே இருந்தது. அப்படியே மெய் உருகும் தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. புல்லாய்,புழுவாய்,பூவாய்,மரங்களாய் எத்துனை பிறவிகள் எடுத்து வந்துள்ளோம் வெள்ளியங்கிரி ஈசா...என்று மனமுருகினோம்.

- தரிசனம் இன்னும் பெறுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

வெள்ளியங்கிரி ஆண்டவரே துணை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_81.html

ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html

வெள்ளியங்கிரி யாத்திரை -2018 - http://tut-temple.blogspot.in/2018/04/2018.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌