Thursday, June 7, 2018

மீண்டும் மீண்டும் கருணையாம் அருணையிலே...

அருணாச்சல சிவ அருணாச்சல சிவ 
அருணாச்சல சிவ  அருணாச்சலா 

என்ன தான் இருக்கின்றது அருணையிலே? என்ன தான் இல்லை அருணையிலே! என்பது தான் நாம் சொல்ல விரும்பும் பதிலாக உணர்கின்றோம். சொல்வதற்கு தான் தெரியவில்லை. உணர்ந்தால்  தான் புரியும் என்றே நமக்குத் தோன்றுகின்றது. இதோ மீண்டும் திருஅண்ணாமலை பற்றி இப்பதிவில் பேச இருக்கின்றோம்.

திருஅண்ணாமலையில் கிரிவலம் என்பதையும் தாண்டி பல இடங்களை தரிசிக்க வேண்டியுள்ளது.அதே போல் அருணாச்சலேஸ்வரர் கோயிலிலும் பல இடங்கள் உண்டு. அதனையெல்லாம் இங்கே பட்டியலிட்டு காட்ட உள்ளோம்.

ஸ்காந்த மகா புராணத்தில் 

"மூன்று யோசனை (30 மைல்கள்) அளவுள்ளதாகிய இத்தலத்தில் வசிப்பவர்களுக்கு, குற்றமகற்றும் 
குருவினுடைய தீக்ஷை எல்லாம் இல்லாமலேயே பற்றற்றதான, என்னோடு இரண்டறக் கலக்கும் 
சாயுச்சிய முத்தியை சர்வேசுவரனாகிய நானே கொடுக்கின்றேன்"

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் கிரிவலம் பற்றியும் 

பிரதஷிணமென்பது படைப்பனைத்தும் எல்லையில்லா என்னுளே சுழல்வன வென்றுணர்தலே யென்று ரிபு கீதையிற் கூறப்பட்டுள்ளது. அருணாச்சலத்தை  பிரதஷிணம்  செய்தல் அகிலவுலகையும் பிரதஷிணம் செய்தலுக்கு நிகரென்று சொல்லப்படும். அதாவது,, அகிலவுலகும் அருணாச்சலத்தில் அடக்கமென்றவாறாம். அருணாச்சல ஆலய பிரதஷிணமும் அவ்வாறே சாலச் சிறப்புடையதாகும். ஆகவே, முடிவில் ஆத்மாவில் அடக்கமென்பதே அகில வேதாந்த சித்தாந்தமாம்.

ஸ்காந்த மஹாபுராணம் உணர்த்துவது கீழ்கண்டவாறாக 

ஞாயிற்றுக்கிழமை பிரதஷிணம் செய்பவன் சூரிய மண்டலத்தைப் பிளந்து சென்று, முத்தனாய் சிவலோகம் அடைகிறான். 

திங்கட்கிழமை பிரதஷிணம் செய்பவன் ஜனன மரணங்களற்று உலகத்தில் சந்தோஷியாய் விளங்குகிறான்.

செவ்வாயில், கடன் முழுதும் ஒழிந்து சக்கரவர்த்தியாய் ஆகிறான்.

புதனில் ஸர்வக்ஞனும் பண்டிதனும் ஆவான்.

வியாழனில் ஸர்வதேவர்களாலும் வணங்கப்பட்டு, உலக குருவாய் விளங்குவான்.

வெள்ளியில் ஸகல பாக்கியங்களும் பெற்று, விஷ்ணுபதம் அடைகிறான்.

சனியில், கிரஹ பீடையினின்றும் நீங்கி ஜகத்தில் ஜெயமடைகிறான்.

என்று கூறியுள்ளது. நம்பி கிரிவலம் செல்லுங்கள், வாழ்வில் வசந்தம் பெறுங்கள். சரி..இனி திருக்கோயிலின் உள்ளே பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கலாம்.
பொதுவாக திருஅண்ணாமலை சென்று கோயிலுக்கு சென்றால் அம்மையப்பன் தரிசனம் பெற்று விரைந்து வந்திடுவோம். ஆனால் கீழ்கண்ட இடங்களையும் ஒவ்வொருமுறை செல்லும் போதும் தரிசித்து வாருங்கள்.

1. ராஜகோபுரம் (கிழக்கு கோபுரம் )
2. கம்பத்து இளையனார் (முருகன்) ஆலயம் 
3. சிவகங்கை தீர்த்தம் 
4. சர்வசித்தி விநாயகர் ஆலயம் 
5. பிரம்ம தீர்த்தம் 
6. திருமஞ்சன கோபுரம் ( தெற்குக் கோபுரம் )
7. ஆயிரங்கால் மண்டபம் 
8. பாதாள லிங்கம் 
9. பெரிய நந்தி 
10. கிளி கோபுரம் 
11. கோவில் யானை 
12. அம்மணி அம்மன் கோபுரம் ( வடக்கு கோபுரம் )
13. பேய் கோபுரம்  ( மேற்கு  கோபுரம்) 
14. பசுமடம் 

நாமும் பலமுறை கிரிவலம் சென்றாலும் அம்மையப்பன் தரிசனம் பெறமாலே தான் வருவோம். அம்மையப்பன் தரிசனம் பெற நாம் மற்றொரு நாளிலே தான் செல்ல வேண்டும். பொதுவாக பௌர்ணமி கிரிவலம் முடித்து கோயில் சென்று வழிபடுவது சற்று கடினமே. எனவே தான் விடுமுறை நாட்களில் நாம் சென்று வருவது வழக்கம். ஏகாந்தமாய் அண்ணாமலையாரோடு பேசி, கிரிவலம் செல்ல இதுவே சிறந்ததும் ஆகும். அப்படி செல்லும் போது வழக்கமாக அம்மையப்பன் தரிசனம் மட்டுமே. ஒவ்வொரு முறை தரிசனத்தில் பாதாள லிங்கம் பற்றி பார்ப்பது வழக்கம். ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது. ரமணரின் அருள் வெளிப்பட்ட இடம்.
பாதாள லிங்கம் பற்றிய குறிப்பு இதோ..முன்னொரு காலத்தில் அண்ணாமலையில் நடந்த நிகழ்வு மரணபயத்தை போக்கும் விதமாத சிவனால் அருளப்பெற்றது. அதாவது அக்காலத்தில் வாழ்ந்த மாகான் ரமணருக்கு தனது மரணம் பற்றிய பயம் ஆட்கொள்ளவே திருவண்ணாமலை நோக்கி சென்றார்.

அங்கு சென்ற அவர் ஒரு புற்றை கண்டார் அதற்குள் தவயோகி இருப்பதாக அறிந்து கொண்ட அவர் அங்கேயே அமர்ந்து தியான நிலைக்கு சென்று விட்டார். பின்னர் அவர் சிவனின் அருளால் முக்தி நிலையடைந்தார்.

இந்த இடத்தில் காணப்படும் பாதாளலிங்கத்திற்கும் நந்திக்கும் தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரிசனம் பெறுவோர் அனைவரும் மரணபயம் நீங்க வேண்டி அருள் பெறுவர்.
கோபுரம் ,தெப்பம் என அனைத்தும் ஒருங்காய் ..மேலே...
பெரிய நந்தி தங்களின் தரிசனத்திற்கு.


திருக்கோயிலில் இவ்வளவு மகத்துவம் உண்டு எனும் போது, கிரிவலப் பாதையில் சொல்லவா வேண்டும்... அடுத்த பதிவில் கிரிவலப் பாதையின் காண வேண்டிய இடங்களை காண்போம்.

மீண்டும் ஒரு முறை...

அருணாச்சல சிவ அருணாச்சல சிவ 
அருணாச்சல சிவ  அருணாச்சலா 


அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.


மீள்பதிவாக :-

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_31.html 

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.com/2017/11/2.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.com/2017/11/2.html 


இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌