Tuesday, June 26, 2018

கேட்பது விவேகானந்தரோ? - இது ரமணர் வழி


பகவான் ரமணர்

மதுரையை அடுத்த திருச்சுழியில் அவதரித்தவர். பிறந்தவர்.தோன்றியவர் என்பது எல்லாம் மக்களுக்குத் தான் பொருந்தும். மகான்கள் அவதாரம் தான் செய்வார்கள். இது தான் நம் தமிழ் மொழியின் சிறப்பும் ஆகும்.‘நான் யார்’ என்னும் விசாரணை மூலம் ஒரே கணத்தில்ஆத்மானுபவம் எய்தியவர். அதன்பின் அருணாசல அண்ணலை நாடி அண்ணாமலை வந்தார். பல இடங்களிலும் தங்கி தவம் செய்தார். சில போக்கிரிகளால் இவரது தவத்திற்கு இடையூறு ஏற்படவே, இடிந்து, சிதலமடைந்திருந்த, யார் கண்ணிலும் படாத பாதாள லிங்கேச்வரர் சன்னதியில் தவத்தில் ஆழ்ந்தார். அப்போதும் சில போக்கிரிச் சிறுவர்கள் கல்லெறிந்து அவரைத் தொந்தரவு செய்தனர். சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் இவரை உலகுக்கு அடையாளம் காட்டினார்.

அதுமுதல் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். பேசாமல் தியானத்திலேயே எப்போதும் இருந்ததால் ‘மௌன குரு’ என்றும், ‘பிராமண சுவாமி’ என்றும் அன்பர்களால் அழைக்கப்பட்டார். மாமரத்துக் குகை, பவழக் குன்று, விரூபாக்ஷிக் குகை போன்றவற்றில் சிலகாலம் தவம் செய்த இவர் பின்னர் ஸ்கந்தாச்ரமம் சென்று வசிக்கத் தொடங்கினார்.

தம்மை நாடி வந்தவர்களுக்கு மௌன குருவாய், தக்ஷிணாமூர்த்தியாய், நயன தீக்ஷை வழங்கி, அவர்களது ஆன்ம ஒளியை ஊக்குவித்தார். பின்னர் மலையை ஒட்டிய பகுதியில் கீழே வந்து வசிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் ‘ரமணாச்ரமம்’ ஆயிற்று.

ரமணாஸ்ரமத்தில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை இங்கே பதிக்கின்றோம். இடையிடையே மரணம் வெல்ல காட்டும் ரமணம் , ரமணரின் ஆன்ம விசாரம் பற்றிய கருத்துக்களை இணைக்க உள்ளோம். படித்து இன்புறுவதோடு, ரமணர் வழியைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டுகின்றோம்.

ஒரு முறை, படித்தவனாகத் தோன்றிய ஓர் இளைஞன் பகவான் முன்பு வந்து அமர்ந்தார். உலகில் எத்துணையோ மகான்களும்,குருமார்களும் இருக்கின்றார்கள். ஆனால் பகவான் என்றால் அது ஸ்ரீ ரமணரும், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் தான். சொல்லப் போகும் நிகழ்வில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் உள்ளார். சரி..பகவான் ஸ்ரீ ரமணரின் எதிரே அந்த இளைஞன் அமர்ந்தான். அங்கிருந்த கூட்டத்தில் அமைதியை உருவாக்கி, கேள்வி ஒன்றை எழுப்பினான்.

சுவாமி ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில், சமாதியில் இருக்க வைத்தாரே, அதே போல பகவானும் சமாதியில் இருக்க வைக்க முடியுமா? என்று கேட்டான்.

பகவான் பதில் எதுவும் கூறாமல் மெளனமாக இருந்தார். இளைஞனோ பதில் பெற இருக்கும் தருணம் நோக்கி காத்துக் கொண்டுதான் இருந்தான்.பின்னே இருக்காதா? எப்படிப்பட்ட கேள்வி, அந்த பரம் பொருளை நோக்கி, இப்படி ஒரு கேள்வி என்றால் நமக்கே பதைபதைப்பாக உள்ளதே.பகவான் என்ன சொல்லி இருப்பார்?சிறிது நேரம் பொறுத்து, பகவான் அந்த இளையனைப் பார்த்து, "கேட்பது விவேகானந்தரோ?" என்றார். அந்த இளைஞன் அப்படியே அமைதியாகி விட்டான். அந்த இளைஞன் வெட்கி தலைகுனிந்து பதில் சொல்ல முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான். 


நாமும் அந்த இளைஞன் போல் தான் இருக்கின்றோம். நம்மைப் பற்றி நாம் உணரவில்லை. நான்கைந்து புத்தகங்களை மேய்ந்து விட்டு, சில பல செய்திகளை தெரிந்து வைத்துக் கொண்டு, அதிமேதாவி போல் காட்டிக் கொள்கின்றோம். தன்னை பற்றி அறிவதே இல்லை, அதற்கு முயற்சிப்பதும் இல்லை, தன்னை அறிவதே பூரணம். நான் யார் ? என்று உங்களை பற்றி கேட்டுப்பாருங்கள், பேந்த பேந்த முழிப்போம், ஆனால் பக்கத்தில் இருப்பவரை பற்றி கேட்டுப்பாருங்கள், அவரைப் பற்றி ஊர்க் கதை அடிப்போம்.தன்னைப் பற்றி ஐந்து நிமிடம் கூட தெரியாத நாம் பிறரைப் பற்றி முப்பது நிமிடம் பேசுவோம். இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்.அந்த  இளைஞன் பகவானை ராமகிருஷ்ண பரமஹம்சரா என்று சோதிக்க விரும்பினானே தவிர, தான் விவேகானந்தரா என்று பார்க்கவில்லை. ஏனென்றால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பு.

நான் யார் என்று அந்த இளைஞன் விசாரம் செய்திருந்தால் இந்த கேள்வி எழ வாய்ப்பே இல்லை. ஒரே ஒரு விவேகானந்தரைத் தான் அப்படி சமாதி நிலையில் ஆழ்த்தினார் என்பது புரியவும் இல்லை. மனம் பிறரை ஆய்வதை விட்டு, தன்னை ஆராயத் தொடங்கினால், எந்தக் கேள்வியும் எழவே எழாது. எல்லாக் கேள்விகளுக்கும் "நான் யார்" ஆன்ம விசாரம் பதிலை தரும் என்று பகவான் இந்த சம்பவத்தில் தெள்ளத் தெளிவாக கூறுகின்றார். 


இந்த பதில் அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல; நமக்கும் சேர்த்து தான். சும்மா நுனிப்புல் மேய்ந்துவிட்டு, நம்மை விட பெரியோர்களிடம் கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். அதுவும் வாட்ஸாப்(whatsapp ), பேஸ்புக் (facebook) போன்ற சமூக வலைத்தளங்களில் சொல்லவே வேண்டாம். அனைவரும் தம்மை ஞானிகள் போன்று காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் எதார்த்தம் வேறாக இருக்கும். ஆன்லைன் குருக்களிடம் உஷாராக இருங்கள். குருக்களை ஆன்லைனில் தேடுவதை நிறுத்துங்கள். அன்பும், மனிதாபிமானமும் ஆன்லைனில் கிடைக்காத ஒன்று, மாறாக சித்தர்களை சரண் அடையுங்கள்; நான் யார் என்று தேடுங்கள். இது ஒன்று தான் முக்திக்கு வழி. புறப்பூசைகளும் இங்கே வந்து ஒரு நாள் நிற்கும்; அப்போது நாம் சொல்ல வரும் செய்தி புரியும்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!


- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக :- 


கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_31.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.com/2017/11/2.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.com/2017/11/2.html 
இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌