Subscribe

BREAKING NEWS

20 June 2018

மரம் நடுதலோடு நடைபெற்ற ஸ்ரீ வில்வநாயகி சமேத துளஸீஸ்வரர் ஆலய உழவாரப் பணி

அன்பார்ந்த அடியார் பெருமக்களே...

இது மிக மிக தாமதமான பதிவே. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீ வில்வநாயகி சமேத துளஸீஸ்வரர் ஆலயத்தில்  நடைபெற்ற  உழவாரப் பணியின் அனுபவத்தை இங்கே தருகின்றோம். காலம் கடந்த பதிவாய் இருந்தாலும் நம் அனைவரின் கருத்துக்களை கவரும் வண்ணமே அன்றைய உழவாரப் பணி நடைபெற்றது.பதிவின் இறுதியில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றும் இணைத்துள்ளோம்.ஏன் இந்த பதிவு தாமதம்? இந்த அறிவிப்பை தருவதற்குத் தான் என்று இப்போது புரிகின்றது.

இந்த கோயில் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 4 கி.மீ உள்ளே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.எனவே நாம் தனியாக யாரையும் வர சொல்ல முடியவில்லை. இதன் பொருட்டு அனைவரையும் ஒன்றாக அழைத்து செல்ல ஒரு வேன் ஏற்பாடு செய்தோம். பதிவைக் கண்டு புதிதாக சில அன்பர்கள் பணிக்கு வருவதாக சொல்லி இருந்தார்கள். காலை 8:30 மணி அளவில் கூடுவாஞ்சேரியில் சிலரை ஏற்றுக் கொண்டு சிங்கப்பெருமாள் கோயில் நோக்கி சென்றோம். அங்கே சுமார் 9 மணி அளவில் மற்றும் சிலரை ஏற்றுக் கொண்டு கொளத்தூர் கிராமம்  நோக்கி புறப்பட்டோம்.

காலை 9:15 மணி அளவில் கோயிலை அடைந்தோம். இந்த உழவாரப் பணி பல விதங்களில் சிறப்பாக அமைந்தது.பொதுவாக நாம் உழவார செய்து விட்டு, மரம் நட முயற்சிப்போம். ஆனால் நினைப்பதை நம்மால் நிறைவேற்ற இயலா. இந்த உழவாரப் பணியில் நாம் மரம் நாடா முயற்சி செய்து, ட்ரீ பேங்க் முல்லைவனம் ஐயா அவர்களை அழைத்தோம். அவரும் அன்றைய தினம் வந்து, சுமார் 15 மரங்களை நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலை அடைந்ததும், அங்கே உள்ள பணிகள் பற்றி கேட்டு அறிந்தோம். அனைத்தும் தோட்ட வேளைகளாக இருந்தது. கோயில் உள்ளே செல்லும் பாதை முழுதும் களைசெடிகள் நிரம்பி இருந்தது. காலை உணவு முடித்து விட்டு, பணிக்கு தயாரானோம்.














வழக்கமாக மகளிர் அணியினருக்கு விளக்கு போன்ற பாத்திரங்கள் தேய்க்கும் பணி இருக்கும். அது இங்கே இல்லை. அவர்களும் விட வில்லை. நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று மண் வெட்டி பிடித்து களை எடுக்க ஆரம்பித்தனர். ஏற்கனவே கூறியது போல், இங்கு முழுதும் இந்தப் பணி மட்டும் தான் நமக்கு இருந்தது. நம் குழுவின் சரவணன் முழு வீச்சோடு களத்தில் இறங்கி விட்டார். வெட்டுவதற்கு அரிவாள் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அப்போது தான் நம் அலுவலக நண்பர்கள் திரு.மணிமாறன், திரு. கோபு வம்சி இருவரும் கோயில் நோக்கி வருவது அறிந்து, அவர்களை அரிவாள் வாங்கி வர செய்தோம்.





அரிவாள் வந்ததும் பணி முழு வீச்சில் வேகமெடுத்தது. நாம் வழக்கமாக சேர்த்து வாய்த்த களைகளை அள்ளிப்போடும் பணியை செய்தோம். சுமார் 10 மணி அளவில் ட்ரீ பேங்க் முல்லைவனம் தம் பணியாளர்களோடு வந்து சேர்ந்தார்.அவர் வந்ததும் எங்கெங்கு மரம் நடலாம் என்று ஆலோசனை செய்தோம். மரம் நடுவதற்கான ஆயத்தப் பணிகளை மற்றொரு குழு ஆரம்பித்தது.

         
                   நம் குழுவின் தூண் திரு.சந்திரசேகரன் அவர்கள் மரம் நட குழி தோண்டிய போது 


                       கோவிலுக்கு வெளியே மரம் நட குழி தோண்டிய போது 


இதோ..குழி தோண்டி தயார் செய்து விட்டோம். இனி மரம் நட வேண்டியது தான்.


மரங்களை அங்கிருந்த கல்யாண துர்க்கை  சந்நிதியில் வைத்து வழிபாடு செய்தோம்.












நீண்ட நாட்கள் கழித்து, முதன் முதலாக மரம் நட்ட போது, மகிழ்வாய் உணர்ந்தோம். அனைவரையும் ஒன்றாக அழைத்து, குட்டி குழந்தைகளிடம் கொடுத்து மரம் நட்டு,நீர் ஊற்றி சுகானுபவம் தான் அது. இதே போல் சுமார் 15 மரங்கள் வரை அன்று அங்கே கோயிலுள் நடப்பட்டது.









மரம் நட்டு வணங்கிய தருணம். இதெல்லாம் நமக்கு எப்போது வாய்க்கும்.? அதுவும் உழவாரப்பணியின் போது இப்படியொரு நிகழ்வை உருவாக்க, அந்த துளஸீஸ்வரர் தான் நம்மை அழைத்தார் என்பது நிதர்சனம்.




கோயில் முழுதும் புற்களின் பசுமையில் காட்சி தருகின்றது. அதனோடு மரம் நட்டது நம்மை இன்னும் பசுமையாக்கியது. அன்றைய உழவாரப்பணியில் மற்றுமொரு சிறப்பு சேர்ந்தது. முகம் அறியா அடியார் ஒருவர் விளக்கேற்ற நெய் இருப்பதாக கூறினார்.அதனை நம் பரிமளம் அவர்கள் பெற்றுக் கொண்டு வந்தார்கள்.அதனை ஸ்ரீ துளஸீஸ்வரர் சந்நிதியில் வழங்கினோம்.


இது போல் துளஸீஸ்வரர் ஆலய உழவாரப் பணி பல விதங்களில் சிறப்பு சேர்த்துக் கொண்டே வந்தது குறிப்பிடத்தக்கது. தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் ஆண்டு விழா தொடங்க ஆண்ட்ரியா தினம் தான் நாம் அனைவரிடமும் ஆலோசனை செய்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



புதிய அன்பர் பால சுப்ரமணி அவர்கள் 


         ஏதோ. நம்மால் முடிந்த வரை புற்களை வெட்டி சுத்தம் செய்து இருந்தோம்.



                                                    திருமதி பரிமளம்  மண்வெட்டி பிடித்த போது


                                                           சிறார்களும் ஆர்வமாக


தனி ஒருவனாக சரவணன் முழுதும் சுத்தம் செய்து கொண்டே இருந்தார். எல்லாம் நம்முடைய பயிற்சிகள் தான் ( ஹி..ஹி ...)






இந்த குழந்தைகளை பார்க்கும் போது மிக மிக சந்தோசமாக இருந்தது, அங்கிருந்த தொட்டி ஒன்றுள் இறங்கி, மண்ணை அப்புறப்படுத்தினர். நாம் அதனை பார்த்துவிட்டு, வெளியில் வந்து சுத்தம் செய்யுங்கள் என்று  கூறிய பின்னர் தான் வெளியே வந்து சுத்தம் செய்தார்கள்.


இந்த பணி போதுமா? என்று மனதுள் கூறும் வண்ணம் ஒவ்வொருவரும் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள்.




திருமதி செல்வி அவர்களால் கோமுக தீர்த்தப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அவர்களே கேட்டு வாங்கி இதனை செய்தார்.இது போல் ஒவ்வொருவரும் தம்மால் என்ன பணி செய்ய இயலுமோ, அதனை செய்து கொண்டே இருப்பது நன்று. நாம் ஒவ்வொருவரிடமும் சென்று சொல்வதை விட, அவர்களாகவே கேட்டுப்பெற்று செய்தல் இன்னும் நலம் பயக்கும். இது சரியாக நம்மை திட்டமிடவும் உதவும். நம் மகளிர் அணி இன்றி உழவாரம் செய்வது என்பது கற்பனையில் கூட நினைத்து பார்க்க இயலாத ஒன்று, இது வரை நடைபெற்ற அனைத்து உழவாரணிகளிலும் சிறப்பாக பணியினை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும்..பாராட்டுக்கு உரியவர்கள் நம் மகளிர் அணியினர். இதனை நாம் அனைத்து உழவாரப்பணிகளிலும் எதிர்பார்க்கின்றோம். நாம் மட்டுமல்ல..நம் குருமார்களும் தான்






பணி முழுமை பெற்றதும் வழிபாட்டிற்கு தயாரானோம். அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விளக்கேற்றி வழிபாடு செய்தோம்.




சிவபுராணம் பாடினோம். வேறு சில பதிகங்கள் பாடினோம். உடல்,உயிர்,மனம் என அனைத்தும் ஒருங்காய் நிறைந்தது. அது இந்த உழவாரப் பணியில் கிடைத்த ஒன்று ஆகும். வழிபாடு முடித்து மதிய உணவு உண்டு அங்கிருந்து புறப்பட்டோம். ஆங்..சொல்ல மறந்து விட்டோம்.இந்த உழவாரப் பணியில் நம் தள அன்பர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில்  மரியாதை செய்யப்பட்டது. இது நாம் அனைவரும் எதிர்பார்க்காத ஒன்று. ஸ்ரீ வில்வநாயகி சமேத துளஸீஸ்வரர் முன்னிலையில், சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் இலங்கும் அகத்தியரின் முன்னிலையில் நாம் அனைவரும் மரியாதை செய்யப்பட்டோம் என்றால் நாம் செய்த புண்ணியம் தான் இது. வேறெங்கும் கிடைக்காத ஒன்று இது.



                                முல்லைவனம் ஐயாவிற்கு மரியாதை செய்த போது


                                       திரு.கோபு வம்சி  மரியாதை செய்த தருணம்


                                                                  திரு.சரவணன் 


                                 திரு.சந்திரசேகரன் கௌரவிக்க பட்ட போது


              அன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடிய ட்ரீ பேங்க் அமைப்பில் உதவியாளர் 


                                திரு. தினேஷ்   மரியாதை செய்யப்பட்ட போது




முல்லைவனம் ஐயா அவர்கள் துளஸீஸ்வரர் கோயில் நிர்வாகி ரமேஷ் அவர்களை மரியாதை செய்த போது

நம் தளம் சார்பில் துளஸீஸ்வரர் கோயில் நிர்வாகி ரமேஷ் அவர்களை மரியாதை செய்த போது,





அட..இப்படியொரு உழவாரப்பணி , அது தந்த நிறைவு இருக்கின்றதே..அனைத்தும் அவர் அருளாலே தான். மிக மிக சுருக்கமாக,

1. நம் தளம் சார்பில் சென்னை புறநகரில் முதன் முதலாக செய்த உழவாரப்பணி
2. அனைவரையும் ஒருங்கே வேன் மூலம் அழைத்து சென்ற நிகழ்வு
3. மரம் நடுதல் இணைந்த உழவாரப்பணி
4. முகம் அறியா அடியார் வழங்கிய நெய் - இங்கே சமர்ப்பித்தோம்.
5. பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மரியாதை
6. தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் ஆண்டு விழா ஏற்பாட்டுக்கான ஆலோசனை
7. கோயிலின் சிறப்பாக, பிரிந்து வாழும் தம்பதி சேர்ந்து வாழ சிறந்த பரிகாரத் தலம்
8. அகத்தியர் வழிபட்ட தலம்
9. பழந்திருக்கோயில்களுள் ஒன்று





இத்தகு சிறப்பு மிக்க கோயிலில் வருகின்ற ஆனி மாதம் 21 ம் தேதி 05/07/2018 அன்று வியாழக்கிழமை அன்று ஸ்ரீ சக்தி கணபதி மஹாகும்பாபிஷேக பெரு விழா நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும்,திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.
மேலும் விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்.







அருமையான வாய்ப்பு கொடுத்து, வயிறார உணவும் வழங்கி, எங்களை மரியாதை செய்த திரு.ரமேஷ் அவர்களுக்கும், ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த ஜனசபா விற்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மீள்பதிவாக:-

 வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம் - http://tut-temple.blogspot.com/2017/10/blog-post_17.html

 ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_99.html

 கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்... - http://tut-temple.blogspot.com/2017/05/blog-post_14.html

No comments:

Post a Comment