மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
என்று தற்போது ஒரு பதிவை அறிந்தோம். பதிவின் இறுதியில் இந்த பதிகம் எப்போது, எங்கே, யாரால் பாடப்பட்டது போன்ற தகவல்களை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம் என்று கூறியிருந்தோம்.
திருஞானசம்பந்தர் பெருமான் பாடிய அற்புதத் திருப்பதிகம் இது. திருஞானசம்பந்தர்
தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்தவர். அவரது பாடல்கள் ஒவ்வொன்றிலும்
பெரும்பாலும் இரண்டு அடிகள் இயற்கை வர்ணனையாக உள்ளன. அடுத்த இரண்டு வரிகள்
இறைவனைப் பற்றி அமைகின்றன. எனவே அவரது பாடல்கள் இயற்கை மீதும், இறைவன் மீதும்
அவருக்கு உள்ள நாட்டத்தைப் புலப்படுத்துவனவாக உள்ளன. "மக்கள் மனத்தில்
அவர்தம் வாழிடத்தைப் போற்றிப் பாடினால் மகிழ்வர். சமய எழுச்சியை ஏற்படுத்துவதும்
எளிது. எனவே இம்முறையில் அதிக அளவு மக்களைத் தம் பாடல் வாயிலாகச் சைவத்திற்கு
ஈர்த்தார் திருஞான சம்பந்தர்" என்பார் ஆ.வேலுப்பிள்ளை.
திருஞானசம்பந்தர் பதிகம் ஒவ்வொன்றிலும்
எட்டாவது பாட்டில்
இராவணனைப் பற்றிய குறிப்பு வருகிறது. சம்பந்தருடன் சமகாலத்தில்
வாழ்ந்த அப்பரும் இராவணனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவர்கள்
கூறுவதற்கு அக்காலச் சூழல் காரணமாக இருக்கலாம். இராவணன்
ஒரு பேரரசன். சிவனை மதியாமல் அவரது வாழ்விடத்தையே
அப்புறப்படுத்தப் பார்த்தான். அதன் பயனாய்ச்
சிவனால்
நசிவுண்டான். சிவனருள் பெற்றமையாலேயே உய்வடைந்தான்.
அப்பரும், சம்பந்தரும் வாழ்ந்த காலம் பல்லவர் காலத் தொடக்கம்
ஆகும். அவர்கள் காலத்தில் சமண
சமயம் பரவலாகப்
பின்பற்றப்பட்டு வந்தது. சிவபெருமான் அருளே வடிவானவன். தவறு
செய்தவர்களுக்கும் அருள் செய்பவன். இக்கருத்தை வலியுறுத்தி,
சைவ சமயத்தின் பெருமையைப் பரப்பினர்.
திருஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்திலும்
ஒன்பதாம் பாட்டில்
திருமாலும், பிரமனும் சிவனின் அடி முடியைத் தேடியும்
காண
இயலாதவர் ஆயினர் என்ற குறிப்பு இடம் பெறும்.
சிவன்
மூம்மூர்த்திகளில் ஏனைய இருவரிலும் உயர்ந்தவர் என்று சம்பந்தர்
காட்டுவதாகக் கொள்ளலாம்.
திருஞான சம்பந்தரின்
பத்தாம் பாடல் சமண பௌத்தர்களைப் பழித்துக் கூறும். அப்பர் பாடல்களிலும் சமண
பௌத்தர் இழித்துக் கூறுப்படுகின்றனர். சமண, பௌத்தர் பற்றிய சம்பந்தர் குறிப்புகளில்
மிகுந்த காழ்ப்பு உள்ளது. சமண பௌத்தரை இழித்துக் கூறுவதனால் அவர்களது போலி
வேடம், ஒழுக்கக்கேடு என்பவற்றைப் பொது மக்களிடம் சொல்லி அவர்களை இச்சமயங்களிலிருந்து
விடுவிக்க உதவியாக இருக்கும் என்பது இதன் நோக்கமாக இருக்கலாம்.
திருஞானசம்பந்தரின் திருக்கடைக்
காப்புச் செய்யுள்கள்
பலவற்றில் ‘நற்றமிழ் ஞானசம்பந்தன்’,‘தமிழ் ஞானசம்பந்தன்’,‘சம்பந்தன் செய்த தமிழ் மாலை’ என்று தமிழுடன்
சேர்த்துச்
சொல்லும் முறை உள்ளது. சமணருக்கு எதிரான
சைவர்
இயக்கத்தைத் தமிழன் எழுச்சியாக ஆக்கியவர் திருஞானசம்பந்தர்
ஆவார்.
சைவ சமயத்திற்குச்
சம்பந்தர் செய்த தொண்டு சிறப்பானது.
சைவ சைமயக் குரவருள் அவரை முதல்வராகக்
கொண்டு
போற்றுவர். சம்பந்தரைப் பற்றி ஆறு பிரபந்தங்களை நம்பியாண்டார்
நம்பி பாடியுள்ளார். பெரிய புராணம் பாடிய சேக்கிழார் அறுபத்து
மூன்று தனியடியாரையும், ஒன்பது தொகையடியாரையும் பாட
எடுத்துக்கொண்ட போதும் நூலின் பெரும்பகுதியைச் சம்பந்தருக்கே
ஒதுக்குகின்றார். நூலில் பாதியைச் சம்பந்தருக்கும்,
மீதியைப்
பிறருக்கும் ஒதுக்கி உள்ளார் என்பது பொருந்தும்.
திருஞானசம்பந்தரது
பாடல்களில் தலையாய செய்தி தாய்மையின் தெய்வீகத் தன்மையே என்பார் தொ.பொ.மீ.
அவர்கள். சமணம் பெண்களுக்குச் சமவுரிமை தரமறுத்தது. சமண சமயத் துறவிகள் பெண்களாக
இருந்தால் அவர்களைத் திகம்பர சமணர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதைச் சம்பந்தர்
‘குரத்திகள் பேணார்’ என்று கூறுகிறார் (குரத்திகள் - சமண சமயப் பெண் துறவிகள்).
ஆனால் பெண்மையின் சிறப்பை நிலைநாட்டுபவை சம்பந்தரது பதிகங்கள். பெண்களைக்
கடியும் ஒரு சொல்லையும் காணுதல் அரிது. ‘இசை கீழான உணர்வுகளைத் தூண்டும்’
என்று சமணர் கருதினர். “இசை இறைவன்பால் இட்டுச் செல்லும்” என்பது சம்பந்தரது
கருத்தாகும். அவர் செந்தமிழைப் பேணுவதைப் பெரிதும் விரும்பினார். தமிழ் இலக்கியத்தில்
இவரது பங்களிப்பு மகத்தானது ஆகும்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
(மூன்றாம் திருமுறை, 24:1)
என்ற திருஞானசம்பந்தரது
பாடல் சைவர்களின் திருமணத்தின்போது மகிழ்ச்சியுடன் பாடப்படுவது. இறைவன் பெண்
ஒரு பாகனாய் இருப்பதைக் காட்டி உலகில் நல்லபடி வாழமுடியும், யாதொரு குறையும்
வராது என்று நம்பிக்கை தருகிறார். அவரது பாடல்கள் ஊக்கமும், நம்பிக்கையும்
ஊட்டுவன. சோர்வையோ, கலக்கத்தையோ, துன்பத்தையோ அவரது பாடல்களில் காண்பது அரிது.
நாளும் கோளும் என்ன செய்ய முடியும்? அவை நல்லவையே! அடியார்க்கு மிக மிக நல்லவை”
என்று மூடநம்பிக்கையைச் சாடுகிறார். ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை, ‘திராவிட
சிசு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பதிவின் தலைப்பிற்கும் திருஞானசம்பந்தருக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்று யோசிக்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கின்றது. ஆம்..பன்னிரு திருநாமங்கள் உடைய புண்ணியத் திருத்தலம் திருஞானசம்பந்தர் பெருமான் அவதரித்த திருத்தலமே ஆகும்.
1. பிரம்மபுரம்
2. வேணுபுரம்
3. புகலி
4. வெங்குரு
5. தோணிபுரம்
6. பூந்தராய்
7. சிரபுரம்
8. புறவம்
9. சண்பை
10. காழியூர்
11. கொச்சைவயம்
12. கழுமலம்
என்ற பன்னிரு திருநாமங்கள் உடைய புண்ணியத் திருத்தலம் சீ காழி ஆகும்.ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ என்றால் மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.
இது போல் நாம் எத்துணை செய்திகளை இழந்துள்ளோம் என்று நாம் அறியோம். இது போன்ற செய்திகளை அறிந்து கொண்டு அனைவரிடமும் பகிர்வோம். முதலில் நாம் படிக்கும் போது சீ காழி என்னப்பா? இது? அச்சுப்பிழையோ என்று இருந்தோம்.பின்னர் தான் தெரிந்தது.. சீ காழி என்பதே சரி என்று.
பன்னிரு திருநாமங்களுக்கான விளக்கம் இனிவரும் பதிவுகளில் அறிவோம்.
மீள்பதிவாக :-
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_21.html
No comments:
Post a Comment