Tuesday, June 26, 2018

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா

அருணகிரிநாதர் தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.


இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.

அருணகிரிநாதர் என்றாலேயே அவர் அருளிச் செய்த திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய அற்புத பிரபந்தங்கள் கருத்தில் வரும். அவற்றின் வழியாகப் பிரவாகிக்கும் திருமுருகன் திருவருள் கருத்தை நிறைவிக்கும்.

திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.

என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.

திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.

பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??

கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.

அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.

மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.

சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.

தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.

அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய "சரவணபவ" எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறுவர்.

அருணகிரிநாதர் சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு கீழே.

கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
கந்தரனுபூதி (52 பாடல்கள்)
திருப்புகழ் (1307 பாடல்கள்)
திருவகுப்பு (25 பாடல்கள்)
சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
மயில் விருத்தம் (11 பாடல்கள்)
வேல் விருத்தம் (11 பாடல்கள்)
திருவெழுகூற்றிருக்கை

அருளாளர் அருணகிரிநாதர் சுவாமிகளின் குருபூஜை நாளை கொண்டாடப்பட உள்ளது. அனைத்து அடியார் பெருமக்களும் அருகில் உள்ள தலத்தில் சென்று தங்களுக்கு தெரிந்த திருப்புகளைப் பாடி முருகப் பெருமான் முன் வேண்டவும். வாய்ப்புள்ள அன்பர்கள் திருவான்மியூரில் உள்ள ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் நாளை மாலை 4 மணி முதல்  நடைபெற உள்ள குரு பூஜையில் கலந்து கொண்டு, நம்மை எப்போதும் முன்னின்று காக்கும் முருகன் அருள் பெற வேண்டுகின்றோம்.திருப்புகழ் இன்றி பதிவை நிறைவு செய்ய மனம் மறுக்கின்றது, கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள்கீழ்கண்ட திருப்புகழை ஓதுங்கள். திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும். இதோ..இந்த அற்புத திருநாளில் நம் வாழ்க்கை மணக்க அருளாளர் அருணகிரிநாதர் அருள் புரியட்டும்.    விநாயகர் துதி (இராகம் - நாட்டை; தாளம் - ஆதி)

        தத்தன தனதன தத்தன தனதன
        தத்தன தனதன ...... தனதான

        கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
        கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

        கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
        கற்பகம் எனவினை ...... கடிதேகும்

        மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
        மற்பொரு திரள்புய ...... மதயானை

        மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
        மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

        முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
        முற்பட எழுதிய ...... முதல்வோனே

        முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
        அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

        அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
        அப்புன மதனிடை ...... இபமாகி

        அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
        அக்கண மணமருள் ...... பெருமாளே.


        "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 3"


        "முத்தைத்தரு"


        இராகம்: கௌளை
        தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

        தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான


        முத்தைத்தரு பத்தித் திருநகை
        அத்திக்கிறை சத்திச் சரவண
        முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

        முக்கட்பர மற்குச் சுருதியின்
        முற்பட்டது கற்பித் திருவரும்
        முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

        பத்துத்தலை தத்தக் கணைதொடு
        ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
        பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

        பத்தற்கிர தத்தைக் கடவிய
        பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
        பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

        தித்தித்தெய ஒத்தப் பரிபுர
        நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
        திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

        திக்குப்பரி அட்டப் பயிரவர்
        தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
        சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

        கொத்துப்பறை கொட்டக் களமிசை
        குக்குக்குகு குக்குக் குகுகுகு
        குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

        கொட்புற்றெழ நட்புற் றவுணரை
        வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
        குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’ எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’ எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று கூறப்படுகிறது.        இருமல் உரோகம் முயலகன் வாதம்

                எரிகுண நாசி விடமே நீர்

        இழிவு விடாத தலைவலி சோகை

                எழுகள மாலை இவையோடே


        பெருவயிறு ஈளை எரிகுலை சூலை

                பெருவலி வேறும் உளநோய்கள்

        பிறவிகள் தோறும் எனை நலியாத

                படிஉன் தாள்கள் அருள்வாயே


        வரும் ஒரு கோடி அசுரர் பதாதி

                மடிய அநேக இசைபாடி

        வரும் ஒரு கால வயிரவர் ஆட

                வடிசுடர் வேலை விடுவோனே


        தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி

                தரு திரு மாதின் மணவாளா

        ஜலமிடை பூவின் நடுவினில் வீறு

                தணிமலை மேவு பெருமாளே

"இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும் இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் என்னை வாட்டாத வகையில் முருகா, உனது திருவடிகளை தந்து அருள வேண்டும்.கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும் வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே! மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின் மகளான தெய்வயானை மணவாளனே! திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!"

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
திருத்தணிகை முருகனுக்கு அரோகரா!!
முருகா! முருகா!! முருகா !!!

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக :-

 அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html


இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌