Tuesday, June 19, 2018

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி

சிவன் மலை

பெயரிலேயே தெரிகின்றது இந்த மலையில் எம் பெருமான் சிவபெருமான் இருப்பார் என்று..ஆனால் இப்படி நினைத்தால் அது மிகப் பெரும் தவறு. சிவன் மலையில் இருப்பவர் நம் முருகப் பெருமான் ஆவார். சிவன் மலை என ஏன் பெயர் ஏற்பட்டது. பொதுவாக முருகன் என்றாலே பழனி தான். பழனி மலை முருகப் பெருமான்  போகர் சித்தரினால் உருவாக்கப்பட்டவர்.  அதே போல் இந்த சிவன் மலைக்கும் ஒரு சித்தருக்கும் தொடர்பு உண்டு. அவர் யார்? சிவத்தை தம் பெயரை உள்ளடக்கியவர். ஆம் ... சிவ வாக்கியரே ஆவார்.

சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை. சிவவாக்கியம் எனும் நூலை இயற்றிய சிவவாக்கியர் சித்தர் சிவன் மலையில் தங்கி தமது விருப்பதெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அவர் பெயரிலேயே மலை ’சிவன் மலை’ என்று வழங்கப்பட்டது.

இந்த கோயிலில் தரிசனம், நமக்கு ஏற்பட்ட அனுபத்தை அடுத்த பதிவில் காண்போம். ஒவ்வொரு கோயிலுக்கு செல்லும்போதும் அங்குள்ள சிறப்புகளை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அந்த வரிசையில் இங்கு "உத்தரவுப் பெட்டி " மிகப் பிரசித்தம். இது தான் சிவன் மலை ஆண்டவரின் கட்டளை என்று நமக்கு தோன்றுகின்றது.

இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவின் பெயரில், ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. பூசைக்குப் பின்னர், அப் பொருள் ’உத்தரவுப் பெட்டி’ என்றழைக்கப்படும் கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளின் தேர்வு முறை
ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை

வேஷ்டி துண்டு வைத்து 02.07.2012 அன்று உத்தரவுப் பெட்டியில் வைத்தது முதல் நாம் பார்க்க முடிகின்றது. அடுத்து ஐந்து கிலோ -மஞ்சள், தண்ணீர், 5-ம்வகுப்பு ஆங்கில புத்தகம் 11-ம் வகுப்பு கோனார் தமிழ் உரை புத்தகம் என 2012 வரையில் உத்தரவு பெட்டிக்குள் வைத்துளார்கள்.

பென்சில், மீண்டும் தண்ணீர் என 2013 ஆண்டில் உத்தரவு பெட்டிக்குள் வைத்துள்ளார்கள்.

அரிசி,அஸ்கா,பால் என 2014 ல் உத்தரவு பொருட்கள் உத்தரவானது.

 மஞ்சள் வைத்து கோயிலில் பூசை செய்தனர். முன்பு காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. அப்போது விண்ணை முட்டும் அளவு உயர்ந்த விலை இப்போது வரை பழைய நிலைக்கு திரும்பிவே இல்லை என்கிறார்கள்.
பக்தர் ஒருவர்  கூறுகையில், நான் இந்த கோவிலின் மகிமை தெரிந்து அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றேன். இங்கு வந்துவிட்டு சென்றாலே ஒரு மாற்றம் நிச்சயம். இந்த கோவிலின் சக்தி ஆபூர்வமானது. முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்யச் சொன்னதாம். அது முதல் இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு கண்ணாபிண்ணா என உயர்ந்து வி்ட்டதாம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் பல இடங்களில் இதே நிலை தான். இப்போது கூட சாமானிய மக்கள் நிலம் வாங்குவது குதிரைக் கொம்பாக உள்ளது.

அதே போன்று மற்றொரு பக்தரின் கனவில் வந்து 500 ரூபாய் பணம் வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன் பின்பு மக்கள் மத்தியில் 10, 20, 50 ரூபாய்க்கு மதிப்பு குறைந்து போனது. ஏன் 100 ரூபாய்க்கு கூட மதிப்பு குறைந்து, தற்போது பலரிடம் ரூ. 500 சரளமாக புழக்கத்தில் உள்ளது. இது தான் முருகனின் அருள் என பெருமை பொங்கச் சொன்னார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து அரைப் பவுன் தங்கத்தை வைத்து பூசை செய்யச் சொன்னதாம்.

சாமிக்கு கூட தங்கத்தின் மீது காதலா என பலரும் வியந்து கிடக்க, அடுத்த சில நாட்களிலேயே அதன் உண்மை நிலவரம் உலகிற்கு தெரிய வர ஆரம்பித்தது.அது என்ன வென்றால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்ததே அப்போது தான். பெண்ணைப் பெற்றவர்கள் முருகா இது என்ன சோதனை என குரலை உயர்த்தியவர்கள் இப்போது வரை முருகா நீ தான் எங்க பெண்ணை கரை சேர்க்க வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.இது இப்படி என்றால் மற்றொரு பக்தரின் கனவில் வந்த முருகன், தேங்காயை வைக்கச் சொல்லி உள்ளார். அது போலவே தேங்காயை வைத்து பூசையும் நடைபெற்றது. அப்போது தான் தேங்காய் விலையும் கூட அதிகரித்தது. கொப்பறை தேங்காய்க்கும் ஒரு மவுசு வந்து அது கொப்பறை தேங்காய் ஊழல் வரை சென்று நின்றது என்கின்றனர்.

தற்போது திருப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்ற பக்தரின் கனவில் தோன்றி பச்சை அரிசி வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன்படியே அந்த பெட்டியில் தற்போது பச்சை அரிசி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதைச் சொன்ன கோடீஸ்வரன் என்ற பக்தரின் பெயரும், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதியும் மறவாமல் குறிப்பிட்டுள்ளனர்.கடவுள் கனவில் சொல்லுகின்ற அந்த பொருளை அந்தப் பெட்டியில் எப்போது வைப்பார்கள் என்று கோயில் ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது,காங்கயத்திற்கு அருகில் உள்ள திருப்பூர், வெள்ளக்கோயில், தென்னிலை, பரமத்தி, பல்லடம், கோவை மற்றும் பல சுற்றுப்புற கிரமங்களில் உள்ள தனது பக்தர் ஒருவரின் கனவில் சாமி தோன்றி பெட்டியில் வைக்க வேண்டிய பொருள் பற்றி கூறுவார்.
மறுநாள் அருள் வந்த நிலையில், அந்த நபர் தனது கனவில் சுவாமி தோன்றி சொன்னது குறித்து கோயில் நிர்வாகியிடம் வந்து தெரிவிப்பார். அவர் சொன்னது உண்மை தானா என்று தெரிந்து கொள்ள கோயில் நிர்வாகிகள் பூக்களை பொட்டலத்தில் வைத்து அதை சாமி முன்பு போட்டு பூச்சயனம் கேட்பார்கள்.

அதில் முதல் எடுப்பிலே வெள்ளைப் பூ வந்தால் முருகன் கனவில் தோன்றி கூறியது உண்மை தான் என உறுதி செய்து கொண்டு அந்த பொருளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அந்த பெட்டியில் வைத்து விடுவார்கள். கூடவே அருள் வந்து சொன்னவர் பெயர், அவரது ஊர், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதி என அனைத்தையும் அந்த பெட்டியின் கீழ் எழுதி வைத்துவிடுவார்கள். இது தான் நடைமுறை என விளக்கம் கொடுத்தார்.

தற்போது பச்சை அரிசி வைத்துள்ளது பற்றி கோயில் குருக்கள் ஒருவரிடம் கேட்ட போது அவர் நம்மிடம் பேசும் முன்பு, சில மந்திரங்களை வாயில் முணுமுத்தபடி பின்பு குரலை உயர்த்தி தம்பி பச்சை அரிசி வைத்துள்ளது நல்ல சகுனம் தான். நாட்டில் விவசாயம் செழிக்கும். அரிசிப் பஞ்சம் வராது. சுபிச்சமாக இருக்கும் போங்கோ என அருள்வாக்கு கூறினார்.
நாட்டில் நடப்பதை முன்கூட்டியே மக்களுக்கு சொல்லும் இந்த கடவுளின் அருள் வாக்கை நினைக்கும் போது நம் மெய் மறந்து விடுகின்றது.

கணக்கு நோட்டு, உலக உருண்டை, வலம்புரி சங்கு, ருத்ராட்சம், மஞ்சள், குங்குமம், இரும்பு சங்கிலி, துளசி செடி, தண்ணீர், உப்பு, இரும்பு, அச்சு வெல்லம், கணக்கு நோட்டு புத்தகம், உப்பு, வெண்ணைய், பால் என உத்தரவு பெட்டிக்குள் பொருட்கள் வைத்துள்ளார்கள். வைத்துள்ள பொருட்களுக்கு ஏற்ப, பொருளின் தன்மையில், மக்களிடம்,சூழலிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது கண்கூடு.ஆண்டவன் உத்தரவு பெட்டியில்' வைத்து பூஜிக்கப்படும் பொருள், சமுதாயம் மற்றும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.பெட்டியில் மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு என, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து, இதுவரை பூஜை செய்யப்பட்டுள்ளன. அதன் பலன்கள் கிழே

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் துப்பாக்கி இடம் பெற்றபோது, கார்கில் போர் ஏற்பட்டது.

தண்ணீர் வைத்தபோது, சுனாமி வந்தது.

கணக்கு நோட்டு புத்தகம் வைத்தபோது, மத்திய அரசாங்கம் கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது.

இரும்பு சங்கிலி வைத்தபோது இதனால் சட்டத்தை மீறுபவர்கள், கைதாவர்,குற்றம் செய்பவர்களுக்கும் தண்டனை கிடைப்பது நிச்சயம் என, பக்தர்கள் நம்புகின்றனர்.

மஞ்சள், குங்குமம் வைத்தபோது சமூகத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும்.

தற்போது வெள்ளகோவிலை சேர்ந்த அடியார் ஒருவருக்கு ஏற்பட்ட கனவின் படி, 10.04.2018 முதல் அருகம்புல், மிளகு, கீழாநெல்லி வேர்  உத்தரவுப் பெட்டிக்குள் வைத்து உள்ளார்கள். சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், அருகம்புல், மிளகு, கீழா நெல்லிவேர் வைக்கப்பட்டுள்ளதால், இயற்கை மருத்துவம் தழைத்தோங்கும்’ என, சிவாச்சாரியார் ஒருவர் கூறினார்.அருகம்புல், மூலிகைக்கு தேவையானது. கீழாநெல்லி வேர் காமாலைக்கு மருந்து. மிளகு நாட்டு வைத்தியத்துக்கு உகந்தது. இதன் மூலம், இயற்கை வைத்தியம் அதிகரிக்கும். சென்ற கோடை விடுமுறை சார்ந்து வைக்கப்பட்ட காலத்தை பார்க்கும் போது, மக்கள் சித்த வைத்தியம் போன்றவற்றை கடைபிடிக்க தொடங்க வேண்டும் என்பதும், கோடை வெயில் தணித்து, உடல்நிலை காக்க அருகம்புல்,மிளகு, கீழாநெல்லி வேர் கலந்த சாறு அருந்துவது நல்லது என்று உரைக்க கூறியதாக தெளிவு பெற முடிகின்றது.பக்தியினூடே, ஆரோக்கியத்தையும் சிவன் மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியின் மூலம் கட்டளை பிறப்பித்து உள்ளார். இயற்கை மருத்துவம் போன்ற மாற்று மருத்துவம் குறிப்பாக நம் பாரம்பரிய சித்த மருத்துவம் கற்றுக் கொண்டு, ஆரோக்கியத்தோடு ஆன்மிகம் காக்கவும் ஒவ்வொருவரும் முயற்சி செய்வோம்.


- அடுத்த பதிவிற்கு சிவன் மலை ஆண்டவன் கட்டளைக்காக காத்திருக்கின்றோம்.

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌