Tuesday, August 15, 2017

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை

 ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை

இம்மாத மலை தரிசனம்  ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை  என்ற தகவல் கிடைத்தது. வழக்கம் போல் இணையவெளியில் தேடிப் பார்த்தோம். ஸ்ரீ மிருகண்ட மகரிஷி பற்றி சில தகவல்கள் கிடைத்தது.ஆனால் அந்த மலையைப் பற்றி தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

கருணை நிறைந்த விழியாள் அம்மா ! அருட் கருணை வடிவாள் ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியின் அருளால் வளம் கொழிக்கும் பூமியில் ...மங்கள மஞ்சளாறு பாயும் வனத்திற்குள் ...ஸ்ரீ கௌதம மகரிஷியின் புதல்வரும்,ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியின் தந்தையுமான ஸ்ரீ மிருகண்ட மகரிஷிகள் அருட்தவம் புரிந்த தவ பீடத்தை தரிசித்து ஆயுள்,ஆரோக்கியம் ஆனந்தம் பெற  5 கி.மீ உயரம் கொண்ட ஆற்றல் அருளும் மலைக்குள் யாத்திரை செல்ல இருக்கின்றோம்.

மலை ஏற்றம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், சனிக்கிழமை தேனிக்கு சென்றோம்.சனிக்கிழமை வீரபாண்டி சென்று, ஸ்ரீ கண்ணீஸ்வரமுடையார் தரிசனமும், ஸ்ரீ கௌமாரியம்மன் தரிசனமும் பெற்றோம். வீரபாண்டி அழகின்,அருளில் திளைக்கவே நமக்கு ஒரு நாள் தேவைப்படுகின்றது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை விடியலில் கிளம்பி சரியாக 6 மணி அளவில் தேவதானப்பட்டி அடைந்தோம்.அவசியம் குழுவினர் மகிழுந்தில் சரியாக சுமார் 8 மணி அளவில் தேவதானப்பட்டி வந்து சேர்ந்தனர்.இரண்டு மகிழுந்தில் சுமார் 30 நபர்கள் இருந்தனர். அதில் சுமார் 82 வயது மதிக்கதக்க பெரியவரும், சுமார் 70 வயது உடைய பாட்டியும் வந்திருந்தனர்.எனக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டது.எப்படி இவர்கள் மலை தரிசனம் பெற வந்துள்ளார்கள் என்று ? இருப்பினும் நடத்துபவன் அவன் ஆயிற்றே. அவனுக்கு தெரியாதா ? எதை? எப்போது?யாருக்காக?நடத்த வேண்டும் என்று.தேவதானப்பட்டியில் இருந்த பேரூராட்சி அலுவலகம் சென்று,அங்கே விரிப்பை போட்டு,காலை சிற்றுண்டியை உண்டோம்.

அருமையான காலை உணவு. காலை பசிக்கு பொங்கல்,இட்லி,வடை,சட்னி,சாம்பார் என்று அமர்க்களப்படுத்திவிட்டனர்.சற்று நேரம்,பந்தியில் பரிமாறிவிட்டு,காலை உணவை ஒரு பிடி பிடித்தோம். உணவு முடித்து மகிழுந்தில் மலை அடிவாரம் நோக்கிப் புறப்பட்டோம்.சுமார் 30 நிமிட பயணத்தில் மலைப் பாதை அடைந்தோம். கல்லும் ,மண்ணும் ,சரளைக் கல்லுமாக பாதை இருந்தது.வண்டியை விட்டு,கீழே இறங்கியதும், நேரே உள்ள மலையைப்  பார்த்தோம்.இந்த மலையில் தான் செல்ல இருக்கின்றோம் என்றதும் மனதில்  கலக்கமும்,சற்று மகிழ்ச்சியும் ஏற்பட்டது.பாதை முழுதும் சரளைக் கற்கள் தான். மழை இல்லாத காரணத்தினால் வறட்சியை காண முடிந்தது.இது போன்ற மலைகளில் தான் நாம் எவ்வளவு சூழியலில் சீர்கேடு செய்கின்றோம் என்பது தெரிந்தது.பொதுவாக இந்த மலையும் , மலைப்பாதையையும் கரடு  என்றும் சொல்வார்கள்.கரடு முரடான பாதை கொண்ட கரடு தான்.

பின்பு வேனிற்கு சென்று, காலணி அணிந்து கொண்டு, நம்மால் முடிந்த சில பொருட்களை வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.அடிவாரம் அடைந்த பிறகு,காலணியை கழற்றி வைத்து விட்டு,நடக்கலாம் என்றார்கள்.சுமார் 9 மணி அளவில் நடக்க ஆரம்பித்தோம். 5 கி.மீ உயரம் கொண்ட மலை ,எனவே இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் நடக்கலாம் என்று சொன்னார்கள்.அவனுக்குத் தானே தெரியும்? நடப்பவை அனைத்தும்.

                                                      வேனில் ஒட்டி வைத்து இருந்த அம்மன்
அனைவரும் ஒரு தண்ணீர் புட்டி வழங்கப்பட்டது. தண்ணீர் எங்கும் கிடைக்காது.மலை உச்சியில் தான் கிடைக்கும்.அதுவரை இந்த 1 புட்டி தண்ணீர் தான் என்றார்கள்.சரி  என்று வாங்கி கொண்டு, அப்பன் தரிசனம் பெற நடக்க ஆரம்பித்தோம். காலில் காலணி இருந்தமையால், காலில் வலி ஒன்றும் தெரியவில்லை. ஒரு 10 நிமிடம் நடந்திருப்போம். சூரியக் கடவுளும் தன் கருணையைக் காட்ட தொடங்கிவிட்டார்.வேறொருன்றும் இல்லை. வெயில் அடிக்க சற்று  ஆரம்பித்து விட்டது.அடிவாரக் கோவில் செல்லும் முன்பே,வழிவிடும் தெய்வங்கள் இருந்தார்கள்.அவர்களை வழிபட்டோம். நீங்களும் வழிபட,கீழே பார்க்கவும்.


கற்பூரம் வைத்து ,சூரியனை கண்டு வழிபட்டோம்.பின்பு மெதுவாக நடக்கலானோம். அடிவார
கோவிலில் அனைவரும் சந்திக்கலாம் என்று சொல்லி நடையைத் தொடர்ந்தோம்.சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா என்பது போல, நடக்க நடக்க இனிமையாக இருந்தது.நேரம் செல்ல,செல்ல மலைப் பாதை ஆரம்பித்து விட்டது. சற்று கரடு முரடான பாதை.மனதில் தலைவரை நினைத்து, ஓம் நம சிவாய என்று மனதில் சொல்லிக் கொண்டே நடந்தோம். மேலே படத்தில் பார்த்தீர்களா? வெயில் தாக்கம் குறைய,ஒருவர் துண்டை உடலில் போட்டு வருவதை! மலை முழுதும் முள் செடிகள் தான்.

இது போன்ற மலை ஏற்றங்கள்/யாத்திரைகள் நம் உடலை வலுப்படுத்தும். உடலை மட்டும் அல்ல, நம் மனதையும் சேர்த்துத் தான். சுமார் ஒரு 15 நிமிட நடையில் அடிவாரம் அடைந்தோம். அடிவாரக் கோவில் என்றதும்,சற்று பெரிய அளவில் அல்லது சிறிய அளவிலாவது ஒரு கோவில் இருக்கும்.சற்று  இளைப்பாற இடம் இருக்கும் என்று கற்பனைக் குதிரையைத் தட்டி வைத்து இருந்தோம்.ஆனால் அங்கே நாம் கண்டது  தங்களின் பார்வைக்கு.


இதான் அந்த அடிவாரக் கோவில்.ஒரே ஒரு நுழைவு வாயில் என்ற வளைவு மட்டும் தான் இருந்தது.இப்போது மனதில் ஒரு கலக்கம் ஏற்பட்டது. தொடர இருக்கும் மலைப் பாதை சற்று கடினமாக இருக்கும் என்று. காலணியோடு தான் நடக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். இது போன்ற யாத்திரைகளில் நாம் அதை விரும்புவதில்லை.எனவே அவற்றை கழட்டி வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை வணங்கி விட்டு, பயணத்தை தொடர்ந்தோம்.

உண்மையான மலையேற்றம் இங்கிருந்து தான் ஆரம்பம். ஆள் அரவமற்ற மலை.நாங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கின்றோம்.சுமார் ஒரு முப்பது பேர், குழுவாக பிரிந்து நடக்கலானோம்.நாம்  பின் வரிசையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். முன்னேறி ,முன்னேறி சென்று கொண்டே இருந்தோம்.
நிழலுக்கு ஒதுங்கிய இடம். நல்ல கரடு முரடான சரளைக்கல் கொண்ட பாதை.ஒதுங்குவதற்கு கூட இடம் கிடையாது.எங்காவது இடம்இருந்தால்,சற்று ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தோம். ஒற்றை மர நிழலில் சிறிது நேரம் நின்று,மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.
மேலே பார்த்தீர்களா? பாதை இப்படித் தான் இருந்தது. மற்ற மலைகளில் நாம் பாதை இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியும்.இங்கே நம்மால் சொல்ல இயலாது. கல்லும்,மண்ணும் கலந்த கூரான கற்கள் கொண்ட பாதை. நமது மனமும் இப்படித்தானே இருக்கின்றது. பேராசைகளும்,எதிர்மறை எண்ணங்களும், சினம்,கடும்பற்று,முறையற்ற பால்கவர்ச்சி,வஞ்சம் ,தான் என்ற பொருள் பற்று,தனது என்ற அதிகார பற்று என்று நிரப்பி அல்லவா வைத்திருக்கின்றோம் இவை அனைத்தும் நம்மை விட்டு அகல, மலை கடவுளிடம் தஞ்சம் வேண்டும்.
சிலர் நடப்பதற்கு தடி வைத்துக் கொண்டார்கள். நமக்கு வெள்ளியங்கிரி அனுபவம் சற்று எட்டிப் பார்த்தது.இருப்பினும் கொஞ்ச தூரம் செல்லலாம்.பின் தேவைப்பட்டால் தடி எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம்.


இந்த மலையேற்றம் சற்று வித்தியாசமாய் இருந்தது. முதலில் பாதை. மற்ற மலைகளில் இப்படித்தான் கற்கள் இருக்கும், மண் பாதை,பாறை என்று கூறலாம்.ஆனால் இங்கே அப்படி இல்லை. அடுத்து குடி தண்ணீர் வசத்தி.இங்கே சுத்தமாக கிடையாது.நாம் கையில் வைத்திருப்பது தான்.தீர்ந்து விட்டால்,மலை உச்சியில் தான் கிடைக்கும். அடுத்து கடைகள் கிடையாது.ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை.தனியாக சென்றால் சற்று பயம் தான். மற்ற மலைகளுக்கு சென்றால், வேறு யாராவது இருப்பார்கள்.அது போன்ற சூழல் இல்லை.இளைப்பாற வசதி இல்லை. காலையில் 6 மணிக்கெல்லாம் சென்றால், இன்னும் மலையேற்ற அனுபவம் சிறப்பாக இருக்கும்.இப்படியே சென்று கொண்டு இருக்கும் போது, வழியில் அய்யனாரா? மாடசாமியா? என்று தெரியவில்லை. வழிகாட்டும் தெய்வ தரிசனம் பெற்றோம்.அவர் அமர்ந்து அருள்பாலிக்கும் அழகே தனி தான். சற்று உற்று நோக்கியத்தில் சித்தர் போட்டோ ஒன்று மரத்தில் இருந்தது. இவரிடம் வேண்டுதலை சமர்ப்பித்து மேலும் தொடர்ந்தோம்.
கதிரவன் சற்று கதிரொளியை நீடிக்க ஆரம்பித்து விட்டார்.கிடைக்கும் இடங்களில் ஓய்வெடுத்து கொண்டே  நடக்கலானோம். நீங்களே உணருங்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு நடக்கிறார்கள் என்று. மேற்கொண்டு செல்ல செல்ல,ஆங்காங்கே பாறைகளும் இருந்தது. இப்போது கொஞ்சமாக கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. அனைவரும் காலணி அணிந்து கொண்டு வந்தார்கள்.இந்த சரளைக்கற்கள் பாதையில் எப்படி நடந்து வருகின்றார்கள் என்பது நமக்கு பிடிபட வில்லை.எல்லாம் அவன் செயல் அன்றோ? அவன் அருள் அன்றோ? அவன் கருணை அன்றோ? என்று தான் நினைத்தோம்.

சுமார் 2 கி.மீ தூரம் நடந்து சென்றிருப்போம். எங்காவது ஓய்வெடுக்க மனம் விரும்பியது. தற்போது அனைவருக்கும் பின்னால் தான் சென்று கொண்டிருந்தோம்.இயற்கை அன்னையின் வனப்பில் மெய் மறந்தோம்.பாதையும் சற்று கடினமாகத் தான் இருந்தது.வெயிலும் அதிகமாக இருந்தது.பாறைகளும்,கற்களுமாக கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று நினைத்துக் கொண்டே நடந்தோம்,


சற்று தூரத்தில் உடன் வந்த உறவுகள் இருப்பதைக் கண்டோம். ஆஹா ! அனைவரும் இயற்கையுடன் உறவாடுவது கண்டு,வேகமாகச் சென்றோம். சற்று தூரமே. மனதில் புது தெம்பு பிறந்தது.                                          மலையின் ஒரு பகுதி தங்களின் பார்வைக்காக 

இதோ ! கூப்பிடும் தூரம் தான். அடித்து விட்டோம். அனைவரும் ஒருங்கே. சிலர் தியானம் செய்ய ஆயத்தம்.அருமையான இடம். கண்டு தெளிந்தோம்..எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதி நம்முள் எட்டிப் பார்த்தான்.இருந்தும் இல்லாமல் இரு ! பசியோடு இரு..வெயிலில் இருந்தாலும் தென்றலுடன் உறவாடு.இது தானே ! உணர்வின் பிரவாகம். உணர்ச்சியோடு இருந்தால் மகிழ்ச்சி கிடைக்கும்.ஆனால் இங்கே நாம் உணர்வோடு இருக்கின்றோம்.உணர்வின் வெளிப்பாடு இன்பம்,அதுவும் பேரின்பம்.பேரின்ப பேற்றை அல்லவா இந்த மலையேற்றம் தருகின்றது.
இதோ இந்த இடம் தான். உணர்வின் வெளிப்பாட்டில்,தியானித்த இடம். சின்முத்திரையில் சிங்கார வேலனைப் பிடிக்க முயன்ற இடம். சற்று நேரம் உள்முகமாய் அமர்ந்தோம். சுவாசத்தை உணர்ந்தோம். சுமார் 30 நிமிடம் இங்கே இருந்தோம். அப்போது உள்வாங்கிய மூச்சு காற்று உள்ளே சென்று, ஸ்பரிசம் தீண்டி, தேவையற்ற எண்ணங்களை வெளியேற்றியது.அகம் வெளுத்தது.மலையேற்றத்தில் பாதி தூரம் அடைந்து விட்டோம் என்று சற்று துள்ளாட்டம் போட்டது மனது.இது இன்னும் சுமார் 3 கி.மீ தூரம் சென்றால், அந்த தகப்பன்சாமி தரிசனம் கிடைக்கும் .

- அடுத்த பதிவில் பெருமானின் தரிசனம் 

முந்தைய பதிவுகளுக்கு :-

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html


No comments:

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌