Subscribe

BREAKING NEWS

17 August 2017

சாபங்களை வரமாக்கிய காகபுஜண்டர்...


குருவை மதி - அதுவே உயர்வுக்கு விதி.

சிவநேசன் என்பவன் ஒரு குருவிடம் சீடனாகச் சேர்ந்தான். சிவபெருமான் மேல் அதிகமான பக்தி கொண்ட அவனுக்கு, ‘ஈசனை விட உயர்ந்த கடவுள் இல்லை’ என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அவனுடைய குருவோ, விஷ்ணு மேல் அதிக பக்தி கொண்டவராக இருந்தார். இதனால் குருவின் மீது வெறுப்பு ஏற்பட்டு, நாளடைவில் அவரை மதிக்காமல் இருக்கத் தொடங்கினான்.

குருவோ, தனது சீடனுடைய எண்ணத்தில் காலப்போக்கில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

இந்த நிலையில் ஒருநாள் சிவநேசன், அங்கிருந்த மகாகாலேஸ்வரர் கோவிலில் அமர்ந்து, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய குரு அங்கு வந்தார். அவனோ, குருவைக் கண்டும் காணாமல் இருந்தான்.

சீடனைப் பற்றித் தெரிந்திருந்த குரு, அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஆலய இறைவன், சீடனின் செய்கையால் கோபமடைந்தார்.



அவரது குரல் அசரீரியாக ஒலித்தது. ‘ஆணவத்தால் அறிவை இழந்த மூடனே! குருவை மதிக்காமல் இருக்கும் உனது செயல் எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய ஆலயத்தில் அமர்ந்து கொண்டு, என் முன்பே உன் குருவை அலட்சியம் செய்யும் உன்னுடைய வேண்டுதல்கள் எதையும் நான் ஏற்கப் போவதில்லை. குருவை மதிக்காமல், மலைப்பாம்பைப் போல் அமர்ந்திருந்த நீ, மலைப்பாம்பாகவே மாறிப்போவாயாக’ என்று சாபம் கொடுத்தார்.

தான் வணங்கி வந்த இறைவனே, தனக்குச் சாபம் கொடுத்ததை நினைத்து சிவநேசன் வருத்தமடைந்தான். இருப்பினும், இறைவன் கொடுத்த சாபம், தனக்குப் பயனளிக்கும் வரமாகத்தான் அமையும் என்று நம்பினான்.

சிவநேசனுக்கு சாபம் கிடைக்கத் தானே, காரணமாகிவிட்டதை எண்ணி குரு வருத்தமடைந்தார். அவர் மகா காலேஸ்வரிடம், ‘இறைவா! என் சீடன் தங்கள் மேல் கொண்ட அதிக பக்தியால், விஷ்ணுவை வணங்கும் என்னை மதிக்க தவறிவிட்டான். இதை நானே பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், அவனுக்கு தாங்கள் கொடுத்த சாபம் மிகவும் கடுமையானது. எனவே அவன் மீது கருணை கொள்ள வேண்டும்’ என்று வேண்டினார்.

குருவின் பாசம் இறைவனை மகிழ்ச்சிப்படுத்தியது. ‘வேதியரே! உங்களது உயர்ந்த எண்ணம் என்னை மகிழ்விக்கிறது. இருப்பினும் அவன் சாபத்தை ஏற்றுதான் ஆக வேண்டும். பாம்பாக மாறும் இவன், அதன் பின்பும் சில பிறப்புகள் எடுப்பான். ஒவ்வொரு பிறப்பிலும், பிறப்பு, இறப்பினால் ஏற்படும் துன்பங்கள் இவனுக்கு இருக்காது. அனைத்துப் பிறவிகளிலும், இவன் பெற்ற தத்துவ ஞானங்கள் அனைத்தும் அவனுடனேயே நிலைத்திருக்கும். இனி அவனுடைய பிறவிகள் அனைத்திலும், அவன் வெறுத்து வந்த விஷ்ணுவின் மேல் இறைபக்தியுடன் இருப்பான்’ என்றார்.

சாபத்தால் மலைப்பாம்பாக மாறிய சீடன், பல ஆண்டுகள் வாழ்ந்து இறந்தான். அதன் பிறகும் பல பிறப்புகளை எடுத்தான். அந்த பிறப்புகளில் எல்லாம் விஷ்ணு பக்தனாக வாழ்ந்தான். இறுதியில் ஒரு உயர்குலத்தைச் சேர்ந்த வீட்டில் மகனாகப் பிறந்தான். புசுண்டன் என்ற பெயரில் அவன் அழைக்கப்பட்டான். சிறுவனாக இருந்த போது அவனுக்கு விஷ்ணுவை நேரில் காணும் ஆவல் ஏற்பட்டது. பல இடங்கள் அலைந்து திரிந்தான். இறுதியில் ஒரு லோமச முனிவரைச் சந்தித்தான்.


அவரிடம், ‘சுவாமி, நான் விஷ்ணுவை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும். அதற்கான தகுந்த ஆலோசனையைத் தந்தருளுங்கள்’ என்று வேண்டினான்.

அதைக் கேட்ட முனிவர், ‘இறைவன் விஷ்ணுவும், ஆன்மாவும் வேறு வேறல்ல. நீரின்றி பிரியாத அலைகள் போல, பரமாத்வாகிய விஷ்ணு பெருங்கடலாகவும், நாமெல்லாம் அதில் தோன்றும் அலைகளாகவும் இருக்கிறோம். ஆகையால் இறைவனை உன்னிடம் இருந்து பிரித்துப் பார்த்து தேடி அலைய வேண்டியதில்லை’ என்று அறிவுரை வழங்கினார்.

அவரது அறிவுரையை ஏற்காத சிறுவன், ‘சுவாமி! விஷ்ணுவைக் காண நல்வழியைக் காட்டச் சொன்னால், அவரும் நாமும் வேறல்ல என்று கூறி, என் எண்ணத்தை திசை திருப்பி விடப் பார்க்கிறீர்களே’ என்று கோபப்பட்டான்.

அவனது பேச்சால் கோபமடைந்த முனிவர், ‘முட்டாளே! நான் சொல்லும் எதையும் ஏற்காமல், உன்னுடைய விருப்பத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் உனக்கும், கூவி அழைத்து உணவு தருபவரைப் பார்த்தே அஞ்சி ஓடும் காகத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை. எனவே இன்று முதல் நீ காகமாகவே மாறிப் போவாய்’ என்று சாபமிட்டார்.

காகமாக மாறிய புசுண்டன், முனிவர் மேல் கோபம் கொள்ளாமல், ‘சுவாமி! காகத்தின் உருவிலாவது நான் விஷ்ணுவைக் காண முடியுமா?’ என்று கேட்டான்.

விஷ்ணு மேல் அவன் கொண்டிருந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்த முனிவர், அவனுக்கு சில விஷ்ணு மந்திரங் களைச் சொல்லிக் கொடுத்தார். பின்னர், ‘காக உருவில் உள்ள நீ, இனி பிறப்பு, இறப்புகள் இன்றி வாழ்வாய். நீயாக விரும்பி இறப்பை ஏற்கும் வரை, உனக்கு அழிவே இல்லை. நீ வாழும் காலத்தில் விஷ்ணுவை மட்டுமின்றி, சிவபெருமான், பிரம்மா மற்றும் தேவலோகத்தினரையும் கண்டு மகிழ்வாய். காகபுசுண்டர் எனும் பெயரில் சிறப்படையும் உன்னை, அவர்களே அழைத்துச் சிறப்பு செய்வார்கள்’ என்று வாழ்த்தினார்.

முனிவரின் வாழ்த்தால் மகிழ்ச்சியடைந்த புசுண்டன், காக வடிவில் விஷ்ணு மந்திரத்தை உச்சரித்தபடியே வானில் பறந்தான். அதன் பிறகு காக வடிவிலேயே இருந்து உலகில் நிலவும் பல உண்மைகளை கண்டறிந்து, தனது அறிவுத்திறமையை வளர்த்துக் கொண்டே சென்றான். நாளடைவில் நிறைவுபெற்ற மகரிஷியாக மாறிப்போனார்.

உலகம் பல அழிவுகளை சந்தித்து, ஒவ்வொரு அழிவின் போதும் புதிய உலகம் தோன்றிக் கொண்டிருந்தது. உலக அழிவில் உலக உயிர்கள் அனைத்தும் அழிவுற்றாலும், காக வடிவில் இருந்த காகபுசுண்டர் மட்டும் அழிவின்றி, உலக சுழற்சியைக் கண்டு வியந்தபடி இருந்தார். அதனால் அவரது அறிவுத்திறன் பன்மடங்கு அதிகரித்தபடி இருந்தது.

உலக அழிவின் போதெல்லாம் காகபுசுண்டர் மட்டும் அழியாமல் இருப்பது கண்டு தேவலோகத்தினர் ஆச்சரிய மடைந்தனர். அவர்கள் சிவபெருமானிடம் சென்று, ‘இறைவா! உலகம் அழிந்து, அதில் வசித்த உயிரினங்கள் அனைத்தும், விஷ்ணுவிடம் சென்றடைந்து விட்டன. ஆனால் காக வடிவிலான புசுண்டர் மட்டும் அழியாமல் இருப்பது எப்படி?’ என்று கேட்டனர்.

‘காகபுசுண்டர் உலக அழிவில் இருந்து தப்பித்தது பற்றி, நீங்கள் விஷ்ணுவை சென்று கேட்டறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார் சிவபெருமான்.

இதையடுத்து தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று இதுபற்றி வினவினர்.

விஷ்ணுவோ, ‘உலகத்திலிருக்கும் அனைத்து உயிர் களும், ஊழி காலத்தில் அழிந்து போயின. அவை அனைத்தும், பள்ளி கொண்டிருந்த என்னிடம் வந்து சேர்ந்தன. அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். என்னுடைய சுதர்சன சக்கரம் எவராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. ஆனால் காகபுசுண்டர் மட்டும், சக்கரத்தைச் சுழல விடாமல் செய்து, அதிலிருந்து தப்பிச் சென்று விட்டார். அவர் என்னிடமிருக்கும் சக்கரத்தைக் காட்டிலும் வலிமை மிக்கவராக இருக்கிறார். அவர் எப்படி அந்தச் சக்கரத்தின் சுழற்சியில் இருந்து தப்பித்தார் என்பதை, அவரையே அழைத்துக் கேட்டால்தான் தெரியும்’ என்றார்.

தேவர்கள் அனைவரும் வசிஷ்ட முனிவரின் வாயிலாக காகபுசுண்டரை கயிலாயம் வரவழைத்தனர். கயிலாயத்தில் காகபுசுண்டரின் வரவுக்காக முப்பெரும் தேவர்களும் தங்கள் மனைவியருடனும், தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்டோரும் காத்திருந்தனர்.

வசிஷ்ட முனிவரும் காக புசுண்டரை அழைத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர்ந்தார். தேவர்கள் அனைவரும், ‘காகபுசுண்டரே! பூலோகத்தில் வாழும் தாங்கள், உலக அழிவில் இருந்து எப்படி பிழைத்தீர்கள்?’ என்று கேட்டனர்.

‘நான் இந்த உலக அழிவை மட்டுமல்ல, இதற்கு முன்பாக ஏற்பட்ட பல உலக அழிவுகளையும் நேரில் பார்த் திருக்கிறேன். அழிவுக்குப் பிறகு புதிதாக தோற்றுவிக்கப்படும் உலகத்தையும் நேரில் கண்டிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்து, பல அதிசய நிகழ்வுகளை பார்த்து வருகிறேன். இந்த உலகத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் முழுமையாக அறிந்து வைத்துள்ளேன். அதற்கும் மேலாக நான் விரும்பும் போதுதான் எனக்கு மரணம் நிகழும் என லோமச முனிவர் எனக்கு வரம் அளித்துள்ளார். இவையெல்லாம் தான் இதற்கு காரணம்’ என்று கூறி முடித்தார்.

சாபங்களைக் கூட மகிழ்வுடன் ஏற்று, அதற்கு விமோசனம் எதுவும் கேட்காமல், சாபம் கொடுத்தவர்களிடமே, சாபத்தைக் காட்டிலும் அதிக பயன் தரும் வரங்களைப் பெற்று உயர்ந்த காகபுசுண்டரை, தேவர்கள் அனைவரும் பாராட்டினர்.

தான் உயர்வாக நினைக்கும் ஒன்றில் மட்டும் அதிகமான ஆர்வம் கொண்டு செயல்படும் நிலையில், நமக்கு எதிராக பாதிப்புகள் வந்தாலும், ஆர்வத்தை மாற்றிக்கொள்ளாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால் தனிப்பட்ட சிறப்புகள் நம்மைத் தேடிவரும் என்பதையே இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.

நன்றி - மாலைமலர்

No comments:

Post a Comment