Subscribe

BREAKING NEWS

06 August 2017

விதியை நம்புவதா? மதியை நம்புவதா?

விதியா ? மதியா?

என்ற கேள்வி எப்போதும் மனதுள் போராட்டத்தை ஏற்படுத்தும்.இன்றைய பதிவில் விதி மற்றும் மதி பற்றி சிறிது காண்போம். சிறிய கதை ஒன்றின் மூலம் முதலில் விதியை பற்றி அறிவோம்.

ஒரு நாள் வைகுண்டத்தில் கருடனும் அதன் நண்பனுமான குருவியும் பூலோகத்தில் ந்டந்தவைகளை பற்றி பேசி கொண்டிருந்தன.அந்த சமயம் அங்கு மகா விஷ்ணுவை காண வந்த யமதர்மர் சிறிது நேரம் நின்று குருவியை பார்த்து முறைத்து விட்டு பின் உள்ளே சென்றார்.
இதை கண்ட கருடனுக்கு பயம் ஏற்பட்டு குருவியை யமதர்மர் வருவதற்க்குள் மறைவான இடத்தில் வைக்கவேண்டும் என்று எண்ணி உடனே அங்கிருந்து குருவியை தன் மேலே அமர செய்து கடலுக்கு அப்பால் உள்ள மலை குன்றில் ஒரு மரக்கிளையில் அமர செய்து விட்டு சற்று நேரத்தில் வந்து கூட்டி செல்வதாக சொல்லிவிட்டு அவசரமாக வைகுண்டம் வந்தார்.



வெளியே வந்த யமதர்மர் பதட்டதுடன் கருடனிடம் ," இங்கு இருந்த குருவி எங்கே சென்றது?" என்றார்.அதற்கு  அதை பத்திரமாக உங்கள் பார்வையில் இருந்து மறைத்து வைத்துள்ளேன் என்றார் கருடன்.

அதன் உயிர் என் கையால் முடியவேண்டும் என்பது விதி.ஆதலால் கருடதேவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.இங்கு உள்ள குருவி கடலுக்கு அப்பால் உள்ள ஒரு மலைக்கு குன்றில் உள்ள மரத்தில் உள்ள பாம்பால் சாக வேண்டும் என்பது விதி. சிறிய இறகுகளை வைத்துள்ள குருவி அவ்வளவு தூரம் 1 நாழிகைக்குள் எவ்வாறு செல்லமுடியும் என வருத்ததுடன் சென்றேன்,என் மனக்கவலையை தாங்கள் போக்கி விட்டீர்கள் ",என்றார் யமதர்மராஜன்.

உடனே இதை கேட்ட கருடன் மிக வேகமாக அங்கு சென்றார்.கருடன் வருவதை பார்த்த குருவி கீச் கீச் என்று ஒலி எலுப்பியது.சத்தம் கேட்ட பாம்பு மரப்பொந்தில் இருந்து வந்து குருவியை முழுங்கி சென்றது.



உடனே அந்த இடத்தில் யமதர்மராஜன் தோன்றி கருடருக்கு மீண்டும் நன்றி என தெரிவித்தார். அப்போது தான் கருடருக்கு புரிந்தது குருவியின் உயிர் தன்னால் தான் பிரியவேண்டும் என்று விதி நிர்ணயம் செய்ததை.

விதியை மதி கொண்டு வெல்லலாம் என்பதை விட, விதி தான் அங்கு சதி செய்து மதியை கைப்பாவையாய் மாற்றி தன் வேலையை முடித்துக்கொள்கிறது

விதி வலியது.



நமது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பல திறமைசாலிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுவோம். ‘இவர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று பிரபலமாவார்கள்’ என்று கணித்திருப்போம்.

ஆனால் நாளடைவில் அவர்களில் மிகச் சிலரே வெற்றியடைகிறார்கள். பெரும்பாலானவர்கள் நாம் எதிர்பார்த்த அளவு சாதனைகள் புரிவதில்லை என்பதைவிட இருந்த சுவடே தெரியாதபடி காணாமல் போய்விடுவதுண்டு.
வெற்றியடைந்தவர்களைக் கண்டு ஆச்சர்யவப்படுவதைவிட அதிகத் திறமை கொண்டவர்களாக நாம் கணித்தவர்கள் சாதிக்காமல் போனது ஏன்? என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி நம்முன் எழுவதுண்டு.

பள்ளியில் கால்பந்து விளையாட்டில் சூரப்புலியாக இருந்த நீங்கள், தற்போது சம்பந்தமே இல்லாமல் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறீர்களே? என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா?

‘விதி’


‘விதி’ என்ற ஒற்றைச் சொல்லில் அவர்களது தோல்விகளை மறைத்துக் கொள்வார்கள். விதி என்பது தங்களுக்குத் தாங்களே எழுதிக் கொள்ளும் முடிவுரை என்ற உண்மை அவர்களுக்குப் புரிவதில்லை.


மேற்கண்ட கருத்து நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கின்றது.

ஆம், விதி என்பது எழுதப்படுவது அல்ல, ஏற்படுத்திக் கொள்வது என்பதே நிதர்சன உண்மை.
தோல்வியடைந்த மனிதர்களை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அவர்களிடம் மூன்று குணாதிசயங்கள் இருப்பதைக் கண்டிப்பாக காண முடியும்.

அதில் முதலாவது, சாதனை புரிந்தே தீர வேண்டும் என்ற அக்னி, அதாவது வெறி இருப்பதில்லை. இந்த வெறி இல்லாதவர்களிடம் எத்தனை திறமை இருந்தாலும் அவர்கள் பிரகாசிப்பதில்லை.


இரண்டாவது அவர்களது செயல்பாடுகள் சீராகவும், தொடர்ச்சியாகவும் ஒரே விசயத்தில் இருப்பதில்லை. இன்று ஒன்றில் ஆர்வமாக இருப்பவர்கள், நாளை வேறொன்றில் தீவிர ஈடுபாடு காட்டுவார்கள். சில நாட்களில் மீண்டும் புதிதாக வேறொன்றின் மீது ஆர்வம் என்று வெற்றி நோக்கத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.


மூன்றாவது அவர்கள் வெற்றி வரும்வரை பொறுமையாக தாக்குப்பிடித்து நிற்பதில்லை. தற்காலிகத் தோல்விகளுக்கு பயந்து பின்வாங்கி விடுவார்கள்.தற்காலிக தடங்கல்களும், நிராகரிப்புகளும், தோல்விகளும் முயற்சிகளைக் கைவிட அவர்களுக்கு போதுமானவையாக இருக்கும்.

இந்த மூன்று தவறுகளையும் வெற்றியாளர்கள் செய்வதில்லை என்பதை பல வெற்றியாளர்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு துறையில் வெற்றியடைய வேண்டும் என்று விரும்பினால் அதில் எந்த அளவுக்கு உறுதியாக நிற்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் பிலைய்ஸ் பாஸ்கல் என்ற கணித மேதை.1623ம் வருடம் பிரான்ஸில் பிறந்த பாஸ்கல், மூன்று வயதிலேயே தாயை இழந்தார். அதனால் பாஸ்கலுக்கு உடல்நலம் பெருமளவு பாதிக்கப்பட்டது. பாஸ்கல் நீண்ட நாட்கள் உயிர் வாழமாட்டார் என்று மருத்துவர்களும், ஜோதிடர்களும் கூறினர். அதனால் அவரை செல்லம் கொடுத்து வளர்த்தார் நீதிபதியாக இருந்த அவரது தந்தை.வளரத் தொடங்கிய பாஸ்கல் அறிவுக் கூர்மையுடன் திகழ்ந்தார். தந்தை பாஸ்கல் சட்ட மேதையாக வளர வேண்டும் என்று விரும்பினார்.


ஆனால் பிறப்பிலேயே கணித ஞானம் கொண்டிருந்த பாஸ்கல் முழுநேரம் கணிதக் கோட்பாடுகளிலேயே ஆர்வமாக இருந்தார்.எத்தனை அறிவுரை கூறியும் பாஸ்கல் மனம் மாறாததைக் கண்ட அவரது தந்தை சட்டப்புத்தகம் மட்டுமே நிறைந்த அறையில் அவரைப் பூட்டி வைத்தார். உள்ளே சென்ன பின்னரும் சட்டப்புத்தகத்தைப் படிக்காமல் கணிதக் கோட்பாடுகளையே பாஸ்கல் எழுதினார். வெறுப்புற்ற தந்தை அங்கிருந்த எழுத்துக் கருவிகள், பேப்பர் என அனைத்தையும் அப்புறப்படுத்தினார்.



ஆனாலும் பாஸ்கல் கொஞ்சமும் மனம் தளராமல் கரித்துண்டு, சாக்பீஸ் போன்றவற்றைக் கொண்டு தரையில் கணிதக்கோட்பாடுகளை எழுதிப் பார்த்தார். இறுதியில் தந்தை தன் கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டியதானது. 16 வயதிலேயே கணித வடிவ இயலில் பெரிய சாதனையாக கருதப்படும் கூம்பு வெட்டுகளைப் பற்றி நீண்ட கட்டுரை எழுதினார். அதைப்புரிந்து கொள்ள முடியாத ஆசிரியர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர்.ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். அன்று அவர் கண்டுபிடித்த கோட்பாடுகள் தான் “பாஸ்கல் தேற்றம்” என்ற பெயரில் இன்று நடைமுறையில் இருக்கிறது.


கால்குலேட்டர் கண்டுபிடிப்பில் முக்கிய பங்களிப்பைச் செய்திருந்த பாஸ்கல் 39வது வயதில் மரணத்தைத் தழுவினார். சிறுவயதிலேயே விதியினால் கைவிடப்பட்ட பாஸ்கல், விதியை மீறி உழைத்த காரணத்தினால் தான் இன்று வரை உலகில் கணிதமேதையாக வாழ்ந்து வருகிறார்.
பாஸ்கல் தனது குறிக்கோளையும், எதிர்காலத்தையும் யாருக்காவும், எதற்காகவும் விட்டுத்தரவில்லை. இந்த உலகம் விதி, தோல்வி, கிண்டல் போன்ற சான்றிதழ்களைத் தந்தாலும் அதையும் அவர் பொருட்படுத்தவில்லை. எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன்னுடைய விதியை தானே தீர்மானித்துக் கொண்டார்.எனவே திறமை மட்டுமே வெற்றி பெற போதுமானதல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எத்தகைய திறமையாளர்களுக்கும் உடனடி லாட்டரி போல் வெற்றி வந்து மடியில் விழுந்துவிடாது.
வெற்றிப் பயணத்தின்போது தடங்கல்கள், தோல்விகள் சகஜம் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு ஈடுபாடு குறையாமல் தொடர்ந்து பயணப்படுங்கள்.

இன்னும் சற்று ஆழமாக நம் மனதை உழுவோமா? கேட்ட கதை தான்.ஆனால் பதிவின் சுவை கருதி இங்கே சமர்ப்பிக்கின்றோம்.



 ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".

 ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"

 கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் வலது  காலை உயர்த்திஇடது  காலால் நின்றான்.

 ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"

 அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நகைச்சுவை நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?"

 ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க  முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"

 அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.

இப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வாழ்க்கை என்பது சீட்டாட்டம் மாதிரி.குலுக்கிப் போடும் போது என்ன சீட்டுக்கள் வருகின்றது என்பது விதி.கையில் கிடைத்த சீட்டுக்களை வைத்து,நாம் எப்படி ஆடுகின்றோம் என்பது மதி.நமக்கு எந்த சீட்டு வர வேண்டும் என்று நம்மால் தீர்மானிக்க முடியாது.இதுவே விதி. ஆனால் விதியாக நமக்கு கிடைத்த சீட்டை மதி கொண்டு ஆடி வெற்றி பெறுவதும்,தோல்வி அடைவதும் நம் கையிலே. எனவே விதியை விட மதிக்கே வலிமை அதிகம்.

நீங்களாக ஏற்றுக்கொள்ளாத வரை தோல்வி நிச்சயமானதல்ல. அது வெற்றிக்கு முந்தைய இடைநிலையே. பொய்யான விதியை ஏற்றுக்கொண்டு முயற்சியைக் கைவிடாதீர்கள்.

விதியின் நாயகனான இறைவன், திறமையை மனிதர்களுக்குத் தந்திருப்பது வெற்றி பெறுவதற்காகவே என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழாது உஞற்று பவர்      

விதியை வெல்லமுடியுமா? முடியும். திருவள்ளுவர் விதியை வெல்லும் வழியை இக்குறளில் கூறி இருக்கிறார். நீங்கள் செய்து முடிக்க நினைத்த செயலில் தோல்வி வந்துவிட்டதா? விதியே என்று இருந்து விடாதீர்கள். விதியை வெல்வதற்கு, சோர்ந்திருக்காது விரைந்தெழுந்து  தொடர்ந்து செயற்படுங்கள். உங்கள் செயற்திறனால் விடாமுயற்சியால் நீங்கள் செய்து முடிக்க நினைத்ததை முடித்து, விதியை வென்றுகாட்டலாம்.
மனிதர் அறிவற்ற சடப்பொருள் அல்லர். எமக்கு அறிவு இருக்கிறது. மனிதர் தம் விடாமுயற்சியால் ஊழையும் அதாவது விதியையும் வெற்றி கொள்ளமுடியும். இது நம் தலைவிதி என்று செயற்படாதிருக்க மனிதனால் முடியவே முடியாது. அப்படி இருந்திருந்தால் மனிதன் கிரகம் விட்டு கிரகம் தாவ முனைந்திருப்பானா? 
குமரகுருபர சுவாமிகள் நீதிநெறி விளக்கம் என்ற நூலில் கூறியுள்ளது போல் நாம் செயற்பட்டால் இக்குறளில் திதுவள்ளுவர் கூறியது போல் விதியை வெல்லலாம்.

“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.”                              (நீதி.விளக்கம்: 52) 
தான் எடுத்த செயலைச் செய்து வெற்றியடைய ஒருவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை மிக நேர்த்தியாக குமரகுருபரர்  இப்பாடலில் தந்துள்ளார். உடல் வருத்தத்தை - நோவைப் பராது, பசி எடுப்பதையும் கண்டுகொள்ளாது, விழித்திருந்து, மற்றவர் செய்யும் துன்பன்களையும் பொருட்படுத்தாது, தன்னைப் புகழ்வோரைப் பார்த்து மகிழாமலும்  இகழ்வோரைப் பார்த்து சினக்காமலும் தான் எடுத்த செயலை காண்ணாகத் தொடர்ந்து விடாது செய்பவன் வள்ளுவர் கூறியது போல் விதியை வென்று வெற்றியடைவான். விதியை வெல்லவேண்டுமா உங்கள் இலட்சியத்தை நாடி தொடர்ந்து செயற்படுங்கள்.    

வாருங்கள்.இனியொரு விதி செய்வோம்.



முந்தைய பதிவுகளுக்கு:-

இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..!http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_4.html



தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா? - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_51.html




                    

No comments:

Post a Comment