Subscribe

BREAKING NEWS

02 August 2017

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள்வோமா?

 சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ..

மனிதனாய் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் சிக்கல்கள்,குழப்பங்கள்,பிரச்சனைகள் என்று ஏதாவது இருக்கத் தான் செய்யும். சிக்கல்கள் இல்லாவிடில் வாழ்வில் சுவாரசியம் இருக்காது.இவை எல்லாம் எப்படி ஏற்படுகின்றன.இவை நம்  இலக்கை அடைய கடினப்படுத்தும் தடைகள்.

மனித உறவுப் பிரச்சனைகள்  மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு  ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம்.





தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன.

1. உயர்வு மனப்பான்மை  & தாழ்வு மனப்பான்மை  கொள்ளாமல் இருக்க வேண்டும். கர்வம் கொண்ட, அகங்காரம் மிக்க, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற, தானே பெரிது என்று எண்ணுகின்ற, மனப்பான்மையை போக்கிக்கொள்வது எப்படி?

இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் தெரிந்துகொள்ளவும் முடியாது. ஒரு உதாரணத்திற்கு, ஒரு ராக்கெட்டில் அதன் உச்ச வேகத்தில் வானத்தில், எவ்வளவு ஆண்டுகள் பயணித்தாலும், வானின் எல்லையை காண முடியாது. இப்படி பூமிக்கு மேலேயும், கீழேயும் பக்க வாட்டிலும் வானுக்கு எல்லை இல்லை. எவ்வளவு பெரிய தொலைநோக்கியை வைத்து ஆராய்ந்தாலும், ஒரு எல்லைக்கு மேல் அறிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது இந்த வானவெளியில் பூமி, இந்தியா, தமிழ்நாடு, நம்மூர், நாம் – எவ்வளவு மிகச்சிறு பகுதி… எண்ணிப்பாருங்கள்.



ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அதையும் பிரித்து அணுத்துகள்கள் – இவற்றைப் பற்றி எவ்வளவு டாக்டர் பட்டம் வாங்கினாலும், எத்தனை ஆராய்ச்சிகள் செய்தாலும் முழுமையாக இன்னும் புரியவில்லை. பிறப்புக்கு முன்பும், இறப்புக்கு பின்பும் இன்னும் சரியாகத் தெரியவில்லை.
இதையெல்லாம் எண்ணிப்பார்த்தால் தான் பெரிது என்ற அகங்கார மனநிலை போய்விடும்.

தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி?
இந்த உலகில் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு தனித்தன்மையும் சிறப்புத்தன்மையும் உடையது. ஒருவர் கைரேகையைப் போல் இன்னொருவர் கைரேகை இருப்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு செடி,கொடி, பறவைகள் உயிரினங்கள்- எல்லாமே மிக மிக அற்புதமாக படைக்கப் பட்டிருக்கின்றன. இதை எண்ணிப்பார்க்கும்போது ஒரு சிறந்த படைப்பே என்பதை எண்ணிப்பார்த்தால் ஒப்பிட்டு உருவாகும் தாழ்வு மனப்பான்மை ஓடிவிடும். என்னிடம் மறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை தொடர் முயற்சியினால் வெளிப்படுத்தினால் மாபெரும் சாதனை புரிய முடியும் என்பதை உணர்ந்து தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறிக.



“பெரியோரைப் பார்த்து வியத்தலும் இலமே
சிறியோரைப் பார்த்து இகழ்தல் அதனினும் இலமே”
-புறநானுறு

2. இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும், மதிப்பும், முக்கியத்துவமும், கொடுக்கும்போது, உறவுகள் இனிமையாகும்.

ஏனென்றால் எல்லா உயிர்களுக்கும் அடிப்படை உறவுத் தேவைகள்: (i) அன்பு (ii) மதிப்பு, முக்கியத்துவம், அங்கீகாரம்

இவைகள் கிடைக்கும்பொழுது உள்ளங்கள் நிறைவு கொள்ளும். நிறைந்த உள்ளங்கள் நிறைவின் இனிமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தும்.
மனித உறவுத் தேவைகள் கிடைக்காத போது, உள்ளங்கள் பாதிக்கப்பட்டு – பாதிப்பினை வேறு வேறு ரூபத்தில் எளிப்படுத்தி – உறவுகளுக்குள்உரசலை  உருவாக்கும்.
ஆகவே நான், எனது என்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசாமல், உங்கள் நீங்கள், உங்களுடைய என்கிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும்போது – நம்மோடு உரையாடவும், உறவுகளைத் தொடரவும் மனிதர்கள் விரும்புவர்.

கௌதம் புத்தர் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கே பதிக்கின்றோம்.

கௌதம புத்தர் மாபெரும் விஷயங்களைச் சொல்லும் விதம் மிகவும் எளிமையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். ஒரு சமயம் சீடர்களிடம் உரையாற்ற வரும் போது கையில் ஒரு துணியுடன் வந்தார். அவர்கள் முன் பேச அமர்ந்தவர் பேச்சைத் துவங்காமல் கையில் கொண்டு வந்திருந்த அந்த்த் துணியில் முடிச்சுகளைப் போட ஆரம்பித்தார். மற்ற சீடர்கள் அவர் பேசக் காத்திருக்கையில் சாரிபுத்தன் என்கிற சீடன் மட்டும் அவர் செய்கையும் அவர் உரையின் ஒரு அங்கமே என்பதை உணர்ந்திருந்தான். அவன் உன்னிப்பாக அவர் செயலைக் கவனித்துக் கொண்டிருந்தான்.


விதவிதமாக சில முடிச்சுகளைப் போட்டு விட்டு தலை நிமிர்ந்த புத்தர் கேட்டார். “இந்த முடிச்சுகளை விரைவில் அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்?”

மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்க உடனடியாக சாரிபுத்தன் சொன்னான். “குருவே! முடிச்சுகள் எப்படி போடப்பட்டுள்ளன என்பதை அறியாத வரை அவற்றை விரைவில் அவிழ்க்க வழியில்லை. முடிச்சு போடப்பட்ட முறையை அறிந்திருந்தால் மட்டுமே அதை விரைவில் அவிழ்க்க முடியும்” .

புத்தர் சொன்னார். “சரியாகச் சொன்னாய் சாரிபுத்தா. நினைவோடு போடப்படும் முடிச்சுகளை அவிழ்ப்பது எளிது. நினைவின்றி போடும் முடிச்சுகள் சிக்கலானவை. அவை சில சமயங்களில் அவிழ்க்க முடியாமலும் போகலாம். நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். விழிப்புணர்வு இல்லாமல் நம் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கல்களில் இருந்து தான் மீள வழி தெரியாமல் திண்டாடுகிறோம்”

துணியில் போட்ட முடிச்சுகள் போட்ட விதத்திலேயே பிரிக்க சுலபமானவை. கவனத்துடன் போட்டிருந்தால் பொறுமையுடன் பிரிக்கலாம். இல்லாவிட்டால் பிரிக்க நாம் செய்யும் உத்திகளும் கூடுதல் முடிச்சுகளாகி விடும். கடைசியில் துணியையே கிழிக்காமல் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் போகும் நிலை கூட ஏற்படலாம்.

வாழ்க்கையிலும் அப்படித்தான். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்கிற விழிப்புணர்வோடு செய்தால் தவறுகள் அதிகம் நிகழ வாய்ப்பே இல்லை. அப்படித் தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை விரைவிலேயே சரிப்படுத்திக் கொள்ள முடிபவையாகவே இருக்கும்.

ஆனால் விழிப்புணர்வில்லாமால் நம் வாழ்வில் செய்து கொள்ளும் சிக்கல்கள் ஆபத்தானவை. அந்தந்த நேர உந்துதல்களில் நாமாகவே ஏற்படுத்திக் கொள்பவை. உணர்ச்சிகளின் பிரவாகத்தில் தன்னிலை இழந்து என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் செய்து கொள்பவை. இந்த சிக்கல்களில் இருந்து மீள செய்யும் முயற்சிகள் பல சமயங்களில் சிக்கல்களை அதிகப்படுத்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். பல சமயங்களில் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தாமல் சிக்கல்களில் இருந்து விடுபட முடியாது.



துணியின் முடிச்சுகள் அவிழ்க்க முடிந்த பின் துணி பழைய நிலைமைக்கே வரலாம். வாழ்க்கையின் சிக்கல்கள் அப்படி அல்ல. பல சமயங்களில் சிக்கல்கள் தீரும் போது வாழ்க்கை முன்பு போல திரும்பி மாற வாய்ப்பு இல்லை. எல்லாமே தலைகீழாக மாறிப் போகும் அபாயம் கூட உண்டு. மேலும் சிக்கல்கள் அனைத்தும் நாமே தான் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான சிக்கல்களில் நம் பங்கு கண்டிப்பாக ஓரளவாவது இருக்கக் கூடும் என்றாலும், சில சமயங்களில் மற்றவர்களாலும் சிக்கல்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட்டு விடலாம்.

நம் செயல்களால் ஆனாலும் சரி, மற்றவர்கள் செயல்களால் ஆனாலும் சரி, விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்துபவன் வரும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதனால் கவனமாகவும், வேகமாகவும், ஆரம்ப நிலையிலேயே, அவ்வப்போதே அவற்றைத் தவிர்க்கவோ, சரி செய்து கொள்ளவோ முடியும். விழிப்புணர்வு இல்லாத போதோ அவை பூதாகரமாகும் வரை கவனிக்கப்படுவதில்லை. பின் அதன் விளைவுகளில் சிக்கித் திண்டாட வேண்டி வரும். சில சிக்கல்கள் தீர்க்க முடியாமல் போகலாம், தீர்க்க முடிந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை வாழ்க்கை நாம் ரசிக்க முடியாததாக மாறியும் போகலாம்.


எனவே விழிப்புணர்வோடு இருங்கள். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருங்கள். கண்டிப்பாக நீங்கள் 90 சதவீத சிக்கல்களை விழுப்புணர்வோடு இருப்பதால் மட்டும் தவிர்த்து விட முடியும். 


என்ன அன்பர்களே ! வாழ்வின் சிக்கல்கள் தீர,இனியேனும் விழிப்புணர்வோடு செயல்படுவோம்.நம் தளத்தின் முந்தைய பதிவுகளையும் ஒரு முறை படித்துப் பாருங்களேன்

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கைhttp://tut-temple.blogspot.in/2017/07/blog-post.html


தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா?http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_51.html


No comments:

Post a Comment