Thursday, August 10, 2017

மானுட நண்பனாய் "சன்மார்க்க நேசன்"

தள அன்பர்களே,

இந்த பதிவில் நாம் அறிய இருப்பது நம்முடைய நண்பனை பற்றி. அந்த நண்பர் இங்கே நூல் வடிவில் அறிமுகம் ஆக உள்ளார்.இதுவரை இங்கே நாம் இரு நூல்கள் பற்றி பார்த்துள்ளோம். ஜீவ அமிர்தம், சிந்திப்போம் சிந்திக்க வைப்போம் என்ற வரிசையில் இன்று "சன்மார்க்க நேசன்"

சன்மார்க்கம் என்ற வார்த்தையை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? வள்ளலார் தானே ! ஆம் ! இந்த இதழ் ஒரு சமரச சுத்த சன்மார்க்கியால் வெளியாகின்றது. ஏன் இதனை இங்கே அழுத்தி சொல்கிறோம் என்றால்,நீங்களே ஆச்சர்யப் படுவீர்கள்.

அவர் தான் சன்மார்க்க நேசன்,இராமலிங்க அடிகளாரின் பக்தர்! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்"என்ற வள்ளலாரின் சித்தாந்தத்துக்குக் கிடைத்த வெற்றியாய் இருப்பவர்,அன்பே சிவம் என்பதை பூரணமாக உணர்ந்த சித்தாந்தவாதி,மனிதரில் மாணிக்கம்,உண்மையை உரைக்கும் உத்தமர்,சைவ நெறியாளர்,திருமந்திர உரையாளர்,சித்த மருத்துவர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.அவர் தான் சுத்த சன்மார்க்கி திரு. மரு.M.A.ஹுசைன் அவர்கள்.

யோசித்துப் பாருங்கள்.ஒரு இஸ்லாமியர்,வள்ளலார் பற்றி பேசுகிறார்,எழுதுகிறார் என்றால் அவர் எவ்வளவு உணர்ந்திருப்பார். இவரைப் பற்றி எழுதவே ஒரு பதிவு போதாது.விரைவில் அவரை சந்தித்து,ஒரு வி.ஐ.பி சந்திப்பு பதிவாய் விரைவில் வெளியிட குருவருளும்,இறையருளும் துணை புரியட்டும்.அந்த சந்திப்பில் பொதுவான விசயங்கள் பற்றி பேசி,பதிவிட விரும்புகின்றோம்.உதாரணமாக வள்ளலார் தமிழ்மொழியை தந்தை மொழி என்று கூறிய நிகழ்வு,தமிழ் மொழி உலக மொழியில் சிறந்தது எவ்வாறு? தமிழ்ப் புத்தாண்டு சித்திரையிலா? தை மாதத்திலா? என்பன போன்ற கேள்விகள்.

அதுவரை நீங்கள் youTube ல் அய்யாவின் நறுக்கு தெறித்தார் போல் உள்ள பேச்சினை கேளுங்கள்.சரி ..நம் நண்பனை பற்றி அறிவோமா?

இந்த மாத இதழின் முகப்புப் படம் காண்போமா? யாராலும் சற்று ஊகிக்க முடிகின்றதா? ஜோதி இல்லாமல் இருக்காது என்று நினைக்கலாம்.

இதழின் முகப்புப் படம் மிக எளிமையாய் உள்ளதாய் தோன்றும்.ஆனால் இதழின் உள்ளே உள்ள செய்திகள் நம் உடல் நலம்,மன நலம் பற்றி ஏகப்பட்ட கருத்துக்களை பேசுகின்றது. மொத்தத்தில் சன்மார்க்க நேசன் அறிவியல் மற்றும் ஆன்மிக இதழாய் மணம் வீசுகின்றது. இது வியாபார நோக்கில் நடத்தப்படுவதில்லை.எனவே தான் அட்டைப்படம் மிக எளிதாய் உள்ளது.மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப இதழ் உள்ளது.

சன்மார்க்க நேசனின் இதயத்தை படித்து பார்க்கலாமா?


இதழைத் திறந்தால், உள்ளடக்கமாய் ஆசிரியர் உரை உள்ளது.இதில் பல்வேறு தலைப்புகளில் அக்குவேறு,ஆணி வேறு என்பதை ஆராய்கின்றார் ஆசிரியர். உதாரணத்திற்கு இன்றைய கல்வி முறை -தொழில் புரட்சி என்று பேசி பேசியே, விவசாயத்தை இழந்து கொண்டிருக்கின்றோம்.இன்னும் ஒரு 50 ஆண்டுகள் கழித்து,நம் சந்ததியினர் உணவிற்கு என்ன செய்ய போகின்றார்கள்? என்று தெரியவில்லை. 

ஒவ்வொரு பக்கத்தின் கீழே ஒரு பொன்மொழி உள்ளது, 2 1/2 மணி நேர ஆழ்ந்த உறக்கம் நல்ல ஆரோக்கியம் தரும்,தரை நோக்கி நடப்பவன் தடையின்றி நடப்பான் என்பது போன்ற செய்திகள்.அடுத்தாற் போல், விளம்பரக் கட்டணம் பற்றிய அறிவிப்பு உள்ளது.பதிவை படிக்கும் அன்பர்கள்,தங்களால் இயன்ற விளம்பரம் கொடுத்து உதவலாமே !
Nutirion and child care பற்றி ஆங்கில கட்டுரை எழுதி வருகின்றார்கள்.சாம்பிள் மேலே உள்ளது.
இல்லதிற்கேற்ற இனிய மருத்துவம் என்ற கட்டுரையில் இல்லத்திற்கு தேவையான மருத்துவக் குறிப்புகள் உள்ளது.உதாரணத்திற்கு கண் பயிற்சி பற்றிய செய்திகளை மேலே இணைத்துள்ளோம்.கண்ணுக்கு எப்படி ஓய்வளிப்பது என்றும் கூறுகின்றார்கள். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள வகுப்பறையில் ஒரு வகுப்பிற்கு 2-3 மாணவர்கள் தான் கண்ணாடி போட்டு இருப்பார்கள்.ஆனால் இப்போது நிலைமை தலை கீழ். சுமார் 2 -3 மாணவர்கள் தான் கண்ணாடி போடாமல் இருக்கின்றார்கள். எனவே இது போன்ற பயிற்சிகளை செய்து கண்ணாடிகளுக்கு  விடுதலை அளிப்போம்.


ஒரு மூத்த வழக்கறிஞரின் அனுபவத்தை ஆமாம் ! கனம் நீதிபதி அவர்களே என்ற தலைப்பில் சொல்கின்றார்கள்.


நம் தமிழகம் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதை ஒரு கட்டுரை வாயிலாக உணர்த்துகிறார்கள். 10-15 வருடங்களிலேயே பற்பல சொல்ல இயலாத மாற்றங்கள்.அப்படியாயின் சுமார் 1800 ஆண்டுக்கு முன்? எப்படி இருந்திருக்கும்? கற்பனை செய்ய முடிகின்றதா? எந்த சமூகம்  பழமை மறந்து,புதுமை நோக்கி பாய்கின்றதோ, அது கண்டிப்பாக அழிந்தே தீரும். தமிழ்ச் சமூகம் அப்படி அழியலாமா? அழிய விடலாமா? என்று நம்மை நோக்கி சிந்திக்க தூண்டும் தொடரே இது.
இதழ் சொல்லும் அனைத்து கருத்துக்களும் ஏற்புடையதே. நம் பாரம்பரியத்தில் எத்தனை நெல் வகைகள் இருந்தது. ஆனால் இன்றோ? வெறும் 5 -6 வகைகள் தான். கடைக்கு சென்று நெல் வகைகள் பேர் சொல்லி அரிசி வாங்கிய காலம் மறைந்து,இன்று 50 ருபாய் அரிசி உண்டா? என்று விலை சொல்லி அரிசி வாங்கி காலத்திற்கு தள்ளப்பட்டு இருக்கோம். அதுவும் பாரம்பரிய நெல் மாமருந்து என்று சொல்கின்றார்கள்.இது போன்ற செய்திகள் நமக்கே புதிது.இனி வரும் காலம்? கண்டிப்பாக உணர்த்துவது நம் கடமையே.நம் வீட்டிலேயே கண் மை தயாரிக்கும் முறைகள் உண்டு என்று இல்லதிற்கேற்ற இனிய மருத்துவம் சொல்கின்றது.இது மட்டுமா? லேகியம் தயாரிக்கும் முறைகள் பற்றியம் சன்மார்க்க நேசன் பேசுகின்றார்.இதழுக்கோர் உணவாய் சிறப்பான உணவுகள் பற்றியும் சொல்கின்றார்கள். உதாரணத்திற்கு கேழ்வரகு மாவு அடை பற்றி குறிப்பு மேலே காட்டி உள்ளோம்.


தோசையில் எவ்வளோ வகை உண்டு. அதில் பச்சைப் பட்டாணி தோசை பற்றி இதழுக்கோர் உணவில் தந்துள்ளார்கள்.இது போன்று நம் மரபு சார்ந்த உணவுகள் பற்றி எடுத்துரைத்து நம் ஆரோக்கியம் காக்க சன்மார்க்க நேசன் உதவுகிறார்.


மூலிகைக்  கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில் மாதம் ஒரு மூலிகை பற்றி அதன் பெயர்,குணம்,பயன்படுத்தும் முறை பற்றி எழுதி வருகின்றார்கள்.உதாரணத்திற்கு உளுந்து எனும் மூலிகை ..இதை நாம் பருப்பில் தான் சேர்க்கின்றோம். ஆனால் இங்கே மூலிகை பட்டியலில் சேர்த்து, அதன் குணம் பற்றி கூறி, உபயோகிக்கும் முறைகளும் பற்றி சூப்பராக எழுதி உள்ளார்கள்.


எளிய மருந்து இனிய வாழ்வு என்ற தொடர் சில சமயங்களில் கேள்வி பதிலாகவும்,சில சமயம் பொது கட்டுரை வடிவிலும் வருகின்றது. நீரை எப்படி நாம் குடிக்கின்றோம்? அண்ணாந்து தானே? அது தவறு.நின்று கொண்டு தானே? அதுவும் தவறு. பின் எப்படிக் குடிப்பது? மேலே உள்ள இணைப்பைப் பாருங்கள்.இது போன்ற சித்தர்களின் நெறிகளை நமக்கு வழி மொழிகின்றார்கள்.
கேள்வி பதில் பகுதியாக எளிய மருந்து - இனிய வாழ்வு என்ற தலைப்பில் சிறப்பான பதில்கள்.சாக்கு போக்கு சொல்லாமல், ஆதி முதல் அந்தம் வரை பேசுகின்றார்கள்.என்னப்பா? ஒரே ஆரோக்கியமாக உள்ளதே என்று நினைக்காதீர்கள். ஆரோக்கியமே ஆன்மிகத்தின் திறவுகோல். சுவரின்றி சித்திரம் வரைய முடியுமா? உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது போன்ற கருத்துக்கள் ஆரோக்கியம் பற்றி சொல்கின்றது.
ஆன்மிக வெளிச்சமாக அருள் அறிவியல் என்ற கட்டுரை பேசுகின்றது.மேலும் அருட்பெருஞ்ஜோதி அகவல் பற்றியும் உரைக்கின்றார்கள்.ஆன்மிகத்தின் கடலில் பயணம் செய்ய வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல் உதவுகின்றது.


இவ்வாறு தலையங்கம் முதல் இதழின் கடைசி வரை ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகம் அள்ளித் தருகின்றார் நம் நண்பன் சன்மார்க்க நேசன். இதழை வாங்கி படியுங்கள். சன்மார்க்கம் பரப்புங்கள். சன்மார்க்கம் இல்லையேல், ஆன்மிகம் தழைக்காது.என்ன அன்பர்களே ! புதியதொரு நூல் பற்றி அறிந்து கொண்டீர்களா? வண்ணப்படத்திலே ஆசிரியரின் தொடபு எண் உள்ளது. வாங்கி படித்து,மரபைக் காப்போம்.

இனி நம் நண்பன் "சன்மார்க்க நேசன்" உடன் நம் பயணம் தொடரட்டும்.

முந்தைய பதிவுகளுக்கு:-


No comments:

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌