Saturday, August 19, 2017

எண்ணுவோம் பெற்றோர்களை முதல் குருவாக!

அகத்தியர்

சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தர். எத்துனை முறை படித்தாலும், திகட்டாத அருள் களஞ்சியம். முருகப் பெருமானின் முதல் மற்றும் தலையாய சீடர். தமிழைத் தந்தவர்.குருவருள் பற்றி இன்றைய பதிவில் சிறிது உணர உள்ளோம். குருவின் அருளாலே TUT தளம் தனது புதிய அறிவிப்பை பதிவின் இறுதியில் தருகின்றது. ஏன்? எப்படி? என்று தெரியவில்லை.ஆனால் நடப்பவை அனைத்தும் அவன் அருளாலே. வழக்கம் போல், நம் அன்பர்களின் ஆதரவு வேண்டி நிற்கின்றோம்.

நம் வாழ்க்கையின் நோக்கம் ஒரு குருவை நாடி என்பதே தெளிவு.ஆனால் இன்றைய காலகட்டத்தில் தடுக்கி விழுந்தால் யோகம்,குரு என்று இருந்தாலும்,நாம் கரை சேர்ந்த பாடில்லை.இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்து குருவினை அடைய போகின்றோம்? இன்றைய நாளில் ஏகப்பட்ட சித்த மார்க்கங்கள் பார்த்தும் வருகின்றோம்.ஆனாலும் விடியல் இல்லை என்றால் தவறு நம்மிடம் தான் என்று என்றாவது சிந்தித்ததுண்டா?
இது போன்ற நிலையில், சற்று ஆழமாய் சிந்தித்த போது,ஏன் இந்த நிலை கடினமாக உள்ளது? குருவினை அடைவது எப்போது? சீடன் தயார் என்றால் குரு தானாக வந்து ஆட்கொள்வார் என்று சொல்கிறார்களே என்று சிந்தனை ஓட்டங்கள் நாலா புறமும் ஓடின.அப்போது தான் கண்டிப்பாக ஒரு மெய் வழி இருக்கும்,அதுவும் மிக மிக எளிதாக இருக்கும் தோன்றியது.

அந்த வழியை இங்கே,இந்த பதிவில் சொல்ல விழைகின்றோம். ஆம் ! உண்மை குருவினை அடையும் எளிதான வழி. நாம் எப்படி இவ்வுலகிற்கு வந்தோம்.நம் பெற்றோர் மூலம் தானே.ஆம் !என்றாவது ஒரு நாள் நாம் அவர்களை குரு ஸ்தானத்தில் பார்த்ததுண்டா? அதனை உணர்தத் தான்
மாதா,பிதா,குரு,தெய்வம் என்றார்கள்.
எனவே, நம் பெற்றோரே நமது முதல் குரு. இதை உள்ளத்தில் நிறுத்தி,அவர்களை போற்றிப் பணிந்து,அவர்களின் வழி நடத்தலை ஏற்று,நாம் நடந்தால் அடுத்த கட்டமான மெய்யான குரு நம்மிடம் தோன்றுவார்.இதை உணர்த்தவே சீடன் தயார் என்றால் குரு தாமாகவே வந்து வழிகாட்டுவார். உண்மையில் சீடன் தயார் என்று எப்படி உணர்வது? அதை உணரச் செய்வதே பெற்றோரை குருவாய் கைக்கொள்வது.பின்பு நமக்கு குரு கிடைத்து விட்டால், நாம் எதைத் தேடுகின்றோமோ அதை நமக்குக் காட்டுவார்.

சித்தரியல் காட்டும் உண்மையும் இது தான்.அந்த வகையில் அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் எனும் நூலில் கூறும் சில செய்திகள் தங்கள் பார்வைக்கு வைக்கின்றோம்.இது நம் முதல் முயற்சியே.
பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே.

திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே


கேழ்க்கையிலே நீசெய்த நன்மைப்பாகம்
கிருபையுடன் சொல்லிடுவா ரப்போதானும்
வாழ்க்கையுள்ள தேகமடா வலுத்துப்போகும்
மகத்தான புத்தியுமே சொலிக்க லாச்சு
தாழ்க்காமல் பதவியிலே மேவலாச்சு
சதாகாலம் போதையுமோ தரிக்கலாச்சு
காக்கையிலே கால்வலுத்து நடக்கலாச்சு
கதிரான தீபவொளி காணலாச்சு
பற்பல நூல்களை தேடிப் பிடித்து, அவற்றை அறிந்து பக்குவமடைய இந்த வாழ்நாள் போதவே போதாது.சிறிய வயது முதலே மகத்தான குருவை தேடி கண்டு,அவருக்கு அணுக்கமாய் இருந்து கற்க வேண்டிய செய்திகளை கற்க வேண்டும் என்கிறார். இன்றைய அதிவிரைவான காலத்தில் இதெல்லாம் சாத்தியமா? என்று தாங்கள் கேட்கும் கேள்வி நம் காதுகளுக்குள் எட்டுகின்றது.
இது போல், நாம் குருவின் வழியை கடைபிடித்தால் தான், நமக்கு குருவானவர் தீட்சை கொடுத்து பற்பல மௌனத் திறங்கள்,நிஷ்டை முறைகள்,காயகற்ப வகைகள் என உபதேசிப்பார்கள்.இவ்வாறு குருவின் கருணையில் வழி நடத்தப்பட்டால் காயசித்தியும்,புத்திக்கூர்மையும், தீப ஒளி வழியாக பேரானந்த நிலை அடையலாம் என்கிறார்.

அப்ப்பா ! இத்துணை விஷயங்களா? என்று மூக்கின் மேல் விரல் வைக்காதீர்கள்.இங்கே நாம் குருவின் செய்தியை தொட்டு மாட்டும் காட்டினோம். விரிக்க கூறின் இது விரியும். எனவே இன்று முதல் பெற்றோரை குருவாய் நினைத்து, அவர்களின் பாதத்தில் தஞ்சம் அடையுங்கள். மற்றவை தானாக நடக்கும்.இதைத்தான் அவ்வைப் பாட்டியும் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் " என்று உணர்த்தினார்கள்.இங்கே ஒன்றை சொல்ல விரும்புகின்றோம். பெற்றோரை குருவாய் கொள்ள நம்பிக்கை கொள்ள வேண்டாம்.ஏனெனில் யாராவது  உங்களிடம் இதை பற்றி வேறொரு கோணத்தில் பேசினால்,உங்கள் நம்பிக்கை பொய்யாகிவிடும். ஆனால் பெற்றோரை குருவாய் கொள்ள புரிந்து கொள்ளுங்கள்.பின்பு நீங்களே அசைந்தாலும், குரு  ஸ்தானம் மாறாது.


முக்கிய அறிவிப்பு:

இது நாம் எதிர்பாராத ஒன்று. ஆனால் நம் TUT குழுமத்தின் அடுத்த கட்ட பயணத்தில் இது ஒரு மைல் கல் என்றால் அது மிகையில்லை.கூடுவாஞ்சேரி வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அகத்தியரின் தரிசனத்தில், கல்யாண தீர்த்தம்,பஞ்செட்டி என்று பயணம் செய்துள்ளோம்.கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோவிலில் அகத்தியர் தரிசனம் பெறலாம் என்று கேள்விப்பட்டோம். ஆனால் காலம் கனிய வேண்டுமே. இரண்டு,மூன்று முறை கோவிலுக்கு சென்று, வணங்கியபோது,சற்று ஆழ்ந்த அமைதியில், அகத்தியருக்கு ஆயில்யம் நட்சத்திரம் அன்று ஆராதனை செய்ய மனம் விரும்பியது.உடனே குருக்களிடம் சொன்னோம்.இதோ ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றது.இனி மாதந்தோறும், ஆயில்ய நட்சத்திர ஆராதனை நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு,குருவருள் பெற அன்போடு அழைக்கின்றோம்.


அகத்தியருக்கு ஆயில்ய அபிஷேகம்

மெய் அன்பர்களே.

TUT( தேடல் உள்ள தேனீக்களாய்) குழுவின் சார்பாக வருகின்றன 21/08/2017 திங்கட்கிழமை ஆயில்ய நட்சத்திரத்தில் காலை 9 மணி அளவில் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு வழிபாடு செய்ய இறையருளும்,குருவருளும் கூட்டியுள்ளது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம்.

இவண்,
நிர்வாகம்
TUT- தேடல் உள்ள தேனீக்களாய் - tut-temple.blogspot.inமுந்தைய பதிவுகளுக்கு:-

அகத்தியர் தேவாரத் திரட்டுhttp://tut-temple.blogspot.in/2017/06/blog-post_65.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்குhttp://tut-temple.blogspot.in/2017/05/blog-post_24.html

மழை வாழ்த்துhttp://tut-temple.blogspot.in/2017/05/blog-post_8.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்புhttp://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html

No comments:

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌