Tuesday, April 10, 2018

அருணா! கருணா ! என உருக்கும் அருணாசல அக்ஷரமணமாலை


அருணாசல அக்ஷரமணமாலை

திருஅண்ணாமலை என்றாலே கிரிவலம் என்று நினைக்கும் நாம், எப்படி கிரிவலம் செய்கின்றோம்? அவசரகதியில், இறை நினைப்பின்றி, ஏதேதோ பேசிக்கொண்டு..இது நாம் காணுகின்ற காட்சியாக கிடைத்தது. இவற்றையும் மீறி அடியார் பெருமக்கள் சிவபுராணம் போன்ற தமிழ் வேதங்களை ஓதி, சிவா சிவா என நமஸ்கரித்து, தூபம் ஏற்றுக் கொண்டும் செல்கின்றார்கள். கிரிவலம் செல்லும் போது நாம் அதிகமாக சில இடங்களில் "அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!" என கேட்க முடிகின்றது. இதனைப் பற்றி பதிவின் இறுதியில் யாம் செப்புகின்றோம்.

இந்த பதிவில் கருணை வடிவான அருணையைப் போற்றும் பகவான் எழுதிய 108 பாடல்களை அக்ஷரமணமாலை எனும் தொகுப்பில் பாட உள்ளோம். இனி கிரிவலம் செல்லும் போது, இந்த பதிவை உணர்வாக்குங்கள். பகவான்..எத்துணையோ மகான்கள் அவதரித்த இந்த பூமியில், பகவான் என்றால் சில மகான்களை கூறுவோம். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்றோர் பகவான் என அழைக்கப்படுபவர்கள். பகவான் ஸ்ரீ ரமணர் எழுதிய அக்ஷரமணமாலை இனி தொடர்கின்றது.

காப்பு

அருணாசல வரற்கேற்ற வக்ஷரமண மாலைசாற்றக்

கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே.


பொருள்:

அருணாசல சிரேஷ்டனுக்கு (நாயகனுக்கு) ஏற்ற அக்ஷர மணமாலையை சாற்றுவதற்கு, கருணைக் கடலான கணபதியே! நீ எனக்குக் கைகொடுத்து உதவுவாய்


நூல்

அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!


பொருள்:

அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா! அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!

பாராயணம் செய்வதற்கேற்றவாறும் கீழே தந்துள்ளோம்.

1. அருணாசலம் என அகமே நினைப்பவர்  அகத்தை வேரறுப்பாய் அருணாசலா
2. அழகு சுந்தரம் போல் அகமும் நீயும் முற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா
3. அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய் அமர்வித்தது என்கொல் அருணாசலா
4.ஆருக்கா எனை ஆண்டனை அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா!
5.இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய் இனியார் விடுவார் அருணாசலா!
6.ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய் இதுவோ உனது அருள் அருணாசலா!
7.உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா!
8.ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக் காட்டு அருணாசலா!
9.எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா!
10.ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா
11.ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா!
12.ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்  உன் சூதேயிது அருணாசலா
13.ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் உனை யார் அறிவார் அருணாசலா
14.ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை ஆளுவது உன் கடன் அருணாசலா
15.கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் காணுவது எவர் பார் அருணாசலா
16.காந்தம் இரும்புபோல் கவர்ந்து எனை விடாமல் கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா
17.கிரி உரு ஆகிய கிருபைக் கடலே கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா
18.கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என் கீழ்மையைப் பாழ் செய் அருணாசலா!
19.குற்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்  குரு உருவாய் ஒளிர் அருணாசலா
20.கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள் கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாசலா
21.கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை அஞ்சல் என்றே அருள் அருணாசலா!
22.கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக் கேடு செய்யாது அருள் அருணாசலா!
23.கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை வெறி கொள அருள் அருணாசலா!
24.கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக் கொண்டு எஙன் வாழ்வேன் அருணாசலா!
25.கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக் குறை என்செய்தேன் அருணாசலா!
26.கௌதமர் போற்றும் கருணை மாமலையே கடைக்கணித்து ஆள்வாய் அருணாசலா!
27.சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன சலசம் அலர்த்தியிடு அருணாசலா!
28.சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான் சாந்தமாய்ப் போவன் அருணாசலா!
29.சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத வாயைத்திற அருண்மதி அருணாசலா!
30.சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள் சீரை அளித்து அருள் அருணாசலா!
31.சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச் சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா!
32.சூது செய்து என்னைச் சோதியாது இனி உன் ஜோதி உருக்காட்டு அருணாசலா!
 33.செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு உருப்படு வித்தை காட்டு அருணாசலா!
34.சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர் ஆற்று அழிவேன் அருணாசலா!
35.சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால் உய்வகை ஏது உரை அருணாசலா!
36.சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று சும்மா இருந்தாய் அருணாசலா!
37.சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில் சொல் வேறு என் கதி அருணாசலா!
38.சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே சலியாது இருந்தாய் அருணாசலா!
39.ஞமலியில் கேடா நான் என் உறுதியால் நாடி நின் உறுவேன் அருணாசலா!
40.ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற ஞானம் தெரித்தருள் அருணாசலா!
41.ஞிமிறுபோல் நீயும் மலர்ந்திலை என்றே நேர் நின்றனை என் அருணாசலா
42.தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய் தத்துவம் இது என் அருணாசலா
43.தானே தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய் அருணாசலா
44.திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண் தெரியும் என்றனை என் அருணாசலா
45.தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான் திரும்ப உற்றேன் அருள் அருணாசலா
46.துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன் ஒப்பிட வாய் ஏன் அருணாசலா
47.தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம் தோயவே அருள் என் அருணாசலா
48.தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச் சேர ஒழித்தாய் அருணாசலா
49.தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத் தியக்கம் தீர்த்து அருள் அருணாசலா
 50.தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான் தட்டழிந்தேன் அருள் அருணாசலா
51.தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான் நட்டமாவேன் அருள் அருணாசலா!
52.தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும்  சந்தோடம் ஒன்றிட அருள் அருணாசலா!
53.நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள் நகையிட்டுப் பார் நீ அருணாசலா!
54.நாணிலை நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவா நின்றனை அருணாசலா!
55.நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன் நின் அருள் மழை பொழி அருணாசலா!!
56.நீ நான் அறப்புலி நிதம் களிமயமா நின்றிடும் நிலை அருள் அருணாசலா!
57.நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட எண்(ண) அலை இறும் என்று அருணாசலா!
58.நூலறிவு அறியாப் பேதையன் என்தன் மால் அறிவு அறுத்து அருள் அருணாசலா!
59.நெக்கு நெக்கு உருகி யான் புக்கிட உனைப்புகல் நக்கனா நின்றனை அருணாசலா!!
60.நேசம் இல் எனக்கு உன் ஆசையைக் காட்டி நீ மோசம் செயாது அருள் அருணாசலா!
61.நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில் நாடி உட்கொள் நலம் அருணாசலா
62.நொந்திடாது உன்தனைத் தந்து எனைக் கொண்டிலை அந்தகன் நீ எனக்கு அருணாசலா
63.நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம் ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா
64.பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள் பற்றிட அருள்புரி அருணாசலா
65.பார்த்தருள் மால் அறப் பார்த்திலை எனின் அருள் பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா
66.பித்துவிட்டு உனை நேர் பித்தன் ஆக்கினை அருள் பித்தம் தெளி மருந்து அருணாசலா
67.பீதிஇல் உனைச் சார் பீதியில் எனைச்சேர், பீதி உன் தனக்கு ஏன் அருணாசலா
68.புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை புல்லிடவே அருள் அருணாசலா
69.பூமண மா மனம் பூரண மணம் கொளப் பூரண மணம் அருள் அருணாசலா
70.பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன் பெருமை யார் அறிவார் அருணாசலா!
71.பேய்த்தனம் விட விடாப்பேயாப் பிடித்து எனைப் பேயன் ஆக்கினை என் அருணாசலா!
72.பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல் பற்றுக் கோடாய்க் கா அருணாசாலா!!!
73.பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன் போதத்தைக் காட்டினை அருணாசலா!!
74. போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருட் போராட்டம் காட்டு அருணாசலா!
 75.பௌதிகம் ஆம் உடல் பற்று அற்று நாளும் உன் பவிசு கண்டுற அருள் அருணாசலா!
76.மலைமருந்து இட நீ மலைத்திடவோ அருள் மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா!
77.மானங்கொண்டு உறுபவர் மானத்தை அழித்து அபிமான மில்லாது ஒளிர் அருணாசலா
78.மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவன்யான் வஞ்சியாது அருள் எனை அருணாசலா!
79.மீகாம னில‍்லாமன் மாகாற் றலைகல மாகாமற் காத்தரு ளருணாசலா !
80.முடி அடி காணா முடி விடுத்து அனைநேர் முடிவிடக் கடனிலை அருணாசலா
81.மூக்கிலன் முன்காட்டும் முகுரம் ஆகாது எனைத் தூக்கி அணைந்து அருள் அருணாசலா
82.மெய்யகத்தின் மன மென்மலர் அணையில் நாம் மெய் கலந்திட அருள் அருணாசலா!
83.மேன்மேற் றாழ்ந்திடு மெல்லியர்க் சேர்ந்துநீ மேன்மையுற் றனையென் னருணாசலா
84.மை மயல் நீத்து அருள் மையினால் உனது உண்மை வசம் ஆக்கினை அருணாசலா
85.மொட்டை யடித்தெனை வெட்ட வெளியினீ நட்டமா டினையென் னருணாசலா
‎86.மோகம் தவிர்த்து உன் மோகமா வைத்து என் மோகம் தீராய் என் அருணாசலா
87.மெளனியாய்க் கல்போல் மலராது இருந்தால் மௌனம் இது ஆமோ அருணாசலா
88.யவன் என் வாயில் மண்ணினை அட்டி என் பிழைப்பு ஒழித்தது அருணாசலா
89. யாரும் அறியாது என் மதியினை மருட்டி எவர் கொளை கொண்டது அருணாசலா
90. ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது எனை ரமித்திடச் செயவா அருணாசலா .
91.ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில் ரமித்திடுவோம் வா அருணாசலா!!!
‎92.லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனைப் பட்சித்தாய் பிராணனோடு அருணாசலா!!
93. லாபம் நீ இகபர லாபம் இல் எனை உற்று லாபம் என் உற்றனை அருணாசலா .
94. வரும்படி சொலிலை வந்துஎன் படிஅள வருந்திடு உன் தலைவிதி அருணாசலா
95. வாவென்று அகம் புக்கு உ ன் வாழ்வு அருள் அன்றே என் வாழ்வு இழந்தேன் அருள் அருணாசலா .
96.விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனை உயிர் விட்டிட அருள்புரி அருணாசலா!!
97. வீடு விட்டு ஈர்த்து உள வீடு புக்குப் பைய உன் வீடு காட் டினை அருள் அருணாசலா.
 98.வெளிவிட்டேன் உன்செயல் வெறுத்திடாது உன் அருள் வெளிவிட்டு எனைக்கா அருணாசலா
99.வேதாந்தத்தே வேறு அற விளங்கும் வேதப் பொருள் அருள் அருணாசலா
100.வைதலை வாழ்த்தா வைத்து அருட்குடியா வைத்து எனை விடாது அருள் அருணாசலா
101.அம்புவில் ஆலிபோல் அன்பு உரு உனில் எனை அன்பாக் கரைத்து அருள் அருணாசலா
102.அருணை என்று எண்ண யான் அருள் கண்ணி பட்டேன் உன் அருள்வலை தப்புமோ அருணாசலா
103.சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச் சிறையிட்டு உண்டணை அருணாசலா
104.அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு அன்பன் ஆயிட அருள் அருணாசலா
105.என்போலும் தீனரை இன்புறக் காத்து நீ எந்நாளும் வாழ்ந்து அருள் அருணாசலா
106.என்புருகு அன்பர்தம் இன் சொற்கொள் செவியும் என் புன் மொழி கொள அருள் அருணாசலா
107.பொறுமையாம் பூதர பன்சொலை நன்சொலாப் பொறுத்து அருள் இஷ்டம் பின் அருணாசலா
108.மாலையளித்து அருணாசலா ரமண என் மாலை அணிந்து அருள் அருணாசலா


இப்போது ஒவ்வொரு பாடலாக பொருள் விளக்கத்துடன் கீழே படிக்க உள்ளோம்.


1.அருணா சலமென வகமே நினைப்பவ
    ரகத்தைவே ரறுப்பா யருணாசலா (அ)

 பொருள்:
அருணாசலா! தம் மனத்தில், அருணாசலமே நான் என்று அபேதமாகக் கருதும் அன்பர்தம் அகங்காரத்தை வேரோடு அறுப்பாய்.2.அழகுசுந் தரம்போ லகமும் நீயுமுற்
    றபின்னமா யிருப்போ மருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அழகும் சுந்தரமும் சொல்லால் வேறாயினும் பொருளால் ஒன்றாயிருப்பது போலவே நானும் நீயும் உபாதியுணர்வால் வேறாயினும் உண்மையியல்பால் ஒன்றாயிருப்போம்.3.அகம்புகுந் தீர்த்துன் னககுகை சிறையா
    யமர்வித்த தென்கொ லருணாசலா(அ)

பொருள்:
அருணாசலா! என்னை, என் வீடாகிய மனத்திற் புகுந்து பலாத்காரமாயிழுத்து, உன்னிருப்பாகிய இதயத்திற் சிறிதுந் தப்ப வொட்டாமல் நிலைபெறச் சிறைப்படுத்திக் கொண்ட நின்னருள் விசித்திரந்தான் என்னே!


4.ஆருக் காவெனை யாண்டனை யகற்றிடி
    லகிலம் பழித்திடு மருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! எவர் பொருட்டு என்னை நீ ஆட்கொண்டாய்? முன்னர் உவப்பாக ஆண்ட நீ பின்னர் உவர்ப்பாகக் கைவிடின் உலகோர் யாவரும் உன்னைப் பழி தூற்றுவர்5.இப்பழி தப்புனை யேனினைப் பித்தா
   யினியார் விடுவா ரருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! இப்பழியினின்று உன்னை விடுவித்துக்கொள். உன்னை ஏன் நினைக்கும்படி செய்தாய்? இனி யாரே உன்னைக் கை நழுவ விடுவார்?6.ஈன்றிடு மன்னையிற் பெரிதருள் புரிவோ
   யிதுவோ வுனதரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அடியார்க்கு, அவரைப் பெற்று வளர்த்த நற்றாயினும் மிகப் பரிந்தருள் செய்வோய்! ஓ! இது நின் அருளுடைமையேயாம்.7.உனையே மாற்றி யோடா துளத்தின்மே
   லுறுதியா யிருப்பா யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! என் மனம், உன்னை ஏமாற்றிவிட்டு அற்ப உடலுக்குரிய ஐம்புல விஷயங்களிற் பட்டிமாடுபோல் ஓடி உழலாதபடி என் உளத்தின்மேல் உறுதியாக வீற்றிருந்தருள்8.ஊர்சுற் றுளம்விடா துனைக்கண் டடங்கி
   வுன்னழ கைக்காட் டருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! வாசனை வசத்தால் ஊர்முழுதும் ஓயாது சுற்றும் மனம், இடைவிடாது உன்னைக் கண்டு உன்னிடமே மீளாது ஒடுங்குற உன் பூரண சொரூப லாவண்யத்தை காட்டியருள்9.எனையழித் திப்போ தெனைக்கல வாவிடி
   லிதுவோ வாண்மை யருணாசலா (அ)


பொருள்:
அருணாசலா! நான் பக்குவமடைந்த இப்பொழுதே என் அகங்காரக் கன்னிமையை அறவேயழித்து (உன்னோடிரண்டற) என்னைக் கலவாவிடில் இதுதானோ புருஷோத்தமனான உனக்குப் பௌருஷமாவது?10.ஏனிந்த வுறக்க மெனைப்பிற ரிழுக்க
     விதுவுனக் கழகோ வருணாசலா (அ)


பொருள்:
அருணாசலா! ஏனோ உனக்கிந்த மாயவுறக்கம்? பரபுருஷரான தூர்த்தர் என்னைத் துன்மார்க்கத்துக்கு இழுத்துச் செல்லவும் (அதனைக் கண்டுங் காணாதவன்போல் பாராமுகமாகச் சும்மாவிருக்கும்) இச்செயல் உன்னருளுக்கு அழகாமோ?11.ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்போ
     தகத்தினீ யிலையோ வருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! (என் பிறப்புரிமையாக இதயப் பெட்டகத்திலுள்ள ஆத்ம ரத்தினத்தைக் கவர்ந்து கொள்ள) ஐம்புலன்களாகிய கள்வர் என்னுள்ளத்திற் புகும்பொழுது அவ்வகத்தில் நீதான் இல்லாது போயினையோ?12.ஒருவனா முன்னை யொளித்தெவர் வருவா
     ருன்சூ தேயிது வருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! உதயாஸ்தமனமற்று ஸதோதய ஞானசூரியனாய் ஸர்வஸாக்ஷித்வத்தால் ஒருவனான உன்னை, தம் வரவு காணவொட்டாமற் கண்ணைக் கட்டி மறைத்து எவரே உட்புக வல்லார்? (அவ்வாறு புகவல்லார் எவருமின்மையின்) அவர் அகம்புகல் உனது சூழ்ச்சியே யாகும்13.ஓங்கா ரப்பொரு ளொப்புயர் வில்லோ
யுனையா ரறிவா ரருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! ஓங்காரப் பொருளாக ஒப்புயர்வற்று விளங்குவோய்! உன்னை யாரே உள்ளபடி அறிய வல்லார்?14.ஒளவைபோ லெனக்குன் னருளைத் தந்தெனை
     யாளுவ துன்கட னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! தாய் தன்னியல்பாகவே தன் பிள்ளைக்கு அருளுமாறு போல உன்னை நாடியடைந்த எனக்குத் திருவருள் பாலித்து என்னை உரிமையாக்கிக் கொள்ளுதல் உன் கடமையாம்.15.கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணுனைக்
     காணுவ தெவர்பா ரருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! காண்பார்தங் கண்ணுக்குங் கண்ணாக நின்று கண்ணின்றியே சகலமுங் காணாமற் காண்போனான உன்னை எவர் காண்பது? நீயே என்னைக் கண் பார்16.காந்த மிரும்புபோற் கவர்ந்தெனை விடாமற்
     கலந்தெனோ டிருப்பா யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! காந்தம் இரும்பைத் தன்பாற் கவர்வது போல நின் அருளாற்றலால் என்னை நின்பாற்கவர்ந்து, பின்னொருகாலும் நானுன்னைப் பிரிந்து விடாமல் என்னுள் கலந்து என்னோடு ஐக்கியமாயிருந்தருள்17.கிரியுரு வாகிய கிருபைக் கடலே
     கிருபைகூர்ந் தருளுவா யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! ஊனக் கண்ணுக்குக் கடினமான கல் மலை வடிவினதாகக் காணப்படினும் ஞானக் கண்ணுக்கு மிக்க மிருதுசுபாவமுள்ள கருணைக் கடலே! கருணைகூர்ந்து அருள்செய்.18.கீழ்மே லெங்குங் கிளரொளி மணியென்
     கீழ்மையைப் பாழ்செய் யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கீழோர் மேலோர் இதயங்களில் ஒளிர்கின்ற அருணாசல சிவமணியே! இதயத்தில் விளங்கி என் அவிச்சையிருளை அழிவு செய்தருள்.19.குற்றமுற் றறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள்
     குருவுரு வாயொளி ரருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! குற்றம் அறுத்து எனைக் குணமாய்ப் பணித்து ஆள்வாய், குரு உருவாய் ஒளிரும் அருணாசலா.20.கூர்வாட் கண்ணியர் கொடுமையிற் படாதருள்
     கூர்ந்தெனைச் சேர்ந்தரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நண்பர்கள்போல் தோன்றும், ஆனால் உண்மையில் கொடிய எதிரிகளான உலகீய மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்று.21.கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமு மிரங்கிலை
     யஞ்சலென் றேயரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கல்லுங் கசிந்துருக யானுன்னை எவ்வளவோ கெஞ்சியும் நீ ஒரு வஞ்சகன்போல் என்பாற் கொஞ்சமும் இரங்காதிருக்கின்றாய். இனியாகிலும் அஞ்சாதே எனக் கூறி எனக்கு அபயமளித்தருள்.22.கேளா தளிக்குமுன் கேடில் புகழைக்
     கேடுசெய் யாதரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கல்லுங் கசிந்துருக யானுன்னை எவ்வளவோ கெஞ்சியும் நீ ஒரு வஞ்சகன்போல் என்பாற் கொஞ்சமும் இரங்காதிருக்கின்றாய். இனியாகிலும் அஞ்சாதே எனக் கூறி எனக்கு அபயமளித்தருள்.23.கையினிற் கனியுன் மெய்ரசங் கொண்டுவ
     கைவெறி கொளவரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! என் கரதலத்திற் சேர்ந்த நின் சொரூபரச மதுவைப் பானம் பண்ணி அதனாலின்ப வெறி கொண்டு கிடக்க எனக்கருள் செய்.24.கொடியிட் டடியரைக் கொல்லுனைக் கட்டிக்
     கொண்டெஙன் வாழ்வே னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கொடி கட்டினாற் போல முனைந்து நின்று அடியரைக் கொல்லாது கொல்கின்ற உன்னை சம்பந்தித்துக் கொண்டு எவ்வாறு உயிர்த்திருப்பேன்?25.கோபமில் குணத்தோய் குறியா யெனைக்கொளக்
     குறையென் செய்தே னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கோபமற்ற சாந்தகுணத்தோய்! நின்னருளுக்கிலக்காக இவ் வடியேனைத் தேர்ந்து கொள்ள ஜன்மாந்தரங்களில் யானென்ன தவஞ் செய்தேன்!26.கௌதமர் போற்றுங் கருணைமா மலையே
     கடைக்கணித் தாள்வா யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கௌதம முனியாற் போற்றப்பெற்ற கருணை மாமலையே! அவர்க்கு நல்லருள் செய்தாற்போல என் போற்றியையும் இனிதேற்று என்பால் நின் அருட்கண்ணோக்கஞ் சாத்தி என்னை ஆண்டருள்.27.சகலமும் விழுங்குங் கதிரொளி யினமன
     சலச மலர்த்தியி டருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! ஜீவனுக்கு உண்மைபோலத் தோன்றுகின்ற பிரபஞ்சமனைத்தும் தன்னருள் ஞானக் கதிரொளிக் கரங்களாற் கவர்ந்து விழுங்கும் அருணாசலா! ஆசா பாச வாசனைகள் குடிகொண்டுள்ள மனத்தாமரையை நன்றாக மலர்த்தியருள்.28.சாப்பா டுன்னைச் சார்ந்துண வாயான்
     சாந்தமாய்ப் போவ னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! எனக்குணவாக (உண்ணக் கருதி) யான் உன்னையடைந்து, அதற்கீடாக யானே உனக்குணவாய் (தன்மயமாக உண்டறுக்கப்பட்டு) முடிவுற்றொழிவேன்29.சித்தங் குளிரக்கதி ரத்தம்வைத் தமுதவா
     யைத்திற வருண்மதி யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கருணை நிறை நிலவே! தாபத்திரய சித்தம் தளமாக, உன் அமிர்த கிரணங்களான கரங்கள்கொண்டு, அகத்தே அமுதம் பொதிந்து ஆம்பலரும்பாகக் கூம்பிக் கிடக்கும் அதன்வாயைத் திறப்பித்தருள்.30.சீரை யழித்துநிர் வாணமாச் செய்தருட்
     சீரை யளித்தரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! என் ஆடையைக் களைந்து நிர்வாணமாய் செய்து, என் சொரூபத்தை முற்ற வெளியாக்கி நின் அருள் ஆடையை எனக்களித் தருள்.31.சுகக்கடல் பொங்கச் சொல்லுணர் வடங்கச்
    சும்மா பொருந்திடங் கருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! என்னிதயம் இன்பக் கடலாகி ஆனந்தம் பொங்கவும், வாக்கும் மனமும் உள்ளொடுங்கவும் ஆங்கே அமைதியாகச் சும்மா வீற்றிருந்தருள்.32.சூதுசெய் தென்னைச் சோதியா தினியுன்
     சோதி யுருக்காட் டருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நீ இனிமேலும் என்னை வஞ்சித்துச் சோதியாமல், நின் யதார்த்த ஜோதி சொரூபத்தை எனக்கிப்பொழுதே துலக்கியருள்.33.செப்படி வித்தைகற் றிப்படி மயக்குவிட்
     டுருப்படு வித்தைகாட் டருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! மாயவித்தையை உண்மையென்றே கருதி மயங்கும் இவ்வுலக மயக்க மொழிந்து, உய்யும்படியான ஸத்வித்தையை உணர்த்தியருள்34.சேரா யெனின்மெய் நீரா யுருகிக்கண்
      ணீராற் றழிவே னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! என்னை நீ கலவாவிடின், உடம்பு நீராளமா உருகக் கண்ணீர் ஆறாகப் பெருக (அதே ஏக்கமாகத் துயரக் கடலில்) அமிழ்ந்துபட்டு அழிவேன்.35.சையெனத் தள்ளிற் செய்வினை சுடுமலா
     லுய்வகை யேதுரை யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நீ என்னைச் சேராமற் சையென்று இகழ்ந்து தள்ளினால், முன் செய்து நின்ற தீவினை ஆங்கே என்னை அணுகிச் சுடுவதன்றி, எனக்கு உய்யுங்கதி வேறுயாதோ? நீயே அருள் செய்.36.சொல்லாது சொலிநீ சொல்லற நில்லென்று
     சும்மா விருந்தா யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! பேச்சறச் சும்மா இரு, என்று வாய் வார்த்தையாற் கூறாது மோன முத்திரையால் கூறி, (அதற்கேற்பவே நீயும்) பேச்சுமூச்சற்றுச் சும்மாவிருந்தாய்.37.சோம்பியாய்ச் சும்மா சுகமுண் டுறங்கிடிற்
     சொல்வே றென்கதி யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! திரிகரணச் சேட்டைகள் இன்றி, சும்மா இருக்கத் தன்னியல்பால் அகத்தே துலங்கும் ஆன்மசுகத்தை அனுபவித்து அறிதுயில் கிடப்பின் அதனினும் வேறு கதியுளதோ கூறியருள்.38.சௌரியங் காட்டினை சழக்கற்ற தென்றே
     சலியா திருந்தா யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! ஞானசூரனான அருணாசலா! நின்னருட் சௌரியங்காட்டினை; என் அவித்தையிருள் அற்றொழிந்தது; நீயும் நின்னிலையில் அமைதியாய் அசைவற்றிருந்தாய்.39.ஞமலியிற் கேடா நானென் னுறுதியா
     னாடிநின் னுறுவே னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அறிவில் நாயினுங் கடையான நான் உன் அருள் வலி (பலம்) அல்லாத வேறெந்த வலி கொண்டு உன்னைத் தேடியடைய வல்லேன். (அருணாசலா! நான் நாயினும் இழிவானவனா? நிச்சயமாய் இல்லை. என்னுடைய சொந்த பலத்தால் நான் உன்னைத்தேடி அடைவேன் மற்றொரு பொருள்)40.ஞானமில் லாதுன் னாசையாற் றளர்வற
     ஞானந் தெரித்தரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! உன்னை அடைதற்குரிய ஞானம் இல்லாமலே, ஆனால் உன்னை அடையவேண்டுமென்ற ஆசை மட்டும் கொண்டதனால் உண்டான தளர்ச்சி நீங்க, விசார ஞானத்தை எனக்குணர்த்தியருள்.41.ஞிமிறுபோ னீயு மலர்ந்திலை யென்றே
      நேர்நின் றனையென் னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! ஞான சூரியனான அருணாசலா! நீயும் ஒரு வண்டுபோல, (உட்புக்கு நானுன்னைக் குடைந்து தோய்தற்கு) நீ இன்னும் மலரவில்லையே (என்றொரு வியாஜம் மேலிட்டுக்கொண்டு) என்னெதிர் நிற்கின்றாய். இஃதென்ன மாயம்!42.தத்துவந் தெரியா தத்தனை யுற்றாய்
     தத்துவ மிதுவென் னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அது நீ (தத்துவமஸி) உண்மையை அறியாத என்னை அவ்வான்ம சொரூபத்தை அடையச் செய்தாய். நின்னருள் விலாசம்தான் என்னே!43.தானே தானே தத்துவ மிதனைத்
     தானே காட்டுவா யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! தானே தானே தத்துவப் பொருளாவாய்நீ. தத்துவப் பொருளாகிய அந்தத் தானான நீயே இவ்வுண்மையை எனக்குக் காட்டியருள்.44.திரும்பி யகந்தனைத் தினமகக் கண்காண்
     டெரியுமென் றனையென் னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! வெளி விஷயங்களினின்று அகத்தே திரும்பி, அகமுகப் பார்வையால் தன்னைத் தானே இடைவிடாது ஆராய்ந்து காண்! தனக்குத் தானே நன்கு விளங்கும் என்று உபதேசித்தாய், இதுவென்னோ?45.தீரமி லகத்திற் றேடியுந் தனையான்
     றிரும்பவுற் றேனரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! ஆன்ம சொரூபமான உன்னை எல்லையற்ற இதயத்தின் கண்ணே தேடி, உன் அருளாலே நான் திரும்ப அடைந்தேன்.46.துப்பறி வில்லா விப்பிறப் பென்பய
     னொப்பிட வாயே னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! விசாரஞானம் செய்ய அறிவுத்திறமற்ற இப்பிறப்பால் எனக்கு யாது பயன்? மற்ற எந்த உயிரினத்துடனும் என்னை ஒப்பிட்டு வாய்திறந்து பேச எனக்கு என்ன உரிமை உள்ளது?47.தூய்மன மொழியர் தோயுமுன் மெய்யகந்
     தோயவே யருளென் னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! என் ஆண்டவனான அருணாசலா! மனம் பரிசுத்தமாகி யொழிந்த பக்குவிகளே கலக்கும் உன் சொரூபத்தில், யானுங் கலக்கும்படி எனக்கருள் செய்.48.தெய்வமென் றுன்னைச் சாரவே யென்னைச்
      சேர வொழித்தா யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நான் உன்னைக் கடவுளாகக் கருதி சரணாகதி அடைதலும், அவ்வாறடைந்த என்னை (என் கருத்துக்கு நேர்மாறாக) ஒருங்கொழித்தாய்.49.தேடா துற்றநற் றிருவரு ணிதியகத்
தியக்கந் தீர்த்தரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! தேடாமலே எனக்கு வலிதிற் கிடைத்த நல்ல திருவருட் செல்வமே! என் மனமயக்கமாகிய வறுமையை மாற்றியருள்.50.தைரிய மோடுமுன் மெய்யக நாடயான்
     றட்டழிந் தேனரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! பிரயத்தனங் கொண்டு நின்னுண்மை சொரூபத்தை ஆராய்ந்தறியத் தலைப்பட்டு, அறிவாற்றல் கெட்டு நான் அழிந்தேன். (என் ஆணவப் பிழையைப் பொறுத்து, நின் சொரூபங் காண) எனக்கருள் செய்வாய்.


51.தொட்டருட் கைமெய் கட்டிடா யெனிலியா
     னட்டமா வேனரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நின் அருட்கரத்தாற் தொட்டு (ஜீவபோதம் கெட்டு நின் அத்துவித சொரூபத்தோடு ஒன்ற) நீ என்னுடன் இரண்டறக் கலவாவிடின் யான் பிறவிப்பயன் இழந்தொழிவேன். அவ்வாறு ஒழியாது அருள்செய்.52.தோடமி னீயகத் தோடொன்றி யென்றுஞ்சந்
     தோடமொன் றிடவரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! குற்றமற்ற நீ என்னோடு இரண்டறக் கலந்து, யான் என்றும் நின் கலவிப் பேரின்பம் அனுபவிக்க அருள்செய்.53.நகைக்கிட மிலைநின் னாடிய வெனையரு
     ணகையிட்டுப் பார்நீ யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! எளிமையால் நெஞ்சம் நைந்து நின்னைத் தஞ்சமாக அடைந்த என்னை எள்ளி நகையாடற்கு இது சமயமன்று. திருவருட் புன்னகை புரிந்து என்னை நீ பார்ப்பாயாக.54.நாணிலை நாடிட நானா யொன்றிநீ
     தாணுவா நின்றனை யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நின்னொடு சேர வந்து உன்னை நாடவும், தானாகவே முன்பு என்னை வலியவந்து ஆட்கொண்ட நீ, தூண்போல் அசைவற்று நின்றாய். (இதுதானா நின் அருளுக்கு அழகுடைமை?)55.நின்னெரி யெரித்தெனை நீறாக் கிடுமுன்
     னின்னருண் மழைபொழி யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! என்னை நின் சொரூப ஞானாக்கினியால் எரித்துச் சாம்பலாக்கிடு முன்பே (என்னிதயங் குளிர்ந்து நான் அதைத் தாங்க வல்லோனாக) நின்னருள் மழையை என்பாற் பொழிந்தருள்.56.நீநா னறப்புலி நிதங்களி மயமா
     நின்றிடு நிலையரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நீ, நான் (என்னும் பேத புத்தி) கெட்டு ஒழிய என்னை இறுகத்தழுவி, நான் பேரின்பவடிவாக நிற்கும் நிலையை நீ எனக்கருள் செய்.57.நுண்ணுரு வுனையான் விண்ணுரு நண்ணிட
     வெண்ணலை யிறுமென் றருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நுண்ணுருவான விண்ணுருவுடைய உன்னை என்னிதயத்தில் நான் சேரத் தடையாக உள்ள, எண்ண அலைகள் உன்னருளால் என்று அழியுமோ?58.நூலறி வறியாப் பேதைய னென்றன்
     மாலறி வறுத்தரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கல்வியறிவு அற்ற மூடனான என் மயக்க அறிவைக் கெடுத்து நின் மெய்யுணர்வை என்னுள்ளத்து விளக்கியருள்.59.நெக்குநெக் குருகியான் புக்கிட வுனைப்புக
      னக்கனா நின்றனை யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! உன்னருளுக்குக் குழைந்து, உடலும் உள்ளமும் அன்பால் உருகி, நான் உன்னைச் சரண் புகுதலும், நிருவாணியாக (எல்லையற்ற பரம்பொருளாக) நீதான் நிமிர்ந்து நின்றாய்! என்ன ஆச்சரியம்!60.நேசமி லெனக்குன் னாசையைக் காட்டிநீ
      மோசஞ் செயாதரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நின்பால் ஆசையற்ற எனக்கு நின் ஆசையைக் காட்டி, அவ்வாசையை என்பால் உண்டாக்கின நீயே மோசஞ் செய்து விடாமல் அதனைப் பூர்த்தி செய்வித்தருள்.61.நைந்தழி கனியா னலனிலை பதத்தி
     னாடியுட் கொள்நல மருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! பதங்கெட்டழிந்த கனியை உண்பதால் பயனில்லை. (எனவே, பதம் கனிந்த நின்னைக் காதலித்த எனது) இன்ப நலத்தை ஏற்று பதமான இப்பொழுதே என்னை நாடி இனிது நுகர்ந்தருள்.62.நொந்திடா துன்றனைத் தந்தெனைக் கொண்டிலை
      யந்தக னீயெனக் கருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நான் வருந்தாமலே, உன்னை எனக்களித்து அதற்கீடாக என்னைக் கவர்ந்து கொண்டாய்! ஆதலால் எனக்கு நீ எமனானாய்.63.நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவ
     மாக்கிநீ யாண்டரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நோக்கியும் கருதியும் ஸ்பரிசம் செய்தும் பக்குவப்படுத்தி நின் திருவடிக்காளாக என்னை நீ இனிதே ஆண்டருள்.64.பற்றிமால் விடந்தலை யுற்றிறு முனமருள்
     பற்றிட வருள்புரி யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! மாயை எனும் (பாம்பின்) விஷம் தலைக்கேறிச் சாவதன் முன் யான் உன் அருளமுதுண்டு வாழ எனக்கருள் செய்.65.பார்த்தருண் மாலறப் பார்த்திலை யெனினருள்
     பாருனக் கார்சொல்வ ரருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! என் மன மாயை கெட என்னைக் கடைக்கணியாவிடில், இவ்வுலகில் (என் பொருட்டுப் பரிந்து) உனக்கெடுத்துக் கூறுவார் யாவருளர்?66.பித்துவிட் டுனைநேர் பித்தனாக் கினையருள்
     பித்தந் தெளிமருந் தருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! பிறவித்துன்பப் பித்து விட்டொழிய, நின் சுத்தான்ம சொரூபத்தை பெற வேண்டும் என்னும் பித்துக்குளி யாக்கினை. அப் பித்தம் தெளியும் மருந்தையும் நீயே எனக்குப் பிரசாதித்தருள்.67.பீதியி லுனைச்சார் பீதியி லெனைச்சேர்
     பீதியுன் றனக்கே னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நிர்ப்பயனான (பயமற்றவனான) உன்னை நிர்ப்பயமாகச் (பயமில்லாமல்) சேரத் துணிந்த என்னைச் சேர உனக்கேனோ பயம்?68.புல்லறி வேதுரை நல்லறி வேதுரை
     புல்லிட வேயரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கீழ்மையான பொய்யறிவு எது? நன்மையான மெய்யறிவு எது என்று கூறு. அம் மெய்யறிவை நான் அடைதற்கு அருள்செய்.69.பூமண மாமனம் பூரண மணங்கொளப்
     பூரண மணமரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! பிரபஞ்ச வாசனையுற்ற என்னுள்ளம் (அது நீங்கி) நிஷ்பிரபஞ்சமான வாசனையுற, பிரம்மத்தில் ஐக்கிய ஞானம் எனக்கருள்செய்.70.பெயர்நினைத் திடவே பிடித்திழுத் தனையுன்
     பெருமையா ரறிவா ரருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அருணாசலமென்று உன் பெயரை நினைத்த மாத்திரத்தில் என்னை அருட்கயிற்றால் பற்றி இழுத்துக் கொண்டாய். உன்னருட் பெருமையை யாரே அறிய வல்லார்?71.பேய்த்தனம் விடவிடாப் பேயாப் பிடித்தெனைப்
     பேயனாக் கினையென் னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அகந்தைப் பேய் என்னை விட்டொழிய, பெரும் பிரம்மப் பேயாகப் பிடித்து, என்னைப் பேயனாக்கி விட்டாயே. இதுவென்னோ!72.பைங்கொடி யாநான் பற்றின்றி வாடாமற்
     பற்றுக்கோ டாய்க்கா வருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கொழுகொம்பின்றித் துவண்டு வாடும் பச்சிளங் கொடிபோல் துணையின்றி அலமராமல் என்னை ஆதரவாய்க் காத்தருள்.73.பொடியான் மயக்கியென் போதத்தைப் பறித்துன்
      போதத்தைக் காட்டினை யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! பொடிபோட்டு மயக்கினாற்போல் என்னை மயக்கி, எனது ஜீவபோதத்தை அபகரித்து, உனது சிவ போதத்தை எனக்கு விளக்கினை.74.போக்கும் வரவுமில் பொதுவெளி யினிலருட்
      போராட் டங்காட் டருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! போக்குவரவு இல்லாத இதயப் பரவெளியின் கண்ணே, (தன்னை நினைந்தவர்தம் வாசனைகளை அழித்து) திருவருட் சக்தி செய்யும் போராட்டத்தைக் காண்பித்தருள்.75.பௌதிக மாமுடற் பற்றற்று நாளுமுன்
      பவிசுகண் டுறவரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! பௌதிகமான உடற்பற்று ஒழிந்து, இணையின்றாக (இணையில்லாததாய்) உயர்ந்த நின் சொரூபக் காட்சியை யான் என்றும் கண்டிருக்க எனக்கருள் செய்.76.மலைமருந் திடநீ மலைத்திட வோவருண்
     மலைமருந் தாயொளி ரருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! பிறவிப்பிணி மருத்துவனான நீ அதற்குக் காரணமான மலைப்பை மாற்றும் மருந்தை எனக்குப் பரிந்தளித்த பின்னும் நான் மலைக்கக் கடவேனோ? மலை வடிவான அருள்ஞான சஞ்சீவியாக இருந்தொளிரும் அருணாசலா!77.மானங்கொண் டுறுபவர் மானத்தை யழித்தபி
     மானமில் லாதொளி ரருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அன்பாலடைந்த அடியாருடைய மதியை அழித்து, வெளிப் பார்வையில் அபிமானமின்றி உதாசீனம் போலத் தோன்ற, அவருள்ளத்திற் தன்மயமாகப் பின்பு சும்மா இருந்தொளிர்கின்ற அருணாசலா!78.மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச வறிவனியான்
     வஞ்சியா தருளெனை யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நான் பிறர் மிஞ்சிடிற் கெஞ்சிடும் கொஞ்ச அறிவினன். ஆதலால் நீ அதன் பொருட்டு என்னை வஞ்சியாது அருள் செய்.79.மீகாம னில்லாமன் மாகாற் றலைகல
     மாகாமற் காத்தரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நடத்தும் மாலுமி இன்றிச் சண்டமாருதத்தில் அகப்பட்டுத் தவிக்கும் மரக்கலம் போல, மகாமாயையில் அகப்பட்டுப் பேதையான நான் கலங்கி வருந்தாதபடி என்னைக் காத்தருள்.80.முடியடி காணா முடிவிடுத் தனைநேர்
     முடிவிடக் கடனிலை யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அடிமுடி காணமுடியாமல் அயர்வுதரும் சிக்கலான அகந்தை முடிச்சை நீயே விடுவித்து, எனக்கு அன்னைபோல் அருள் சுரந்தருள்.81.மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத்
     தூக்கி யணைந்தரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! (நீ என் விஷயத்தில்) மூக்கிலாத ஓர் மனிதன் முன் காட்டப்படும் முகக் கண்ணாடியாக அல்லாமல் என்னைத் தூக்கி உன்னோடு தழுவிக்கொள்.82.மெய்யகத் தின்மன மென்மல ரணையினா
      மெய்கலந் திடவரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! உடலென்னும் அகத்தில், மிருதுவான உளமென்னும் மெல்லிய மலர்ப் படுக்கையில், யாம் உண்மையிற் கலக்க எனக்கருள் செய்.83.மேன்மேற் றாழ்ந்திடு மெல்லியர்ச் சேர்ந்துநீ
     மேன்மையுற் றனையென் னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! மேன்மேலுந் தாழ நடக்கும் எளியரைக் கூடி, (அக் கூட்டுறவால் அவர்போல நீயும் தாழ்வடைதற்கு மாறாக) உயர்வடைந்தாயே. இஃதென்ன ஆச்சரியம்!84.மைமய னீத்தருண் மையினா லுனதுண்
     மைவச மாக்கினை யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! மையிருள் போன்ற மனமயக்கத்தை மாற்றித் திருவருளென்னும் வசியாஞ்சனத்தால், அம் மனத்தை, உன் பரமார்த்த சொரூபத்துக்கு வசமாக்கிக் கொண்டனை.85.மொட்டை யடித்தெனை வெட்ட வெளியினீ
      நட்டமா டினையென் னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! யான் எனது, என்னும் இருவகைப் பற்றுக்களையும் இதயத்தினின்று நிர்மூலமாகச் செய்து, இதயப் பரவெளியின்கண் நீ இன்ப நடஞ் செய்தாய். என்ன ஆச்சரியம்!86.மோகந் தவிர்த்துன் மோகமா வைத்துமென்
      மோகந்தீ ராயென் னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! உலகின்பாலுள்ள மோகத்தை ஒழித்து உன்னிடத்து மோகமுள்ளோனாக என்னை ஆக்கினாய். அந்த மோகத்தை உன் சொரூபானுபவப் பிரசாதத்தால் இன்னும் நிலைக்க வைத்துள்ளாய். என்னே விந்தை இது!87.மௌனியாய்க் கற்போன் மலரா திருந்தான்
      மௌனமி தாமோ வருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! கல்போல பேசாது சும்மா கிடந்தால், அத்தகைய காஷ்ட மௌனமே ஒருவற்கு உண்மையான மௌனநிலை யாமோ?88.யவனென் வாயின் மண்ணினை யட்டி
     யென்பிழைப் பொழித்த தருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! ஜீவனாக உலகில் வாழ்ந்து வந்த என் வாயில் மண்ணை அள்ளிப் போட்டு, என் சுகஜீவியத்தை ஒழித்தது உன்னை அன்றி வேறு யாவன்?89.யாருமறி யாதென் மதியினை மருட்டி
     யெவர்கொளை கொண்ட தருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! யாரும் அறியாமலே என்னறிவை மருள வைத்து, தன்மயமாகக் கொள்ளை கொண்டு ஒழித்தது உன்னைத் தவிர்த்து வேறு யார்?90.ரமணனென் றுரைத்தேன் ரோசங் கொளாதெனை
     ரமித்திடச் செயவா வருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நீ ஆத்மாராமனாக இதயத்தில் என்னை ரமிப்பிக்கும் பதியென்று உரிமை பாராட்டி யான் இவ்வாறெல்லாங் கூறினேன். அதனால் கோபங் கொள்ளாமல் நீ என்னை ரமிப்பிக்க வாராய்.91.ராப்பக லில்லா வெறுவெளி வீட்டில்
     ரமித்திடு வோம்வா வருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! இராப்பகலற்று விளங்கும் அருட்பரவெளியான இதயவீட்டில் (யாமிருவரும் இரண்டறக் கலந்து) இன்புற்றிருப்போம், வாராய்.92.லட்சியம் வைத்தரு ளஸ்திரம் விட்டெனைப்
     பட்சித்தாய் பிராணனோ டருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! உன்பாலுள்ள அருள் அஸ்திரத்தை என்பால் இலக்காக எய்து என்னை உயிரோடு உண்டொழித்தாய்.93.லாபநீ யிகபர லாபமி லெனையுற்று
      லாபமென் னுற்றனை யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அடைந்தார்க்குப் பரம லாபமான நீ, இகபர லாபம் இரண்டும் கெட்ட என்னை ஏற்றதால் என்ன லாபம் பெற்றாய்?94.வரும்படி சொலிலை வந்தென் படியள
     வருந்திடுன் றலைவிதி யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நின்பால் என்னை வரவழைத்தாய் அன்றோ? நீயே என் யோக க்ஷேமபாரம் முழுதும் வகித்தருள். அது மிகக் கஷ்டமான காரியமாயிற்றே எனின் அது உனக்குத் தலைவிதியாம்.95.வாவென் றகம்புக்குன் வாழ்வரு ளன்றேயென்
     வாழ்விழந் தேனரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நின்னோடு என்னையும் உடனழைத்து இதயவீட்டிற் புக்கு நின் சொரூப ஸாக்ஷாத்காரத்தை அருளிய ஞான்றே, ஜீவபோத வாழ்வை யான் இழந்தொழிந்தேன். அது நின் அருண்மாட்சியாம்.96.விட்டிடிற் கட்டமாம் விட்டிடா துனையுயிர்
     விட்டிட வருள்புரி யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! யானுன்னைப் பற்றாதொழியின் மீட்டும் பிறவித்துன்பத்துக் கேதுவாமாகலான் (இறுதிக் காலத்தில்) யானுன்னை மறந்தொழியாது சொரூபத் தியானபரனாகவே உயிர்விடுவேனாக.97.வீடுவிட் டீர்த்துள வீடுபுக்குப் பையவுன்
      வீடுகாட் டினையரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! (உனதருட் கயிற்றால்) வீட்டினின்று என்னை வெளியே இழுத்து இதய வீட்டில் புகுந்து, சற்றே மெதுப்பட அதுவே நிரந்தரமான நின் உண்மைவீடாக உன் திருவருளால் எனக்குக் காண்பித்தாய்.98.வெளிவிட்டே னுன்செயல் வெறுத்திடா துன்னருள்
     வெளிவிட் டெனைக்கா வருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நின் கள்ளச் செயல்களை இத்துதிமாலை வாயிலாகப் பலர் அறிய வெளியிற் பரப்பினேன் என்று வெறுத்தொழியாது, நின் கைவல்ய முத்தியிற் கூட்டி என்னைக் காத்தருள்.99.வேதாந் தத்தே வேறற விளங்கும்
     வேதப் பொருளரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! வேதாந்தத்தாலே தன்னினு மன்னியமற விளங்கும் சற்போதப் பொருளை இதயத்தில் எனக்கனுபவமாக விளக்கியருள்.100.வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா
       வைத்தெனை விடாதரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! என் இகழ்ந்துரையைப் புகழ்ந்துரையாகத் திருவுளம் பற்றி, திருவருட் குடியாக வைத்து, என்னை என்றுங் கைவிடாமல் இனிது காத்தருள்.101.அம்புவி லாலிபோ லன்புரு வுனிலெனை
       யன்பாக் கரைத்தரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! தண்ணீரில் ஆலங்கட்டி அத்தண்ணீர் மயமாகக் கரைவதுபோல, நின் அன்புருவான சொரூபத்தில் நானும் அவ் வன்புருவான தன்மயமேயாய் உன்னோடு ஒன்றாகக் கலக்கக் கரைவித்துக் கொண்டருள்.102.அருணையென் றெண்ணயா னருட்கண்ணி பட்டேனுன்
       னருள்வலை தப்புமோ வருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அருணாசலமென்று நினைத்த மாத்திரத்தில் உன் அருள்வலையில் அகப்பட்டுக் கொண்டேன்; உன்னருள்வலை அச்செயலிற் சிறிதுந் தவறுவதாமோ?103.சிந்தித் தருட்படச் சிலந்திபோற் கட்டிச்
       சிறையிட் டுண்டனை யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! இவன் இதனுள் அகப்படட்டும் என உன் அருள்வலையைச் சிலந்தி போலப் பரக்கக்கட்டி, புறத்தே தப்பிப் போகாதபடி சிறைப்படுத்தி, என்னைத் தன்மயமாக உண்டொழித்தாய்.104.அன்பொடுன் னாமங்கே ளன்பர்த மன்பருக்
       கன்பனா யிடவரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அருணாசலத் திருநாமம் செவிகுளிரக் கேட்டு அகமகிழும் அன்பர்தம் அன்பருக்கு நின்னடியேன் அன்பனாக நீ எனக்கருள் செய்.105.என்போலுந் தீனரை யின்புறக் காத்துநீ
       யெந்நாளும் வாழ்ந்தரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! என்போன்ற எளியர் யாவரையும் என்றென்றும் இன்புறக் காத்து நின்று, நீயும் என்றென்றும் வாழ்ந்தருள்.106.என்புரு கன்பர்த மின்சொற்கொள் செவியுமென்
       புன்மொழி கொளவரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! அன்பால் என்புருகும் ஆன்றோர் மதுரவாசகம் மடுத்த நினது திருச்செவி, அன்பிலா அடியேனாகிய எனது அற்ப வாசகமும் செவிமடுக்கத் திருவுள்ள மிசைந்தருள்.107.பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
       பொறுத்தரு ளிஷ்டம்பின் னருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! பொறுமை வடிவான மலையே! அடியேன் புகன்ற புன் சொல்லைப் பொறுத்து அதுவே உனக்குகந்த நன்சொல்லாகத் திருவுள்ளம் பற்றியருள். மற்று, நின்னிச்சையே நிகழ்வதாக.108.மாலை யளித்தரு ணாசல ரமணவென்
       மாலை யணிந்தரு ளருணாசலா (அ)

பொருள்:
அருணாசலா! நின்பால் உண்மைக் காதற்பெருக்கை நீ எனக்குதவி, அருணாசலரமண! எனது கையுறையான இம்மாலையை ஏற்றணிந்தருள்.அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!


பொருள்:
அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா! அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!அருணா சலம்வாழி யன்பர் களும்வாழி
அக்ஷர மணமாலை வாழி.


பொருள்:
அருணாசலம் வாழ்க அன்பர்களும் வாழ்க அக்ஷர மணமாலை வாழ்க.
தமிழ்ப் பாராயணத்திரட்டில் அருணாசல அக்ஷரமணமாலை   தனி இடம் வகிக்கின்றது. இதில் ரமணஜோதியின் மூலமந்திரமாக 

அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணா சலசிவ


பாடப்படுகின்றது. இந்த நாலடிகள் தான் அக்ஷரமணமாலையின் மூலமந்திரம். அருணாசலமே சிவன்; சிவனே அருணாசலம். அருணாசலம் ஒரு காலத்தில் அக்னிப் பிழம்பாக இருந்ததாம். கிருத  யுகத்தில் அருணாசலம் அக்னியாகவும்,திரேதா யுகத்தில் வைரக் குவியல்  ஆகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் கல்லாகவும் காட்சியளிக்கிறது என்றும் கூறுவார்கள். 

கிரேதா யுகத்தில் பிரம்மாவும் திருமாலும் அருணாசலத்தின் அடியையும் முடியையும் தேடிப் போனார்களாம். கண்டுபிடிக்க முடியவில்லயாம். இது ஒரு ஐதீகம் அல்லது மக்களுடையே நிலவி வரும் கதை. இந்தக் கதையின் கருப்பொருளாக அருணாசலத்தின் அடி முடியை பிரமனாலும் திருமாலாலும் காணமுடியவில்லை  என்பதே உண்மை.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. பரமனான பரமேஸ்வரனுக்கு அல்லது கிருஷ்ண பரமாத்மாவிற்கு அல்லது அந்த அந்தமில்லா பிரம்மத்திற்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை என்பதே  ஆகும்.அருணாசலம் இன்றும் லிங்க வடிவிலேயே காணப்படுகிறது.

பகவான் ரமணர் அருணாசலத்தைக் குறித்து கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:

“கருணார்வமாய்க் கருதக் கதி யருணாசலமிதாம்”

அக்ஷர மணமாலை முழுக்க ஒவ்வொரு ஈரடிகளுக்கும் பிறகு இந்த மூல மந்திரத்தை சொல்வதன் மூலம் நாம் அந்த பிரம்மத்துடன் நெருங்கி செல்கிறோம்.

அஹம் ப்ரம்மாஸ்மி

அருணா சலமென வகமே நினைப்பவ
ரகத்தை வேரறுப்பா யருணா சலா


இந்த முதல் ஈரடிகளில் பகவான் ‘அகம்’,’அஹம்’ இரு வார்த்தைகளைக் கொண்டு ஒரு சொல் சிலம்பம் ஆடியுள்ளார். அகம் என்றால் மனம் / உள்ளே என்று அர்த்தம் ”அஹம்’ என்றால் நான் எனும் அஹந்தை என்று பொருள். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நாம் உள்ளத்தில் அருணாசலனை நினைத்துக் கொண்டிருந்தால் நம் அஹந்தை அழியும் என்று பொருள் கொள்ளலாம்.இதற்கு ஒரே வழி அருணாசலத்தை த்யானம் செய்து அவனுடன் ஒன்றாவதே.
இதைத் தான் பகவன் முதல் இரண்டு வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.எனவே இனி ஒவ்வொருமுறை கிரிவலத்தின்  போதும் பகவான் அருளிய அருணாசல அக்ஷரமணமாலை  பாடுங்கள், கருணைவடிவான அருணையை சிக்கென மனதுள் பிடியுங்கள். 

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌