அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில்
தலைப்பு சற்று புதிதாய் இருந்தாலும், நெல்வேலி நாதர் என்றவுடன் உங்களுக்கு சட்டென்று அருள்மிகு நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் நினைவிற்கு வந்து இருப்பார்கள். நெல்லை அல்வாவினைத் தாண்டி, இந்த திருக்கோயில் பற்றி அறிவோம். இந்த திருக்கோயில் தாமிர சபை என்றும் அழைக்கப்படும்.
அதென்ன தாமிர சபை என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது.
ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன.ஐம்பெரும் அம்பலங்கள் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் ஆகும். இவை சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து ஊர்களிலுள்ள சிவன் கோவில்களில் அமைந்துள்ள நடராசர் சன்னிதிகளைக் குறிக்கின்றன.
1. சிதம்பரம் நடராசர் கோயில்-பொன்னம்பலம்
2. மதுரை மீனாட்சியம்மன் கோவில்-வெள்ளியம்பலம்
3. திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் -இரத்தினம்பலம்
4. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்-தாமிர அம்பலம்
5 .குற்றாலநாதர் கோயில்- சித்திர அம்பலம் (சித்திர சபை).
இவை கனகசபை, இரத்தினசபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை என்றும் அழைக்கப்படுகின்றன.தாமிர சபை பற்றி சிறிது பார்ப்போம்.
சரி. ஆலய தரிசனம் காண செல்வோமா?
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய
சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில்
கட்டப்பட்டது.
சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு
கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இதுவாகும். இரண்டு கோவில்களும்,
17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால்
இணைக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் கோபுரங்களும் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.
புராணங்களின்படி, சிவபெருமான் தமது தாண்டவ நடனத்தை ஆடிய பல்வேறு தலங்களில்
நெல்லையும் ஒன்றாகும்.
இதனால், பரத நாட்டியம் போன்ற பழமையான நடனக்கலைகளுக்கும் இதர கலைகளுக்கும்
முக்கியமான இடமாக திருநெல்வேலி கருதப்படுகிறது. இந்நம்பிக்கையை
உறுதிப்படுத்தும் விதமாக, இக்கோவிலின் உள்ளே, தாமிரத்தினால் ஆன மேடை
என்னும் பொருள் படும் தாமிர அம்பலம்/தாமிர சபை அமைக்கப்பட்டு உள்ளது.
திருக்கல்யாணம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற சிறப்பான விழா
நாட்களில் இக்கோவிலைத்தரிசனம் செய்வது இனிமையான அனுபவமாகும். அக்டோபர்
மாதம் 15 முதல் நவம்பர் மாதம் 15 வரை அதாவது தமிழ் மாதமான ஐப்பசி திங்களில்
மேலே கூறிய விழாக்கள் நடைபெறும்.
தைப்பூச திருவிழாவானது இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் மற்றொரு
திருவிழாவாகும். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் இக்கோவிலை
கண்டுபிடித்து வந்து சேருவதில் எவ்வித சிரமமும்
இருக்காது.
தல வரலாறு:
தமிழ் நாட்டில் இறைவன் சிவபெருமான் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் சுமார் 14 ஏக்கர் நிலப்பரவளவில் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயரில் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
கோவில் அமைப்பு:
மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல கோஷ்ட மூர்த்திகளாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை நாம் காணலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியதாகவும் அகலமாகவும் அமைந்துள்ளது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்ல வழி உள்ளது. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு.
மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஒரே கல்லில் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நாயினார் என்னும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.
கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகளுடனும், நடுவில் நீராழி மண்டபத்துடனும் இந்த தெப்பக்குளம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.
இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் தாமிரசபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் ‘தாமிர சபாபதி’ என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. இச்சபையின் உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது.பின்னால் உள்ள நடராஜர் சிலாரூபத்தில் சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார்.
மற்ற கோவில்களைப் போல மார்கழி மாதம் விடியற்காலையில் இவ்வாலயம் திறப்பதில்லை. மாற்றாக கார்த்திகை மாதத்தில் காலை 4 மணிக்கெல்லாம் கோயில் தரிசனத்திற்காகத் திறக்கப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்களில் இறைவனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7.5கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகரின் அனைத்து பகுதிகளிலிருந்து நகரப் பேருந்துகளும், மாவட்டத்தின் இதர முக்கிய பகுதிகளிலிருந்து புறநகர் பேருந்து வசதிகளும் உள்ளன. இத்திருக்கோயிலிலிருந்து நவதிருப்பதி, நவகைலாயம் மற்றும் திருச்செந்தூருக்கு செல்லலாம், தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து மற்றும் புகைவண்டி வசதிகள் உள்ளன. அருகிலுள்ள தூத்துக்குடி உள்நாட்டு விமானநிலையம் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.¨
இத்தகு சிறப்புமிக்க கோயிலில் வருகின்ற 27/04/2018 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அனைத்து அடியார் பெருமக்களும் கலந்து கொண்டு நம் பெருமாள் அருள் பெற வேண்டி அழைக்கின்றோம்.மேலே அழைப்பிதழை இணைத்துளோம்.
- மீண்டும் அடுத்த பதிவில் காண்போம்.
No comments:
Post a Comment