Subscribe

BREAKING NEWS

13 April 2018

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்- சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ்


அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்- சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ்

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நம் நினைவிற்கு வருகின்றார். அவரையும் தாண்டி சற்று ஆழ்ந்து பார்த்தால் மதுரை மாநகர் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்றது. மதுரை மாநகரின் கொண்டாட்டங்கள் என்று பார்த்தால் சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல்,மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் பிரசித்தம். இப்போது தான் கூடுவாஞ்சேரியில் பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம் கண்டோம். இன்னும் அந்த அருள் நிலை மனதுள் ஊஞ்சலாடுகிறது. மக்கள் கூட்டத்தில் சொல்லவே முடியவில்லை. இங்கேயே இப்படி கூட்டம் என்றால் மதுரை அரசாளும் மீனட்சி அம்மனின் திருக்கல்யாணம் என்றால் கூட்டம் எப்படி இருக்கும்? திருக்கல்யாணம் எப்படி இருக்கும் ? என்று நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இந்த பதிவில் சித்திரைத் திருவிழா பற்றி  செய்திகளை தர குருவருளும்,திருவருளும் நம்மை கூட்டுவித்துள்ளது.




சித்திரைத் திருவிழா தமிழ்நாட்டில் தமிழ் வருடபிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். சித்திரை திருவிழா பல ஊர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது, குறிப்பாக மதுரை, மானாமதுரை,பரமக்குடி, வீரபாண்டி என சொல்லலாம்.இருப்பினும் சித்திரைத் திருவிழா என்றாலே மதுரை தான். 

மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

இந்த சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 



மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயிலில் ஆண்டு முழுதும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இறைவனின் 64 திருவிளையாடல்கள், வெவ்வேறு காலங்களில் நடைபெறும் இவ்விழாக்களில், சித்தரிக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய விழாக்களுள் முக்கிய இடம் பெற்றுள்ள இவ்விழாக்களுக்கு பல்வேறு ஊர்களிலிருந்து வரும் மக்கள் வெள்ளம் சிறப்பான பார்வையை ஏற்படுத்துகிறது.



சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் வருடாந்திர பிரம்மோத்ஸவம் மிக முக்கியமான விழாவாகும். மீனாட்சி பட்டாபிஷேகமும், மீனாட்சி திருக்கல்யாணமும் இவ்விழாவில் நடக்கின்றன. மேலும் இந்த விழா திருமாலிஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர் கோயிலையும் சம்பந்தப்படுத்துகிறது. இதனால் இவ்விழா நடக்கும் மாதத்தில் மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விழாக்கோலம் பூணுவது இயற்கை.














சித்திரைத் திருவிழா, சித்திரையில் வளர்பிறை 5ம் நாளில் ஆரம்பிக்கும். மேற்சொன்ன நிகழ்ச்சிகள் 8, 9 மற்றும் 10ஆம் நாட்களில் நடக்கின்றன. எட்டாவது நாள் அன்னை மீனாட்சி, பட்டாபிஷேகம் நடந்து வெள்ளி அரியணை ஏறுவார். 9ஆம் நாள் மீனாட்சி வெற்றிப் பயணம் (திக்விஜயம்) முடிந்து 10ஆம் நாள் சித்ரா பவுர்ணமி அன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கும். (சித்திரை மாதத்தில் ப்ரம்மோத்ஸவம் நடக்கும் அனைத்து சிவாலயங்களிலும் சித்ராபவுர்ணமி அன்று திருக்கல்யாணம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)







அந்த நாளிற்குப் பிறகு, விழா வைகைக்கரைக்கு மாறுகிறது. அந்த நாளில் மீனாட்சி-சுந்தரேசுவரர் தம்பதிகளை இல்லறத்தில் விட்டுவிட்டு நாடு முழுவதும், அழகர் வருகைக்காக அதிகாலையில் வைகை ஆற்றோரம் காத்துக்கிடக்கிறது. அழகர், மதுரைக்கு வடகிழக்கில் 25 கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அழகர் கோயிலின் பெருமாள் ஆவார். கள்ளழகரான விஷ்ணு தன் தங்கையை சுந்தரேசுவரருக்குக் கொடுத்ததாக புராணச் செய்திகள் உண்டு. இதனை சிரமேற்கொண்டு, கள்ளழகர் திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்படுகிறார். திருப்பரங்குன்றத்தின் நாயகர் சுப்பிரமணியர் ஊர்வலத்தை தலைமையேற்று நடத்துகிறார். அந்த வழி முழுவதும் நிரம்பியிருக்கும் கூட்டத்தை நாம் பார்க்கும்போது, நம்மை அறியாமல் பரவசம் நம்மை அள்ளிக் கொண்டு போகிறது.





இந்த அழகர் அழைப்பிற்குப் பின் ஒரு சுவையான கதை உண்டு. அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். தற்போதைக்குக் கூட அந்த சடங்குகள் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நடக்கின்றன. அழகர் தற்போது ஆற்றில் தன் காலைப் பதித்துவிட்டுச் செல்லும் அந்தக் காட்சி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த நாளில் நடைபெறும் காளைகள்/பசுக்கள் சந்தை மிகவும் புகழ்பெற்றது. மகிழ்வில் உண்டான ஆரவாரமும், உற்சாகத்தில் உண்டான களிப்பும் நிறைந்த அந்த மனநிலை நகர மக்களுக்கு அன்று முழுதும் இருக்கிறது. மக்கள் கூட்டம் பெருமளவில் இங்கு கூடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். அன்றைய நாளில் திருவிழாவோடு ஒரு வியாபார சந்தையும் நடப்பது வாடிக்கையாகி விட்டது.




மதுரை சித்திரைத் திருவிழாவின் அழைப்பிதழ் பதிவின் இடையிடையே  இணைத்துள்ளோம். கண்டு களித்து, நேரில் சென்று மதுரை அரசாளும் மீனாட்சியின் அருள் பெறுமாறு வேண்டுகின்றோம். மேலும் இந்த விழாவின் போது மதுரை சேதுபதி பள்ளியில் நடைபெறும் திருக்கல்யாண விருந்தில் கலந்து கொண்டு சேவை செய்யவும் அனைவரிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

மதுரை திருக்கல்யாண விருந்து - சித்திரை 13 & 14 - http://tut-temple.blogspot.in/2018/04/13-14.html

சமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_87.html

No comments:

Post a Comment