Subscribe

BREAKING NEWS

06 June 2018

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ்


அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகமாய் விளங்கும் எல்லாம்வல்ல பரம்பொருள் நம்மிடம் கொண்ட தனிப்பெருங்கருணையின் காரணமாக தன் அலகிலாத  திருவிளையாடல்களை நடத்தி நம் பிணிகளைத் தீர்க்க தெய்வத்தின் தெய்வமாய் ஞானிக்கும் ஞானியாய் சித்தருக்கெல்லாம் சித்தராய் "சோமப்பா" எனும் திருநாமம் ஏற்று எழுந்தருளிய திருத்தலம் , திருப்பரங்குன்றத்தில் உள்ள திருக்கூடல்மலை.கூடல் மலை , தேவரும் மூவரும் , சித்தரும் முக்தரும் கூடும் மலை.

 

மலையின் சிறப்பு:  திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஈசான்யத்தில் அமைந்த இக் கூடல்மலை பல தேவதை களையும் சித்தர்களையும் ஈர்த்துக் கொள்ளும் தன்மை பெற்றது.
சித்தர்கள் பரிபூரண விருப்பத்துடன் உலவுகின்ற இம்மலையில் உள்ள ஒவ்வொரு துகளும் அவர்களின் திருப்பாதம் பட்டு புனிதமடைந்தவை யாகும். நம் சிரசின் மேல் தாங்கிக் கொண்டாடத்தக்கவை. இங்குள்ள கல்லும் மண்ணும் கூட உயிர்த்தன்மை கொண்டவை. நம்மிடம் பேசும் தன்மை கொண்டவை. உணர்ந்தவர் அறிவர்.

 சித்தருக்குள் சிவனாய் விளங்கும் ஐயா சோமப்பா சுவாமிகள் தாமே விரும்பி இந்த மலைக்கு வந்து நடமாடி அமர்ந்து நிலை கொண்டுள்ளாரெனின் இம்மலையின் பெருமையை அளவிட யாரால் இயலும் ?




ஐயா சோமப்பாவின் உயிர்த்துடிப்பால் இம்மலையே தங்கமலையாய்த் தெரிகிறதென்று ஞானிகள் சொல்கிறார்கள்.  எண்ணற்ற ரகசியங்களைக் கொண்டது.  இம்மலையில் வாழும் விஷஜந்துக்களும்கூட ஒருதீங்கும் செய்வதில்லை.  பொதுவாக சித்தர்களின் இருப்பிடம், மலைகளாயிருக்கின்றன. ஏனெனில் அங்குள்ள மரம்செடி கொடிகள், அவர்களின் தவத்திற்கும் பிணி போக்கும் தொண்டிற்கும் துணை செய்கின்றன, ஆனால் இங்கு இம்மலையே அனைத்து பிணி அகற்றும் ஆலயமாய் விளங்குகிறது.

பலப்பல ஜென்மங்களாய் செய்த புண்ணிய பலனே  ஒருவரை இம்மலைக்குக் கொண்டு சேர்க்கிறது. வந்தவர் யாவரும் தங்கள் உடல்பிணி, மனப்பிணி , வறுமை இவைநீங்குவதை சந்தேகமின்றி உணர்ந்து போற்றி மீண்டும்மீண்டும் வருகின்றனர் அனைத்தும் ஐயா சோமப்பாவின்,  தாயினும் மேலான அருளும் கருணையும்,கொண்ட அன்பாகும்.

அதுமட்டுமல்லாது இக்கூடல்மலை, புராணத்தின்படி,காகபுசுண்டர்மலை எனப்படுகிறது.
காக புசுண்டர் எனும் மகரிஷி, பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் பிறந்த மகனாவார்.பல யூகங்கள் கொண்ட பிரம்மாவின் ஆயுள் முடிந்தாலும் காகபுசுண்டர் சிரஞ்சீவியாக காக உருவம் எடுத்து தவம் செய்து கொண்டு இருப்பார்.  இத்திருக்கூடல் மலையிலும் வந்து தவம் செய்தார்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் பொலிவின்முன் பெரிதாய் விளக்கமுறாத கூடல்மலை யின் பெருமை தன்னை மக்கள் சிறிதே அறிந்திட்டாலும் ஞானிகள் பெரிதென உணர்ந்தனர்.






ஞானியும் சித்தருமாகிய தவத்திரு மாயாண்டி சுவாமிகள் இம்மலையைத் தன் இருப்பிடமாகக்கொண்டு அருட்பணியாற்றினார். 

 நாம் அனைவரும் முற்பிறவிகளில் செய்த அருந்தவத்தால் சித்தருக்கெலாம் சித்தர் ஐயா சோமப்பா சுவாமிகள் 1920களில் இக்கூடல் மலை அடிவாரத்தில் தம் திருப்பொற் பாதம் பதித்தார்.

சித்தமெலாம் சிவமான ஐயா அவர்கள் கூடல்மலையில் குடிகொள்ளத் திருவுள்ளம் கொண்டதை , தன் ஞானத்தால் தெளிவாக உணர்ந்த மாயாண்டி சுவாமிகள்,  திரு. இருளப்பக்கோனார் அவர்களிடம்_ "அப்பு...திருக்கூடல் மலைக்குள் ஒரு  சிவக்கனி வந்தாச்சு.உடனே போய்அதை பததிரமாய் அழைச்சிட்டு வா"  என உத்தரவிட்டார். 

மணல்மேட்டில் தாடி மீசையுடனும் ஒழுங்கில்லாத தலைமுடியுடனும்  சித்தபிரமை பிடித்தவர்போல் ஏகாந்தமாய் அமர்ந்திருந்த பகவான்சோமப்பா சுவாமிகளிடம் இருளப்பக்கோனார் அவர்கள்" ஐயா" என்று பணிவுடன் மெல்ல அழைத்தார்.  உடனே எழுந்தபகவான் சோமப்பாஐயா அவர்கள் " இனி சோமப்பா இங்குதான் இருக்கப் போகுது. " என்று அவரிடம் சொல்லிவிட்டு ஆனந்தத்துடன் ஓடிவிட்டார்.

ஒருமுறை ஓர் உயர்ந்த இடத்தில் மாயாண்டி சுவாமிகள் வீற்றிருந்து தன் அன்பர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் பகவான் சோமப்பா சுவாமிகள் அங்கு வந்து தரையில் அமர்ந்தார். இதைக்கண்ட மாயாண்டி சுவாமிகள் உடனே தானும் தரையில் அமர்ந்தார். அனைவரும் வியப்புடன் நோக்க , மாயாண்டிசுவாமிகள் அவர்களிடம் பகவான்சோமப்பாசுவாமிகள்" என்னை விட, என் குருநாதரை விட என் குருநாதரின்  குருநாதரையும் விட மிகவும் உயர்ந்தவர்" என்றுரைத்தார்.

"பகவான் சோமப்பாஐயா அவர்களுக்கு திரு இருளப்பக்கோனார் அவர்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டுசென்று தருவர்.எப்போதாவது மண்சட்டியில் உள்ள தன் உணவில் சிறிதளவே எடுத்து உண்பார்.சிலநேரங்களில் பக்தர்கள் வற்புறுத்திய போதும் உண்ணமாட்டார்.மாயாண்டிசுவாமிகள் இது கண்டு " அவரை உண்ணும்படி தொந்தரவு செய்யவேண்டாம். அவர் எந்நேரமும் ஞானப்பாலாகிய அமிர்தத்தை அருந்திக்கொண்டிருக்கிறார். இந்தஉணவு தேவையில்லை." என்பார்.




பகவான் சோமப்பசுவாமிகள் கூடல் மலையில் எந்நேரத்தில் எங்கேயிருப்பார் என்று யாருக்கும் அறிய இயலாது.ஐயா அவர்கள் அளவிலாத துடிப்பும் விரைவான நடையும் கொண்டவர்.மலையில் விரைந்து ஓடுவார். சில சமயங்களில் பெரிய பாறைகளிலோ மரத்தடிகளிலோ கால் நீட்டிப் படுத்திருப்பார்.எப்போதும் இப்பிரபஞ்சத்தையே கவனிப்பது போல தீர்க்கமான மேல்நோக்கிய பார்வை கொண்டிருப்பார்.தனக்குத்தானே பேசிக்கொண்டும் இருப்பார்.

சமயத்தில் ஒரு பாயை விரித்து அதில் கால் நீட்டிப் படுத்திருப்பார். எறும்போ கரையானோ சுற்றி மொய்த்திருந்தாலும் அவர் இருக்கும் பாய் அருகே வரவே வராது.அரிய சில நேரங்களில் "ஸ்ரீ கண்ட யோகத்தில்"இருப்பார். அதாவது தன் தலை, கைகள், கால்கள் , வெவ்வேறாகத் துண்டித்துக் கிடப்பது போல் காட்சிதருவார்.சில நிமிடங்களில் மீண்டும் ஓர் உருவாகத் தென்படுவார்.  இந்த யோகம் மிகவும் பழுத்துக் கனிந்த சிவ யோகிகளுக்கே சாத்தியப்படும்.  .

யோகிகள் சகல உயிர்களிடத்திலும் இறைவனையே காண்பார்கள்.இறைவனாகவே வந்து நிலைகொண்ட  ஐயா சோமப்பாசுவாமிகள் எல்லா உயிர்களையும் தன் குழந்தைகளாகக் கொண்டு கருணை மழை பொழிவார்.தன் தலைமுடிகளில் வசிக்கும் பேன்களையும் கூட தனது குழந்தைகள் என்றுகூறி அவற்றை அகற்ற மறுத்துவிடுவார்.




ஒருசமயம் ஐயாவின் காலில் ஒரு  கட்டுவிரியன்பாம்பு தீண்டியது. ஆனால் தீண்டியவுடன் பாம்பு இறந்தது.இதைக்கண்ட ஐயா அவர்கள் " களவாணிப்பய,கடிச்சான், செத்தான்" என்று கூறி , மூன்றுநாட்களுக்குப் பிறகு கடிபட்ட காலில் சிறிது மண்ணைத்தூவினார். உடனடியாகக் கடிபட்ட இடத்திலிருந்து பாம்பின் விஷம் முழுதும் வெளியேறியது. இதுவும்ஓர் அதிசயமே.

பல சமயங்களில் அவரைத்தேடி வரும் அன்பர்களின் முன் , வரமாட்டார். காலையில் வந்தவர்களை மாலைவரை கூடக் காத்திருக்கும்படி செய்து விடுவார்.பகவான் சோமப்பா சுவாமிகள் விளையாட்டாக ஒருநேரம் மூன்று சிறு கற்களை வைத்து ," ஒரு திருடன் ,இரண்டு போலீஸ் " என்று விளையாடினார் . அப்போது அவரை மூன்று பேர் காண வந்தனர். அவர்களில் இருவர் நல்லவராகவும் மற்றவர் தீயவராகவும் இருந்தது தெரியவந்தது.

ஒருமுறை திருப்பரங்குன்றம் பகுதியில் பகவான் சோமப்பா சுவாமிகள்  சாலையைக் கடந்த போது ஒரு போலீஸ்காரர்  அவரை அடிக்கும்நோக்கில் கையை ஓங்கினார்.உடனே போலீஸ்காரரின் கை ஓங்கிய நிலையிலேயே செயலற்றுப் போனது. போலீஸ் காரர் பயந்து சுவாமிகளின் காலில் விழுந்து மன்றாடினார். பகவான் சோமப்பா சுவாமிகள் பெரும்கருணையுடன் அவரை மன்னித்தருள, போலீஸ்காரரின் கை சாதாரண நிலைக்குத் திரும்பியது.





ஒருமுறை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் சோமப்பாசுவாமிகளுக்கு  தன் கார் ஓட்டுநர் மூலம் சட்டை கொடுத்தனுப்பினார்.வந்தவரிடம் " சோமப்பா ஜெயிலுக்குப் போகுது " என்றார்.ஓரிரு நாட்களில் தேவர்அவர்கள் சிறை சென்றார்.பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் மதுரை திருநகரில் தங்கியிருக்கும் போதெல்லாம் பகவான் சோமப்பா சுவாமிகளிடம் வருவது வழக்கம்.அப்படி வரும்போது சோமப்பாசுவாமிகள் தேவர்அவர்களிடம்" வாடா, உட்கார்," என்பார் .

தேவர்அவர்களும் அமர்ந்து தியானத்தில் இருப்பார். குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் , சோமப்பா சுவாமிகள்" போதும், கிளம்பு" என்றவுடன் தேவர்அவர்கள் , சோமப்பாசுவாமிகளின் திருவடிகளில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி,பின்னர் கிளம்பிச் செல்வார்.பகவான் சோமப்பா சுவாமிகள் பொதுவாக அனைத்து மக்களையும் "சோமப்பா"என்று அழைப்பார்.அதுமட்டுமன்றி கல்,மண்,மரம்செடி கொடிகள் , இதர ஜீவ ராசிகள் அனைத்தையும் கூட "சோமப்பா" என்றே அழைப்பது வழக்கம்.








பகவான் சோமப்பா சுவாமிகள் , இந்த அண்ட சராசரங்களையும் தன்,கைகளுக்குள் அடக்கியதன் அடையாளமாக இரு கைவிரல்களையும இறுகக் கோர்த்த நிலையில் அமர்ந்ததிருப்பார்.அவருடைய பார்வையும் ,இந்தப் பிரபஞ்சத்தையே உற்று நோக்குவதைப்போல மேல்நோக்கியேஇருக்கும்.பகவான் சோமப்பா சுவாமிகள் கடித்துத் தின்ற கொய்யாக்காயின் மீதத்தை எடுத்துக் கொள்ள,பலர் காத்திருப்பார்கள்.அவர் சாப்பிட்டு முடித்தவுடன் அந்த எச்சில் இலையைப் பெற ஒரு கூட்டமே காத்திருக்கும்.பகவான் சோமப்பா சுவாமிகள்கொண்டு,  வழக்கமாக ஒருபாயை எடுத்துக் கொண்டு சென்று விரித்துப் படுத்துக் கொள்வார்.அந்நேரத்தில் பெரும் மழை பெய்தாலும் அவர்மேல் ஒரு சிறுநீர்த்துளியும் படாது.

ஒரு சமயம் ஒருவர் , பலசரக்குக்கடைக்கு விநியோகம் செய்யவேண்டி வாளியில் நிலக்கடலை  கொண்டு சென்றபோது சோமப்பா சுவாமிகளை வழியில் தரிசித்தார்.அப்போது பகவான் சோமப்பா சுவாமிகள் அவரது வாளியிலிருந்து கைநிறைய கடலையை அள்ளித் தன் மடியில் போட்டுக் கொண்டார்.அந்த நபர் பலசரக்குக் கடையில் சென்று வாளியைத் திறந்து பார்த்த போது வாளி முழுக்க கடலை நிரம்பியிருந்தது கண்டு அதிசயித்தார்.

ஒருமுறை சோமப்பா சுவாமிகள் மதுரையில் ஓர் அன்பரின் வீட்டிற்கு ச்சென்றிருந்த போது அவ்வீட்டில் உள்ளோர் காது செவிடான  எட்டு வயதுள்ள தன்மகனை அவரிடம் காட்டி அக்குறையைத் தீர்க்க வேண்டுமெனக்கூறினர்.பகவான் சோமப்பா சுவாமிகள் கெட்ட வார்த்தைகளால் திட்டி அப்பையனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.உடனே அவனுக்கு காது தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது .





பகவான் சோமப்பா சுவாமிகள் ஒருவரை லேசாக முதுகில் தட்டினால் அவருடைய நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும்.சிறிது ஓங்கி தட்டினாலோ இறுதி நெருங்கிவிட்டது என்று அர்த்தம் .

பகவான்சோமப்பா சுவாமிகளின் ஜீவசமாதித் திருக்கோவில் திருப்பரங்குன்றத்தில் தியாகராஜர் பொறியியற் கல்லூரி செல்லும் வழியில் திருக்கூடல் மலையடிவாரத்தில் சுமார் முந்நாறு அடிக்கு மேலே அமைந்துள்ளது.பகவான் சோமப்பா சுவாமிகளை தரிசனம் செய்ய வருபவர்கள் , கீழே படிக்கட்டில் ஏறத் துவங்கி சோமப்பா சுவாமிகளை தரிசித்து , பின் கீழே இறங்கி முடிக்கும் வரை யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பவர்க்கு சோமப்பா சுவாமிகள் அனைத்து வரங்களையும் அருளுகிறார்.சிறிதளவு ஆணவத்துடனும் அங்கே வந்தால் கூட  அவர்களை மங்கச்செய்து விடுகிறார்.பகவான் சோமப்பா சுவாமிகள் நின்றருளிய கோயிலுக்கு வருபவர்கள், யாரிடமும் வீணான வேறு விவகாரங்களைப் பேசாமலிருப்பது நல்லது.அமைதியாக அமர்ந்து தமக்கு உள்ள குறைகளைத் தீர்த்தருளுமாறு வேண்டி தியானம் செய்வது நல்லது.

குரோதமான எண்ணம் , சூது கொண்ட  சிந்தனை, தீய நடத்தை, ஒழுக்கக்கேடு, போன்ற எதிர் மறைச் செயல்கள் , பகவான் சோமப்பா சுவாமிகளைக் கோபப்படுத்துபவையாகும் எதிர்மறைஎண்ணம் கொண்டோர் தண்டனைக்குள்ளாவார்கள்.



பகவான் சோமப்பா சுவாமிகள் அஷ்ட மா சித்திகளையும் பெற்றவர்.எனவே அனைத்தும் அறிவார்.
தான் முக்தியடைந்தபோதும் தன் சூக்சும உடம்புடன் இன்றும் எல்லா இடங்களிலும் உலவுகிறார்.
இதை , உண்மையாக அவரிடம் முழுக்க சரணாகதி அடைந்தவர்கள் உணர்வார்கள்.

பகவான் சோமப்பா சுவாமிகள் எங்கிருந்து புறப்பட்டு திருக்கூடல் மலைக்கு வந்தார் என்று இதுவரை யாருக்கும் தெரியாது. நதி மூலம் , ரிஷிமூலம் பார்க்கலாகாது. அதுபோல் பகவான் சோமப்பா சுவாமிகள் எங்கு , எப்போது பிறந்தார்?, அவரது வயது என்ன ? என்ற கேள்விகளுக்கும் இது வரை பதில் தெரியாது.  தவத்திரு மாயாண்டி சுவாமிகள்"காலங்காலமாக காடுமேடெல்லாம் கடந்து நடந்து உருண்டு திரண்டு பழுத்து பக்குவப்பட்ட சிவக்கனி. "_ என்று பகவான் சோமப்பா சுவாமிகளைப் புகழ்வார்.  பகவான் சோமப்பா சுவாமிகள் திருக்கூடல் மலைக்கு வந்த போது சுமார் இருபத்தேழு வயதுள்ளவராகத் தெரிந்தார். அதிலிருந்து, அவர் முக்தியடையும் வரை எந்த மாற்றமுமில்லாமல் சுமார் ஐம்பது வருடகாலம் அதே  இளமைத்தோற்றத்துடன்  இருந்தார்.





மாயாண்டி சுவாமிகள் சமாதி ஆகிவிட்டதை (1930-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ஆம் தேதி) அறிந்து எங்கிருந்தோ வந்து சேர்ந்தார்.  சோமப்பா.  மாயாண்டி சுவாமிகளின் திருமுகத்தை திருச்சமாதி வைப்பதற்கு முன் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும்  என்கிற ஆவலில்,  எத்தனையோ பக்தர்கள் எங்கெங்கிருந்தோ வந்து குவிந்திருந்தனர். சமாதி நிலையை எய்துவிட்ட சுவாமிகளின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காமல் வெகு நேரத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் சோமப்பா.  முகம் இறுகிப் போயிருந்த சோமப்பா, திடீரென மலர்ந்தார்.  மாயாண்டி சுவாமிகள் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியதை அப்போது சோமப்பா கவனித்துதான் இதற்குக் காரணம்.  இதை அடுத்து, அங்கு நிலவிய நிசப்தத்தைக் கலைக்கும் வகையில், சோமப்பா சாகவில்லை. சோமப்பா சாக மாட்டான் என்று பெருங்குரல் எடுத்துக் கத்திக்கொண்டே மலைக்கு ஓடி விட்டார்.







அதாவது. என் உடல் என்னை விட்டுப் பிரிந்தாலும், நான் என்றென்றும் உன்னுடனும் என் பக்தர்களுடன் இருந்து அருள் பாலிப்பேன்  என்கிற செய்தியை சோமப்பா வாயிலாக நமக்கெல்லாம் உணர்த்தி இருக்கிறார் மாயாண்டி சுவாமிகள்.  சமாதி ஆன பிறகும், மாயாண்டி சுவாமிகள் அருளிய புன்னகை இதைத்தான் நமக்குச் சொல்கிறது.  மாயாண்டி சுவாமிகளைப் போலவே, தான் திருச்சமாதி ஆகும் தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் சோமப்பா சுவாமிகளும் சமாதி ஆனார்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்து.  இவரது திருச்சமாதி நிகழ்வு நடந்தது.

தூய உள்ளமும் நற்சிந்தனைகளும் இருப்பவர்களைத்தான் இன்றைக்கு சோமப்பா தன் ஜீவ சமாதிக்கு வரவழைத்து அருள் புரிகிறார்.  சித்தர்களை தரிசிப்பதில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருச்சமாதி இது!

இத்தகு அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ம் ஆண்டு குருபூசை வருகின்ற ஜூலை மாதம் 11 ம் நாள் நடைபெற உள்ளது. முன்கூட்டியே இங்கு தகவல் தெரிவிக்க குருவின் ஆணை. இதோ அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.


வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்தது கொண்டு குருவருளையும் திருவருளையும் அள்ளிக் கொள்ளும் படி நம் தளம் சார்பில் வேண்டுகின்றோம். இணைப்பில் உள்ள படங்கள் அண்மையில் நாம் தரிசித்த போது எடுக்கப்பட்டவை.விரைவில் நம் தரிசன அனுபவத்தை தனிப் பதிவாக தர குருவருள் புரிய வேண்டுகின்றோம்.

மீள்பதிவாக :-

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

விளம்பியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temple.blogspot.in/2018/04/blog-post_14.html

பணசலாறு வீரப்ப ஐயனார் திருக்கோயில் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_6.html

அக ஒளி பெருக்கும் வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் - http://tut-temple.blogspot.in/2017/09/blog-post_13.html

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html

குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_19.html

ஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_1.html

கேட்ட வரம் அருளும் வீரபாண்டி கௌமாரிஅம்மன் - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_60.html

கலையார் அரிகேசரியாய் போற்றி! போற்றி!! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_2.html

No comments:

Post a Comment