அன்பார்ந்த மெய்யுணர்வாளர்களே.
தேடல் உள்ள தேனீக்களாய் என்ற குழுவின் மூலம் நம் தொண்டினைத் தொடர்ந்து வருகின்றோம்.
வலைத்தளம் ஆரம்பித்து இன்றைய பதிவில் 200 ஆவது பதிவைத் தொட்டு விட்டோம்.இவை அனைத்தும் குருவருளால் மட்டுமே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. நம்மைப்
பொறுத்தவரை எண்ணிக்கை முக்கியமல்ல. எண்ணங்களே முக்கியம்.இந்த பதிவில் கொளத்தூரில் உள்ள திருமால் மருகன் ஆலயத்தில் நடைபெற்ற உழவாரப் பணியின் அனுபவத்தை தங்களோடு பகிர விரும்புகின்றோம்.அதற்கு முன்பாக உழவாரம் பற்றிய சில குறிப்புகளை காண உள்ளோம். இவை நம்முள் உள்ள சில ஐயப்பாடுகளை நீக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
சீரும் சிறப்பும் மிக்க உழவாரத் திருப்பணியை ஏன் செய்கிறோம்?
இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் விரும்பி அறிய வேண்டிய ஒன்றாகும்.
நம் போன்ற மானிட உயிர்க் கூட்டங்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத வைரஸ், அமீபா போன்ற உயிர்களிலிருந்து, மிகவும் பெரிய யானை, திமிங்கலம் போன்ற விலங்குகள் வரை - ஏன்? இந்திரன், திருமால், நான்முகன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடித் தேவர்கள் வரை இவ்வுலகில் காலம் காலமாக உடல் எடுத்துப் பிறந்து வருகிறோம்.
நாம் செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்பப் பிறப்பெடுத்து வருகிறோம். பாவங்களுக்கு ஏற்ப துன்பமயமான நரக வாழ்வையும், புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கலோக வாழ்வையும் பெறுகிறோம். இவ்விரண்டு வாழ்க்கையும் நிலையற்றவை. ஏனென்றால் நாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்பச் சொர்க்கலோக இன்பங்களை நுகர்ந்த பின்பு மீண்டும் பூவுலகிற்கு வந்து தீர வேண்டும். அதுபோல நாம் செய்த தீவினைகளுக்கு ஏற்ப நரகம் சென்று துன்பங்களை அனுபவித்தபின் மீண்டும் இப்பூவுலகம் வந்தே தீரவேண்டும்.
நாம் முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப நமக்கு நோய், வறுமை, கடன், அவமானம் போன்ற இழிநிலையும்...
புண்ணியங்களுக்கு ஏற்பப் பணம், புகழ், திடீர் யோகம், ஆரோக்கியம் போன்ற உயர் நிலையும் வந்து சேர்கின்றன.
இந்த உயிர், “சிவபுண்ணியம்” செய்வதால் தான் நமது பாவ புண்ணியங்களே இல்லாமற் போகும். அதன் பிறகு, இந்த உயிர் மீண்டும் உடல் எடுக்காது.
சிவபுண்ணியம் என்றால் என்ன?
சைவ சமயக் குரவர் நால்வரும், 63 நாயன்மார்களும் காட்டிய, செய்த, சொல்லிய நெறிகளே சிவபுண்ணியங்களாகும்.
1. சிவாலயம் முறையாகக் கட்டுவது.
2. நாள்தோறும் சிவாலயம் சென்று வழிபடுவது.
3. சிவனடியார்களுக்கு அமுது படைப்பது.
4. சிவாலயங்களுக்குச் சென்று “உழவாரப் பணி” - அதாவது புல்பூண்டுகளை நீக்கி,
வெள்ளையடித்து, தூய்மை செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்வது.
5. சிவாலய உழவாரப் பணி செய்ய ஊக்குவித்தல், செய்தல், செய்வித்தல் ஆகியன.
முதலில் சிவாலயம் கட்டுதல்
இன்று நம்போன்ற சாமான்யர்களால் இயலாது. சிவாலயம் கட்டுவதால் மாயப் பிறப்பு அறுபடும் என்பதை உணர்ந்த அக்கால அரசர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்பச் சிவாகம விதிப்படிச் சிவாலயங்களைக் கட்டுவித்தார்கள்.அரசுப் பெருமக்கள் தங்கள் அழியும் புகழை நிலைநிறுத்த எண்ணாமல் என்றும் நிலையான பிறவாத பேரின்ப வாழ்வுக்கு வழிகாட்டும் சிவாலயம் கட்டி
“பிறவாத கைலாய முக்திப்” பேற்றைப் பெற்றார்கள்! இந்நாளில் சிவாலயம் கட்டுவதென்பது அரிதினும் அரிதே!..
இரண்டாவது சிவாலய தரிசனம்.
தினசரி சிவாலய தரிசனம் என்பது பலதரப்பட்ட தொழில்புரியும் அனைவருக்கும் இயலாத ஒன்று. எனவே, முடிந்தால் தினசரி அல்லது வாரம் ஒருநாள், வழிபடுவது என்று உறுதி எடுத்து வணங்கலாம். அன்றி 15 நாட்களுக்கு ஒரே முறை பிரதோஷ காலத்தில் வணங்கலாம்! அதுவுமின்றேல் - மாதம் ஒரே முறை; அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை என வகுத்து வணங்கலாம். இன்றேல், சிவராத்திரி அன்றாவது வணங்குதல் சிவபுண்ணியம் தரும்!
அடுத்து சிவனடியார்களுக்கு அமுது படைத்தல்...
சிவனடியார்கள் யார்? சிவனடியார்கள் நெற்றி நிறையத் திருநீறு; கழுத்தில் சிவக்கண்மணி - ருத்ராக்ஷம் அணிந்தவர்கள்; இவைகள் சிவசின்னங்கள் : இந்தச் சின்னங்களுடையவர்கள் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்திருப்பது நமக்குத் தெரிந்தாலும் அதை எண்ணாது “சிவ சிவ” என்று சொல்லி அவரைச் சிவனடியாராகவே எண்ணி நமது தகுதிக்கு ஏற்பப் பொருளுதவியோ, அமுதோ தருவது சிவ புண்ணியமாகும். ஒன்றுமே சொல்லாமல் சிவ சிந்தனையின்றி உயிர்களுக்கு செய்யும் புண்ணியம் - உயிர் புண்ணியம்.
அதாவது பசுப்புண்ணியத்தைத் தந்து நாம் மீண்டும் பிறக்க வழி வகுக்கும். எனவே, தர்மத்தை மட்டுமல்ல, எல்லா நற்செயல்களையும், “சிவ சிவ” என்று சொல்லி பரம் பொருளாகிய சிவத்தை எண்ணிச் சிவனார்க்கு அர்ப்பணம் செய்வோமானால் அத்தனையும் சிவ புண்ணியமாகி நமது பிறப்பை ஒழிக்கும்.
அடுத்து சிவாலயத்தில் உழவாரப் பணி செய்தல்
சைவ சமயக் குரவர் நால்வரில் அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்து உயர்ந்தவர். அவர் திருக்கரத்தில் உழவாரப்படை இருப்பதை அன்பர்கள் காணலாம்! ஏற்கனவே நமது முன்னோர்கள் கட்டிய - கோயில் கோபுரம், சுவர் ஆகிவற்றிலும் செடி, கொடிகள் முளைத்து சிதிலமடையக் கூடிய நிலையில் உள்ளன. ஏன்?! சிவலிங்கத் திருமேனியின் மேல் எண்ணெய் படாத சிவாலயங்கள் கூட உள்ளன.
பெற்ற தாய் தந்தையரைப் பேணாமல் யார் யாரையோ பெற்றோர் என எண்ணிப் பேதலித்துக் கொண்டாடும் வழி தவறிய மகனைப் போல நாம் இருக்கின்றோம்! ஆனால், சிவ பெருமான் நினைத்தால் தன் கருணையின் காரணமாக அனைத்துச் சிவாலயங்களையும் ஒரு நொடியில் பொன்னாக ஒளிரவைக்க முடியும்! நம்மைப் போன்ற அற்ப உயிர்கள் இச்சிவாலயங்களில் “உழவாரப்பணி” புரிந்து உய்யும் பொருட்டே அவற்றை இறைவன் அவ்வாறே விட்டு வைத்துள்ளான்! தான் பெற்ற குழந்தையின் நோய் தீரத் தாய் பத்தியம், உண்ணா நோன்பு இருப்பது போலத் தாயிற் சிறந்த தயை நிரம்பிய தத்துவனான சிவ பெருமான் நாம் சிவ புண்ணியம் பெறக் காட்டிய எளிய வழியே இந்த உழவாரப்பணி.
(உலகில் எந்த ஒரு பணியும் வழிபாடும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது இலாபம் கருதியே இருக்கும்.)
சிவபெருமானை வழிபட்டால் முன்-7, இடை-7, கடை-7 ஆகிய 21 தலைமுறைகளுக்கும் முன்னோர், பின்னோர் வம்சாவழியினர் மீண்டும் பிறவா நெறி உள்ள “கைலாய முக்தி”யைப் பெறுவர்.
அத்தகைய சிவபுண்ணியம் தரும் இந்த உழவாரப் பணியானது சிவாலயங்களுக்குச் சென்று தேவையற்ற புல்பூண்டு, முள், புதர் நீக்குவதாகவும், ஒட்டடை, தூசு நீக்குவதாகவும், வெள்ளையடிப்பதாகவும், கோயில்களைச் சுத்தமாக மெழுகிக்கோலமிட்டு அழகூட்டுவதாகவும் நிறைவாக அபிஷேக ஆராதனைகள் நடத்துவதாகவும் அமைகிறது.இத்தகைய அரும்பணியை - சிவாலய உழவாரத் திருப்பணியை - ஆடவர், பெண்டிர், பெரியவர், சிறியவர் உட்பட எல்லா தரப்பு மக்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த திருப்பணியில் எல்லோரும் பங்குபெற்று இயன்ற அளவு பொருளாலும், உடல் உழைப்பாலும் மற்றும் பிறவகைகளாலும், சிவபுண்ணியம் செய்ய அருமையான வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இப்புண்ணியத்தில் பங்கேற்போர் 21 தலைமுறைகள் தாங்களும் தங்கள் வம்சாவழியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று உய்ய இத்தெய்வத் திருப்பணியில் பங்கு கொண்டு சிவ புண்ணியம் ஈட்டி என்றும் மாறாத சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
சரி அன்பர்களே. நம்முடைய உழவாரப் பணி இன்பத்துள் செல்வோமா?
காலையில் சரியாக 9:30 மணியளவில் திருமால்மருகன் கோயிலை அடைந்தோம். ஒவ்வொருவராக வந்து தொண்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அன்பர்கள் வர, வர தொண்டினை ஆரம்பித்தோம்.இந்த உழவாரப் பணியில் ஆடவர் எதிர்பார்த்த அளவில் வரவில்லை. அதனால் என்ன? இருப்பவர்களை வைத்து பணியைச் செய்தோம்.
முதலில் கோயிலை ஒரு சுற்று சுற்றி வருவோமா? இதோ திருக்கோயிலின் நுழைவாயில்.
மகளிர் குழுவினர் வந்து சேர்ந்ததும், உழவாரப் பணி தொடங்கியது. கோயில் குருக்களுடன் சேர்ந்து, ஒவ்வொரு சன்னதியில் உள்ள பிரபையை எடுத்தோம். அதனை அப்படியே சுத்தம் செய்யும் பொருட்டு, மகளிரிடம் கொடுத்தோம். விநாயகர், சிவன், ஆஞ்சநேயர்,முருகன்,பெருமாள் என்று கோயிலை சுற்றிப் பார்க்க ரம்மியமாக இருந்தது. சந்திரசேகரன் அண்ணன் வந்த உடன், சன்னதியை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. அன்றைய தினம் பிரதோஷம் என்பதால் முதலில் சிவன் சன்னதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம்.
மகளிர் குழுவின் பணி ஆரம்பமானது.தங்களின் பார்வைக்கு சில காட்சிகள் கீழே
நம் குழுமத்தின் குட்டி சுட்டிகளும் ஆர்வத்துடன் உழவார செய்தனர்.
நந்தியம்பெருமான் சுற்றியுள்ள எண்ணைப்பிசுக்குகள் நீக்கப்படுகிறது
சிவன் சன்னதி சுத்தம் செய்த பிறகு
அடுத்து தீப மேடை சுத்தம் செய்ய வேண்டும் என்று மகளிரிடம் கூறினோம். சொன்ன உடனே, பணியை எடுத்துக் கொண்டார்கள். சுதந்திரமாக அவர்கள் ஒவ்வொரு பணியை செய்து கொண்டே வந்தார்கள். நாம் அங்கே, இங்கே செல்வதுமாய் இருந்தோமே தவிர, பணியில் ஈடுபடவில்லை. சிவன் சன்னதி முடித்த பிறகு, விநாயகர் சன்னதியை தூய்மை செய்வதாக சந்திரசேகரன் அண்ணன் கூறினார்.
அப்போது, நம் குழுவின் மற்றொரு உறவினர் திரு.வினோத் குமார் அவர்களும் கோயிலை அடைந்தார்கள். அவரிடம் கோயிலின் மேலே உள்ள கோபுரம் மற்றும் சன்னதியின் வெளியே உள்ள சுவர்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய சொன்னோம்.
நீங்களே பாருங்கள். எவ்வளவு அகல் விளக்குகள் என்று? தீப மேடையில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் துடைப்பது தெரிகின்றதா? நாங்கள் எங்கள் மனதில் உள்ள அழுக்குகளையும். மன பிசுக்குகளையும் இங்கே நீக்கிக் கொண்டிருக்கின்றோம்.அதுதானே உழவாரத்தின் ஆதாரம்.
மேலே நீங்கள் பார்ப்பது கோயிலில் உள்ள பாத்திரங்கள், தட்டுக்கள் போன்றவற்றை கழுவும் காட்சி. எங்கள் உழவாரப் பணியின் அடிநாதம் இவர்கள் தான். திருமதி தாமரை அவர்கள் தற்போது நடைபெற்ற உழவராப் பணிகளில் தவறாது தம் குழந்தைகளோடு வந்து கலந்து கொள்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்வைக் கொடுக்கின்றது. மேலும், இந்த தொண்டிற்கு தேவையான பொருளாதார உதவியையும் இவர்கள் செய்து வருவது இங்கே குறிப்பிடத் தக்கது.
அகல் விளக்குகள் அனைத்தும் அள்ளி, வேறொரு இடத்தில் குவிக்க ஏற்பாடு செய்த காட்சி
பெருமாளே ..எங்கள் பெருமானே
தீப மேடையும், மூன்று சன்னதிகள் ( சிவன், விநாயகர், பெருமாள் ) என முடித்து விட்டு ,சற்று ஓய்வெடுத்தோம். கோயில் சார்பாக அருமையான தேநீர் கொடுத்தார்கள். பின்பு கோயிலின் நிர்வாக அறங்காவலர் திரு.V.R. ராஜா அவர்கள் திருக்கோயில் பற்றியும், கோயிலின் சபா உறுப்பினர்கள் பற்றியும் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். செவிகளுக்கு அருமையான விருந்தாய் அமைந்தது. மீண்டும் அடுத்த சுற்றுக்கான பணி ஆரம்பமானது.
மந்தவெளியில் இருந்து வந்து சிறப்பு சேர்த்தார் திருமதி அருணா அவர்கள். பணியில் ஈடுபட காட்சிகள் அனைவரும் பார்த்தீர்கள். இதோ தூய்மை செய்த பிறகு ..நீங்களே பாருங்கள்.
அழுக்கற்ற, எண்ணெய் பிசுக்கற்ற தீப மேடை தயார்
அகல் விளக்குகள் அள்ளி, அந்த இடம் தூய்மையான பின்பு
பெருமாளின் தரிசனம். அனைவரும் தங்கள் பணியில் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். நம்மால் முடிந்த அளவு உழவார செய்து கொண்டு இருந்தது.
அனைத்து சன்னதிகளும் தூய்மை செய்துவிட்டோம் என்று நினைத்தோம். அப்போது தான் தெரிந்தது, தாயாரின் சன்னதியை விட்டு விட்டோம் என்று. பின்பு சந்திரசேகரன் அண்ணன் களத்தில் இறங்கினார்.இடையில் அவர் சற்று ஓய்வெடுத்த போது , நமக்கு முருகப் பெருமான் சன்னதியை தூய்மை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது தாயார் சன்னதி மட்டுமே உள்ளது. மகளிர் அனைவரும் கோயிலின் தரையில் உள்ள தூசி,தும்புகளை கூட்டி அள்ள ஆயத்தம் ஆயினர். சிலர் ஆஞ்சநேயர் சன்னதியின் கதவு, மேற்புறம் என பட்டையைக் கிளப்பினார். சிலர் அங்கே இருந்த மரத்தாலான மேடையை சுத்தம் செய்தனர். தரையை சுத்தம் செய்ய அங்கே, குழாய் மூலம் நீர் அடிக்க சிறார்கள் உதவினார்கள்.
அனைத்து சன்னதிகளும் சுத்தம் செய்த பின்னர், தரையை துடைக்க ஆரம்பித்தோம். நன்கு குழாய் மூலம் நீர் பீய்ச்சி அடித்து, துடைப்பம், மாப்பு போட்டு ஒன்றுக்கு இரண்டு முறை தூய்மை செய்தோம்.இதோ ஆலயம் ஆன்ம லயமாக உள்ளது. பிரபை, கோயில் பாத்திரங்கள், கோயிலின் சன்னதிகள், மேற்கூரை,கோபுரம், வெளிச் சுவர்கள், தீப மேடை, மர மேடை, துணிகள், தரை என ஒட்டுமொத்தமாய் சுத்தம் செய்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது. பணி நிறைவில் கோயிலின் சார்பாக அருமையான மதிய உணவு சாம்பார் சாதம்,தயிர் சாதம், ஊறுகாய், சிப்ஸ் என கொடுத்தார்கள். சுவையோ சுவை. கோயிலின் பிரசாதம் என்றால் அதற்கு தனி ருசி என்பது சுவைத்தால் தான் தெரியும்.
தொண்டில் இணைந்து சிறப்புச் சேர்த்த அனைவருக்கும் பிரதோஷ நந்தி வழிபாடு என்ற சிறிய புத்தகம் நம் TUT தளம் சார்பாக வழங்கப் பட்டது. அட ! அன்று பிரதோஷம். என்ன ஒற்றுமை பாருங்கள். பிரதோஷம் அன்று நந்தி வழிபாடு பற்றிய புத்தகம் கிடைக்கின்றது என்றால் சும்மாவா? எல்லாம் பெருமாளின் அருளன்றோ? திருமால்மருகனுக்கு அரோகரா !!
இந்த திருக்கோயிலில் உழவார செய்ய வாய்ப்புக் கொடுத்த திரு.V.R. ராஜா அவர்களுக்கும்,திருமால் மருகன் கோயில் நிர்வாகத்திற்கும், எங்களோடு உடனிருந்து, உணவு வழங்கும் வரை இருந்த கோயில் குருக்களுக்கும் TUT தளம் சார்பாக நன்றியை தெரிவிப்பதில் நாம் மகிழ்கின்றோம். குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்த காட்சி இல்லாது இருந்தால் எப்படி? இதோ.
எப்போ அழைப்பீரோ? என்று மீண்டும் திருமால்மருகனிடம் காத்திருக்கின்றோம்.
முந்தைய பதிவுகளுக்கு:
வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_17.html
கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html
ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html
சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html
என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html
ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html
ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html
ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html
சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html
மனிதம் வளர்க்கும் மாமனிதர் முல்லைவனம் - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_77.html
பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html
AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html
உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html
காப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html
நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9) - https://tut-temple.blogspot.in/2017/10/9.html
எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html
No comments:
Post a Comment