Subscribe

BREAKING NEWS

05 October 2017

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள்


பேசும் முருகன் தரிசனம் - ஓதிமலை

தத் புருஷாய வித்மஹே மஹா சேனாய தீமஹி
தந்நோ சண்முக பிரசோதயாத்

பதிவின் தலைப்பே ஆச்சர்யமாக உள்ளதா? ஆம்.அது தான் உண்மை.ஆலய தரிசனம் ஒவ்வொன்றும் நமக்கு ஆன்ம தரிசனம் தருகின்றன. அதிலும் இந்த ஆலயம் ..ரொம்பவே ஸ்பெஷல்.பிறகு அங்கே  பேசும் முருகனை அல்லவா கண்டோம். போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள் என்று 20/08/2017 -ஆவணி மாதம் - சதுர்தசி திதி மறுநாள் காலை 02.25 வரை, பூசம் நட்சத்திரம் அன்று இரவு 06.04 வரை சொன்னார்கள்.

நாம் நம் TUT குழுவினருடன் கலந்து பேசி,ஓதிமலை செல்ல முடிவெடுத்தோம்.மிக நீண்ட இடைவெளிக்கு பின் வெளியூர் பயணம்.நாங்கள் பேசும் முருகனை காண்போம் என்ற நோக்கில் செல்லவில்லை. எப்பொழுதும் செல்வது போலத் தான் சென்றோம். ஆனால் அவருடைய தரிசனம் பெற்ற  பிறகு, அடடா ! என்ன சொல்ல ? வார்த்தைகளில் அடக்க முடியவில்லை. அழகனின் தரிசனம்.குமரனின் தரிசனம் ..சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா ! என்ற பாடலை அல்லவா நினைவூட்டுகின்றது.







இதோ...கந்தனின் தரிசனம் உங்களுக்காக.அழகனின் அழகில் சொக்கிப் போனோம். சரி.
ஐந்து முக வடிவம் என்பது 'ஐம்முகச் சிவன்' என்பர். அதாவது, சிவபெருமானும் முருகப் பெருமானும் வேறு வேறு வடிவங்கள் அல்ல என்பதை உணர்த்தும் திருவடிவம்தான் ஐந்து திருமுகம் கொண்ட 'ஸ்ரீகுமார சுப்ரமண்யர்'. அதனால்,இந்தப் பெருமானை சிவகுமாரன் என்றும், குமாரசிவம் என்று சொல்கின்றனர்.


''அருணகிரிநாதர் திருப்புகழில் 'ஓதிமலை' என்று குறிப்பிடப்படும் தலம் கொங்கு மண்டலத்தில் உள்ள இந்த மலைதான் எனும் கருத்து இருந்து வந்தது. ஆனால், அருணகிரிநாதர் குறிப்பிடும் 'ஓதிமலை' சோளிங்கருக்கு அருகில் உள்ள ஞானமலை என சமீபத்தில்தான் அறியப்பட்டது'' என்கின்றனர் முருகன் அடியார்கள். எனினும் 'ஓம்காரத்தின் பொருளை, இங்குதான் தந்தைக்கு ஓதினார் முருகப் பெருமான். இதனால்தான் இந்த மலை ஓதிமலை ஆயிற்று' என்கிறது ஓதிமலை தல புராணம். 

இந்த ஆலயத்தை பற்றி சிறிது அறிவோம். புன்செய் புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. எழுபது டிகிரி கோணத்தில் செங்குத்தாக மலை அமைந்துள்ளது.இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும். இங்கு அமைந்த முருகன் கோவில் வரலாறு கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது. 



கயிலாய மலை அன்று கோலாகலமாக இருந்தது. தேவர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் அனைவரும் அம்மையையும் அப்பனையும் தரிசித்தபடி இருந்தனர். அப்போது, விநாயகப் பெருமானும் முருகப் பெருமானும் அங்கே இருந்தனர். பிரம்மதேவன், இறைவனை தரிசிக்க அங்கு வந்தார். நந்திதேவர், விநாயகர் என்று துவங்கி அவையில் வணங்கத்தக்க அனைவரையும் வணங்கி, இருக்கையில் அமர்ந்தார். முருகப் பெருமானை மட்டும் கண்டுகொள்ளவில்லை.

'ஈசனின் புதல்வனான என்னைக் கண்டு காணாமல் கர்வத்துடன் இருக்கிறாரே...
கயிலையில் கால்பதிப்பவருக்கு இந்த கர்வம் இருக்கக் கூடாது' என்று தீர்மானித்தார்  முருகப் பெருமான். பிரம்மனின் ஆணவத்தை தகர்த்தெறியவும் முடிவு செய்தார் . உடனே, பிரம்மனை அருகே அழைத்து, அவரிடம் ''தாங்கள் யார்?'' என்றார்  முருகன்!

''என்னைத் தெரியாதா? நீ பாலகன் ஆயிற்றே! உனக்குத் தெரியாதுதான்! நான்தான் பிரம்மதேவன். படைக்கும் கடவுள். சர்வ லோகங்களிலும் உள்ள ஜீவன்களை படைத்து வருபவன் நானே!'' என்று செருக்குடன் தெரிவித்தான்.

''அப்படியா? சரி... இந்த உலக ஜீவன்களின் படைப்புக்கு ஆதாரமாக இருப்பது எது? சொல்லுங்கள்'' என்று பிரம்மனிடம் வினவினார்  முருகன்.

''இதென்ன கேள்வி... படைப்புத் தொழிலின் ஆதாரம் ப்ரணவம்தான்'' என்றான் கம்பீரமாக!
முருகன் விடவில்லை. ''ப்ரணவம் என்பதன் பொருள் என்ன?''

''ஓம் எனும் அட்சரம்தான் ப்ரணவம் விளக்கும் பொருள்.''

''தாங்கள் சொல்வது சரிதான்... ஆனால், ஓம் எனும் அட்சரத்தின் பொருளைப் புரியும்படியாக விளக்குங்களேன்'' என்றார் . பிரம்மன் தடுமாறினான்; பதில் தெரியாமல் தலை குனிந்தான்.
தந்தைக்கே வேதத்தின் பொருளை உரைத்த அந்த ஸ்வாமிநாதக் கடவுள் வெகுண்டான். பிரம்மனைத் தண்டிக்கவும் தீர்மானித்தான்.

''படைப்பின் மூலமான ஓம் எனும் அட்சரத்தின் பொருளை விளக்க முடியாதவர், படைப்புக் கடவுளாக இருப்பதா? அதற்கு உமக்குத் தகுதி இல்லை'' என்று சொல்லி, அவரது தலையில் குட்டி, பூலோகத்தில் இரும்புக் கம்பிகளால் ஆன சிறையில் (இன்றும் அந்த ஊரின் பெயர் இரும்பறை. இரும்பால் ஆன அறை எனும் பொருள் கொண்டது. ஓதிமலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது) அடைத்தார்

அது மட்டுமா? அடுத்து படைப்புத் தொழிலையும் தானே ஏற்றார்  முருகப் பெருமான். அப்போது அவர் தங்கி இருந்த இடமே ஓதிமலை. பிரம்மதேவன் சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்த சிவனார் அங்கே தோன்றி, முருகப் பெருமானிடம் நைசாக  பேசி, பிரம்மனை விடுவித்தார். பின்னர் இரும்பறையிலேயே எழுந்தருளினார். இங்கு உள்ள இறைவனின் திருநாமம்- கயிலாசநாதர்;
சுயம்பு லிங்கம். பிரம்மதேவன் சிறைப்பட்ட அதே இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓதிமலையில் இருந்தபடியே ஓம்காரத்தின் பொருள், வேதத்தின் விளக்கங்கள் ஆகியவற்றைத் தந்தைக்கு எடுத்துரைத்தாராம்  முருகப் பெருமான். இதனால்தான், 'ஓதியமலை' எனும் பொருளில் ஓதிமலை ஆனதாகச் சொல்வர். சுவாமி மலையில் சொன்ன விளக்கத்திற்கு  கூடுதலான விளக்கங்களையும் சந்தேகங்களையும் இங்கு தீர்த்து வைக்கிறார். அவர் சொல்வது ஒரு ஆசிரியர் மாணவனுக்கு பாடம் சொல்வது போல் இருந்ததால் "ஓதி"  னார் என்றும், அவர் ஓதிய இடம் "ஓதி மலை" என்றும் பெயர் பெற்றது. 


பிறகு இங்கு போகர் பழனிக்கு வழி தெரியாமல் முருகனுக்காக சிலை வடித்து தவம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. போகரின் குகையையும் இங்கு காணலாம். இங்கு இருக்கும் முருகனுக்கு ஐந்து தலைகள், எட்டு கரங்கள். பிரம்மாவைப் போலவே ஐந்து தலைகள் கொண்டு படைப்பைச் செய்ததனால் இங்கு ஐந்து தலைகளுடன் காட்சியளிக்கிறார் ஆறுமுகப்பெருமான்.
நம்பிக்களுக்கு அப்பால் இது ஒரு மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் மலை.

 ஆறு தலையும், 12 திருக்கரமும் கொண்டு ஆதியில் விளங்கிய ஓதிமலை முருகப் பெருமான், இன்று ஐந்து திருமுகத்துடன் எட்டுத் திருக்கரங்கள் கொண்டு காட்சி தருவதற்கு போகரே காரணம்! எப்படி என்கிறீர்களா?

இந்தப் பகுதியில், மூன்றாவது யாகத்தை முடித்த பிறகு போகருக்கு தரிசனம் தந்தாராம் முருகப் பெருமான். இதையடுத்து, பழநியம்பதிக்கு சென்று அங்கே நவபாஷாண முருகப் பெருமானது சிலையை வடிக்க எண்ணினார் போகர். ஆனால், ஓதிமலையில் இருந்து பழநிக்குச் செல்லும் வழி தெரியாமல் தவித்த போகர், ஓதிமலை முருகனிடமே இதைத் தெரிவித்தார். உடனே, தன் திருமுகத்தில் இருந்து ஒன்றையும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வடிவமெடுத்து, போகருக்கு உதவுவதற்காக மலையில் இருந்து இறங்கினாராம் (இதனால்தான், எஞ்சிய ஐந்து திருமுகம் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் இங்கு காட்சி தருகிறார் குமார சுப்ரமண்யர்) முருகப் பெருமான். போகரும் பின்தொடர்ந்தார்.

ஓதிமலையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தை அடைந்ததும் பழநிக்குச் செல்லும் வழியைப் போகருக்குக் காட்டியருளிய முருகன், அங்கிருந்து மறைந்தார். குமரனது அருளைப் போற்றியபடியே பழநியை நோக்கிப் பயணித்தார் போகர்.
ஓதிமலையில் இருந்து இறங்கி வந்து, போகருக்குப் பழநி செல்லும் வழியைக் காட்டிய அதே இடத்தில் - அதே கோலத்தில்... கோயில் கொண்டார் முருகப் பெருமான். அந்த இடம்... குமாரபாளையம் என்று வழங்கப்படுகிறது. ஏக முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் குமாரபாளையத்தில் அருள் பாலித்து வருகிறார்.

 இன்று பல்வேறு உடல் நலப் பிரச்சினையுள்ளவர்கள் மாதம் ஒரு முறை மலையேறி வந்தால் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். எப்படி? இந்த மலையின் படிக்கட்டுகள் பாதி வரை ஓரளவு எளிதில் ஏறும் வகையிலும் மீதி படிக்கட்டுகள் சற்று செங்குத்தாகவும் இருக்கும். மாதமொருமுறை அதிகாலையில் இந்த மலையை ஏறி இறங்கும்போது தூய காற்றை சுவாசித்து முச்சுக்குழல் விரிவடைந்து நல்ல ரத்த ஓட்டமும், உடல் வியர்த்து வேண்டாத கொழுப்புகள் கரைந்து உடலுக்கு ஒரு மிகச்சிறந்த பயிற்ச்சியை கொடுக்கும். அடிக்கடி மலையேறி இறங்குபவர்கள் உடலின் கொழுப்பு, இதய துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக மாதமொருமுறை மலையேறி இறங்கலாம். 

சஷ்டி நாட்களில் அதிகாலை கோவில் திறந்து பூஜையும் நடைபெறும். ஆதலால் சஷ்டி நாட்களை தேர்வு செய்துகொள்ளலாம். இளையவர்கள், இன்னும் திறன் மிகுந்தவர்கள் கொஞ்சம் எடையை தூக்கி ஏற முடியும் என நினைப்பவர்கள், கோவில் திருப்பணிக்காக மணல் மற்றும் சிமெண்ட் சிறு மூட்டைகளாக எடுத்துச்செல்லும் அளவில் கட்டி அடிவாரத்தில் வைத்திருக்கிறார்கள். உடல் பயிற்சிக்காக  அவற்றையும் மேலே கொண்டு சேர்க்கலாம். கோவிலுக்கு போகின்றவர்கள் தயவு செய்து தனி வாகனங்களில் போக வேண்டாம். இன்னும் இந்த மலை இயற்க்கை சூழலுடன் இருக்கிறது. பேருந்தோ அல்லது சைக்கிள்களிலோ சென்று  வாகனப்புகையை தவிர்த்து  சூழலை காக்க வேண்டுகிறோம்.

இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.
இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் “விபூதிக்காடு – தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..

இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.

பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்பட்டுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்  சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..

ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன. இங்கு மொத்தம் 1800க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளது. இது சித்தர்கள் வாழ்ந்து வரும், தவமிருக்கும் மலையாகும்.

இதோ நம் தரிசன அனுபவத்தை இங்கே பதிக்கின்றோம். ஆலய தரிசனத்தை பதிவின் இறுதியில் காண்போம்.



சரியாக காலை 7 மணி அளவில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து, சுமார் 10 பேர் ஓதிமலை நோக்கி வேனில் புறப்பட்டோம். செல்லும் வழியில் காலை உணவை முடித்து விட்டு, பயணம் தொடர்ந்தது.சரியாக 9 மணி அளவில் அன்னூர் தாண்டி ஓதிமலை அடிவாரம் அடைந்தோம்.சென்ற உடனே மயில் அகவும் ஒலியைக் கேட்டோம்.ஆஹா ! முருகன் அருள் முன்னிற்பதை மயில் மூலமாக உணர்ந்து கொண்டோம்.சற்று நேரத்தில் குருக்கள் நம்மை அலைபேசியில் அழைத்தார்கள். அவரிடம் சொல்லி விட்டு,மலையேற்றம் ஆரம்பித்தோம்.




அடிவாரத்தில் இருந்த விநாயகர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு,மேலே ஏற ஆரம்பித்தோம்.
முழுமுதற் கடவுள்,வினை தீர்க்கும் நாயகர்,வெற்றியைத் தருபவர் விநாயகர்..அவர் தரிசனம் சிறப்பாக இருந்தது.நீங்களும் தரிசனம் பெற்றுக் கொள்ளுங்கள்.




அப்புறமென்ன? மலையேற்றம் தான்.இதோ நீங்கள் பார்ப்பது போலே,அழகாய் படிக்கட்டுகளில் மலையேற்றம் தொடர்ந்தோம். மயிலின் அகவல் ஆன்மாவைத் தொட்டது. வேலும்,மயிலும்,சேவலும் துணை என்று மனதுள் கூறிக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம். முதலில் உடல் அளவில் எந்த மாற்றமும் தெரியவில்லை.ஆனால் போக..போக..சற்று உடல் கனத்தது. மனம் பெருத்தது.இந்த மலை சற்று 70 டிகிரி செங்குத்தாக இருப்பதால், மூச்சு வாங்க தொடங்கியது.







மேலே ஏற, ஏற ஆங்காங்கே ஓய்வெடுக்க சில மண்டபங்கள் கட்டி உள்ளார்கள்.தண்ணீர் நாம் தான் கொண்டு செல்ல வேண்டும்.ஏனெனில் வழியில் எங்கும் கிடைக்காது,இது போன்று எந்த ஒரு வியாபார நோக்கம் இல்லாது இருந்தால் மலைப் பயணம் நமக்கு சிறப்பாக இருக்கும். கூட்டமும் அதிகமில்லை.மோன நிலையில் முருகனை மனதுள் வேண்டிக்கொண்டு சென்று கொண்டு இருந்தோம். மேலே கோயில் கட்ட உதவ, நம்மால் ஆன உடலுதவி செய்யலாம். திருமதி.மாலதி அவர்கள் இரண்டு செங்கற்களை வைத்துக் கொண்டு மேலே ஏறி வந்தார்கள்.இடையில் ஒரு விநாயகர் சன்னதி கண்டோம்.அங்கே நடைபெறும் கட்டுமானப் பணிக்குத்தான் நம்மால் முடிந்த உதவியை செய்யலாம்.




மலை ஏற,ஏற நாம் செங்குத்து நிலையை நன்கு உணர்ந்தோம். நாம் இதுவரை சென்ற மலையேற்ற தரிசனத்தில் இந்த மலை நடப்பதற்கு வசதியாக உள்ளது.கல்,மண் குத்தாமல் அழகாய் நடந்து வர இது போன்ற படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்தவர்களுக்கு மனதளவில் நன்றி செலுத்தினோம்.
மாதம் ஒரு மலையேற்றம் செய்வது சித்தர்களின் அருள் பெற எளிதில் உதவும்.மாதம் ஒரு முறை இல்லை என்றாலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் செல்ல முயற்சிக்கலாம்.ஒவ்வொரு படியின் அழகும், நேர்த்தியும் சூப்பர்.இதோ நீங்களே பாருங்கள்.






ஓதிமலை மேலிருந்து கீழே எடுக்கப் பட்ட காட்சி தான் நீங்கள் பார்க்கின்றீர்கள். பாதையின் அழகை கண்டீர்களா? நெளிவும்,சுழிவும்,பாதையின் அழகும் அப்பப்பா ! சூப்பர் தானே. இன்னும் சற்று தூரத்தில் மற்றுமொரு விநாயகர் தரிசனம் பெற இருக்கின்றோம். இது போன்ற மலை தரிசனத்தில் கூடுமானவரை பிளாஸ்டிக்,பாலிதீன் பைகள் கொண்டு செல்வதை தவிர்க்கவும்.இதுவே நாம் இறைவனுக்கு செய்யும் மிகப் பெரிய தொண்டு.

நன்றாக கவனித்தீர்களா? அனைத்து மலை கோயில்களிலும் அடிவாரத்தில் ஒரு கோயிலும், மலையின் மேலே ஒரு கோயிலும் உள்ளது. நம்மைப் பொறுத்தவரை அடிவாரக் கோயில் பக்தி கோயிலாகவும், மேலே மலை உச்சியில் உள்ள கோயில் ஆத்ம தரிசன மௌன மொழி பேசும் கோயிலாகவும் தெரிகின்றது. யார் யார் மேலே நடக்க இயலுமோ,அவர்கள் மேலே உள்ள கோயிலுக்கு சென்று தரிசனம் பெறலாம்.முடியாதவர்கள் கீழே உள்ள கோயிலில் தரிசனம் செய்யலாம்.



நாக கன்னியரின் தரிசனம் 


அன்பே சிவம்...நமச்சிவாய 


ஓதிமலை கோயில் முகப்புத் தோற்றம் 


மேலே உள்ள கோயிலுக்கு சென்ற நாம் அந்த வன வளத்தைக் கெடுக்க கூடாது. தூய்மையாய் வைத்திருக்க உதவவும்.கண்டிப்பாக இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்த தொடர்பதிவில் இன்னும் சில ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. ஓதிமலை முகப்பை கண்டீர்கள் அல்லவா? இதோ இன்னும் சற்று தூரத்தில் தான் முருகனின் அருளிடம்.








இதோ வந்து விட்டோம். அழகனின் இருப்பிடம்..அடைந்து விட்டோம். இந்த யாத்திரையில் நாம், பெற்றோருடன் கலந்து கொண்டோம். அனைவரும் முன்னரே திருக்கோயில் அடைந்து விட்டார்கள். நாம் சற்று மெதுவாக குடும்பத்தாருடன் சென்றோம்.ஆலயம் நுழைந்து,உள்ளே சென்றால் ஒரே ஆச்சர்யம்.அதுவும் ஆனந்தம்.முருகா..முத்துக்குமரா..இதற்குத் தானே நாங்கள் ஆசைப்பட்டோம் என்று மனமுருக கண்ட காட்சி.



மேலே காண்பது ஆன்ம தரிசனம் பெறுவதற்கான நுழைவாயில்.வேறென்ன வேண்டும்? இனி முருகன் அருள் பெற உள்ளோம். மேலே இருந்து கீழே எடுத்த




தகவல் பலகை
தலம்: ஓதிமலை.

மூலவர்: ஸ்ரீகுமார சுப்ரமண்யர் (ஐந்து திருமுகம், எட்டுத் திருக்கரங்கள்)

எங்கே இருக்கிறது?: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இருக்கிறது ஓதிமலை. கோவையில் இருந்து அன்னூருக்கு பேருந்து வசதி உண்டு. கோவை- அன்னூர் சுமார் 35 கி.மீ. தொலைவு. அன்னூர் ஜங்ஷன் சாலையில் இருந்து ஓதிமலை ரோடு துவங்கும். இங்கிருந்து சுமார் 16 கி.மீ. பயணித்தால் ஓதிமலை அடிவாரம் வரும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஓதிமலைக்கு சுமார் 26 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது?: கோவை தவிர மேட்டுப்பாளையம், திருப்பூர், அவினாசி ஆகிய ஊர்களில் இருந்தும் அன்னூருக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. அன்னூரில் இருந்து ஓதிமலைக்குப் பேருந்து வசதி உண்டு.

நடைதிறப்பு : நண்பகல் 11:00 மணி - மாலை 4:00 வரை (மதிய பூஜை நண்பகல் 12:00 மணி).

ஆலயம் திறந்திருக்கும் தினங்கள்: திங்கள், வெள்ளி, வளர்பிறை சஷ்டி, பௌர்ணமி மற்றும் அமாவாசை, கிருத்திகை ஆகிய தினங்களில் மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். விசேஷ தினங்கள் விதிவிலக்கு.

- முருகன் அருள் முன்னிற்க அடுத்த பதிவில் ஓதியப்பர் தரிசனம்

முந்தைய பதிவுகளுக்கு:-

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html



No comments:

Post a Comment