சித்தர்கள் அனைவரும் அஷ்டமகா சக்தி பெற்றவர்கள்.
அஷ்டமா சித்திகள் என்பது 1)அனிமா, 2)மஹிமா, 3)லகிமா, 4)கரிமா, 5)பிராப்தி, 6)பிரகாமியம், 7)ஈசத்துவம், 8)வசித்துவம். இந்த 8 சித்திகளும் ஒருங்கே பெற்றவர்களே சித்தமஹா புருஷர்கள். இவர்களின் சக்தி அளவிற்கடங்காதது.
அஷ்டமா சித்திகள் என்பது 1)அனிமா, 2)மஹிமா, 3)லகிமா, 4)கரிமா, 5)பிராப்தி, 6)பிரகாமியம், 7)ஈசத்துவம், 8)வசித்துவம். இந்த 8 சித்திகளும் ஒருங்கே பெற்றவர்களே சித்தமஹா புருஷர்கள். இவர்களின் சக்தி அளவிற்கடங்காதது.
இந்த 8 சித்திகளையும் தன்னுள் அடக்கி உலக மக்கள் ஷேமத்துக்காக தன்னையே அர்ப்பணித்து சித்தராக வாழூம் யோகி கருவூரார்.
கருவூரார் பிறப்பு: கருவூராரின் தாய் தந்தையர் ஊர் ஊராகச் சென்று கோவில்களில் உள்ள பஞ்சலோக சிலைகளை செப்பணிட்டுக் கொடுத்தும், புதிய சிலைகளை உருவாக்கிக் கொடுத்தும் தொழில் செய்து பிழைத்து வந்தனர். அதில் கிடைத்த வருவாய் கொண்டு அவர்கள் முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.சித்தர்கள் மேல் கொண்ட அன்பினாலும், பாசத்தாலும் இந்த தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைக்கு அவர்கள் ஞானப்பால் ஊட்டினார்கள். பிறகு இந்த மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்த அக்குழந்தை சித்த தன்மை அடைந்தது.
அக்குழந்தையேயோகி கருவூரார்!
கருவூரார் செம்பு, பித்தளை, உலோகங்களை கொண்டு செய்யும் கண்ணார் வகுப்பைச் சார்ந்தவர் என்றும், தேவதச்சன் விஸ்வகர்மாவின் மகனான மயன் குலத்தில் பிறந்தவர் என்றும், சித்தர் நூல்கள் இவரை பொற்கொல்லர் மரபினர் என்றும் கூறுகின்றனர். எது எப்படி ஆயினும் இவர் விஸ்வப்ராமணர் என்பது மட்டும் தெள்ளத்தெளிவான உண்மை.
பிறகு உலகின் அனைத்து திசைகளுக்கும் சென்று சிவாலயங்களில் எல்லாம் தங்கத்தால் ஆன சிவலிங்கங்களை உருவாக்கிக் கொடுத்து வந்தார். காசிக்குச் சென்று விஸ்வநாதர் ஆலயத்திலும் தங்க மயமான லிங்கத்தை உருவாக்கினார். சிவாலயங்களில் சிவலிங்கத்தை தங்கத்தால் உருவாக்குவதிலும், பாசுரம் பாடி பக்தி நெறி வளர்ப்பதுமாக கருவூரார் ஊரெங்கும் சித்தர்களுடன் வந்த வேளையில் , ஒரு நாள் ஒரு காகம் அவர் முன் வந்து நின்று ஓர் ஓலையை வைத்தது. கருவூரார் அந்த ஓலையை எடுத்து வாசித்த போது , “கருவூரா! உடனே தஞ்சைக்கு வந்துசேர்” என்று எழுதப்பட்டிருந்தது. போகர் முனிவர் தான் அந்த ஓலையை எழுதியிருந்தார் . அக்கணமே தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்றார் கருவூரார். கருவூராரை போகர் தஞ்சைக்கு வரவழைத்ததிற்கு காரணமிருந்தது. தஞ்சையை ஆண்ட சோழ மன்னனுக்கு(ராஜ ராஜ சோழர்) ஏற்பட்ட சங்கடத்தை போக்கவே அவரை வரவழைத்திருந்தார் போகர்.
சோழ மன்னன் கட்டிய பெரிய கோயில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயன்ற போது அஷ்ட பந்தனம் செய்ய முடியாமல் கட்டு அவிழ்ந்து கொண்டே இருந்தது. மன்னனுக்கு அதற்கான காரணம் புரியாது கண்ணீர் விட்டான். போக முனிவரும் இதனை கண்டு மனமிரங்கி அந்த குறையை போக்கவே கருவூராரை வரவழைத்தார்.
பிறகு அங்கே வந்த கருவூரார் சிவலிங்கத்தின் அருகே சென்று பார்த்தார். அங்கே ப்ரம்மராக்ஷஸி அஷ்ட பந்தனம் செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதன் மேல் காறி உமிழ்ந்தார். . அந்த கணமே கருவூராரின் வாய் எச்சில் தீச்ஜூவாலை வந்து ப்ரம்மராக்ஷஸியை கருக்கியது. அதன்பிறகு அஷ்ட பந்தனம் செய்து சிவலிங்கத்தை பிரதிஷ்டையும், அபிஷேகமும் செய்வித்தார். தடைபட்டிருந்த கும்பாபிஷேகமும், நல்ல படியாக முடிந்ததில் சோழ மன்னனுக்கு மகிழ்ச்சி தாளாது கருவூராரை பல விதத்திலும் பாராட்டி கெளரவித்தான்.
கருவூராரின் புகழ் நாடெங்கும் பரவியது. தஞ்சையில் ஈசனுக்கு கட்டிய பெருவுடையார் கோவில் இன்றளவிலும் ப்ரம்மாண்டமாய் உயர்ந்து நிற்பதற்கு காரணம் மூன்று சித்தர்கள்…
1) கருவூரார் சித்தர்,
2) சிவயோகி பொண்மணித்தட்டார் சித்தர்,
3) சோழன் குஞ்சரமல்லன் இராஐ ராஜ பெருந்தச்சன் .
இவரே இக்கோவிலின் தலைமை சிற்பியும் கூட. இவரின் வம்சாவளி பரம்பரையினரே டாக்டர் கணபதி ஸ்தபதியார் .இவர்கள் மூவரும் உயிர் கொடுத்து உருவாக்கியதே தஞ்சை பெரிய கோயில். பிறகு கருவூராரின் புகழ் பரவியதை கண்ட சோழ மன்னன் தான் கனவில் கண்ட நடராஜ சிவபெருமானின் உருவத்தை பொன்னால் செய்து தர வேண்டும் என்று சிற்பிகளை வரவழைத்து தங்கத்தை நிறுத்தி கொடுத்தான். ஆனால் சோழ மன்னன் நினைத்தது போல அத்தனை எளிதாக முடிந்து விடவில்லை. பொன் வார்ப்பு உடைந்து கொண்டே இருந்தது. இதனால் சிற்பிகளும், சோழ மன்னனும் நொந்து போனார்கள். சிற்பிகளோ சோழ மன்னன் கொடுத்த கெடு நெருங்கி கொண்டிருப்பதை எண்ணி பயத்தில் இருந்தனர்.
எப்படியும் சோழ மன்னன் தங்களை கழூவில் ஏற்றி விடுவான் என்று நினைத்த வேளையில் கருவூரார் அங்கு வந்து சேர்ந்தார். சிற்பிகளே கலக்கம் வேண்டாம். நீங்கள் அனைவரும் சற்று நேரம் வெளியே இருங்கள்! சிலையை நான் வார்த்து தருகிறேன் என்று கூறினார. அதன்பிறகு கருவூர்சித்தர் தங்கத்தை உருக்கி அதில் ஒரு துளி செந்தூரத்தை போட்டார். அதன் பிறகு அச்சில் வார்த்தார். வார்த்து எடுக்கப்பட்ட நடராஜர் சிலை அற்புதமாக அமைந்தது. சோழ மன்னன் அங்கு வந்து பார்த்து அதிசயித்து நின்றான்.
திடீரென அம்மன்னன் நான் பத்தரை மாற்றுத் தங்கம் கொடுத்திருந்தேன். ஆனால் நீங்கள் திருடி எடுத்து கொண்டு செம்பால் சிலையை செய்திருக்கிறீர்கள் என ஆவேசம் கொண்டவனாய் கர்ஜித்தான். அதனை கண்டு மிரண்டு போன சிற்பிகள் ஐயோ! இந்த சிலையை நாங்கள் வார்க்கவில்லை கருவூர்சித்தர் தான் செய்தார் என்று காட்டிக் கொடுத்தனர். அப்படியானால் அந்த கருவூராரை சிறையில் தள்ளுங்கள் என்று ஆணையிட்டான்.
அவ்வாறே சிறையில் அடைக்கப்பட்டார் கருவூரார். இச்செய்தியை கேள்விப்பட்ட திருமூலர் அங்கே வந்து சோழனை பார்த்து ” மன்னா ! தங்கத்தின் மீதுள்ள ஆசையின் காரணமாக நீ கருவூராரை அநியாயமாக சிறையில் தள்ளி விட்டாய். உனக்கு தங்கம் தானே வேண்டும், நீ கொடுத்த தங்கத்து எடைக்குச் சமமான வெள்ளியை கொண்டு வந்து உருக்கு” என்று கூறியதும் சோழனும் அவ்வாறே செய்தான். திருமூலர் அந்த வெள்ளியை உருக்கி அதில் ஓரு துளி செந்தூரத்தை போட்டதும் வெள்ளி பத்தரை மாற்று தங்கமாக மாறியது.
பின்பு திருமூலர் சோழனைப் பார்த்து ” மன்னா ! நீ கேட்ட தங்கம் வந்து விட்டது. எடுத்துக் கொள். இந்த செம்பு எந்த உலோகத்துடன் சேர்ந்தாலும் தங்கமாக மாறிவிடும். சோழனே! நீ ஆசை என்னும் பெரிய மாய வலைக்குள் வாழ்கிறாய். ஆசை போய்விட்டால் உண்மையான பரவெளியை உணர்ந்து விட்டாலும் எல்லாப் பொருளும் உனக்கு ஒரே பொருளாக தோன்றும் . அதுதான் ஆதியும் அந்தமும் இல்லாத முழுமுதற் பொருள். ” என்று கூறினார்.
அதன்பிறகு கருவூராரை விடுவித்து சோழன் முற்றும் துறந்த யோகியாக மாறினான்.
கருவூராரும் திருவரங்கத்து தாசியும்:
கருவூரார் ஒரு முறை திருவரங்கம் சென்ற போது அங்கிருந்த தாசி அவரது மேனி எழில் கண்டு தன்னுடைய இல்லத்துக்கு அவரை அழைத்தார். கருவூராரும் அந்த தாசியின் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு பின்னர் பெருமாளை தரிசித்து விட்டு வந்தார். பெருமாள் அவருக்கு தந்த இரத்தின பதக்கத்தை தாசிக்கு கொடுத்து விட்டு விடை பெற்றார். ஆனாலும் அந்த தாசியோ அவரை பிரிந்திருக்க மனமில்லாது மிகவும் மனம் வருந்தினார். "கவலைப்படாதே நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்” என்று கூறிவிட்டு சென்றார் கருவூரார். பிறகு தாசியானவள் கருவூரார் கொடுத்த பதக்கத்தை அணிந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது அங்கே வந்த கோயில் அதிகாரிகள் தாசியையும் , பதக்கத்தையும் பார்த்து விட்டு கையும் களவுமாக பிடித்தனர்.
” ஏனம்மா உனக்கு இந்த இரத்தின பதக்கம் எப்படி கிடைத்தது? என்று கேட்டனர். ”
இந்த பதக்கத்தை எனக்கு ஒரு வேதியர் கொடுத்தார் ” என்றாள் அவள் . ” அப்பட்டமான பொய் கூறுகிறாய். இது பெருமாளுடைய ரத்தினப்பதக்கம். அதை நீ திருடிக்கொண்டு வந்து விட்டு பொய் கூறுகிறாயா ? என்று அந்த அதிகாரிகள் அவளுக்கு திருட்டு பட்டம் சுமத்தி பல்வேறு கொடுமைகள் செய்தனர். அப்போது தான் தாசிக்கு கருவூரார் நினைவுக்கு வந்து அவரை மனதுக்குள் நினைத்து ப்ரார்த்திக்க அங்கே கருவூரார் பிரசன்னமானார்.
இதோ வந்து விட்டார் அந்த வேதியர் என்று தாசி சுட்டிக் காண்பித்து இவர் தான் எனக்கு அநத இரத்தின பதக்கத்தை அளித்தார் என்று சொன்னாள். பிறகு அதிகாரிகள் கருவூராரை பார்த்து ” உமக்கு எப்படி இந்த பதக்கம் கிடைத்தது ” என்று கேட்டனர். ” எனக்கு பெருமாள் தான் கொடுத்தார். வேண்டுமானால் பெருமாளிடமே கேட்டுக் கொள்ளுங்கள் ” என்று கருவூரார் ஆகாயத்தை காண்பிக்க ஆகாயத்தில் பெருமாள் தரிசனம் தந்து "யாமே அந்த இரத்தின பதக்கத்தை கருவூராருக்கு கொடுத்தோம் என்று கூறி மறைந்தார். பிறகு அதிகாரிகள் தான் செய்த தவறுக்கு கருவூராரிடம் மன்னிப்பு கேட்டனர்.
பிறகு மகாசித்தராகிய கருவூரார் கடைசியாக தாம் பிறந்த ஊராகிய கருவூருக்கு வந்து சேர்ந்தார். ஏற்கனவே ஊரிலிருந்த அனைத்து வேதியர் யாவரும் வீண்பகையும், பொறாமையும் கொண்டு நாளுக்கு நாள் பழி சுமத்தி மன்னரிடம் கொண்டு போய் நிறுத்தினர். ஆனால் மன்னர் கருவூராரை பற்றி முழுவதும் தெரிந்திருந்ததால் மற்ற வேதியர்கள் அனைவரையும் கோபம் கொண்டு விரட்டினார். பிறகு எப்படியாவது கருவூராரைக் கொன்று விடுவது என்று முடிவு செய்து அவர்கள் அனைவரும் ஒரு நாள் கத்தி, கம்புகளோடு புறப்பட்டனர். இவர்களின் கீழ்த்தரமான காரியங்களைப் பார்த்து , இறைவனின் சித்தம் என்று கோவிலின் கருவறையில் உள்ள சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ள, இறைவனும் அவரை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார். இன்றளவிலும் கருவூரில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றால் இவரது சமாதியை தரிசிக்கலாம். இங்கு அமர்ந்து சிறிது நேரம் தியானித்தால் நல்ல பலனளிப்பதாக அறியப்படுகின்றது.
கருவூரார் எழுதிய நூல்கள்- பாட்டு வடிவில்:
நில்லடா சந்திரனை மேலே கொண்டு நினைவாகச் சூரியனை கிழே தாக்கி நல்லடா அனுதினமும் மண்டலந் தான் நயமாக பழக்கமது செய்வா யப்பா வெல்லுவாய் வழிரெண்டு மொன்றாய்ப் போச்சு வேதாந்த மௌனத்தில் சொக்கி நில்லு தொல்லையறும் ஞானமென்ற வெளியைக் கண்டு தோய்ந்தபொரு ளிதுவென்று நில்லு நில்லே ! நில்லடா ஓர்மனதா யிருந்து கொண்டு நிராமயமாஞ் சொரூபமதி லடைவாய்க் காரு சொல்லடா சிவத்தினிட பெருமை யென்று சொக்கத்தே கன்னியுட மாயிக்கை தன்னில் கல்லாத சித்தெல்லாங் கற்றே னென்று கழறாதே கருமிகட்கு யிந்தப் போக்கு மெல்லடா வனுதினமுந் தியான மாக மேதினியில் சித்தெல்லா மாடுவாயே!!
கருவூரார் அட்டமாசித்து விளக்கம்:
பெண் மயக்கத்தில் சிக்காமல் இடக்கலையை(சந்திரன்) பிங்கலையில்(சூரியன்) தாக்கினால் சுழுமுனை திறக்கும், அப்போது மனதை சுழுமுனையில் வைத்து வந்தால், குண்டலி எழும். அக்குண்டலியை அணுதினமும் ஓர்மனதாய், மெளனமாக மேலே ஏற்றினால் சிவத்தின் பெருமையை அறியலாம்.அதன் பின் அஷ்டமாசித்தியும் அடையலாம், சித்தும் ஆடலாம். இதை சுயநலவாதிக்குச் சொல்லாதே என்று சித்தர் கருவூரார் கூறுகிறார்.
பெண் மயக்கத்தில் சிக்காமல் இடக்கலையை(சந்திரன்) பிங்கலையில்(சூரியன்) தாக்கினால் சுழுமுனை திறக்கும், அப்போது மனதை சுழுமுனையில் வைத்து வந்தால், குண்டலி எழும். அக்குண்டலியை அணுதினமும் ஓர்மனதாய், மெளனமாக மேலே ஏற்றினால் சிவத்தின் பெருமையை அறியலாம்.அதன் பின் அஷ்டமாசித்தியும் அடையலாம், சித்தும் ஆடலாம். இதை சுயநலவாதிக்குச் சொல்லாதே என்று சித்தர் கருவூரார் கூறுகிறார்.
திருச்சிற்றம்பலம் நமசிவாய போற்றி.
நன்றி,திருமதி,ரமாசங்கர்.
No comments:
Post a Comment