Saturday, October 14, 2017

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4)

அன்பார்ந்த மெய்யன்பர்களே.

நம் TUT தளத்தில் வாழ்வாங்கு வாழ என்ற  தொடர் பதிவு கேள்வி-பதில் வடிவில் நாம் தொடர்வது அனைவரும் அறிந்ததே.சென்ற பதிவில் மூன்று கேள்விகள் பார்த்தோம். மூன்றுமே முத்தாய்ப்பாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். பதிவின் இறுதியில் முந்தைய பதிவுகளின் சுட்டிகளை இணைத்துள்ளோம்.படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும். ஏற்கனவே படித்தவர்களும் ஒரு முறை படிக்கவும்.மீண்டும் மீண்டும் மனதுள் இந்த செய்திகளை அசை போட்டால் தான் வாழ்வாங்கு வாழ நம்மால் முடியும். முதல் கேள்வி ஆசையைப் பற்றி இருந்தது.ஆசையை சீரமைத்தல் ஒன்றே வாழ்வாங்கு வாழ வழி என்பது பதிலின் மூலம் தெள்ளத்தெளிவாக புரிந்து இருக்கும். அடுத்த கேள்வியில், நாம் வாழும் இந்த விஞ்ஞான யுகத்திலும் புராணம்,இதிகாசம் இதெல்லாம் தேவை தானா? என்ற கேள்வியில், வேதாந்தத்தில் இருந்து தான் விஞ்ஞானம் தோன்றியது என்று பளீர் பதில் கிடைத்தது. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நடத்தும் இராமாயண யுத்தம் தெரிகின்றதா? தெரிந்து,உணர்ந்து கொண்டாலே வாழ்வாங்கு வாழ்வது சாத்தியமே.

சரி.இந்த வார தொடருக்குள் செல்வோமா?


கேள்வி - உடல் எப்பொழுது மனமாக மாறுகிறது, உயிர் எப்பொழுது ஆன்மாவாக மாறுகிறது, அறிவு எப்பொழுது ஞானமாக மாறுகிறது என்பதை விளக்கவும்?

இராம் மனோகர் - உடல் என்பது ஸ்தூலம். மனம் என்பது சூக்குமம். மனதில் இரண்டு வகையான எண்ணங்கள் உண்டு. முதலாவது நான் என்கிற எண்ணம், இது பொதுவானது. இரண்டாவது பிற எண்ணங்கள். நமது இந்த பிற எண்ணங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். ஆகவே மாறிக் கொண்டேயிருக்கும் எண்ணங்களை நிறுத்தி வைத்தால் எஞ்சி நிற்பது நான் என்ற எண்ணம் மட்டுமே. அதையே நாம் கவனித்துக் கொண்டேயிருக்கும் பொழுது, அது உணர்வு மூலத்தில் (ஆன்மா) கலந்து விடும். பிறகு மனம் என்பதே இருக்காது. மனம் என்பதே இல்லை என்றால் நாம் முட்டாளாக ஆகி விடுவோம் என்று எண்ண வேண்டாம். எண்ணச் சுமைகளற்ற மனம் விழிப்பு நிலையில் பேரறிவோடு திகழும். இதுவே ஞானம். அந்நிலையில் மனதின் ஆன்ம ஒளி உடலிலும் பிரதிபலிக்கும். இந்த உடலானது பரம்பொருள் வாழும் ஆலயமாகத் திகழும். ஆ = ஆன்மா, லயம் ஒடுங்குதல். உடலே மனமாக, மனமே ஆன்மாவாகத் திகழும் ஜீவன் முக்தி நிலை இது.
கேள்வி - மூன்று கடமை(புத்திர, தார, லோக கடமை) செய்வதன் பலன் மற்றும் நோக்கம் யாது?

இராம் மனோகர் - அவரவர் கடமைகளை அவரவர் செய்ய வேண்டும். இதற்கு நோக்கம் கற்பிப்பதோ, பலனை எதிர்பார்ப்பதோ அறியாமையேயாகும். அதே சமயம் அறியாமையில் அழுந்திக் கிடக்கும் மனிதனை செம்மைப்படுத்துவதற்காக, நோக்கங்கள் கற்பிப்பதும், பலன்களைச் சொல்வதும் ஒரு யுக்தி அவ்வளவுதான். லோகம் என்றாலே அதில் நாமும், நம் மனைவி பிள்ளைகளும் அடக்கம்தானே. நாம் ஒன்றும் லோகத்திற்கு அப்பாற்பட்டவர்களில்லையே. மனைவி என்பவள் நம்மில் சரிபாதி, பிள்ளைகள் என்பது நமது பிரதிகள், லோகம் என்பது பரம்பொருள் ஆக இவை எல்லாமே ஒன்றுக்குள் ஒன்றாக இயைந்த நிலைகளே. புறக் கடமைகளைச் சரிவரச் செய்யாதவனால் அகத்தை அதாவது உள்ளத்தை தூய்மைபடுத்தவோ, செம்மைபடுத்தவோ முடியாது. எனவே கடமைகளைச் செய் என்று சொல்லப்பட்டுள்ளது.
கேள்வி - ஆண்டவன் அருள் பெறும் சூட்சுமம் எது, எப்படி என்று விளக்கவும்?
இராம் மனோகர் - அது மனம்தான். ஒன்றிக் கலந்து உயிர்கலப்பு பெறும் பொழுது உள்ளத்தில் அருள் நிரம்பும்

கேள்வி - குரு, சற்குரு, சத்குரு, ஞானகுரு, ஆசான், ஆச்சார்யர், ஆசிரியர், ஞானி, முனி, ரிஷி, சித்தர், மகான் வேறுபாடுகளை விளக்கவும்?

இராம் மனோகர் - குரு, சற்குரு, சத்குரு, ஞானகுரு, ஆசான், ஆச்சார்யர், ஆசிரியர், ஞானி, முனி, ரிஷி, சித்தர், மகான் வேறுபாடுகளை விளக்கவும்?
இராம் மனோகர் - இயற்கை நமக்கு குரு. சத் என்ற பதத்தை குரு என்ற பதத்தோடு இணைக்கும் பொழுது அதில் ற் என்ற எழுத்து இலக்கண ரீதியாக மாறுகிறது. அதாவது சத்குரு சற்குருவாக ஆகிறது. அவரே ஞானம் பெற்று, ஞானத்தை வழங்கவும் தகுதியுடையவராவதால் அவரே ஞானகுருவாகிறார். சத் என்றால் மெய்ப்பொருள். மெய்ப்பொருளை உணர்வது ஞானம். ஆக சத், சற், ஞானம் எல்லாம் ஒன்றுதான். ஆசிரியர் என்பவர் தான் கற்றவற்றை பிறருக்கு கற்பிப்பவர். ஆனால், ஆச்சாரியர் என்பவர் கற்ற வழியில் தான் நின்று வாழ்ந்து நிரூபித்துக் காட்டுபவர். ஞானம் பெற்றவர் ஞானி. சித்தம் தெளிந்து, சித்தாகிய அறிவைக் கொண்டு மெய்ப்பொருளை விளக்க முற்படுபவர் சித்தர். கிரியையாகிய செயல்களின் மூலம் இறைவனை அடைவதில் முனைப்புடன் செயல்படுபவர் முனிவர். தான் பெற்ற சித்தியின் வல்லமையால் பூமியில் மீண்டும் அவதரித்து மெய்ப்பொருள் உண்மைகளை நிலைநாட்டுபவர்கள் ரிஷிகள். ஞானத்தில் ஆரம்பதசையில் விளங்குபவர்கள் மகான்கள்.

கேள்வி - ஐயா சாகாக்கலை பற்றி பல்வேறு வகையான குழப்பங்கள் உள்ளன. தேகத்தை நீட்டித்து ஆயுளை அதிகரிக்கும் என்பது உண்மையா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள உதவுமாறு வேண்டுகிறேன். உண்மையில் வள்ளலார் இராமலிங்க அடிகள் சாகாத கல்வி என்பது உண்மையா? உங்கள் பதிலை நான் எதிர்பார்க்கிறேன்.
இராம் மனோகர் - எப்படி வாழ்வது ? என்பதே கேள்விக் குறியாக இருக்கும் நிலையில் சாவதைப் பற்றிய கேள்வி எதற்கு ? சாகாமல் இருப்பது பற்றியோ கவலைப்பட்டுவதால் என்ன பயன் ? ஒரு கலையைப் பற்றிப் பின் தொடர்ந்து, அறிந்து, உணர்ந்து கொள்ளாமல், அது பற்றி யூகத்தின் அடிப்படையில் பேசுவதினால்தான் குழப்பம் ஏற்படுகிறது. சாகாக் கலை என்பது வாழ்நாளை நீட்டித்துக் கொள்வது அல்ல. சாகாக் கலை என்பது முதுமையினால் மரணம் அடையாமல், யோக முயற்சியின் மூலம் தன் உயிரை தன் இச்சைப்படி தேகத்தில் இருந்து பிரித்து எடுத்துச் சென்று சூக்கும உலகத்தில் நிஷ்டை கூடி நிற்பது. அதுவே மரணமிலாப் பெரு வாழ்வு எனப்பட்டும். இது எல்லா சித்திகளிலும் உயர்ந்த சித்தி. முக்தி என்பது பிறப்பற்ற நிலை.

கேள்வி - மனமும், ஆன்மாவும் எந்த நிலையிக்கு பின் செயல் இழந்து இருக்கும் என்பதை விளக்கவும்

இராம் மனோகர் - ஆன்மா செயல் புரிவதுமில்லை, செயலிழப்பதுமில்லை. அது எப்பொழுதும் தன் நிலையில் நிலைத்து இருப்பது. மனம் ஆன்மாவை நெருங்கும் அளவு தன் ஆட்டத்தை குறைத்துக் கொண்டே வரும்.

கேள்வி -உடல், மனம், அறிவு மூன்றும் நலமாக இருந்தால்தான் உயிர் நலமாக, ஆனந்தமாக, நீண்ட நாள் இந்த சரீரத்தினுள் நிலைத்திருக்கும் என்று சொன்னவுடன், இவற்றை நலமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் ? 

இராம் மனோகர் - உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணங்கள் இவற்றில் பண்பாடு காப்பதுதான் உடல், மனம், அறிவு இவற்றின் நலம் காக்க அடிப்படையான விஷயங்கள் என்பார் என் குரு வேதாத்திரி அவர்கள். பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்லும் பொழுது...''யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு।
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா॥'' என்பார்.
அதாவது உணவு முறையில் ஒழுங்கு, விளையாட்டு, உடற்பயிற்சி, செய்யும் செயல்களில் ஒழுங்கு, நடைப் பயிற்சி, உறக்கத்தில் ஒழுங்கு, விழிப்பிலும் ஒழுங்கு இப்படி இவற்றிலெல்லாம் ஒருவன் ஒழுங்கைக் கடைபிடித்தால் அவன் உடல் நலம் உடையவனாக, யோகத்தில் வென்று துயரற்றவனாக ஆகி விடுகிறான் என்பது பொருள்.

உணவில் கட்டுப்பாடு, உணவின் தரம், அளவு, இடைவெளி இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். வயிறு முட்ட உண்பது ஆரோக்யத்திற்கு நல்லதல்ல. வயிற்றில் காலி இடம் இருந்தால்தான் உணவு நன்கு ஜீரணமாவதற்கு அசைந்து கொடுக்க முடியும். உணவுக் கட்டுப்பாட்டால் உடல் நலமும், உடல் நலத்தால் மன நலமும், மனநலத்தால் அறிவு நலமும், இம்மூன்றின் நலத்தால் உயிர் நலமும் மேலோங்குகிறது என்பது கோட்பாடு. உணவு உண்டால் மட்டும் போதுமா ? அது நன்கு ஜீரணமாகி நம் உடலில் சத்தாக மாறுவதற்கு நாம் உழைக்கவும் வேண்டும். இன்றைய நடைமுறை வாழ்வில் உடல் உழைப்பு என்பது குறைந்து விட்டது. பேன் போடுவதற்கு கூட ரிமோட் வந்து விட்டது. நடை என்பதே இல்லாமல் போய் விட்டது. ஒன்று உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறோம் அல்லது படுத்திருக்கிறோம். ''விஹாரம்'' என்றால் நடப்பது என்றும் பொருள் உண்டு. நடைப்பயிற்சி அவசியம் என்கிறார் கிருஷ்ணர். இன்றைய மருத்துவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கீதையில் கண்ணன் சொல்லி விட்டார்.

அது போலவே அவரவர்க்கு அமைந்த தொழிலை உடல் நலத்திற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். அடுத்தபடியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தூக்கம் ஆகும். இன்றைய நடைமுறை வாழ்வில் சரியாகத் தூங்குபவர்கள் ஒருவரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பகல் முழுவதும் புரிகின்ற செயல்களால் இழந்த செல்களை உயிர்ப்பித்து, உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கு தூக்கம் மிகமிக அவசியமானதாகும். இரவில்தான் தூங்க வேண்டும். அதுதான் இயற்கையான தூக்கமாகும். பகலில் தூங்குவது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும். உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணங்கள் இவற்றில் அளவும், நெறிமுறையும் கடைபிடித்தால் உடல் நலம் சிறக்கும்.

மனம் என்பது உடலை விட சூக்குமமானது(நுட்பம்). எனவே மனநலம் காப்பதும் நுட்பமான செயலாகவே அமைகிறது. மனநலம் காப்பது என்றால் என்ன ? மன அமைதியை பாதிக்கும் உணர்ச்சிகளால் பாதிப்பு அடையாமல் இருப்பதுதான் மனநலம் காப்பது. துக்கம், கவலை, கோபம், அச்சம், வெறுப்பு இவையனைத்துமே மன அமைதியை சீர்குலைக்கும் உணர்ச்சிகளே. ஆனால், மனிதன் தன் வாழ்க்கை போராட்டங்களுக்கு இடையே இந்த உணர்ச்சிகளைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறதே ? என்ன செய்வது ? நம்முடைய ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளைத் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கின்றன ? பிறகு எப்படி நாம் உணர்ச்சிகள் மனதை பாதிக்காமல் செய்ய முடியும் ? உணர்ச்சிகள் நம் மனதை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாம் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரும் வல்லமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நமது தீய உணர்ச்சிகளைத் தூண்டுவரிடம், அவரது தீய உணர்ச்சிகளைத் தூண்டாத வண்ணம் நம் எண்ணங்களை வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது சமரசப் பேச்சு வார்த்தை என்று சொல்லலாம்.

அப்படி நம்மால் செய்ய முடியாத பட்சத்தில் உணர்ச்சிகளால் எழும் எண்ணங்களை நமக்கு நெருக்கமானவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் பொழுது அந்த உணர்ச்சியின் வேகம் அடங்கி விடும். இந்த இரண்டுமே முடியவில்லை. என்ன செய்வது ? அதற்கும் ஒரு வழி உள்ளது அது என்னவென்றால் அந்த எண்ணங்களைச் செயலிழக்கச் செய்வதுதான். அதாவது எண்ணத்தை வேறு செயலுக்கு திருப்பி விட வேண்டும். இப்படிப்பட நிலையில்தான் பக்தி யோகம் சிறந்ததாக இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவனிடம் நம் எண்ணங்களை வெளிப்படுத்தி விட்டு, பாரத்தை தூக்கி அவன் மேல் வைத்து விடுவது ஒரு யுக்தி. இந்த நான்கு வழிகளும்தான் மனநலத்தை காப்பதற்கான வழிகளாகும். இனி அறிவு. அறிவைக் கெடுக்கும் விஷயங்கள் மூன்று. அவை அறியாமை, சந்தேகம், தவறாகப் புரிந்து கொள்ளுதல் என்கிற மூன்றும்தான். இதை சரி செய்வதற்கு சான்றோர் இணக்கம் மட்டுமே ஒரே வழி. சான்றோரின் நூல்களைப் படிப்பது, அவர்கள் செல்வதைக் கேட்பது, அதன்படி நடப்பது இந்த மூன்றும்தான் வழி.

இவ்வகையில் உடல், மனம், அறிவு நலங்களைக் காத்து, உயிரை ஆனந்தத்தில் திளைத்திருக்கச் செய்பவனிடத்தில் உயிர் நீண்ட நாள் நிலைத்திருப்பதோடு, வீடு பேறாகிய மோட்சத்தையும் பெற்றுத் தரும்.


மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

நன்றி -திரு.ராம் மனோகர்

முந்தைய பதிவுகளுக்கு :-

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌