Subscribe

BREAKING NEWS

31 May 2018

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!


திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!

கிரிவலம் என்று சொன்னாலே அது திருஅண்ணாமலை தான். திருஅண்ணாமலையோடு தற்போது பல மலைகளிலும் கிரிவலம் நடைபெற்று வருகின்றது. திருக்கழுக்குன்றம், திருப்பரங்குன்றம்,பர்வதமலை,பழனி மலை என்று. இவற்றுள் திருக்கழுக்குன்றம், பழனி மலைகளில் கிரிவலம் செல்ல குருவருள் நம்மை வழி நடத்தியமை நாம் செய்த புண்ணியமே.

அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். கிரி என்றால் மலை, வலம் என்றால் வலம் வருதல்,சுற்றி வருதல், அதாவது மலையை சுற்றி வருதல் என்று பொருள். முன்பெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், கிரிவலம் செல்வது என்றாலே சாமியார்களும், ஆன்மிக அருளாளர்களும் மட்டுமே கிரிவலம் சென்று கொண்டு இருந்தார்கள். காலப் போக்கில் சில முக்கிய பிரபலங்கள்கிரிவலம் செல்ல ஆரம்பித்தார்கள். தற்போது அனைவரும் கிரிவலம் செல்லும் அளவிற்கு நாம் கண்டு வருகின்றோம். திருஅண்ணாமலையைப் பொறுத்த வரை, எப்போதும் யாராவது கிரிவலம் சென்று கொண்டே இருப்பார்கள்.

நமக்கு திருஅண்ணாமலை தொடர்பு பற்றி பார்த்தால், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பே
திருஅண்ணாமலை கிரிவலம் செல்ல பலமுறை முயன்றோம். ஒவ்வொரு முறையும் வேறொரு பணியில் தள்ளப்பட்டோம்.பின் கூடுவாஞ்சேரி வந்த பின்னரும் பல முறை முயற்சித்தோம். இந்த பல முயற்சிகளும் துணை தேடி,வழிகாட்டி தேடி என்றே சென்றது. பின்னொரு நாளில் சுமார் 8 7 மணி அளவில் கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி சென்று, உச்சி வெயிலில் கிரிவலம் சென்று கால் பாதம் வெயிலில் நனைந்து..அப்ப்பா..இன்னும் அந்த முதல் கிரிவலம் மனதுள் உள்ளது.அதன் பின்னர் சென்ற ஓராண்டுக்கும் மேலாக பௌர்ணமி தோறும் கிரிவலம் சென்று வருகின்றோம். முதல் முறை ஆரம்பிக்க தான் கடினமாக இருந்தது, இதோ. அவன் அருளால் மாதந்தோறும் அவன் தாள் வணங்கி சென்று வருகின்றோம். பௌர்ணமி செல்ல இயலாது போனால்,வேறொரு விடுமுறை நாள் பார்த்து எப்படியாவது கருணையாம் அருணையை தரிசித்து வருகின்றோம்.

அது போன்ற தரிசனத்தை இங்கே தருகின்றோம். வாருங்கள் கிரிவலம் செல்வோம்.

எப்போதும் கிரிவலம் கோயிலின் ராஜகோபுரத்தில் இருந்து தான் ஆரம்பம் செய்வோம் .சில சமயங்களில் நாம் தங்கும் இடம் பொறுத்து, குபேரலிங்கம்,வருண லிங்க கிரிவலம் என்று நாம் செய்துள்ளோம்.இப்போதும் அப்படி தான் ஆரம்பிக்க உள்ளோம்.

திருஅண்ணாமலைக்குள் நுழைவதற்கு 9 வழிகள் உள்ளன. திருஅண்ணாமலையில் சிவபெருமானே மலையாக வீற்று இருப்பதால் அவரை சுற்றி கிரிவலம் வருவது நடைமுறையில் உள்ளது. இந்த கிரிவல பாதை மொத்த தூரம் 9 மைல்கள் ஆகும். திருஅண்ணாமலையில் ஈசனின் பாதம் 9 இடங்களில் உள்ளது. கிரிவல பாதையில் 9 லிங்கங்கள் உள்ளன. 9 நந்திகள் உள்ளன. திருவண்ணாமலை கோவிலுக்குள் 9 கோபுரங்கள் அமைந்துள்ளன. இப்படி நவக்கிரகங்களான 9 என்ற அமைப்புக்கும், திருஅண்ணாமலையில் உள்ள முக்கிய விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

திருஅண்ணாமலையில் நவக்கிரகங்கள் மாற்றப்பட்டதற்கு இவைதான் உதாரணமாகும். திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நேரம் சரியில்லை. அதற்கு பரிகாரம் காண வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கிரிவலம் மேற்கொள்ள வருகிறார்கள். நவக்கிரகங்களை மாற்றி எப்படி இந்த உலகுக்கு இடைக்காடர் நன்மையை உருவாக்கினாரோ அதுபோல கிரிவலம் வரும் ஒவ்வொருவரின் கிரக தோஷங்களையும் இடைக்காடர் நீக்கி, நல்ல பலன்களை அருள்வதாக ஐதீகமாகும்.

கிரிவலம் வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து முக்தி பெற முடியும் என்பதற்கு அடித்தளம் அமைத்ததே இடைக்காடர்தான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர் இன்னமும் திருவண்ணாமலை தலத்துள் ஒளி சமாதியாக இருந்து அருள்பாலிக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல. இடைக்காடரின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாகப் பெறுகிறார்களோ அவர்களுக்கு திருவண்ணாமலை தலத்துக்கு சென்ற உண்மையான பலன்கள் கிடைக்கும்.



சித்தர் இடைக்காடர் திருவருளோடு ராஜராஜேஸ்வரி அம்மனிடம் வேண்டுதல் சமர்ப்பித்து கிரிவலம் தொடங்கினோம். தரிசித்த முதல் லிங்கம் வருண லிங்கம். ஜலதோஷம், சிறுநீரக வியாதி,சக்கரை வியாதி தீர இவரை வழிபடுதல் நன்று,



மேற்கு திசையில் அமைந்திருப்பது வருணலிங்கம். கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளது வருண தீர்த்தம். இந்த திசையின் அதிபதி சனி. வருணலிங்கத்தை வழிபட்டால் பொருளும் புகழும் நிறைந்த வாழ்க்கை உண்டாகும். மேலும் தீராத நோய்களில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.


அடுத்து நாம் மனதுள் சிவ மந்திரங்கள் ஓதி, கிரிவலம் தொடர்ந்து கொண்டே இருந்தோம். நாம் ஆதி அண்ணாமலை என்றும் அடி அண்ணாமலை தாண்டி செல்ல வேண்டும். அப்போது நமக்கு மாணிக்கவாசகர் தரிசனம் பெறலாம். இதோ.. மாணிக்கவாசகர் திருக்கோயில்.



கிரிவலம் செல்லும் போது, கட்டாயம் இங்கே சென்று தரிசனம் பெறுங்கள். சிவபெருமான் திருவடி தீட்சை பெற்ற, மாணிக்கவாசகரின் திருவடி பட்ட இடம், திருவெம்பாவை திருவாய் மலர்ந்து அருளிய இடம். இறை அதிர்வில் நம் மனம் ஒடுங்கும் இடம். ஆனால் கிரிவலம் செல்லும் யாரும் இங்கே செல்ல மாட்டார்கள். நேரமின்மை, போதிய தெளிவு இல்லாமை  என்பது போன்ற காரணங்கள் சொல்வார்கள்.

அடுத்த  தரிசனம் வாயு லிங்க தரிசனம்.




வாயுமூலை எனப்படும் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதால், வாயுலிங்கம் என திருநாமம் கொண்டுள்ளார் ஐயன். இந்த திசைக்கு அதிபதி கேது. வாயுலிங்கத்தை தரிசித்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பொறாமை, கண் திருஷ்டி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

அடுத்து நம்மை ஈர்ப்பவர் குபேரர். இதோ குபேர லிங்கம் நோக்கி நடையைத் தொடர்கின்றோம். அதற்கு முன்பாக 18 சித்தர்கள் தரிசனம் பெற பதினெட்டு சித்தர்கள் குடில் சென்றோம். இந்த குடில் அண்மையில் ஏற்பட்டது போல் தெரிகின்றது.



இந்த குடில் பற்றிய போதிய செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை. திருஅண்ணாமலையில் முதலில் அஷ்ட லிங்கங்கள் மட்டுமே இருந்தது. பின்னர் புதிது புதிதாக ஆன்மிக வியாபார ஆசிரமங்கள் பெருகி விட்டது, நாம் தான் பார்த்து நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற புதிய இடங்களுக்கு செல்லுங்கள். ஆனால் ஏமாந்து விடாதீர்கள். இங்கிருந்து சற்று தொலைவில் குபேர லிங்க தரிசனம் பெற்றோம்.




குபேரனுக்கு உரிய வடக்கு திசையில் அமைந்திருப்பதால் சிவனார் குபேரலிங்கம் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இந்த திசைக்கு அதிபதி குரு. குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல்வம் பெருகும். மனதில் சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.

அடுத்து நாம் இடுக்குப்பிள்ளையார் கோயிலும், பஞ்சமுக தரிசனமும் பெறலாம்.




அடுத்து நாம் தரிசிக்க இருப்பது ஈசான்ய லிங்கம். வடகிழக்கு திசையில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தம் ஈசான்ய லிங்கம் ஆகும். இந்தக் கோயில் தரைமட்டத்தில் இருந்து சற்று கீழே அமைந்திருக்கும். இந்த திசையின் அதிபதி புதன். இங்கு ஐயனை வழிபட்டால், மனம் ஒருமைப்படும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.



திருக்கோயிலின் ராஜ கோபுரத்தில் இருந்து நாம் ஆரம்பித்தால் இந்த ஈசான்ய லிங்கத்தோடு நம் கிரிவலம் நிறைவு பெற்று, அடுத்த திருக்கோயில் தரிசனத்திற்கு சென்று நாம் கிரிவலம் நிறைவு செய்ய வேண்டும் நாம் ஆரம்பித்தது வருணலிங்கம் முன்பாக உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தான். நாம் இப்போது நான்கு லிங்க தரிசனம் பெற்றுளாம். இன்னும் நான்கு லிங்கங்கள் தரிசனம் பெற வேண்டும். இப்போது நாம் திருக்கோயில் சென்று கொண்டு இருக்கின்றோம்.

பௌர்ணமி கிரிவலத்தில் இரவின் மடியில், நிலவின் ஒளியில் கோபுர தரிசனம் பெற்று வருகின்றோம்.இது போன்ற பகல் நேர கிரிவலத்தில் கோபுர தரிசனம் இன்னும் நம்மை ஆழப்படுத்தும்.



இதோ தூரத்தில் ராஜகோபுரம் தெரிகின்றது அல்லவா? அருணாச்சல சிவ..அருணாச்சல சிவ..அருணாச்சல சிவ..அருணாசலா..என்று மனத்தில் பாடிக் கொண்டே நடையைத் தொடர்ந்தோம்.




கோபுரத்தின் வழியே கோபுர தரிசனம்.







கிரிவலப் பாதையில் இருந்து நின்று அண்ணாமலையாரை தொழுது, திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! உன்னாமுலையம்மைக்கு அரோகரா! என்று கூறி அங்கிருந்து மீண்டும் கிரிவலம் தொடர்ந்தோம். அடுத்து நாம் இந்திர லிங்கம் செல்ல இருக்கின்றோம்.

கிரிவலப்பாதையில் முதலில் நாம் தரிசிப்பது இந்திரலிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அதிபதி சூரியனும் சுக்கிரனும் ஆவர். இந்திரலிங்கத்தை தரிசித்து வழிபட்டால், லக்ஷ்மி கடாட்சமும், புகழுடன் கூடிய வாழ்க்கையும் அமையும்.





திருக்கோயிலில் இருந்து மிக மிக அருகில் இருப்பவர் இவர். இந்திர லிங்கம் தாண்டி நாம் அதிக தூரம் செல்ல செல்ல நமக்கு அக்னி லிங்கம் காட்சி தருகின்றார்.

திருவண்ணாமலை - செங்கம் சாலையில் தாமரைக் குளத்துக்கு அருகில் தென் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது அக்னி லிங்கம். இந்த திசைக்கு அதிபதி சந்திரன். அக்னி லிங்கத்தை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை, மனச் சஞ்சலம் போன்றவைகள் நீங்குவதுடன் நோயற்ற வாழ்க்கையும் அமையும்.







அக்னி லிங்கம் தாண்டி நாம் சென்றால் அந்த கருணையே வடிவான ரமணாஸ்ரமம், தங்கக்கை மகான் சேஷாத்திரி ஆஸ்ரமம் கண்டு செல்லலாம் .இவற்றையெல்லாம் பௌர்ணமி கிரிவலத்தில் சென்று தரிசிக்க இயலாது. ஒரே நாளிலும் முடியாது. பௌர்ணமி தவிர்த்த மற்ற நாட்களில் இது போன்ற அருள் நிலையங்களை தரிசியுங்கள்.



இவ்வளவு நாட்களாக கிரிவலம் செல்கின்றோம். மூக்குப்பொடி சித்தர் பற்றி கேள்வியுற்று உள்ளோம். ஆனால் தரிசனம் பெற்றதில்லையே என்ற ஏக்கம் அந்நாளில் தீர்ந்தது. சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் மூக்குப்பொடி சித்தர் தரிசனம் பெற்றோம். நீங்களும் அவரிடம் அருள் பெற்றுக் கொள்ளுங்கள்.







அடுத்து இங்கிருந்து தொடர்ந்தால் நாம் தரிசிப்பது எம லிங்கம். கிரிவலப் பாதையில் 3-வதாக நாம் தரிசிப்பது யமலிங்கம். கோயிலுக்கு அருகிலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. யமலிங்கம் அமைந்திருக்கும் தென் திசைக்கு அதிபதி செவ்வாய். இங்கு ஐயனை தரிசித்து வழிபட்டால், கடன் தொல்லைகள் விலகும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.





எம லிங்கம் தாண்டி நாம் சென்றால் கிரிவலப்பாதை ஆரம்பம் அட்டகாசமாக இருக்கும். திருஅண்ணமலை கோயிலில் இருந்து, எமலிங்க பாதை வரை தார்ச்சாலை, வாகன பயணம் என்று இருக்கும். எம லிங்கம் தாண்டி வலப்புற பாதை அடைந்தால் வாகன தொந்திரவு அதிகளவில் இருக்காது, ஏகாந்தமாக நடை, சிவத்தோடு பேசிக்கொண்டு, பாடிக் கொண்டு, சாதுக்கள் ஆசி பெற்றுக் கொண்டே செல்லலாம், அடுத்த தரிசனம் நிருதி லிங்கம்.




கிரிவலப் பாதையில் 4-வதாக நாம் தரிசிப்பது நிருதி லிங்கம். நிருதிலிங்கத்துக்கு முன்பு உள்ள நந்திதேவருக்கு அருகில் இருந்து மலையைப் பார்க்கும்போது, மலையில் சுயம்புவாகத் தோன்றியதுபோல் அமைந்திருக்கும் நந்தியை தரிசிக்கலாம். நிருதிலிங்கம் அமைந்திருக்கும் திசை நிருதி திசை எனப்படும் தென் மேற்கு திசையாகும். இந்த திசைக்கு அதிபதி ராகு. நிருதிலிங்கத்தை வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


அடுத்து நாம் நேர் அண்ணாமலை தரிசித்து, ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் அடைய உள்ளோம்.இங்கிருந்து தான் நாம் கிரிவலம் ஆரம்பித்தோம்.




திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!



திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!







திருநேர் அண்ணாமலை தரிசனம் எப்படி இருந்தது? இதோ. இன்னும் சற்று தூரத்தில் நாம் கிரிவலம் ஆரம்பித்த ராஜராஜேஸ்வரி கோயிலை அடைய உள்ளோம். காலையில் சுமார் 6 மணி  ஆரம்பித்த கிரிவலம் சுமார் 11 மணி அளவில் நிறைவு பெற்றது. கிரிவலம் எப்படி செய்ய வேண்டும்? கற்பூரம் ஏற்றலாமா? கடைபிடிக்க வேண்டிய நியதிகள் என்ன என்பது போன்ற செய்திகளை தொகுத்து இனிவரும் பதிவுகளில் காண்போம்.

மீள் பதிவாக:-

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.com/2017/11/2.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.com/2017/11/2.html 



No comments:

Post a Comment