Subscribe

BREAKING NEWS

16 January 2019

பாடல் பெற்ற தலங்கள் (9) - வரம் தரும் வயலூர் முருகன்

இறை அன்பர்களே...

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்,திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்,திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்,உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் என பார்த்தோம். இதில் அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார். கும்பாபிஷேக அழைப்பிதழ் நமக்கு கிடைத்து விட்டது.  விரைவில் அறிவிப்பு செய்கின்றோம். பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் சைவத் தலங்களாக பார்த்து வருகின்றோம். சைவம்,வைணவ பாகுபாடு நமக்கேது? இந்த தொடர்பதிவிலேயே வைணவத்தலங்கள், திருப்புகழ் தலங்கள் என தொடர விரும்புகின்றோம்.

அந்த வரிசையில் இன்று வரம் தரும் வயலூர் முருகன் அருள் பற்ற விழைகின்றோம்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். அந்த வரிசையில் வயலூர் முருகன் குன்றில் இருப்பார் என்று கற்பனை செய்து கொண்டு சென்றோம். ஆனால் நம் கற்பனை தவறானது என்று அங்கு சென்று கண்டோம்.திருச்சியில் இருந்து மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவில் இருக்கின்றது வயலூர். வயலூருக்கு செல்லும் பாதை முழுதும் வயல் சூழ்ந்து காணப்படுகின்றது.அதனால் தான் வயலூர் என்று பெயர் உருவானதோ? என்று நினைக்க தோன்றுகின்றது.




இக்கோயில் முருகப் பெருமானுக்காகச் சிறப்புற்றதாகும். கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது 

இந்த திருத்தலத்தின்பெருமை ஞானம் விளையும் திருத்தலம் என்பது. ஆ என்ற காமதேனுவும், சோமன் வழிபட்ட சோமரசம்பேட்டையும் சூழ இருக்கிறது வயலூர். இங்கு கந்தன் தனது வேலால் குத்தி ஒரு திருக்குளத்தை உருவாக்கி தந்தையாகிய சிவபெருமானை வழிபட்டதாக கூறுகிறது புராணம். அக்னித்தீர்த்தம் என்று அழைக்கப்படும் அந்த தீர்த்தம் அக்னித்தேவனும் வழிபட்டதால் ஆலயத்தின் சிவபெருமான் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவி முன்னிலை நாயகி என்று அழைக்கப்படுகிறார்.



உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது.. வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு 3 கிளைகளுடன் காட்சி தந்ததாம் ஒரு கரும்பு. அதனை ஒடித்தபோது ஒரு கரும்பில் இருந்து ரத்தம் கொட்ட பதறிப்போனான் மன்னன். உடனடியாக அந்த இடத்தைத் தோண்ட அங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு கோயில் கட்ட நினைத்த மன்னனின் ஆசை ஈடேறவில்லை. அதன் பின்னர் சிறு கோயிலாக எழுந்தது இந்த ஆலயம்


'அருளில் சீர் பொய்யாத கணபதி
திருவக் கீசன் வாழும் வயலியில்
அழகு கோயில் மீதில் மருவிய பெருமானே '

இந்த பாடலின் அழகும் அருணகிரி நாதரின் வாக்கும் இனிமையே இங்குள்ள முருகனைப்போல. வயலூரின் சிறப்பே, அருணகிரிநாதருக்கு முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். சும்மா இரு. சொல்லற என்று சொல்லி, வா என் புகழ் பாடு என அருள் சுரந்து அருணகிரிநாதருக்கு முன்மொழிந்து தந்த இடம் வயலூர் என்கிறது இந்த கோயிலின் தல வரலாறு. அவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர்.

அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7 ஆவது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறான் இந்த வயலூர் முருகன். அதனால் கோயிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே..பிள்ளையாரப்பாவுக்கு இல்லாத முதல் வணக்கமா? இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி பொய்யாக்கணபதியாக பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சந்நிதிக்கு அருகே அருணகிரி நாதருக்கு பீடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.


தலச் சிறப்புகள்

  • தம்மை நாடி வரும் பக்தர்களின் வேண்டுகோட்களை மறவாமல் நிறைவேற்றி அவர்தம் துயரம் போக்குவதால் ஆதிநாதர் என்னும் மூலவரை மறப்பிலி நாதர் எனவும் வழங்குகின்றனர். அக்னி வழிபட்டமையால், ஆதிநாதர் அக்னீஸ்வரன் என்றும் வழங்கலானார்.
  • வடமுகம் நோக்கி அமர்ந்திருக்கும் ஆதிநாயகி இத்தலத்தின் தனிச்சிறப்பு.
  • பொய்யான வாழ்வின் மாயைகளை அகற்றித் தம்மை நாடி வருபவருக்கு மெய்ஞானம் அருளும் காரணத்தால் இங்கு வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி எனத் துதிக்கின்றனர். இவரது கையில் உள்ள விளாங்கனி, பழத்தின் ஓடு போன்ற மனித உடல்சார்ந்த மாயைகளை நீக்குவதன் உருவகம் எனப் பொருள் கூறுவர்.
  • வயலூரை முத்தித் தலம் எனப் போற்றுவர்.
  • இங்கு தாண்டவக் கோலத்தில் இருப்பினும், உற்சவரின் காலடியில் முயலகன் உருவகம் கிடையாது. தில்லை அம்பல நடராசனைப் போலன்றி, ஆடிய பாதனார் இத்தலத்தில் அமைதியான தோற்றம் கொண்டு காணப்படுகிறார்.
  • தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பு.
  • இங்குள்ள சக்தி தீர்த்தம் முருகப் பெருமான் தமது வேலால் குத்தி உருவாக்கியது எனக் கூறுவர்.
  • அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட எம்பிரான் முருகப் பெருமான் வயலூருக்கு அவரை அழைத்து அதன் சிறப்புக்களைப் பாமாலையாகத் தொடுக்க வைத்தான்.
  • 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பக்திமானும் சொற்பொழிவாளருமான திருமுருக கிருபானந்த வாரியார், வயலூர் முருகனிடத்தே மாறா பக்தி பூண்டிருந்தார்.
  • திருமணத் தடைகளைப் போக்கும் தலமாக இதனைப் போற்றுகின்றனர்.


 திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், அவர் அடியெடுத்துக்கொடுக்க "முத்தைத்தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, "வயலூருக்கு வா!' என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். அப்போது, முருகன் அவருக்குக் காட்சி தரவில்லை. தான் ஏமாற்றமடைந்ததாக உணர்ந்தவர், "அசரீரி பொய்யோ?' என உரக்கக் கத்தினார். அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி "அசரீரி உண்மையே!' எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல முருக தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடினார். இவ்வாறு, நமக்கு திருப்புகழ் என்ற ஒப்பற்ற பாடல்கள் கிடைக்க அருள் செய்தவர் இங்குள்ள முருகன் ஆவார்.



வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.


தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.


திருமண பரிகார தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.



 முருகபக்தரான கிருபானந்த வாரியார், 1934ம் ஆண்டில், இக்கோயிலுக்கு வந்தார். அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார், அவருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார். இதில் மகிழ்ந்த வாரியார், ஐம்பது பைசாவை அவரிடம் காணிக்கை கொடுத்துச் சென்றார். அன்றிரவில் கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் சந்நியாசி வடிவில் தோன்றிய முருகன், "ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?' என்று கேட்டார். வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்தபோது, வாரியார் ஐம்பது பைசா கொடுத்ததை அறிந்தார். அவருக்கு அந்த காசை திருப்பி அனுப்பி விட்டார். அதன்பின், இங்கு வந்த வாரியார், நடந்ததை அறிந்து, கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

 எங்கும் நிறைந்த முருகப்பெருமான் வயலூர் தலத்தில் தமக்கு அருள் புரிந்தான் என்று தமிழ் கூறும் நல்லுலகு பூராவிலும் சென்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முழக்கி வந்தவர் வாரியார் சுவாமிகள் வயலூரைப் பற்றி தமிழ் மக்கள் அறியும் படி செய்தவர் வாரியார். நான் அன்றாடம் வழிபட்டு வரும் வயலூர் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி சொற்பொழிவை தொடங்குகிறேன் என்று முன்னுரை வழங்கிய பின்பே சொற்பொழிவை தொடங்குவார். அந்த அளவு இத்தலத்துக்கும் வாரியாருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு. இத் திருக்கோயில் பெருமளவு புகழ்பெற செய்ததற்கான அத்தனை பெருமையும் வாரியாருக்கே சாரும்.




"கைத்தல நிறைகனி" எனத்துவங்கும் பாடலை, இங்குள்ள பொய்யாக் கணபதியைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியதாகக் கூறுவர்.

இத்தலத்து முருகப் பெருமானைக் குறித்து அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல் ஒன்றினைக் கீழே காணலாம்:
திருவு ரூப நேராக அழக தான மாமாய திமிர மோக மானார்கள் கலைமூடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி செருகு மால னாசார வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு கனவி லாள்சு வாமீநின் மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத கழலு நீப வேல்வாகு மறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை சகச மான சாரீசெ யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான வரையில் வீசு தாள்மாயன் மருகோனே
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை வயலி மீது வாழ்தேவர் பெருமாளே.






திருவிழாக்கள் : வைகாசி விசாகப்பெருவிழா,கந்த சஷ்டி பெருவிழா,தைப்பூசம்,பங்குனி உத்திரம்

வைகாசி விசாகம் - 12 நாட்கள் -10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.

கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்) - 7 நாட்கள் - ஆயிரம் பக்தர்கள் கூடுவர்

பங்குனி உத்திரம் - 4 நாள் திருவிழா  - 25 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்

தைப் பூசம் - 3 நாள் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.



இதோ நம் தல அன்பர்களுக்காக கந்த சஷ்டியில் 6 நாள் நம் முருகப் பெருமான் அருளினை அப்படியே இங்கு பகிர்கின்றோம்.
























பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்ரமண்யனே வா இங்கு
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே 


என்று பாடிப்  பரவசம் பெற்று இருப்பீர்கள் என்று நாம் விரும்புகின்றோம்.

கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் இவர் ஆட்சிகொண்டு விடுகிறான். அந்த அனுபவம் பெற்றது பெரும் பேறு.

எப்படி செல்வது?
திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு,
மீள்பதிவாக :-


 பாடல் பெற்ற தலங்கள் (8) - கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே - https://tut-temple.blogspot.com/2018/12/8.html
 பாடல் பெற்ற தலங்கள் (7) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/11/7.html
பாடல் பெற்ற தலங்கள் (6) - கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார் அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - http://tut-temple.blogspot.com/2018/10/6.html
பாடல் பெற்ற தலங்கள் (5) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/09/5.html
பாடல் பெற்ற தலங்கள் (4) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/08/4.html
பாடல் பெற்ற தலங்கள் (3) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/07/3.html
பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/06/2.html
பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - http://tut-temple.blogspot.com/2018/05/1.html


No comments:

Post a Comment