Subscribe

BREAKING NEWS

08 September 2018

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (14)

அனைவருக்கும் வணக்கம்.

 ஒவ்வொரு மாதத்தையும் வாழ்வாங்கு வாழ தொடர் பதிவு இன்றி நாம் கடக்க இயலாது. வாழ்வாங்கு வாழ என்ற தொடர்பதிவு இன்று பதினான்காம் பதிவை எட்டி உள்ளது. இந்த தொடர்பதிவை தொடர்ந்து வாசித்து அதனை கருத்தில் கொள்பவர்கள் கண்டிப்பாக ஆன்மிகத்தில் புதிய நிலை தொடுவார்கள் என்பது உறுதி. ஆன்மிகத்தில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் புது நிலை அடைவார்கள். நாமும் இங்கேதான் உளியால் செதுக்கப்பட்டு வருகின்றோம்.


கேள்வி - ஐயா, என்ன தொழில் செய்தாலும் தடை, கால தாமதத் திருமணம், குழந்தை பாக்கியத் தடை என்று எங்கள் குடும்பத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அனைவருமே ஏதாவது ஒரு பிரச்சனையில் வருந்திக் கொண்டிருக்கிறோம். ஜோதிட ரீதியாக சில பரிகாரங்கள், ஹோமங்கள் செய்தும் கூட அதை நிலைதான் உள்ளது. தங்களால் எங்களுக்கு வழி காட்ட முடியுமா ?

இராம் மனோகர் - நீங்கள் சொல்கிற அனைத்து தடைகளையும் அனுபவித்தவன், அனுபவித்துக் கொண்டிருப்பவன் நான். ஜோதிடத்தில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால், ஒவ்வொரு ஜோதிடர்களும் ஒவ்வொரு விதமாகச் சொல்லி குழப்பி விட்டதால் நானும் தடுமாறிக் கொண்டுதான் இருந்தேன். பித்ரு தோசம், நாக தோசம், களத்திர தோசம், புத்திர தோசம், கேமதுருமா யோகம் போன்ற அவ யோகங்கள் இருந்தால் இது போன்றத் தடைகள் ஏற்படும் என்பது சித்தர்கள் வாக்கு. பித்ரு தோசம் இருந்தால் ராமேஷ்வரத்தில் சென்று கடலாடி, ஹோமங்கள் செய்து, அன்னதானம் முதலிய தானங்கள் செய்தால் விலகும் என்று சொல்வார்கள். இது போல ஒவ்வொரு தோசத்திற்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், ஒரு சிலருக்குதான் பரிகாரங்கள் பலனளிக்கிறதே தவிர, எல்லோருக்கும் பரிகாரங்கள் பலனளித்து விடும் என்று சொல்வதற்கில்லை.
இது போன்ற நிலையில் நமக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தித் தரும் வல்லமை நம் குல தெய்வத்திற்கு உண்டு. மேலும் அவரவர் கோத்திரம் அறிந்து, அந்த கோத்திரத்திற்கான ரிஷியை அறிந்து அவரை இடைவிடாமல் வழிபட்டு வருவதாலும் தோச நிவர்த்தி ஏற்படும். தோசமுள்ளவர்கள் குல தெய்வ வழிபாட்டை வாரம் ஒரு முறையாவது செய்து வர வேண்டும். தினமும் வீட்டில் அதிகாலை, மாலை ஆறு மணிக்கு விளக்கேற்றி குல தெய்வத்தை வழிபட வேண்டும். எந்த ஒரு காரியத்தைச் செய்ய நினைத்தாலும் குல தெய்வத்தை மனதால் வணங்கிய பிறகே செய்ய வேண்டும். குல தெய்வம் எத்தகையாதாக இருந்தாலும் சரி, அவ நம்பிக்கை கொள்ளாமல் பூஜை காரியங்களைச் செய்ய வேண்டும்.

பூஜை என்றால் அதிக பணம் செலவு செய்ய வேண்டுமே என்று கவலைப்பட வேண்டாம். விக்கிரகமோ, பீடமோ அவற்றிற்கு வலது புறம் நெய் விளக்கும், இடது புறம் இலுப்பை எண்ணெய் விளக்கும் ஏற்றி, சிறிது அவலோ, பொறியோ, கற்கண்டோ, பழமோ ஏதோ ஒன்றை வைத்து, இரண்டு வெற்றிலை பாக்கு வைத்து வழிபட்டால் போதும். அதுவும் முடியவில்லையா ! விளக்கேற்றி குல தெய்வத்தை நினைத்து ஒரு பத்து நிமிடம் தியானம் செய்து வந்தால் கூட போதும். உண்மையான நம்பிக்கையும், அன்பும்தான் முக்கியம். வாய்ப்பு வசதி இருப்பவர்கள் தினமும் இராகு காலத்தில் வீட்டில் விளக்கேற்றி வந்தால் சகல தோசங்களும், தடைகளும் விலகும். மனம் தளராமல், அவ நம்பிக்கை கொள்ளாமல் செய்து வர வேண்டும்.
இது போன்ற காரியங்களைச் செய்யும் பொழுது பல தடைகள் ஏற்படும். அது நம் தீ வினைகளின் தாக்கங்களேயாகும் என்பதை உணர்ந்து, அவற்றை உதாசீனப்படுத்தி விட்டு, காலம் தவறாமல், முனைப்புடனும், நம்பிக்கையுடனும் இவற்றைச் செய்து வர வேண்டும். வினைப் பயன்கள் நம்மை ஏதேனும் ஒரு ரூபத்தில் வேறு வழிக்குத் திருப்பி விடத் தூண்டும். ஆனால், அதை மீறி செயல்பட வேண்டும். மேலும் அவரவர் ஜென்ம நட்சத்திரம், திதிகளின் அதி தேவதைகளை குறிப்பிட்ட நாட்களில் வணங்கி வருவதும் சகல தோச நிவர்த்தி மார்க்கமாகும்.

1. அஸ்விணி நட்சத்திரக்காரர்கள் மாதா மாதம் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று சரஸ்வதியை வழிபடுவது மேன்மை தரும்.
2. பரணி நட்சத்திரக்காரர்கள் பூராட நட்சத்திரத்தன்று ராகு காலத்தில் துர்க்கையை வழிபட நன்மைகள் விளையும்.
3. கார்த்திகை - ஞாயிறு - திருவண்ணாமலை கிரிவலம்.
4. ரோஹிணி - அமாவாசை - பிரம்மன்.
5. மிருகசீரிடம் - திங்கள் அல்லது பௌர்ணமி - சந்திரன்.
6. திருவாதிரை - சதுர்த்தசி அல்லது மாத சிவராத்திரி - நடராஜர்.
7. புணர்பூசம் - நவமி - ஶ்ரீராமர்.
8. பூசம் - பௌர்ணமி - குரு(நவகிரகம்).
9. ஆயில்யம் - ராகு காலம் - ராகு, கேது.
10. மகம் - வெள்ளி - சுக்கிரன்.
11. பூரம் - வெள்ளி - மாரியம்மன்.
12. உத்திரம் - ஞாயிறு அல்லது அமாவாசை - சூரியன்.
13. ஹஸ்தம் - தினமும் ஐயப்பனை, ஶ்ரீசாஸ்தாவை வழிபட நன்மை.
14. சித்திரை - செவ்வாய் - அங்காரகன்.
15. சுவாதி - ராகு காலம் - ராகு.
16. விசாகம் - மாத கார்த்திகை - முருகன்.
17. அனுஷம் - வெள்ளி - ஶ்ரீரங்கநாதர்.
18. கேட்டை - மாத கேட்டை - அண்ணாமலையார் தரிசனம், கிரிவலம்.
19. மூலம் - ராகு காலம் - ராகு, கேது.
20. பூராடம் - ஐப்பசி, கார்த்திகை - திருவண்ணாமலை.
21. உத்திராடம் - சங்கடஹர சதுர்த்தி - விநாயகர்.
22. திருவோணம் - மாத திருவோணம் - பெருமாள் அல்லது திருப்பதி.
23. அவிட்டம் - சனிக் கிழமை - சனிபகவான்.
24. சதயம் - அமாவாசை - ஶ்ரீவாஞ்சியம்.
25. பூரட்டாதி - வியாழன் - சிவன்.
26. உத்திரட்டாதி - உத்திரட்டாதி -சிவன்.
27. ரேவதி - சனிக்கிழமை - சனிபகவான்.

மேற் குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த தெய்வங்களை, தேவதைகளை அவரவர்கள் ஊரில் உள்ள ஆலயங்களிலோ, பரிகாரத் தலங்களிலோ தினமோ, மாதம் ஒரு முறையோ, வருடம் ஒரு முறையோ வழிபட்டு வரத் தடைகள் விலகும். வீட்டில் அல்லது உள்ளூர் ஆலயங்களில் தவறாமல் அடிக்கடி வழிபாடு செய்து வர விரைவில் தோச நிவர்த்தி கிட்டும். இனி திதிகளைப் பார்ப்போம்.

1. வளர் பிறை பிரதமை - ராகு காலம் - துர்க்கை.
1. தேய் பிறை பிரதமை - அந்தத் திதியன்று சிவபெருமானை, குபேரனை வழிபட மேன்மை.
2. வளர் பிறை துவிதியை - அனுதினமும் - சிவன்.
2. தேய் பிறை துவிதியை - அனுதினமும் - சிவன் மற்றும் வாயு பகவான், வாயு லிங்கம்.
3. வளர் பிறை திருதியை - திங்கள் - சந்திரன்.
3. தேய் பிறை திருதியை - தினமும் சிவன் மற்றும் அக்னி பகவான், அக்கினி லிங்கம்.
4. வளர் பிறை சதுர்த்தி - சதுர்த்தி - விநாயகர்.
4. தேய் பிறை சதுர்த்தி - ராகு காலம் - ராகு, கேது.
5. வளர் பிறை பஞ்சமி - அனுதினமும் - சிவன்.
5. தேய் பிறை பஞ்சமி - அனுதினமும் - சிவன் மற்றும் தேவ குரு.
6. வளர் பிறை சஷ்டி - செவ்வாய் - முருகன்.
6. தேய் பிறை சஷ்டி - செவ்வாய் - அங்காரகன்.
7. வளர் பிறை சப்தமி - ஞாயிறு - சூரியன்.
7.தேய் பிறை சப்தமி - பிறந்த திதியன்று - சித்தர்கள் ஜீவ சமாதி.
8. வளர் பிறை அஷ்டமி - வெள்ளி - மகாலட்சுமி.
8. தேய் பிறை அஷ்டமி - பிறந்த திதியன்று - பைரவர்.
9. வளர் பிறை நவமி - புதன் - சரஸ்வதி.
9. தேய் பிறை நவமி - பிறந்த திதியன்று - ஶ்ரீவாஞ்சியம் யமன்.
10. வளர் பிறை தசமி - செவ்வாய் - ஶ்ரீவீரபத்திரர்.
10. தேய் பிறை தசமி - வியாழன் - குரு பகவான்.
11. வளர் பிறை ஏகாதசி - வெள்ளி - பராசக்தி(அம்பாள்).
11. தேய் பிறை ஏகாதசி - சனிக்கிழமை - சனிபகவான்.
12. வளர் பிறை துவாதசி - சனிக்கிழமை - பெருமாள்.
12. தேய் பிறை துவாதசி - பிறந்த திதியன்று - சுக்கிரன்.
13. வளர் பிறை திரியோதசி - மாத ஜென்ம நட்சத்திரம் - ஶ்ரீராமர்.
13. தேய் பிறை திரியோதசி - பிரதோசம் - சிவபெருமான் மற்றும் நந்தி.
14. வளர் பிறை சதுர்த்தசி - மாத சிவராத்திரி - சிவன்.
14. தேய் பிறை சதுர்த்தசி - மாத சிவராத்திரி - சிவன்.
15. பௌர்ணமி - தினமும் மாலையில் - சிவன் மற்றும் வருண பகவான் அல்லது வருண லிங்கம்.
15. அமாவாசை - தினமும் இரவு - சிவன்.

மேற் குறிப்பிட்டுள்ளபடி வழிபாடு செய்து வரும் பொழுது சகல தோசங்களும் நிவர்த்தியாகும். அந்தந்த தேவதைகளை வழிபட வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் தியானம் மேற் கொள்ளலாம். பஞ்ச பூதங்கள் மற்றும் நவக்கிரகங்களை வசப்படுத்தும் பஞ்ச பூத நவக்கிரக தவம் மனவளக் கலையில்(வேதாத்திரியம்) கற்றுத் தரப்படுகிறது. அதைக் கற்றுக் கொண்டு, தியானித்து தோச நிவர்த்தி பெறலாம். அந்தந்த தெய்வங்களை, தேவதைகளை எண்ணி தியானம் செய்வது என்பது மிக உயர்ந்த, சக்தி மிகுந்த வழிபாடாகும். எனவே அன்பர்கள் தியானிப்பதன் மூலமாக விரைவில் தடைகளைத் தகர்த்தெறிந்து வாழ்வில் முன்னேற்றம் காணலாம் என்று நான் உறுதி கூறுகிறேன். எந்த வழிபாட்டை எங்கே செய்தாலும் ஒரு பத்து நிமிடமாவது தியானம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சகல நலன்களும் பெருகும். வாழ்க வளமுடன்.

கேள்வி - ஞானிகள் பக்தியை குறை கூறுவது ஏன் ?




இராம் மனோகர் - ஞானிகள் பக்தியை குறை கூறவில்லை. பக்தி என்ற பெயரால் நடக்கும் தவறுகளை, மூட நம்பிக்கைகளைத்தான் சாடுகிறார்கள். பக்தியால் ஞானமடைந்தோர் கோடாணு கோடியாகும். சரியை, கிரியை, யோகம் இந்த மூன்றையும் உள்ளடக்கியது உண்மையான பக்தியாகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் இவையெல்லாம் ஒன்றுக்கடுத்து ஒன்று என உயர்த்திவிடும் படித்தரங்களே அல்லாது அவைகளை தனித்தனி மார்க்கங்களாகக் கருதும் பொழுதுதான் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.

சரியை வழியில் செல்பவர் பக்தர், கிரியை வழியில் செல்பவர் கர்மி, யோக வழியில் செல்பவர் யோகி, ஞான வழியில் செல்பவர் ஞானி என்று தனித்தனியாகத் தனித்தனி மார்க்கங்களாகக் கொள்ளும் பொழுதுதான் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள், நான் பெரிது, நீ பெரிது என்றெல்லாம் பிணக்குகள் தோன்றி விடுகின்றன. எனவேதான் ஞானிகள் கடவுளை வெளியே தேடுவதை விடுத்து உள்ளே போய் தேடு என்ற கூறி வைத்தார்கள். இறைவனை உள்ளே தேடுவது என்றால் என்ன ? அதுவும் பக்திதானே !!!?

பக்தி என்றால் என்ன ? பக்தி என்றால் அன்புதானே தவிர வேறு ஒன்றுமில்லை. ஒருவரது மனம் பக்தியிலும், பேதமற்ற தொண்டிலும் முறையாக ஈடுபடுமேயானால் அது தானாகவே யோக நிலையை அடைகிறது. அதன் விளைவாக ஞானம் எனும் நிறைவு நிலை வாய்க்கிறது. உண்மையான பக்தன் தன்னை மறந்து உலகெங்கும் இறைவனைக் காண்கிறான். பார்க்கும் உயிரினங்கள் எல்லாம் இறைவனே என்ற மனநிலையில் அனைவரையும் சமமாக பாவித்து தொண்டு செய்கிறான். தன் மேன்மையை மட்டும் கருதாது, பிறரும் மேன்மையடைய வேண்டும் என்கிற உயர்ந்த மன நிலைதான் சரியை.

அதற்காக கர்மமியற்றும் நிலையில் அவனே கர்மி. இறைவனையும், தொண்டையும் தவிர எதையும் அவன் சிந்திக்காத காரணத்தால் மனம் ஒருநிலைப்பட்டு யோக நிலையை அடைகிறது. அந்த நிலை வலுக்கும் போது ஞானம் பிறக்கிறது. சித்தர்கள் போன்ற ஞானிகள் அறிவைக் கொண்டு முதல் இரண்டு நிலையை விடுத்து நேரடியாக யோகநிலைக்குப் போய் ஞானத்தை அடைந்தார்கள். பக்திக்கும் ஞானத்திற்கும் உள்ள தொடர்பை நம் முன்னோர்கள் மூன்று விதமாக அபிப்பிராய பேதம் கொண்டார்கள்.

அதாவது பக்தியின் மூலம் மனம் சுத்தியடைவதால் ஞானத்திற்கு தகுதி உடையதாகிறது என்பது ஒரு அபிப்பிராயம். இவர்களுக்கு பக்தியை விட ஞானம் பெரியது. இவர்களைப் பொருத்த வரை சாதகனை பக்குவப்படுத்தவே பக்தி பயன்படுகிறது. மற்றொரு பிரிவினரோ ஞானத்தின் விளைவே பக்தி என்கிறார்கள். கடவுளை அறிந்து கொள்ளும் அளவு ஞானம் இருந்தால் மட்டுமே அவர் மேல் அன்பு பிறக்கும். அயலான் ஒருவனை நாம் நேசிப்பதில்லை. உறவினர் என்று தெரிந்து விட்டால் அவர் மீது அன்பு வளர்கிறது.

இதன்படி ஞானம் பெருகுமளவு பக்தி வளர்கிறது. கடைசியில் எல்லாம் பிரேமை பக்தியாகி ப்ரம்மத்தில் லயித்து விடுகிறது என்பது இவர்கள் கொள்கை. மூன்றாவது பிரிவினரோ, உயர்ந்த நிலையில் பக்தியும் ஞானமும் இணைந்து விடுகின்றன என்பார்கள். ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள், அன்பானது அறிவை வளர்க்கிறது. அறிவு ஓங்குமிடத்து அன்பும் வளர்கிறது. இந்த அன்பின் விளைவாக சாதகன் தன்னையே இறைவினடம் கொடுத்து விடுகிறான். தீயில் இட்ட விறகைப் போல, பக்தன் தன்னை தெய்வத்துக்குரியவனாக்கி தானே தெய்வ சொரூபம் அடைகிறான்.

அன்பும், அறிவும் அளப்பரிய அளவில் கடவுளிடம் மிளிர்கின்றன. அவர் பரம பிரேமை சொரூபம். அவர் சர்வக்ஞன். எல்லையில் அடங்காத அன்பும் அறிவும் அவரிடத்தில் உண்டு. எனவே ஒன்றை உயர்த்தியும் ஒன்றை தாழ்த்தியும் சொல்வது பொருந்தாது. கடவளை அறிய மனிதன் அவரை நேசிக்கிறான். அவரை நேசிப்பவன் கடவுளை அறிகிறான். உண்மையான மெய்ஞானியிடம் உண்மையான அன்பையும், உண்மையான அறிவையும் காணலாம்.

தன்னை கடவுளிடம் கொடுத்து விடுவதால் சாதகன் கடவுள் மயமாகி விடுகிறான். கடவுள் மயமாகி விட்டவனிடம் அறிவு போய்விட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? கடவுளிடம் தன்னைக் கொடுத்தவன் தானே அறிவு சொரூபியாகத் திகழ்கிறான். எனவே கூர்ந்து கவனித்தால் பக்தியும் ஞானமும் வேறு வேறல்ல. அன்பும் அறிவும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. எனவே அன்பைப் பெருக்கி அறிவை வளர்த்து, பேரறிவை உணர்ந்து மெய்யறிவை அடைவோமாக.

கேள்வி - எல்லாம் கடவுள் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லா இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையானால் ஊர் ஊராக கோவில்களை தேடி அலைய வேண்டிய அவசியமில்லையே? தீய அல்லது அசிங்கமான விஷயங்களில் கடவுள் எப்படி இருப்பார்?





இராம் மனோகர் - நன்மை, தீமை என்பது அவரவர்கள் சொந்தப் பிரச்சனை. பொதுப் பிரச்சனையல்ல. உங்களுக்குத் தீயதாகவோ, அசிங்கமாகவோ தோன்றுவது வேறொருவருக்கோ அல்லது வேறொரு உயிரினத்திற்கோ நல்லதாகத் தேவைப்படுவதாக இருக்கிறது. நமக்குத் தீமையாக, அசிங்கமாகத் தோன்றினால் நாம் அதை விட்டு விலகி நின்று கொள்ள வேண்டும் அவ்வளவுதான். சிருஷ்டியின் முன்னிலையில் எல்லாம் சமம்தான். நமது நிலையில் நாம் தேவையற்றவைகளை விலக்கி, தேவைப்படுபவைகளை ஏற்று வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே அறிவுடமை.

எல்லாம் கடவுள்தான் என்றாலும், சில இடங்களில் அதி சூக்கும நிலையில் திகழும் கடவுள் நிலையை நாம் உணர்வதற்குப் பல தடைகள் உள்ளன. தடைகள் உள்ள இடங்களில் அதிர்வுகள் இல்லாமல் இருப்பதும், தடைகள் இல்லாத இடங்களில் நல்ல அதிர்வுகளை மனம் உணர்வதையும் நாம் இயல்பாகவே உணர முடியும். காற்று மண்டலம் எங்கும் காற்று நீக்கமற நிறைந்துதான் இருக்கிறது. எனினும் அது ஒரு இடத்தில் அழுத்தமாக இருக்கிறது, மற்றொரு இடத்திலோ அழுத்தம் குறைவாக இருக்கிறது. ஒரு இடத்தில் தென்றலாக வீசுகிறது, அதே வேளையில் வேறொரு இடத்தில் புயலாக அடித்து அனைத்தையும் புரட்டிப் போட்டு விட்டுப் போய்விடுகிறது.
அது போலவே சூரியனைப் பாருங்கள், சூரியனின் ஒளி உலகெங்கும் பரவி வெளிச்சம் தருவதோடு, வெப்பமும் பரவுகிறது. அதே சூரிய ஒளியை ஒரு ஆடியை வைத்து குவிக்கும் பொழுது வெப்பம் அதிகமாகி அந்தப் பொருளே எரிந்து போய் விடுகிறது. அது போலவே இறையாற்றல் எல்லா இடங்களிலும் நீக்கமற பரவி நின்றாலும், சில இடங்களில் அது அழுத்தமாகவோ அல்லது திணிவுபடுத்தப்பட்டோ இருக்கிறது. அப்படிப்பட்ட ஆற்றல் திணிவு பெற்ற ஸ்தலங்களில்தான் ஆலயங்கள், மலைகள், புண்ணிய தீர்த்தங்கள் போன்றவைகளெல்லாம் அமைந்துள்ளன.
நமக்கு வியாதி வந்து விட்டால் நாம் மருத்துவ மனைக்குக்குதான் போக வேண்டும், நூல்களைக் கற்க வேண்டும் என்றால் நூலகங்களுக்குதான் போக வேண்டும், தேவையான பொருட்களை வாங்க வேண்டுமென்றால் சந்தைக்குப் போக வேண்டும். படித்து பட்டம் வாங்கக் கல்விச் சாலைகளுக்குப் போக வேண்டும். நம் வீடு இருக்கிறது, சமையல் அறையில் சமையல் செய்வோம், சாப்பிடும் அறையில் சமைத்ததையெல்லாம் ஆர்வத்தோடு உண்டு மகிழ்வோம், படுக்கையறையில் படுத்து உறங்குவோம், கழிவறையில் கழிவுகளை அகற்றுவோம், வரவேற்பு அறையில் உறவுகளோடு கூடிக் குலாவுவோம். அந்தந்த இடத்தில் அந்தந்த காரியங்களைச் செய்யும் பொழுதுதான் அந்தந்த காரியங்கள் சிறப்படைகின்றன. இது ஒரு ஒழுங்கு. அது போலவே இறையாற்றலை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றால் நாம் ஆலயங்கள் மற்றும் இது போன்ற ஸ்தலங்களுக்குப் போய்தான் ஆக வேண்டும்.

சந்தையைப் பார்த்தவுடன் இயல்பாகவே நமக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. பள்ளிக் கூடத்தைப் பார்த்தவுடன் கல்வி கற்றதைப் பற்றிய அல்லது கற்பதைப் பற்றிய எண்ணம் வருகிறது. புத்தகக் கடையை அல்லது நூலகத்தைப் பார்த்தால் நூல்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அந்தந்த இடங்களை அந்தந்த காரியங்களுக்குப் பயன்படுத்துவதால், அந்தந்த இடங்களைப் பார்த்தவுடன் அந்தந்த எண்ணங்கள் மேம்படுகின்றன. காரியங்களும் செம்மையாக நடைபெறுகின்றன. அது போலவே ஆலயங்களைப் பார்த்தவுடன் நமக்கு கடவுள் வழிபாடு பற்றிய எண்ணம் வருகிறது.
உள்ளே நுழைந்து விட்டால் நம் மனம் பக்தியில், ஒரே நிலையில் திளைத்து நிற்கிறது. தேவையில்லாமல் இவ்வளவு பெரிய பெரிய ஆலயங்களை நம் முன்னோர்கள் அமைத்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் ஆற்றலும், அதிர்வுகளும் அதிகமான இடங்களில்தான் ஆலயங்கள் மற்றும், புண்ணிய ஸ்தலங்கள் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய இடங்களில் இருந்து கொண்டுதான் நம் முன்னோர்களான சான்றோர்கள் தவ வாழ்வை மேற்கொண்டனர். அப்படிப் பல சான்றோர்கள் ஒன்று கூடி தவ வாழ்வை மேற்கொண்டு, உயர்ந்த எண்ணங்களை எண்ணியபடியால் அந்த இடங்களுக்கு மேலும் மகிமை ஏற்பட்டு விடுகிறது. அருள் சக்தி அங்கு நிரம்பி வழிகிறது.

அப்படிப்பட்ட இடங்களுக்கு நாம் செல்லும் பொழுது, அந்த அருள் சக்தியின் மகிமையால் நம் மனமும் பண்படுகிறது. அதனால்தான் அவற்றை புண்ணிய க்ஷேத்ரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புண்ணிய மலைகள் என்றெல்லாம் சொல்லி போற்றி வணங்குகிறோம். அதிலும் குறிப்பிட்ட வேளைகளில் அவ்விடங்களில் அருள் சக்தியின் ஆற்றல் அதிகரிக்கிறது என்பதையும் உணர்ந்து நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட நேரங்களில் மக்கள் அங்கே சென்று குவிந்து விடுகின்றனர்.

நன்மை ஏற்படாத இடத்திற்கு எவ்வளவுதான் வற்புறுத்தி அழைத்தாலும் யாரும் போக மாட்டார்கள். நன்மை ஏற்படுகின்ற இடத்திற்கு போகாதே என்று தடுத்தாலும் கூட யாரும் போகாமல் இருக்க மாட்டார்கள். சிரமப்பட்டேனும் அவ்விடங்களுக்கு செல்லவே விரும்புவார்கள். இது குருட்டு நம்பிக்கையோ, மூட நம்பிக்கையோ அல்ல. இது உயர்ந்த தெய்வீக நம்பிக்கை. இந்த உயர்ந்த நம்பிக்கை அனைத்து சமயங்களில் இருக்கின்றது. எனவேதான் எவ்வளவோ நாத்திகவாதிகள், பகுத்தறிவுவாதிகள் எவ்வளவோ சொன்னாலும் கூட நம்பிக்கைகளும், கூட்டங்களும் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றனவேயல்லாமல் குறைவதில்லை.

கேள்வி - நல்ல விளக்கம். எனினும் மேலும் சில தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆலயங்களுக்குப் போனால்தான் வழிபாடு சிறக்கும் என்று சொல்வது சரிதான். ஆனால், ஆலயங்களில் சட்டை போடாதே, செருப்பு போடாதே என்றெல்லாம் சொல்வது சரியா? பெண்களுக்கு மட்டும் உடை விஷயத்தில் விதிவிலக்கு வேறு ! மேலும் ஆலயத்தில் இத்தனை முறை வலம் வர வேண்டும் என்று சொல்வது ஏன்? சிலர் அடி மேல் அடி வைத்து சுற்றி வருகிறார்களே இது ஏன்? மேல் நாடுகளில் கிருத்தவர்களின் சர்ச்களில் எல்லாம் கோட்டு, சூட்டு, சூ எல்லாம் அணிந்து கொண்டுதானே செல்கிறார்கள்?



இராம் மனோகர் - தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் வழிபாட்டு முறைகளுக்குத் தக்கவாறு பழக்க வழக்கங்களும், கலாச்சாரமும் மாறுபடுகின்றது. இரத்தத்தை உறைய வைக்கிற அளவுக்கு குளிரடிக்கின்ற இடங்களில் வாழ்கிறவர்கள் அத்தகைய வழிபாட்டு முறைகளைக், கலாச்சாரத்தை மேற்கொள்கின்றனர். நமது தேசத்தின் தட்பவெப்பம் மற்றும் பண்பாடு, கலாச்சாரம் வேறு. இங்கே ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் தளம் மட்டுமல்ல, அவை பேராற்றலின் சக்தி களங்களாகத் திகழ்கின்றன. எனவே எந்த அளவுக்கு ஆடைகளைக் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு ஆற்றல் மேம்படும் என்பது ஆதார பூர்வமான உண்மையாகும். நாகரிகம் கருதி மேலாடையை மட்டும் அகற்றச் சொல்கிறார்கள். முன்பெல்லாம் இடுப்பில் மட்டும்தான் துணி இருக்கும்.

அது மட்டுமல்ல ஆதி காலங்களில் வனங்களில், மரத்தடியில்தான் வழிபாடு நடந்தது. பிற்காலங்களில்தான் வாஸ்து மற்றும் ஆகம விதிப்படி, பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து தன்னகத்தே குறைவுபடாமல் தேக்கி வைத்துக் கொள்ளும்படியான யுக்தி கண்டறியப்பட்டது. இயற்கையாகவே ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான உடல், மன ஆற்றல்கள் மாறுபாடு கொண்டவை. ஆண்களை விட பெண்களுக்கு பலவிதமான சிறப்பியல்புகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. எனவே அவர்கள் தேகமானது பாதம், நெற்றி, தலையுச்சி, கழுத்து, கண், கை இவற்றின் மூலமாகவே ஆற்றல்களை கிரகித்துக் கொள்கின்றன. அது போலவே பெண்களின் சில அவயங்கள் தரையில் படக் கூடாது என்கிற விதியும் கூட உண்டு. அதே சமயம் ஆணோ, பெண்ணோ நம் உடலில் உள்ள அத்துனை நாடி மையங்களுக்கும், நரம்பு மண்டலங்களுக்கும் பாதத்தோடு தொடர்பு இருக்கிறது.
ஆலயத்தில் காலணி அணியாமல் செல்வதால் உடலில் ஆற்றல் நேரடியாகப் பாதங்கள் வழியாகப் பாய்வதோடு, பாதங்களில் உள்ள நரம்பு மையங்கள் தூண்டப் பெற்று, உடலெங்குமுள்ள நாடி, நரம்புகளைச் சீராக இயங்கச் செய்கின்றன. ஆலயம் என்பது ஆன்மாவில் லயமாகும் இடமாகும். வேக வேகமாக ஏனோதானோ என்று வழிபடுவது கூடாது. இறையுணர்வோடு மிக மிக மெதுவாக, இயல்பாக வழிபாடு, தியானங்களைச் செய்ய வேண்டும். ஆலயத்தில் கருவறை மிகவும் ஆற்றல் உள்ள இடமாகும். அதை வலம் வருவது என்பது இறைவனையே வலம் வருவது போலாகும். அதைச் சுற்றி வரும் பொழுது உடலிலும், மனதில் ஆற்றல் பெருகி, மன அமைதியும், தெளிவும் ஏற்படும்.
கொடி மரம் மற்றும் பலி பீடத்தில் ஆரம்பித்து கருவறையை ஒரு முறை வலம் வருவது என்பது ஒரு முறை பிறந்து, மறைவதற்கு ஒப்பானதாகும். இந்த பிறப்பிறப்பு சுழற்சியில் இருந்து விடுபட வேண்டும் என்ற சங்கல்பத்தோடு வலம் வருவதுதான் உபாயமாகும். அடிமேல் அடியெடுத்து நடந்து செல்வதால் நேரம் அதிகப்படுத்தப்படுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்ல பயிற்சியாகவும் அமைகிறது. கால்கள், மூட்டுகள், இடுப்புப் பகுதிகளுக்கு அது நல்ல உடற்பயிற்சியாகும். எனவே ஆன்ம முன்னேற்றம் மற்றும் ஆரோக்கிய மேம்பாடு இரண்டும் நல்குவதே ஆலய வழிபாடு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி : திரு.இராம் மனோகர் ஐயா 


மீள்பதிவாக :-

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (13) - ஞான ஆசிரியர்கள் தின விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/13.html


வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (12) - http://tut-temple.blogspot.com/2018/07/12_7.html

 வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (11) - http://tut-temple.blogspot.com/2018/06/11.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (10) -http://tut-temple.blogspot.com/2018/05/10.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9) - http://tut-temple.blogspot.in/2018/04/9.html

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (8) - http://tut-temple.blogspot.in/2018/02/8.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

No comments:

Post a Comment