Subscribe

BREAKING NEWS

12 September 2018

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் - விநாயகர் சதுர்த்தி பதிவு


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்...எத்தனை பெயர்கள். எத்தனை அருள்நிலைகள். சில பேர் சொல்லும் பிள்ளையார்கள் இங்கே தொகுத்து தருகின்றோம். TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவாக இதனை நாம் காணலாம். அதற்கு முன் பதிவினை பாடலோடு தொடங்குவோம். பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் பாடல் பாடி மூத்தோனை தொழுவோம்.


 பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்(5)

ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2)

ஆறுமுக வேலனுக்கு, அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும், நீக்கி வைக்கும் பிள்ளையார்(2)

மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும்
அஞ்செழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்(2)

 ஓம்  நமச்சிவாய என்ற அஞ்செழுத்து மந்திரத்தை
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்(2)

 அவல் கடலை சுண்டலும் அரிசிக் கொளுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார் கண்ணை மூடித் தூங்குவார்(2)

கலியுகத்தின் விந்தைகளைக், காணவேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்.(2)


திருச்சிராப்பள்ளி - உச்சிப் பிள்ளையார்

 இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய
இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார். விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார். சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது. இக்கதைக்கேற்றபடி, இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் காணலாம்.




திருப்புறம்பியம் - பிரளயம் காத்த விநாயகர்




பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 46-வது தலமாக விளங்குவது திருப்புறம்பியம்.
ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில், சிவபெருமான் இத்தலத்தை பிரளயத்திலிருந்து பாதுகாக்கும்படி விநாயகருக்குக் கூறுகிறார். விநாயகரும் பொங்கிவந்த ஏழு சாகரங்களையும், இத்தலத்திலுள்ள திருக்குளத்துக்கு கீழ்கரையில் இருக்கும் ஏழுகடல் கிணறு என்று இப்போது அழைக்கப்படும் கிணற்றில் அடக்கி, பிரளயத்தில் இருந்து இத்தலம் அழியாமல் பாதுகாத்தார். அச்சமயம் வருண பகவான் நத்தைக்கூடு, கடல்நுரை, கிளிஞ்சல் ஆகிய கடல் பொருட்களால் ஒரு விநாயகர் திருமேனியை உருவாக்கி, அவரை பிரளயம் காத்த விநாயகர் என்று பெயரிட்டு இத்தலத்தில் வழிபட்டார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறும். அபிஷகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகர் திருமேனியால் உறிஞ்சப்பட்டுவிடும். தேன் அபிஷேக முடிவில் இத்திருமேனி செம்பவள நிறத்தில் காட்சி அளிக்கும்.வருடத்தில் மற்ற நாட்களில் இந்த விநாயகருக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை.


திருத்திலதைப்பதி - ஆதி விநாயகர் சந்நிதி

திருத்திலதைப்பதி திருத்தலத்தில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்திற்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.



எப்படி போவது:

மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டதில் இருந்து சுமார் 2 கி.மி. கூத்தனூர் சரஸ்வதி கோவில் இங்கிருந்து அருகில் இருக்கிறது.

 அன்பில் ஆலாந்துறை - செவி சாய்த்த விநாயகர்

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 57-வது தலமாக விளங்குவது அன்பில் ஆலாந்துறை.



இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செவி சாய்த்த விநாயகர் என்று பெயர். ஒருமுறை திருஞானசம்பந்தர், கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது, கொள்ளிடம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. காவிரியின் தென்கரையிலிருந்த சம்பந்தரால் கொள்ளிட நதியைக் கடந்து கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்றபடியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்துவந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக, விநாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்துக் கேட்டு ரசித்தார். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் பாட்டை ரசித்த அக்காட்சியை சிற்பமாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இவ்வாலயத்தில் காட்சி தருகிறது. பார்த்து இன்புற வேண்டிய சிற்பம்.காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.

 திருப்பனையூர் - துணையிருந்த விநாயகர் 

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 73-வது தலமாக விளங்குவது திருப்பனையூர்.



முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது. அவனது தாய்மாமன் "இரும்பிடர்த்தலையார்" என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து, இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல விநாயகர் "துணையிருந்த விநாயகர்" என்னும் பெயர் பெற்றார்.

 கங்கைகொண்ட சோழபுரம் - கணக்குப் பிள்ளையார்

கணக்கு சொன்ன பிள்ளையார் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அருகே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கனக விநாயகர் அமைந்துள்ளார்.

ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தபின், தன் தந்தை ராஜராஜ சோழன் கட்டிய மிகப்பெரிய தஞ்சை பெருவுடையார் கோவில்போல தானும் கட்டவேண்டுமென தீர்மானித்து அதற்கான திருப்பணிகளைத் துவக்கினான். அப்போது அனுதினமும் வழிபட அரண்மனைக்குமுன் இந்த கனக விநாயகர் கோவிலை அமைத்து, கோவிலுக்கு வடகிழக்கே பிரகதீஸ்வரர் கோவில் அமைக்கும் பணியை தன் அமைச்சரிடம் ஒப்படைத்தான்.
திருப்பணிகளுக்குத் தேவையான பொன்- பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார். அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன்வைத்து வணங்கியபின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். (இந்த விநாயகருக்கு பால், எண்ணெய் அபிஷேகம் செய்யும்போது இவர் பச்சைநிற மேனியராகக் காட்சிதருவார்.) இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவந்தன.

ஒரு நாள் ஆலயத் திருப்பணிகளைப் பார்வையிட மன்னன் வந்தான். ஆலயம் கம்பீரமாக எழும்பிக்கொண்டிருப்பது கண்டு பரவசமடைந்தான். பின் அமைச்சரிடம், “”திருப்பணிக்கான செலவுக்குரிய கணக்கை நாளைக் காலை தெரிவியுங்கள்” என கட்டளை இட்டுவிட்டுச் சென்றான் மன்னன்.

அமைச்சருக்குத் தூக்கிவாரிப் போட்டது. திருப்பணி செய்யும் மும்முரத்தில் அவர் கணக்கு ஏதும் எழுதவில்லை.

அமைச்சருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தெய்வம்தான் தம்மைக் காக்க வேண்டுமென்று கனக விநாயகர் சந்நிதிக்கு ஓடோடி வந்தார். “”பெருமானே, மன்னர்
திடீரென கணக்குக் கேட்கிறார். நான் என்ன செய்வேன்? தாங்கள்தான் இதற்கு வழிகாட்டவேண்டும்” என கண்ணீர்மல்கி மனமுருகப் பிரார்த்தனை செய்துவிட்டு இல்லம் சென்றார்.

அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய கனக விநாயகர், “”அமைச்சரே, வருந்தாதீர். இதுவரை எத்து நூல் எட்டு லட்சம் பொன் செலவானது என மன்னரிடம் கூறுங்கள்” என அருளி மறைந்தார். கண்விழித்த அமைச்சர் கனக விநாயகர் சந்நிதி நோக்கி கைகூப்பி வணங்கினார். உடனே ஓலைச் சுவடியை எடுத்து அதில் “எத்து நூல் எட்டு லட்சம் பொன்’ என்று எழுதி வைத்துவிட்டார்.
மரவேலை, சுவர் வேலை செய்யும்போது வளைவு வராமல் இருப்பதற்காக பயன்படுத்தும் நூலை எத்து நூல் என்பர். இதைக்கொண்டே கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும் கல், மரம், மணல் எவ்வளவு வாங்கப்பட்டது என கணக்கிட்டுவிடலாம். எத்து நூல்தான் முக்கிய இடம் வகிக்கிறது.
மறுநாள் அமைச்சர் மன்னரிடம் விநாயகர் கனவில் சொன்னபடி கூறினார். “”இவ்வளவு செலவானதென்றால் நாம் நினைத்தபடியே கோவில் சிறந்த முறையில்தான் உருவாகிவருகிறது. மகிழ்ச்சி! அமைச்சரே, எப்படி நீங்கள் இவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டீர்கள்” என்று கேட்டான் மன்னன்.

நடந்த உண்மைகளை அமைச்சர் அப்படியே கூறிவிட்டார். ஆச்சரியமடைந்த மன்னன் கனக விநாயகர் சந்நிதிமுன் நின்று கண்ணீர் மல்க வணங்கினான். “”விநாயகப் பெருமானே தெரிவித்த கணக்கானதால் அது சரியாகத்தான் இருக்கும். இதன்மூலம் பிரகதீஸ்வரர் ஆலயம் எழும்ப விநாயகரே ஆசி வழங்கவிட்டார். எனவே இந்த கனக விநாயகர் இனிமேல் நமக்குக் கணக்குப் பிள்ளையார் ஆகிவிட்டார்” என பெருமிதத்துடன் கூறினான்.
இந்த விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறிடத்திற்கு மாற்றிவிடக்கூடாதென்று எண்ணி, 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இவரின் சந்நிதிமுன் மிகச்சிறிய நுழைவாயிலைக் கட்டிவிட்டான். அந்நியர் படையெடுப்பு வந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருள்தான் காரணம்.

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும் இவ்வால யம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.


மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_24.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - http://tut-temple.blogspot.com/2017/08/tut.html

மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_78.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html

No comments:

Post a Comment