Subscribe

BREAKING NEWS

30 September 2018

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 8

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில்.

மூலவர்  -  வைஷ்ணவ நம்பி
தாயார்  -  குறுங்குடிவல்லி நாச்சியார்
தீர்த்தம்  -  திருப்பாற்கடல், பஞ்சதுறை


நூற்றிஎட்டு  திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.






மூலவர் நம்பிராயரின் வலது புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பம்சமாகும். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இக்கோயிலில் காட்சி தருகிறார்.

வராஹ அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி ஆனது.

கோவில் வரலாறு :

ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார். ஒரு முறை பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மனிதனுக்கும், பூதம் ஒன்றிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. 

பிரச்சனை முற்றி மனிதனைச் சாப்பிட பூதம் விரும்புகிறது. அதற்கு அந்த மனிதன் பூதத்திடம், இன்று ஏகாதசி. எனவே கைசிகம் என்ற விருத்தத்தில் பகவானை பாடிவிட்டு வருகிறேன். அதன்பின் நீ என்னை உண்ணலாம் என்று கூறுகிறான். ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் பாடியதால் அந்த மனிதனுக்கும், பாடலை கேட்டதால் பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.

திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான். கோயில் மூலவரான அழகிய நம்பியைப் பார்க்க முடியாததற்காக மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பெருமாள் கொடிமரத்தை விலகி இருக்க சொல்லி நம்பாடுவானுக்குத் தாமே தரிசனம் தந்தார். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பதை நாம் இப்போதும் காணலாம்.

சைவ கோயில்களில் பெருமாள் எழுந்தருளி இருப்பதும், வைணவ கோயில்களில் சிவன் எழுந்தருளி இருப்பதும் சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும். அதே போல் வைணவக் கோயிலான இங்கு கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சன்னதியும் அமைந்துள்ளது.

கோயில் மூலவரான அழகிய நம்பிக்குப் பூஜை நடக்கும் போது, இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா என்பதை அறிய,”சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா” என்று பட்டர் கேட்பார். அதற்கு “குறை ஒன்றும் இல்லை” என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார் என நான்கு நாயன்மார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. 



நம்மாழ்வாராக அவதரித்ததும் இந்த அழகிய நம்பி தான். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கப் பெருமாளிடம் மோட்சம் கேட்டபோது,”திருக்குறுங்குடி போ. அங்கு மோட்சம் கிடைக்கும்” என்றார். திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலம் தான்.  குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு.

நம்பியாற்றின் கரையில் அமைந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல். வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராக ரூபத்தைக் குறுங்கச் செய்தமையால் இத்தலம் “குறுங்குடி” ஆனது. அதேபோல் திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.


இங்கு மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் பஞ்சகேத விமானம்.

திருவிழா :

சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம். பங்குனி பிரம்மோத்சவம்.

பிரார்த்தனை :

மோட்சம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன் :

தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

போக்குவரத்து வசதி :

திருநெல்வேலியிலிருந்து மேற்கு திசையில் 42 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்குறுங்குடி. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சில் வள்ளியூர் சென்று, அங்கிருந்து திருக்குறுங்குடி செல்லலாம்.

அருகிலுள்ள ரெயில் நிலையம் : வள்ளியூர்

விசேஷங்கள் - இது திருமங்கையாழ்வார் பரமபதித்த ஸ்தலம். தனிக் கோயில் நாச்சியார்களின் உத்ஸவர்கள் பெருமாளுடன் ஏகாஸனத்தில் இருப்பதால் தாயார் ஸந்நிதிகளில் அர்ச்சனை கிடையாது. நின்ற நம்பி, கிடந்த நம்பி இவர்களுடைய ஸந்நிதிகளக்கு நடுவில் சிவன் ஸந்நிதியும் பைரவர் ஸந்நிதியும் உள்ளன. பெருமாள் மடைப்பள்ளி பிரஸாதங்களே சிவனுக்கும் நிவேதனம் செய்யப்படுகின்றன. "இருந்த நம்பி" ஸந்நிதியிலுள்ள பெருமாளை வைகுந்த நாதன் என்கிறார்கள். ஸ்ரீ மணவாளமாமுனிக்கு ஸந்நிதி இருக்கிறது. இக்கோவிலிலிருந்து சுமார் 3 ஃபர்லாங் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடையின் கரையில், திருப்பாற்கடல் நம்பி ஸந்நிதி உள்ளது. இவ்வூரிலிருந்து சுமார் 6 1/2 மைல் தூரத்தில் உள்ள குன்றின்மேல் மலைமேல் நம்பி ஸந்நிதி உள்ளது. ஊருக்குக் கிழக்கே, ஆற்றின் அருகில் வயல்வெளிகளில் "திருமங்கையாழ்வார் திருவரசு" என்ற சிறிய கோவில் இருக்கிறது. ஊரிலிருந்து சுமார் முக்கால் மைல் தூரத்தில் திருப்பாற்கடல் ஆற்றின் நடுவில் திருப்பரிவட்டப்பாறை என்ற பாறை மேல் உடையவர் ஸந்நிதியிருக்கிறது. விரோதிகள் உடையவரைக் கொன்றுவிட ஏற்பாடு செய்தபோது வடுக நம்பி என்ற பெயருடன் பெருமாள், இவரை இந்தப்பாறை மீது கிடத்திக் காப்பாற்றினாராம். பெருமாள் உடையவருக்கு ஸிம்ஹாஸனமிட்டு, தான் அருகில் சீடனாக நின்று திருமந்திரார்த்த உபதேசம் பெற்றதால் 'வைஷ்ணவ நம்பி' என்றழைக்கப்படுகிறார். கைசிக த்வாதசியன்று நம்பாடுவான் என்ற பக்தர் இத்தலத்தில் தன் புண்ணியத்தில் ஒரு பாகத்தை தன்னை பக்ஷிக்க வந்த ப்ரம்மராக்ஷஸனுக்குக் கொடுத்து இத்தலத்தை ரக்ஷித்தான் என்று வராஹபுராண வரலாறு. இன்றும், இந்த ஐதீஹம் நாளைக்கும் நாடக ரூபமாக இங்கே கைசிக ஏகாதசியன்று ராத்திரி நடக்கிறது. யமபட்டணம் இந்த தலத்திலிருந்து கூப்பிட்டதூரத்தில் இருப்பதாக ஐதீஹம்.
இந்த ஸந்நிதி திருக்குறுங்குடி ஜீயர் ஆதிக்கத்தில் உள்ளது.
பகவான் வாமன த்ருவிக்ரம அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது திருவடி சதங்கையிலிருந்து சிலம்பாறு உண்டானதாக ஸ்தல வரலாறு.
ஒரு ராஸஷன் ப்ராம்மணனைக் கொல்லவர, கொல்வது பாவம் என்று ப்ராம்மணன் சொல்ல, அது என் தொழில் என்று ராக்ஷஸன், விவாதம் முற்றியதால், பகவான் வேடம் போல் வேஷம் பூண்டு வந்து, அவர்களுக்கு உபதேசித்த படி திருப்பாற்கடல் தீர்த்தத்தில் ஸ்நாநம் செய்து ரிஷிகள் உபதேசம் பெற்று அகஸ்தியரை வணங்கி, இருவரும் துவேஷத்தை விட்டு, முக்தியடைந்ததாக ஸ்தலபுராணம்.
இக்கோவிலை அடுத்து நாம் செல்ல இருப்பது "நம்பி மலை" ஆம்  இதுவரை எட்டு பதிவுகளைத்தொடர்ந்து எழுத காரனமாக இருந்த எம்பெருமான் நம்பி என்கிற நம்பி பெருமாளை தரிசிக்க இருக்கின்றோம்.

நம்பிமலை தரிசனம்  பகுதி 9இல் நாம் காணலாம் .

நன்றி .




No comments:

Post a Comment