Subscribe

BREAKING NEWS

20 September 2018

TUT தளத்தின் 500 ஆவது சிறப்புப் பதிவு - குருவே சரணம்

அன்பார்ந்த மெய்யன்பர்களே...

அனைவருக்கும் வணக்கம். இப்பொழுது தான் TUT தளம் ஆரம்பித்து 100 ஆவது பதிவு கண்டது போல் இருந்தது. ஆனால் இன்று குருவின் அருளால் 500 ஆவது பதிவை நெருங்கி விட்டோம். இது குருவின் அருளால் மட்டுமே சாத்தியம். இன்றைய பதிவில் என்ன பேசப் போகின்றோம்? என்ன அறியப் போகின்றோம். நாம் இங்கே தருகின்ற பதிவுகள் அனைத்தும் நம் கையில் இல்லை. படைப்பது அவனே. இன்று இந்த பதிவு எழுதலாம் என்று நினைப்போம். ஆனால் நடப்பது ஒன்றாக இருக்கும். உதாரணத்திற்கு மாதம் தோறும்  முதல் பதிவாக திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரம பதிவுகள் இருக்கும். ஆனால் இந்த மாதம் மனைவிக்கு மரியாதை என்று மனைவி நல வேட்பு நாள் பற்றி பதிவு தரப்பட்டது. இது போல் தான் ஒவ்வொரு பதிவுகளும், அதற்கு பின் நடைபெறும் நிகழ்வுகளும்.


இன்று குரு வாரம். தளத்தின் 500 ஆவது பதிவு குருவைப் பற்றி பேசுவோம். உங்களை சுற்றி உள்ள உறவுகளிடம்,நட்புகளிடம் ..ஏன் ? உங்களிடம் கேட்டுப் பாருங்க..ஆன்மிகம் என்றால் என்ன? என்று

உடனே பல தடாலடி பதில்கள் தான் வரும். ஆன்மிகம் என்பது

வானத்தில் பறப்பது, நீரில் நடப்பது,செப்பிடுவித்தை காண்பிப்பது,காயகல்பம் செய்வது, பின்னால் ஒளி வட்டம் தெரிவது,குண்டலினி எழுப்புவது,வாசியை வசப்படுத்துவது என்று அடுக்குவார்கள்.இதுவா? உண்மை ஆன்மிகம்.இல்லை ..இல்லவே இல்லை. இப்படித்தான் நம் சைவமும்,வைணவமும்,சித்தர் நெறியும் சொல்கின்றதா?


நம்மை சாதாரணமாக.. மிகவும் சாதாரணமாக..இருக்கச்செய்வதே ஆகும். கற்பனையில் மிதக்கும் நம்மை நிஜத்தில் சாதாரணமாக நடக்கச் செய்வதே ஆன்மிகம்.அமைதியே இல்லாத நம்மை....சிறப்பாகவும் முழுமையாகவும் அமைதியாகவும் வாழச்செய்வதே ஆன்மிகம்". இதைத் தவிர ஆன்மிகம் வேறு ஒன்றுமே இல்லை. வாழும் நிலையுணர்ந்து,தொண்டாற்றி இன்பம் கண்டு வாழும் நிலையே ஆன்மிகம்.

அன்பர்களே இப்போது புரிந்து கொண்டீர்களா? இது தான் உண்மையான ஆன்மிகம். இந்த ஆன்மிகத்தில் அடுத்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டியது குருவின் அருள்.ஒரே ஒரு குரு என்று இங்கே காட்டாமல், நமக்கு அருளிய சில குருமார்களை பற்றி இங்கே உணர்வோம். 

முதலில் யோகி ராம் சூரத் குமார்.



திருவண்ணாமலை, அற்புதமான புண்ணிய பூமி. பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்... என மகான்களின் திருப்பாதம்பட்ட மண். காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் `விசிறி சாமியார்’ என அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகள், வாரணாசிக்கு அருகில் உள்ள நாராதாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-ம் ஆண்டில் ராம்தத் குவார் - குசும்தேவி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக அவதரித்தார்.இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் என இரு சகோதரர்கள். குழந்தைப் பருவத்திலேயே யோகிகளையும் துறவிகளையும் சந்திப்பதில் ஆர்வத்துடன் இருந்தார். கங்கை ஆற்றாங்கரையில் உலவுவது, துறவிகளுடன் உறவாடுவது என இருந்தார்.



ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டிருந்தவருக்கு ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. `இவரே... இவரே... இவரே என் குரு’ என்றவருக்கு, மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச்சேரியை நோக்கிப் பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார். அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அந்தச் சமயத்தில் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் சித்தி அடைந்தார்  என்பது தெரியவர, இடிந்துபோனார்.



மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு கிராமத்தில் இருந்த பப்பா ராமதாஸை நோக்கி பயணத்தைத் தொடங்கினார் ராம்சுரத். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமத்தை உபதேசித்தார். ''இடையறாது ராம நாமம் சொல்'' என்றார். ராம்சுரத்குமார் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி  பொங்கியது. உடுப்பதும் உண்பதும்கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.



உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும் புலப்படவில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமானவராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை `பித்து’ என்று வர்ணிக்கப்படும். `பைத்தியக்காரன்’ என்ற பட்டப்பெயர் கிடைக்கும். ராம்சுரத்குமாருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால் ராம்சுரத்குமார், ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.
உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாகப் பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது. கிராமத்தின் மரத்தடிகளில் அமர்ந்து வேலைக்குப் போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.




உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் தொடர்பான விஷயம்தான். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த 'தான்' என்பதை அனுபவிக்கிறபோது, வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப் பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தைவிட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.



திருவண்ணாமலைக்கு வந்தவர், ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்து இடையறாது ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை. கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.கங்கை நதி மீது அவருக்கு இருந்த பக்தி, காசியில் தகனம் செய்யப்படும் உடலைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட ஞானத்தேடல், புத்தரின் நினைவாக தனது மகளுக்கு `யசோதரா’ என்று பெயர் சூட்டியது, பகவான் ரமணரைச் சந்தித்தது, அரவிந்தரைச் சந்தித்தது... இப்படி யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கையே ஆன்மிகத் தேடலாக இருந்துவிட்டது.



ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி ராமதாஸரிடமிருந்து பக்திநெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு ராமதாஸரிடமிருந்து, 'ஓம் ஶ்ரீ ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்' எனும் மந்திர தீட்சை பெற்றார்.யோகி ராம்சுரத்குமார் சித்தியடையும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தார். தமிழ் மண்ணில் பிறக்க நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஒரு மகான் வடக்கில் பிறந்து, தெற்கில் நம் மண்ணில் வந்து சித்தி அடைவதென்றால் ஏன்?  நமக்காக தானே. நாம் உண்மை நிலை உணர தானே. யோகியின் வழியில் நாமும் மந்திர ஜெபத்தை பிடிப்போம்.









இங்கு பதிவேற்றம் செய்து  உள்ள காட்சிகள் சென்ற ஏப்ரல் மாதம் நாம் கண்டது. நம்  அன்பர் திரு.ஹரிஹரன் அவர்கள் இரண்டு ஆண்டுகளாக நம்மை கூடுவாஞ்சேரியில் யோகியாரின் ஆசிரமம் உள்ளது,சென்று தரிசியுங்கள் என்றார். நாமும் எங்கெங்கோ தேடி கடைசியில் கண்டோம், அருள் பெற்றோம்.



இந்த பதிவின் மூலம் திரு.ஹரிஹரன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அடுத்து நம் வாழ்வில் திக்குத் தெரியாது இருக்கும்  போது வழி காட்டிக் கொண்டிருக்கும் மகா பெரியவா தரிசனம்.



மகா பெரியவாவின் அருள் மொழிகளோடு பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ஐந்தறிவு ஜீவன் உணர்த்தும் சம்பவத்தை அப்படியே தருகின்றோம்.



1927 ஆம் ஆண்டில் காஞ்சி மடத்திற்கு ஒரு நாய் வந்தது. மகாபெரியவரின் பார்வையில் அது பட்டது. அது அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.

அந்த நாய் மடத்தில் கொடுக்கும் உணவை மட்டுமே சாப்பிடும். மடத்திற்கு வருபவர்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிடாது. தெருப்பக்கம் போனாலும் அங்கே கிடைப்பவற்றையும் உண்ணாது. தினமும் அதை குளிப்பாட்டி, நெற்றியில் திலகமிடுவார்கள். பெரியவரைக் காணவரும் பக்தர்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாது. மடத்தின் கால்நடைகளையும் பொருட்களையும் பாதுகாக்கும். மடத்து ஊழியர்கள் கண்ணயர்ந்துவிட்டால் அது தூங்காமல் விழித்திருக்கும். நாயின் இந்த குணத்தை அறிந்த மகா பெரியவா ஒவ்வொரு நாள் மாலையிலும் புன்னகையுடன், “நாய்க்கு உணவு கொடுத்தாகிவிட்டதா?” என்று வாஞ்சையுடன் கேட்பார்.



சில நேரங்களில் ஊழியர்கள் உணவிட மறந்துவிட்டால் பட்டினியாகவே கிடக்கும். பெரியவா உபவாசம் (விரதம்) இருக்கும் நாட்களிலும் அது சாப்பிடாது.

பெரியவா மற்ற ஊர்களுக்கு முகாமிட பல்லகில் செல்லும்போது,  பல்லக்கின் அடியிலேயே நாயும் செல்லும். யாத்திரை கிளம்பினால், அவருடன் செல்லும் யானையின் கால்களுக்கு இடையில் நடக்கும்.

ஒரு நாள், பெரியவா ஒரு ஊரில் முகாமிட்டிருந்தபோது சிறுவன் ஒருவன் அதன் மீது கல்லை வீசியதில் காயம் ஏற்பட்டது. நாய் வலி தாங்காமல் குறைத்துக்கொண்டே இருந்தது. பெரியவருக்கு தெரிந்தால் என்னாகுமோ என பயந்த மடத்து அதிகாரிகள், “நாயை ஏதாவது ஊரில் விட்டு வந்துவிடுங்கள்,” என்று உத்தரவிட்டனர்.

ஊழியர்களும் அதை பிடித்துக்கொண்டு, 40 கி.மீ. தள்ளி இருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டு சென்று கட்டிப் போட்டுவிட்டனர். ஆனால், நாய் விட்டதா என்ன,,,, கட்டை அறுத்துக்கொண்டு, ஊழியர்கள் மடத்திற்கு திரும்பும் முன்பே, வேறு ஏதோ வழியில் முகாமுக்கு வந்துவிட்டது.

அன்று முதல், அது உயிர் வாழ்ந்த வரை, மகா பெரியவரைத் தரிசிக்காமல் சாப்பிட்டதில்லை. பெரியவரைத் தரிசிக்க வரும் பக்தர்களெல்லாம் இந்த அதிசய நாயையும் பார்த்துவிட்டே செல்வார்கள்.



பக்தி என்பதே நன்றி மறவாமை தான்! ஆம்… நன்றி மிக்க இந்த நாயின் பக்தி நமக்கு நன்றி நமக்கும் நன்றி மறவாமல் இருக்க பாடம் கற்றுத் தருகிறது.



* மக்களுக்குத் தொண்டாற்ற விரும்புபவர்களின் மனதில் சாந்தமும், ஊக்கமும் இருக்க வேண்டும். முகத்தில் புன்னகை தவழ வேண்டும்.

* நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும். இது மிகச் சிறந்த தர்மம்.

* தர்மத்தை பலன் கருதிச் செய்ய வேண்டாம். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை.

* பக்தி செய்வதால் கடவுளுக்கோ, மகான்களுக்கோ லாபம் இல்லை. எல்லாம் நமக்குத் தான்.

* தர்மம் செய்வதாக இருந்தால் நினைத்தவுடன் உடனே செய்து விடுங்கள். தாமதித்தால் மனம் மாறிவிட வாய்ப்புண்டு.

* அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்யும் எந்த செயலும் அதற்குரிய பலனை தருவதில்லை.

* நமக்கு இரு கைகள் இருக்கின்றன. ஒருகையால் கடவுளின் திருவடிகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.

* பணத்திற்காக அலைவது மட்டுமே வாழ்க்கையல்ல. தினமும் கொஞ்சநேரமாவது இறைசிந்தனையுடன் இருக்கவேண்டும்.

எப்பேர்ப்பட்ட சிந்தனைகளை நம் பேசும் தெய்வம் அருளி உள்ளார்கள். மீண்டும் மீண்டும் படித்து வாழ்வின் புரிதலை உணர்வோமாக


நம் அன்பர் திரு.சுதன் காளிதாஸ் அவர்களின் காய் வண்ணத்தில் மிளிரும் அருள் காட்சிகளை மேலே இணைத்துள்ளோம். அவரருக்கு நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.

அடுத்து வள்ளலார் தரிசனம். நம் தளத்தில் அவ்வப்போது வள்ளலார் பற்றி தொட்டுக் காட்டி இருக்கின்றோம். சன்மார்க்கம் என்பது பெரிய கடல். அந்த கடலில் இருந்து சில துளிகளைத் தான் அவ்வப்போது நம் தருகின்றோம். அண்மையில் வள்ளலார் பற்றிய  ஒரு செய்தி  கிடைத்தது. அதனை அப்படியே இங்கு பகிர்கின்றோம்.





வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..எப்படி என்று கீழ்க்கண்ட பட்டியல் விளக்கம் தருகின்றது. நமக்கெல்லாம் இந்த செய்திகள் தேனில் ஊறிய பலா போன்றது தான்.


  • பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்.
  • காவி ஆடை உடுத்த மாட்டார்.
  • உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.
  • ஆற்காடு செருப்பு அணிந்து கொள்வார்.
  • கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்.
  • கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்.
  • சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.
  • கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.
  • சிம்மாசனத்தில் அமரமாட்டார்.
  • ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.
  • தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்.
  • அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.
  • உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்.
  • கை நீட்டி பேசமாட்டார்.
  • எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்.
  • எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்.
  • தீட்சை என்பன போன்ற காரியங்களை செய்ய மாட்டார்.
  • சத்தம் போட்டு பேசமாட்டார்..
  • சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..
  • ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.
  • உயிர்க்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..
  • புலால் உண்பதை  ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.
  • மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.
  • பணத்தை கையிலே தொடவே மாட்டார்.
  • தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.
  • உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.
  • எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர். வாழ வேண்டும் என்று சொன்னவர்.
  • வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்.
  • ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.
  • உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.
  • ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..
  • வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசங்கள்,சாத்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.
  • கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது என்றவர்.
  • மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்.
  • தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.
  • கடவுளைத்தேடி காடு,மலை,குகை,குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.
  • கடவுள் ஒருவரே ! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கூறியவர்.
  • அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே, ஒளியான கடவுள் என்றவர்.
  • தன்னை இயக்கும்  ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.
  • தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.
  • அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.
  • மூட நம்பிக்கைகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..
  • எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.
  • ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்,கடைபிடிக்க வேண்டும் என்றவர்.
  • தவத்திலேயே மூழ்க கூடாது என்றவர்.
  • தற்சோதனையும் வேண்டும் என்றவர்.
  • உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.
  • ஆலய வழிபாடு, உருவ வழிபாடு செய்ய வேண்டாம் என்றவர்.
  • பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற பொய்யான காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .
  • எவரையும் தொடமாட்டார்,தொட்டு பேசவும் மாட்டார்.
  • உண்மைக் கடவுளை தனக்குள்ளே  கண்டவர்.
  • உணவு உட்கொள்ளாமலே,வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..
  • நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..
  • கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.
  • ஏழைகளின் பசிப்பிணியை  போக்குவற்காக  சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை தோற்றுவித்தவர்.
  • ஒளி வழிப்பாட்டிற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..
  • தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தோற்றுவித்தவர்..
  • சங்கத்திற்காக மஞ்சள் வெள்ளை வண்ணத்தில்  தனிக் கொடியை அறிமுகப் படுத்தியவர்.
  • மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி.சமய.மதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.
  • உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..
  • ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி,வாழ்ந்தும் காட்டியவர்.
  • உலக மக்களுக்காக உண்மை நூலான  திருஅருட்பாவைத் தந்தவர்.
  • மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.
  • இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..
  • மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.
  • அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.
  • தன் பெயருக்கு முன்னால் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கைஎழுத்து போடுவார்.

இப்படி எல்லா வகைகளிலும் வேறு பட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள். படிக்க படிக்க மூச்சு முட்டுகின்றதா?அவர் பெருமையைச் சொல்லி மாளாது. இன்னும் வள்ளலார் வழியில் வாழ பழகுவோம்.



இன்னும் இந்த வரிசையில் ஏகப்பட்ட குருமார்கள் இருக்கின்றார்கள். பதிவின் நீளம் கருதி மூவர் தரிசனத்தோடு முழுமை செய்வோம். யோகியார், மகா பெரியவா, வள்ளலார் என மூன்று முத்தான குருமார்கள் தரிசனம் இங்கே பெற்றுள்ளோம். அவர்கள் சொல்லிய கருத்துக்களை  நடைமுறை வாழ்வில் பின்பற்ற நாம் முயற்சி செய்வோம்.

குருமார்களின் அருள் தொடரும்

மீள் பதிவாக:-

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - http://tut-temple.blogspot.com/2017/07/tut-100.html

No comments:

Post a Comment