Subscribe

BREAKING NEWS

05 September 2018

சிந்தனைக்கு சில

அன்பர்களே வணக்கம்.

புதிய முயற்சியாக. சிந்தனைக்கு சில என்று படித்தும், கேட்டும் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்து தருகின்றோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தித்து பாருங்கள். உங்களுக்குள் வெளிச்சம் கிடைக்கும்.

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் 
நிலவு லாவிய நீர்மலி வேணியன் 
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் 
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். 
- பெரியபுராணம் 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
- திருவாசகம்

உண்டதே உண்டு உடுத்ததே உடுத்து
உரைத்ததே அடுத்தடுத்து உரைத்து
கண்டதே கண்டு கேட்டதே கேட்டுக்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்
- பட்டினத்தார்


தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி -  ெகாடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!
- பாரதியார்

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே?
விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.

தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!
- சிவவாக்கியர்


தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே !
- திருமந்திரம்


காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்
அகண்டா கார சிவ போக மெனும்
பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப்
பூரணமாய் ஏக வுருவாய்க் கிடக்குதையோ
இன்புற்றிட இனி எடுத்த தேகம்
விழுமுன் புசிப்பதற்குச்
சேரவாருஞ் செகத்தீரே.
- தாயுமானவர்

யான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந்தானே.
- திருமந்திரம்

சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு 
அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் 
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் 
விதியே மதியாய் விடும்  
நல்வழி


ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு 
பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு 
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே
- திருமந்திரம் 


விட்டுவிடப் போகுதே உயிர் விட்டவுடனே உடலைச் 
சுட்டுவிடப்போகின்றார் சுற்றத்தார் பட்டதுபட் 
எந்நேரமுஞ் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் 
சொன்னேன் அதுவே சுகம்
பட்டினத்தார் 


அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் 
மடக்கொடியாரொடும் மந்தணம் கொண்டார் 
இடப்பக்கமே இறை நொந்தது என்றார் 
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே
- திருமந்திரம் 


உடலினை நிசம் என்று எண்ணி உலகெலாம் ஓடியாடிக் 
கடல்மரக் கலப்பாய்க் கம்பக் காகம் போல் கலக்கமுற்றாய் 
திடமருள் குருவின் பாதம் சிக்கெனப் பிடித்து நின்றால் 
நடமிடு நாகைநாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே

- நெஞ்சறிவிளக்கம்

காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர் 
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே? 
வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல் 
தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே.
- சிவவாக்கியர் 

சீவன் என சிவன் என வேறில்லை 
சீவனார் சிவனாரை அறிகிலர் 
சீவனார் சிவனாரை அறிந்தபின் 
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே.
- திருமந்திரம் 

உள்ளத்து ஒருவனை உள்ளுறு ஜோதியை 
உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை 
உள்ளமும் தானும் உடனே இருக்கினும் 
உள்ளம் அவனை உருவறியாதே.
- திருமந்திரம்

திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம் 
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே 
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே 
உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே 
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய் 
அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே 
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா 
வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.  
- திருஅருட்பா (ஆறாம் திருமுறை)

இரும்பனன் றுண்ட நீர்போல் 
எம்பெரு மானுக்கு, என்றன் 
அரும்பெற லன்பு புக்கிட் 
டடிமைபூண் டுய்ந்து போனேன், 
வரும்புயல் வண்ண னாரை 
மருவியென் மனத்து வைத்து, 
கரும்பினின் சாறு போலப் 
பருகினேற் கினிய லாறே 
- திருமங்கை ஆழ்வார்

எத்தனைதான் கற்றாலும் எத்தனைதான் கேட்டாலும் 
எத்தனை சாதித்தாலும் இன்புறா சித்தமே 
மெய்யாகத் தோன்றி விடும் உலக வாழ்வு அனைத்தும் 
பொய்யாக தோன்றாத போது. 
- சிவபோகசாரம் 

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு 
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப் 
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் 
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே! 
- அபிராமிஅந்தாதி 

பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும் 
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் 
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் 
உயிரை மேவிய உடல் மறந்தாலும் 
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் 
கண்கள் இமைப்பது மறந்தாலும் 
நற்றவத் தவர் உள்ளிருந்து ஓங்கும் 
நமசிவாயத்தை நான் மறவேனே 
- திருஅருட்பா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு. 
- திருக்குறள் (80) 

காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே 
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல்விழுந்தே 
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே 
குற்றாலந் தானையே கூறு. 
- பட்டினத்தார் 

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் 
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் 
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு 
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 

துன்பமினியில்லை சோர்வில்லை சோர்வில்லை தோற்பில்லை 
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் 
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 
- பாரதியார் 

கருவ டைந்து பத்துற்ற திங்கள் 
     வயிறி ருந்து முற்றிப்ப யின்று 
கடையில் வந்து தித்துக்கு ழந்தை வடிவாகிக் 
     கழுவி யங்கெ டுத்துச்சு ரந்த 
முலைய ருந்து விக்கக்கி டந்து 
     கதறி யங்கை கொட்டித்த வழந்து நடமாடி 
அரைவ டங்கள் கட்டிச்ச தங்கை 
     இடுகு தம்பை பொற்சுட்டி தண்டை 
அவைய ணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி 
     அரிய பெண்கள் நட்பைப்பு ணர்ந்து 
பிணியு ழன்று சுற்றித்தி ரிந்த 
     தமையு முன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ 
இரவி இந்த்ரன் வெற்றிக்கு ரங்கி 
     னரச ரென்றும் ஒப்பற்ற உந்தி 
யிறைவன் எண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன் 
     எரிய தென்றும் ருத்ரற்சி றந்த 
அநும னென்றும் ஒப்பற்ற அண்டர் 
     எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனமேவ 
அரிய தன்ப டைக்கர்த்த ரென்று 
     அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற 
அரிமு குந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே 
     அயனை யும்ப டைத்துச்சி னந்து 
உலக மும்ப டைத்துப்ப ரிந்து 
     அருள் பரங்கி ரிக்குட்சி றந்த பெருமாளே 
- திருப்புகழ்  

கரையில்வீண் கதையெலா முதிர்கருங் காக்கைபோல் 
கதறுவார் கள்ளுண்ட தீக் 
கந்தம் நாறிட வூத்தை காதம் நாறிட வுறு 
கடும் பொய்யிரு காதம் நாற 
வரையில்வாய் கொடுதர்க்க வாதமிடுவார் சிவ 
மணங்கமழ் மலர்ப்பொன் வாய்க்கு 
மவுன மிடுவாரிவரை மூடரென வோதுறு 
வழக்குநல் வழக்கெனினும் நான் 
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசுமவ 
ரோடுறவு பெற வருளுவாய் 
உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானுமுள் 
ளுவப்புறு குணக் குன்றமே 
தரையிலுயர் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் 
தலமோங்கு கந்த வேளே 
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி 
சண்முகத் தெய்வ மணியே.  
- திருஅருட்பா 

அறிவு, நோக்கம், செயல்களில் குழம்பியவர்கள் ராட்ஷசதனமான நாத்திக கருத்துகளால் கவரப்படுகின்றனர். 
- பகவத்கீதை 9.12.

சோதித்த பேரோளி மூன்று ஐந்து என நின்ற 
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் 
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று 
பேதித்து அவரைப் பிதற்றுகின்றாரே. 
- திருமந்திரம் (110) 

நேற்றுளார் இன்று மாளா நின்றனர் அதனைக் கண்டும் 
போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம் 
ஆற்றிலேன் அகண்டா னந்த அண்ணலே அளவில் மாயைச் 
சேற்றிலே இன்னம் வீழ்ந்து இளைக்கவோ சிறிய னேனே 
- தாயுமானவர் 

திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்திய நாள் 
கருநாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே 
ஒரு நாளினும் நின் தன்னை மறவா அன்பர் ஒற்றியில் வாழ் 
மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 
- திருஅருட்பா (இரண்டாம் திருமுறை)


நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை. 
- திருக்குறள் (331) 

நல்வினை தீவினை என்று இரு வகையால் 
சொல்லப்படும் கருவினில் தோன்றி 
வினைப் பயன் விளையுங் காலை உயிர்கட்கு 
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும். 
- மணிமேகலை 

எண்ணவிசாரமில்லாது, விவேகமற்ற சிறுபிள்ளைத்தனமாக நாளைக் கடத்துபவர்கள், கவனமில்லாதவர்கள், செல்வத்தால் மயக்கம் அடைந்தவர்கள் என்னும் இத்தகையவர்களுக்கு இவ்வாழ்க்கைக்கு அப்பால் உள்ள உறுபொருள் புலப்படுவதில்லை. இந்த உலகம் ஒன்றுதான் உண்டு. வேறொன்று இல்லவே இல்லை என்றே அவர்கள் சொல்கின்றனர்! இவ்வண்ணமாக அவர்கள் மரணத்திலிருந்து மரணத்திற்கே அவர்கள் மீண்டும் மீண்டும் அலைந்தேகுகின்றனர். 
- உபநிடதம்


பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான். 
- பகவத்கீதை 7.3.

எல்லா உலகமும் என்வசம் ஆயின 
    எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின 
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின 
     எல்லா வித்தையும் என்வித்தை ஆயின 
எல்லாப் போகமும் என்போகம் ஆயின 
     எல்லா இன்பமும் என்இன்பம் ஆயின 
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர் 
    எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே. 
- திருஅருட்பா 

கருணைமொழி சிறிதில்லேன் ஈதல் இல்லேன் 
     கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக் கேற்க 
ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை யாளும் 
     ஒருவா உன் அடிமைநான் ஒருத்த னுக்கோ 
இருவினையும் முக்குணமும் கரணம் நான்கும் 
     இடர்செய்யும் ஐம்புலனும் காமாதி யாறும் 
வரவரவும் ஏழைக்கோ ரெட்ட தான 
     மதத்தொடும்வந் தெதிர்த்தநவ வடிவ மன்றே 
- தாயுமானவர்


மாடத்து ளானலன் மண்டபத் தானாலன் 
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன் 
வேடத்து ளானலன் வேட்கை விட்டார் நெஞ்சில் 
மூடத்துளே நின்று முத்தி தந்தானே. 
- திருமந்திரம் (2614) 

உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல் 
கடல்மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே! 
- பட்டினத்தார்

பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல் 
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்? 
- பத்ரகிரியார்


எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும் 
கண்ணார் அமுதினைக் கண்டு அறிவாரில்லை 
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால் 
கண்ணாடி போலக் கலந்து நின்றானே. 
- திருமந்திரம் (603) 

கிழக்கெழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே 
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் 
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் 
விழக்கண்டும் தேறார் வியன் உலகோரே. 
- திருமந்திரம் (177) 

குளிர் வெப்பம், இன்பம் துன்பம் முதலியவை உடலுக்கு ஏற்படுவது இயல்பானது. இவைகளை பொறுத்துக்கொள் எவன் இன்ப துன்பங்களை சமமாக நினைக்கிறானோ அவனே சாகாநிலையை அடைய தகுதியானவன். 
- பகவத்கீதை 2.14





அற்ப மனமே அகில வாழ்வு அத்தனையும்
சொற்பனங்கள் கண்டாய் உண்மை சொன்னேன் நான்
கற்பனை ஒன்று நில்லா இடத்தே எனைச் சும்மா வைத்திருக்கக்
கல்லாய் நீ தான் ஒரு கவி.
- தாயுமானவர்

என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்.
- திருக்குறள் (77) 

தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள்,
தெய்வ நிலை ஒருவருமே காணார்; காணார்;
ஆரப்பா நிலை நிற்கப் போறார்? ஐயோ!
ஆச்சரியம் கோடியில் ஒருவன் தானே!
- அகத்தியர்ஞானம் (1:3) 

விட்டுவிடப் போகுதே உயிர் விட்டவுடனே உடலைச்
சுட்டுவிடப்போகின்றார் சுற்றத்தார் பட்டதுபட்
எந்நேரமும் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.
- பட்டினத்தார்

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம் விட்டே என் கண்ணம்மா உன் பாதஞ் சேரேனோ!
- அழுகணிச்சித்தர் 

நாள் என்செய்யும் வினைதான் என்செய்யும் எனை நாடி வந்த
கோள் என்செய்யும் கொடுங்ககூற்று என் செய்யும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
- கந்தர்அலங்காரம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும் கதியில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே
- திருமந்திரம் (2104) 

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இந்த மூன்றும் வேண்டவே வேண்டாம். வீனான இந்த ஆசைகளை விடுத்து நன்னெறியில் வாழ்ந்து இறைவன் அருளை பெற முற்படுங்கள்.
- திருவருட்பிரகாச வள்ளலார்

உடம்பினை முன்னம் இழுக்கு என்றிருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!!
- திருமந்திரம் 

ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் நீதான்
காட்டிலே எறித்த திங்கள் கானல் நீற் சலம்போல் ஆனாய்
நாட்டிலே தெய்வம் என்று நடந்து அலையாமல் உந்தன்
கூட்டினில் நாகை நாதர் குறிப்பு அறிந்து உணர்வாய் நெஞ்சே.
 - நெஞ்சறிவிளக்கம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
- திருக்குறள் 

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,
வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?
காலன்ஓலை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!
- சிவவாக்கியர் 

வீனான பயல்களுட மார்க்கம் கேளு
வெளியில் உள்ள கோயிலுக்குள் பூந்து பூந்து
கோணாமல் கும்பிடுவர் ஒன்றும் காணார்
குறும்பர் அவர் அலைகின்ற மார்க்கம் ஏதோ
நாணாமல் நாணுகின்ற மடையரப்பா
நாய் போலத் திரிவார்கள் தலங்கள் தோறும்
தோணாது முழுகுவார் தீர்த்தம் என்று
துறையேதும் காணாத மடையர் தானே
- திருவள்ளுவர் ஏணி ஏற்றம்

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, 'போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.
#திருவாசகம்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏழைநெஞ்சம்
புண்ணாகச் செய்தது இனிப் போதும் பராபரமே
- தாயுமானவர்

கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி
     கற்குநெறி தேர்ந்து கல்லேன்
கனிவு கொண்டுனது திருவடியை ஒருகனவிலும்
     கருதிலேன் நல்லன் அல்லேன்
குற்றமே செய்வது என் குணமாகும் அப்பெருங்
     குற்றம் எல்லாம் குணம் எனக்
கொள்ளுவது நின்னருட் குணமாகும் என்னில் என்
     குறைதவிர்த்து அருள் புரிகுவாய்
பெற்றமேல் வருமொரு பெருந்தகையின் அருளுருப்
     பெற்றெழுந் தோங்கு சுடரே
பிரண வாகார சின்மய விமல சொரூபமே
     பேதமில் பரப் பிரமமே
தற்றகைய சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
     தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
     சண்முகத் தெய்வ மணியே.
- திருஅருட்பா (தெய்வமணிமாலை) 

யானே என்னை அறிய கிலாதே,
யானே என்தன தேஎன்று இருந்தேன்;
யானே நீ:என் னுடைமையும் நீயே;
வானே ஏத்தும்எம் வானவர் ஏறே!
- திருவாய்மொழி 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.
- நல்வழி 

எருவாய் கருவாய் தனிலே
     யுருவா யிதுவே பயிராய் ...... விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
     யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
     யுடனே யவமா ...... யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா
     வெனவோ ...... தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார் முடிமே
     லிணைதா ...... ளருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
     முதுசூ ருரமேல் ...... விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
     சிறுவா திருமால் ...... மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
     திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.
- திருப்புகழ் 

அல்லா என்பார் சில பேர்கள்
     அரன் அரி என்பார் சில பேர்கள்
வல்லான் அவன் பரமண்டலத்தில்
     வாழும் தந்தை என்பார்கள்
சொல்லால் விளங்கா நிர்வாணம்
     என்றும் சிலபேர் சொல்வார்கள்
எல்லாம் இப்படிப் பலபேசும்
     ஏதோ ஒருபொருள் இருக்கிறதே
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
- குலசேகராழ்வார்

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!
- தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலார்
ஆனந்த மானடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மானடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தமாமே
- திருமந்திரம் 2796

நீரிற் குமிழிபோல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்
பேரின்பக் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்
- மெய்ஞ்ஞானப் புலம்பல்

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே.
- தேவாரம் 

கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி-அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே.
- திருப்பாணாழ்வார்

காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
     காடுகள் புக்குந் ...... தடுமாறிக்
காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
     காசினி முற்றுந் ...... திரியாதே
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
     தேற வுதிக்கும் ...... பரஞான
தீப விளக்கங் காண எனக்குன்
     சீதள பத்மந் ...... தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
     பாழ்பட வுக்ரந் ...... தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
     பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
     சோலை சிறக்கும் ...... புலியூரா
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
     தோகை நடத்தும் ...... பெருமாளே.
- திருப்புகழ் 

வாசியென்று மூச்சதனை வயிறுப்பவேயூதிக்
கூசி முகங் கோணிக் குருடாவார் - நாசி நுனி
தன்னை அறிந்து தவத்தில் இருக்காதார்
என்ன இருந்தும் இனி.
- ஞானவழிவெண்பா


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.
- ஒளவையார்

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை
நான் இன்று மறப்பனோ ஏழைகாள்? - அன்று
கருஅரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கம் மேயான் திசை
- பொய்கை ஆழ்வார் 

சிவம்:-
சிவம் என்பதற்குப் பொருள் சச்சிதானந்தம்.
சச்சிதானந்தம் என்பது சத்து + சித்து + ஆனந்தம்.

சி - சத்து (எல்லாம் உள்ளதாய் விளங்குவது)
வ - சித்து (எல்லாம் விளங்குவதாய் உள்ளது)
ம் - ஆனந்தம் (இந்த இரண்டினாலும் நிரம்பிய இன்பம்)
- திருஅருட்பா (வசனபாகம்)

காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பி லாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே
- பட்டினத்தார்

இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அனைத்தும் அழியக்கூடியவை. எல்லா இன்பங்களும் இறுதியில் துன்பத்தையே தரும்.
- ரமண மகரிஷி

மனமது செம்மை யானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மை யானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மை யானால் மந்திரம் செம்மை யாமே.
- அகத்தியர்ஞானம்

பதிவின் நீளம் கருதி அகத்தியர் ஞானம் பாடலோடு நிறைவு செய்கின்றோம். உலகெலாம் என்று பெரியபுராண பாட்டில் ஆரம்பித்து அகத்தியர் ஞானத்தோடு நிறைவு செய்தது நம்மிடம் இல்லை. தமிழில் உள்ள சில பக்தி நூல்களில் இருந்து சில பாடல் வரிகளை இங்கே தொகுத்துள்ளோம். சித்தர்பாடல்களும் இங்கே சொல்லப்பட்டுள்ளன.இவற்றில் சில உங்களுக்கு தெரிந்த பாடல்களாக இருக்கலாம். உங்களுக்கு பிடித்த, கருத்தை கவர்ந்த பாடல்களை மீண்டும் மீண்டும் அசை போடுங்கள். நிச்சயம் உங்களுக்குள் உள்ள இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கும் என்பது உறுதி.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.com/2017/12/108.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - http://tut-temple.blogspot.com/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment