Subscribe

BREAKING NEWS

06 September 2018

குரு தரிசனம் : அருணாச்சலத்திலிருந்து வருகின்றேன்

அனைவருக்கும் வணக்கம்.

குருவின் அருளாலே இன்றைய பதிவு வழங்கப்படுகின்றது. நேற்றைய வள்ளலார் பதிவிற்கு பின்னூட்டம் அளித்த நம் அன்பர் திரு.சண்முகம்  இன்றைய குரு நாளில் ரமணர் பற்றிய பதிவு கிடைக்குமா? என்று ஏக்கத்தோடு கேட்டிருந்தார். நேற்று முதலே சிறிது ரமணர் பற்றி படிக்க ஆரம்பித்தோம். அவரைப் பற்றி பேசுவதும், சிந்திப்பதும் தேவாமிர்தமே. இன்று நாம் அளிக்க நினைத்த பதிவு வேறு..குருவின் அருளால் இன்று நீங்கள் இங்கே படிக்கும் பதிவு வேறு; ஆம்..அனைத்தும் அந்த அருணையின் கருணையே.

ரமணர் பற்றி எழுத நினைப்பதும் பேச நினைப்பதும் கோலம் போடுவது போன்றது தான். கோலம் தானே அது எளிதாக தரையில் போடலாம் அல்லவா? இது தரையில் போடும் கோலம் அல்ல. பின்னே? நீரில் போடும் கோலமும் அல்ல..அத்தனையும் தாண்டி காற்றில் போடும் கோலம் தான். இது எப்படி முடியும்? அது தான் பகவான். எத்தனையோ மகான்கள் இந்த புனித பூமியில் அவதாரம் செய்து வருகின்றார்கள்.அவற்றுள் சிலரே பகவான் என்று அழைக்கப்படுவர். ஒருவர் ரமணர், மற்றொருவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். இன்று பகவான் தரிசனம். அதுவும் குரு நாளில் பெற இருக்கின்றோம்.



ரமணர் சொல்லும் செய்திகள் பார்ப்பதற்கு எளிமையாக தோன்றும். ரமணர் படித்து விட்டு செல்லும் விஷயங்களை சொல்லவே இல்லை. படித்து மனதில் இருத்த வேண்டிய செய்திகளை மட்டுமே சொல்லி இருக்கின்றார். ரமணாத்மியம் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியது ஆகும். இது ஆழ்ந்து செல்லக் கூடியது, ஆழ்ந்து சொல்லக்கூடியது, ஆழ்ந்து சிந்திக்க கூடியது; இது தான் பகவானின் சிறப்பு.இவர் மாய மந்திரம் எதுவும் செய்தவர் வல்லவர். மாயா பற்றி ஆத்ம விசாரம் பற்றி அனுதினமும் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் பேசியவர். அருணையிலே இருந்து கொண்டு மக்களைத் தன்பால் தற்போது வரை வரவழைத்துக் கொண்டிருப்பவர். ரமணரை நேரில் நாங்கள் கண்டதில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் அருணைக்கு அழைக்கப்படுவது ரமணரால் தான். ஒரு சாதாரண மனிதனாக அவதரித்து, பின் தன் முயற்சியால் தெய்வ நிலை அடைந்தவர். அமைதியை ஆராதனை செய்தவர். ஆனந்தத்தை பரிபூரணமாக கொடுத்துக்கொண்டு வருபவர்.எளிமையாய் வாழ்ந்தவர். சுருக்கமாக சொன்னால் ஞான வள்ளல் ரமணர். பகவான் பற்றி இனி உணர்வோம்.


அருப்புக்கோட்டை நகரின் அருகிலுள்ள திருச்சுழியில் 1879-ம் ஆண்டு பகவான் ரமணர் பிறந்தார். ரமணரின் சிறு வயதிலேயே தந்தை சுந்தரம் ஐயர் காலமானார், தாயார் அழகம்மை அரவணைப்பில் வளர்ந்த ரமணர் பள்ளி வயது வரை சராசரி மாணவராகவே இருந்தார். விளையாட்டும் நீச்சலுமே அவரது பொழுதுபோக்கு. தனது 16-ம் வயதில் 1895-ல் அவரின் வீட்டிற்கு வந்த விருந்தினர் “அருணாசலத்திலிருந்து வருகிறேன்” என்று சொன்ன வார்த்தை அவரைப் பரவசப்படுத்தியது. திருவண்ணாமலைதான் அருணாசலம் என்பதை அவர் மூலம் உணர்ந்தார். அதுமுதல் அவரது உள்ளத்தில் ஒரு புதிய கிளர்ச்சி ஏற்பட்டது.

பின்பு ஒரு சமயம் மரண பயம் அவரை ஆட்கொண்டது. அந்த அனுபவத்தைத் தானே உணர ஒரு பிணம்போலப் படுத்தார், அவருள் ஏற்பட்ட உள்ளுணர்வு அவருக்கு இறப்பின் ரகசியத்தையும் இறப்பிற்குப் பின் என்ன என்பதையும் விளக்கியது.

“அழிவற்று அண்டமெங்கும் நிறைந்திருக்கும் ஆன்மஜோதியோடு ஒன்றியவன் நான்” என்ற அறிவு புலப்பட்டது.

1896, ஆகஸ்ட் 29-ல் அவரது அண்ணனின் ஒரு கோபச் சொல் இவரது ஞானத்தின் வாசலைத் திறந்தது. அண்ணனுக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு அண்ணாமலைக்குப் புறப்பட்டார்.
“நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவரது உத்தரவுப்படி கிளம்புகிறேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்திருக்கிறது. இதற்காக ஒருவரும் விசனப்பட வேண்டாம். ‘இதை'த்தேடி காசு, பணம் செலவு செய்ய வேண்டாம்...” என்று எழுதி கீழே தனது பெயரைக் குறிப்பிடாமல் கோடு போட்டுவைத்தார். ‘தகப்பனார்' என ஈசனையும், ‘இது' என அஃறிணையில் தன்னையும் குறிப்பிட்டார்; ஆணவம் அழிந்த ஆத்மாவாக வெளிப்பட்டு, தான் ஞானம் அடைந்துவிட்டதை உணர்த்தினார்.



                             ரமணர் எழுதிய கடிதம் மேலே இணைத்துள்ளோம் 

1896 செப்டம்பர் முதல் நாள் ரமணரின் அருள்பாதம் அண்ணாமலை என்னும், அருணாசலத்தில் அடி வைத்தது. நேராகக் கோவிலுக்குள் நடந்தார். “அப்பா, நான் வந்துவிட்டேன்” என்றுகூறி அண்ணாமலையார் முன் ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவரது பிரயாணம் அன்றோடு நிறைவுபெற்றது. அதற்குப்பிறகு தன் ஸ்தூல சரீரத்துடன் வேறு எங்குமே சென்றதில்லை.

ரமணரின் புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது. ரமண பகவானின் ‘நான் யார்' என்ற தன்னையறியும் தத்துவ விளக்கம் அனைவரையும் கவர்ந்தது. ‘‘நான் என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே ஒடுங்கும், அதுவே தபஸ்!” என்பது போன்று விளக்கங்கள் அருளினார்.

ரமண மகரிஷி காலத்தில் அவரைக் கண்டோர் அடைந்த ஆனந்தத்திற்கும், துன்பங்கள் நீங்கி அமைதியடைந்த மக்களின் சுகத்திற்கும் அளவில்லை. ரமணர் தனது ஆற்றலை வெளிப்படையாக யாருக்கும் காட்டுவதில்லை. பயன் அடைந்தோர் அவரிடம் நன்றி கூறினாலும் அதை அவர் ஏற்பதில்லை. மௌனமே அவரது ஆசீர்வாதம். மௌனமே அவரது பேச்சு. அதில் நாம் மூழ்க மனமோ சுகமாகும்.

பகவான் ரமணர் தனது தாயாரின் மறைவின்போது அவரின் தலையிலும் மார்பிலும் தனது இரு கைகளையும் வைத்து முக்தி அடையச்செய்தார். அது மட்டுமல்ல, தாயாரின் சமாதியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து கோவிலும் கட்டினார், அதை தியான பூமியாக்கினார். ஒவ்வொரு நாளும் பலரும் அங்கமர்ந்து அன்பின் அருளொளியைப் பெறுகின்றனர். ரமணரை இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பார்சியர்கள் என பல்வேறு மதத்தவரும் சென்று வழிபட்டுள்ளனர். ஞானி என்பவன் எவரும் எளிதில் அணுக முடியாதவன் என்ற நிலையை மாற்றி அனைவரும் தன்னை அணுகும்படி வாழ்ந்தார். ஆத்ம விசாரணை செய்யும்முறையை தெளிவுபடுத்தினார்.

கிரிவலத்தினால அடையும் நன்மை என்ன எனக் கேட்ட பக்தருக்கு, “கிரிவலம் தீயைப் போன்றது. தன்னைத் தொட்டவரைத் தீ சுடுவதுபோல அது உன்னை ஈர்க்கும். நம்பிக்கை உண்டோ இல்லையோ, ஒருமுறை கிரிப்பிரதட்சணம் செய்துபார்; நீயே உணர்வாய்” என்றார். ரமணரின் இந்த கூற்றுக்குப் பிறகே கிரிவலம் பிரபலமானது. பவுர்ணமியில் இன்று லட்சக்கணக்கானோர் வலம் வருகின்றனர். ‘உன்னை விசாரித்து அறி' என்பது அவரது சுருதி வாக்கியம்.

ரமணரின் திருவிளையாடல்களை இங்கே தருகின்றோம்.

ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை. மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடு’ என்றார்.

உடனே பழனிசாமி உணவை  சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு சிறு சிறு உருண்டைகளாக்கிப் பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும்  ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு ‘எல்லாம் ரமணரருள்’ என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள்.



எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார். எதிலும் பற்றற்று இருப்பது தானே ஞானிகளின் இயல்பு.

அடுத்து மற்றுமொரு நிகழ்வு இங்கே சொல்ல விரும்புகின்றோம். இதில் சற்று நகைச்சுவையும் உண்டு. சதா ஞான நிலையிலேயே பகவான் இருந்து வந்த போதிலும் ஆசிரம வாழ்வில் அவருடைய நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.

ஒருநாள்…  விடியற்காலை மூன்றுமணி இருக்கும். மகரிஷியை பார்க்கச் சிலர் ஆசிரமத்திற்கு வந்தனர்.  ஆசிரமத்தில் யாரையும் காணாததால், அவர்கள் நேரே சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே ஆசிரம சமையல் பாத்திரங்களை ஒருவர் மெதுவாகக் கழுவிக்கொண்டிருந்தார். அவரிடம்,  ‘ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டனர்.

அதற்கு அந்த மனிதரும், ’ஓ, ரமணரா, இதோ இருக்கிறாரே, இதுதான் ரமணர்’ என்று சொல்லி, தான் கழுவிக் கொண்டிருந்த அண்டாவை அவர்களிடம் காண்பித்தார். வந்தவர்களோ அவருக்குக் காது கேட்காதோ என நினைத்துக் கொண்டு, மீண்டும் அதையே கேட்டனர்.

அதற்கு அந்த மனிதர் மீண்டும் தன் கையில் இருந்த அண்டாவைக் காட்டி,  ‘பாருங்கள்,  இதுதான் ரமணர். ரமண மகரிஷி என்று பேர் கூடப் பொறித்திருக்கிறார்களே, உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்றார்.

வந்தவர்கள்,  இவர் யாரோ சித்த சுவாதீனமில்லாத மனிதர் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு தரிசன ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.

பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் ‘பகவான் வருகிறார், பகவான் வருகிறார்’ என்ற குரல் கேட்டது.

அனைவரும்  மரியாதையுடன் எழுந்து நின்று பார்த்தனர், அங்கே பாத்திரம் தேய்த்த அந்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.

அவர் தான் பகவான் ரமணர் என்று அறிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு தாளவில்லை. அதே சமயம், பகவான் ஏன் தங்களிடம் அப்படி நடந்து கொண்டார் என்று அறிய விரும்பினர்.  அவரை அணுகிக் காரணம் கேட்டனர்.

அதற்கு பகவான்,  ‘நான்தான் பகவான்னு நெற்றியில எழுதி ஒட்டிக் கொண்டா இருக்க முடியும்.?’ என்று கேட்டார், புன் சிரிப்புடன். பின், ‘நான் என்பது இந்த உடலல்ல; இதைத் தான் நான் இத்தனை வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அப்படிச் சொல்லியும் என்ன பயன், எல்லோரும் அதை  உணராமல் இருக்கிறீர்களே!’ என்றார் வருத்ததுடன்.

தங்களுக்காக வாழாமல் பிறர்காகவே வாழ்ந்ததால்தான் அவர்கள் மகான்கள் என்று போற்றப்படுகின்றனர்.

அவருடைய உபதேசங்களின் சாரங்களில் சில:

* இறைவனைச் சரணடை, சரணாகதியே மகத்தான பிரார்த்தனை.

* எவர் முன்னிலையில் பரிபூரண அமைதி கிடைக்கிறதோ அவரே உன் குருவாவார்; குரு உள்ளும் இருக்கிறார், வெளியேயும் இருக்கிறார்.

* எல்லாவற்றையும் துறந்து அகங்காரத்துடன் இருப்பதைவிட, அகங்காரத்தைத் துறந்த அரசனாயிரு.

- ரமாணாத்மியம் இன்னும் பருகுவோம்.

மீள்பதிவாக:-

கேட்பது விவேகானந்தரோ? - இது ரமணர் வழி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_26.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_31.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.com/2017/11/2.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.com/2017/11/2.html

No comments:

Post a Comment