Saturday, September 2, 2017

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு

அன்பார்ந்த தள உறவுகளே


இப்போது தான் ஒரு உழவாரப் பணி செய்து முடித்தோம்.அந்த அனுபவமும், மகிழ்வும் இன்னும் மனத்துள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கின்றது. இதோ..அடுத்த உழவாரப் பணிக்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.பதிவின் இறுதியில் அறிவிப்பைப் பார்த்து கலந்து கொள்ளவும்.

நாம் ஏற்கனவே கூறியது போல உழவாரமும், அன்னதானமும் நம் இரு கண்கள். உழவாரப் பணி செய்யச்  செய்ய நம்முள் உள்ள மன அழுக்குகள்,கசடுகள் முழுதும் நீங்காவிட்டாலும்,சிறிது சிறிதாக நீங்கிக் கொண்டிருப்பதை நாம் உணர்ந்து வருகின்றோம். மனமது செம்மையானால்,சித்தமும் செம்மையாகுமே.சித்த சுத்திக்கு  உழவாரப் பணி ஒரு அருமருந்தாகும். இந்த பணியில் ஈடுபடும் முன்பு, நாம் எப்படி இருக்கின்றோம். 

இறைவன் நாம் பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.ஆன்மீக பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது.

அறிவு பூர்வமாக சிந்தித்தால், கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு ஸ்தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றுகின்றோம்.எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்.ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் இதற்கு ஈடு இணை உண்டா? என்றால் இல்லவே இல்லை என்பதே உண்மை.

மனம் முழுதும் ஆணவம்,கன்மம்,மாயை,பேராசை,சினம்,கடும்பற்று,உயர்வு தாழ்வு மனப்பான்மை,வஞ்சம்,சினம்,முறையற்ற பால் கவர்ச்சி என்று ஒரே கலங்கல்கள்.இதில் கடவுளைக் காண முடியவில்லை என்ற குற்றம் வேறு? எப்படி அவர் தெரிவார்? இவை அனைத்தும் நீக்கினால் தானே,அவரைக் காண முடியும். உழவாரப் பணி பற்றி மேலும் என்ன சொல்லலாம் என்று தேடிய போது,கலியுகத்தின் கண் கண்ட குரு, தெய்வத்தின் குரல் மூலம் உதிர்த்த முத்துக்களை இங்கே தருகின்றோம்.

அடடே..என்ன பொருத்தம் ! உழவாரப் பணி பற்றியும், அன்னதானம் பற்றியும் கூறி உள்ளார்.இதோ!
பெரியவா சொல்வதைக் கேளுங்கள். உழவாரப் பணி செய்ய வாருங்கள்!!சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

சித்த சுத்திக்குப் பயன்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள் பல உண்டு. இந்தச் சின்னச் சின்ன தர்மங்களை நம்முடைய பெரியவர்கள் தலைமுறை தத்துவமாக அநுசரித்து வந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் திருப்தியும் சந்தோஷமும் நிறைந்திருந்தன. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்த்து, அதை நாம் பின்பற்றினாலே போதும். புதிதாக ஒரு கொள்கையும் வேண்டாம். நாமும், சந்தோஷமாக, திருப்தியாக இருக்கலாம்.
பெரிய அத்யாத்ம விஷயங்களில் மட்டுமில்லாமல், ஒரு சமுதாயத்தில், ஒரு குடும்பத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளில்கூட நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அற்புதமாக வழிகாட்டியிருக்கிறார்கள். உதாரணமாக உறவு, சிநேகிதம் எல்லாம் அந்த நாளில் வெகு உயர்ந்த முறையில் காப்பாற்றப்பட்டன. ஒரு கலியாணம், அல்லது அபரகாரியம் (இறுதிச் சடங்கு) என்றால் பலர் ஒன்று சேர்ந்து செலவு செய்து நடத்திக் கொடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு உயர்ந்த பண்பு?
இந்தக் காலத்தில் நடப்பதுபோல் ‘டெமான்ஸ்ட்ரேஷனும்’, வெளிவேஷமும் அப்போது இல்லை. ஆனால் அந்த நாளில்தான் ஏழைகளுக்கு உண்மையாக உதவிசெய்கிற மனப்பான்மை சுபாவமாகக் காரியத்தில் அநுசரிக்கப்பட்டது. ஒரு கலியாணத்துக்குப் போகிறவர்கள் தங்களால் முடிந்ததை, ஐந்தோ, பத்தோ உதவி செய்வது என்பதால் கலியாணம் செய்பவர்களுக்கு எத்தனையோ பாரம் குறைந்தது.ஒரு கூட்டத்திலே பலர் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் போதும். கொடுக்கிறவர்களுக்குப் பெரிய சிரமம் ஏதும் இல்லை. ஆனால் வாங்குகிறவனுக்கு மொத்ததில் கணிசமாகக் கிடைக்கும். இப்படித்தான் ஓர் ஏழைக்குக் கஷ்டம், அவன் ஒரு கலியாணம் செய்யவேண்டும் அல்லது அபரகாரியம் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் உதவி செய்து அந்தக் காரியத்தை நடத்திக் கொடுத்து வந்தார்கள். முன்னாட்களில் பந்துகளுக்குள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் அதிகம் இல்லை. பணக்காரனாக இருப்பவன் ஏழையான பந்துவுக்கே அதிக உதவி செய்வான். இதெல்லாம் தர்மத்தைச் சேர்ந்தது. சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, உதவியைப் பெறுகிறவனைவிட உதவி செய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.
ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. பழைய கால பந்துத்துவம் பணக்காரர்களுக்கு இல்லை. ஏழையான உறவினர்களுக்கு உதவுகிற மனப்பான்மை குறைந்து விட்டது. பழைய காலத்தில் நடந்தது உண்மையான அன்னதானம். இப்போது மனிதர்கள் தங்களைப் போன்ற பணக்காரர்களுக்காகவே பார்ட்டி – ஃபீஸ்ட் வைக்கிறார்கள். தேசத்தில் ஏராளமாக இப்படிப் பணமும் பண்டமும் செலவாகின்றன. இதில் தர்மத்துக்கோ, சித்த சுத்திக்கோ எதுவும் இல்லை. இவன் காரியார்த்தமாகத்தான் ஒருத்தனைக் கூப்பிட்டு பார்ட்டியும் ஃபீஸ்டும் வைக்கிறான். பார்ட்டி கொடுத்து, அதில் சாப்பிட்டவர்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறான். பார்ட்டி சாப்பிட்டவனுக்குத் தெரியும். ‘இவன் பிரியத்தின் பேரில் தனக்கு சாப்பாடுபோடவில்லை. காரியத்துக்காகத்தான் சாப்பாடு போட்டான்’ என்று. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகிறான். ஆகையால், இவன் அவனை ஏமாற்றுகிறான் என்றால் அவனோ, இவன் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இவனையே ஏமாற்றிப் போகிறான். ஆக ஃபீஸ்டும் டோஸ்டும் ஏமாற்று வித்தையாகவே ஆகின்றனவேயன்றி சித்த சுத்திக்கு பயன்படவில்லை.ஏழைக்கு அன்னதானமோ பொருள் உதவியோ செய்யும் போது இரண்டு பக்கத்திலும் உண்மையான சந்தோஷமும் பிரியமுமே நிரம்பியிருந்தன. இப்போது பார்ட்டி நடத்தும்போது அங்கே உண்மையான பிரியம் இல்லாததோடு, துவேஷம் வேறு உண்டாகிறது. வசதியிருப்பவர்கள் பார்ட்டி நடத்துவதைப் பார்த்து, வசதியில்லாதவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகின்றன. உறவு முறைகளில் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டக்கூடாது என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.
‘வசதியுள்ளவர்கள்தான் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும்; நாம் என்ன செய்யலாம்?’ என்று மற்றவர்கள் எண்ணக்கூடாது. சரீரத்தால் மற்றவர்களுக்குக் கைங்கரியம் செய்வது பெரிய புண்ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும்; வசதியே இல்லாதவர்களும் இவ்விதத்தில் பிறருக்கு சரீர சகாயம் செய்ய முடியும்.
ஒவ்வொருத்தரும் — பிறருக்குக்கூடத் தெரிய வேண்டாம் — ஏதோ ஓர் ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கே உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும். அது சித்த சுத்திக்கு பெரிய உதவி. இது மாதிரி சின்ன தர்மங்களை எவரும் செய்யலாம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டையில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.‘ஈசுவர அநுக்கிரகம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால்தான், சித்த சுத்தி உண்டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், நாம் மனசைக் கலக்கிக் கொண்டு ஈஸ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனசு தெளிவாகும்போது ஈஸ்வர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக் கொண்டு, அவனுடைய அநுக்கிரஹத்தைப் பெறமுடியும்.

படித்தீர்களா?  அன்னதானம்,உழவாரம் இவற்றின்  அருமை இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகின்றோம். சொன்னவர் யார்? நம் உம்மாச்சி தாத்தா ஆயிற்றே.TUT தளத்தின் முதல் உழவாரப் பணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பெரிய முத்து மாரியம்மன் கோவிலில் 05/06/2016 அன்று நடைபெற்றது. இதோ! இந்த ஆண்டு இரண்டாம் உழவாரப் பணியை பெருங்களத்தூர் அருகில் உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் செய்தோம்.மூன்றாம் உழவாரப் பணியை மயிலாப்பூர் குழந்தைவேலர் திருக் கோவிலில் செய்தோம். ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு அனுபத்தை தந்தது.இதோ ! அடுத்த உழவாரப் பணி அறிவிப்பு.

4 ஆம் உழவாரப் பணி மற்றும் கூட்டு வழிபாடு அறிவிப்பு:

இறை அன்பர்களே.நமது TUT குழுமத்தின் நான்காம்  உழவாரப்பணியை பற்றிய அறிவிப்பை இத்துடன் அறிவிப்பு செய்கின்றோம். நான்காம்  உழவாரப்பணி  கொளத்தூரில் உள்ள திருமால் மருகன் ஆலயத்தில் வருகின்ற 17/09/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.முன்னோர்கள் நமக்காய் குருவருளை யாசித்துப் பெற்றுத் தரும் புரட்டாசி மாளயபட்சத்தின் யதிமாளயத் திருநாள் 17.9.2017 அன்று வருகின்றது.அன்றைய தினம் நாம் மேற்கொள்ளும் தொண்டு, கண்டிப்பாக நம் தலைமுறையைக் காக்கும் என்பது உறுதி.நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
அபிஷேகம்,ஆராதனை 
தீபாராதனை 
பிரசாதம் வழங்கல் 


நாள்:17/09/2017 ஞாயிற்றுக்கிழமை 

இடம் :திருமால் மருகன் ஆலயம்,முதல் பிரதான சாலை,திருப்பதி நகர்,கொளத்தூர்,சென்னை -99

நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 

அனைவரும் வருக! இறையருள் பெறுக !! 

வழித்தடம் விபரங்களுக்கு :

முதலில் நேராக ரெட் ஹில்ஸ் பேருந்தில் ஏறி ரெட்டேரி நிறுத்தத்தில் இறங்கவும். நேரடியாக ரெட் ஹில்ஸ் பேருந்து இல்லையென்றால் கோயம்பேடு வந்து,அங்கிருந்து வந்து ரெட்டேரி இறங்கவும்.அங்கு சரியாக நான்கு சாலைகள் பிரியும்.                                   கோயம்பேடு முதல் வழித்தடம்


ரெட்டேரி இறங்கி வலதுபுறம் உள்ள சாலையில் வந்து அங்கிருந்து செல்லும் பேருந்தில் ஏறி இரண்டாம் நிறுத்தம் அதாவது மங்கம்பாக்கம் தாண்டி இறங்கி அப்படியே  சாலையில்  வரவும்.
ரெட்டேரியில் இருந்தே நடந்து வரும் தூரம் தான்.எனவே நடந்தே வந்து விடலாம்,இயாலாதவர்கள் பேருந்தில் வந்து, அங்கிருந்து நடந்து வரவும். பேருந்து வசதி உள்ள கோவில் என்பதால், நாம் மகிழுந்து ஏற்பாடு செய்யவில்லை.மேலும் நாம் இது போன்ற சேவைகளில், நம்மிடம் உள்ள நிதியைக் கொண்டே செய்து வருகின்றோம். மகிழுந்துக்கு ஆகும் பணம் இருந்தால் வேறு ஏதேனும் சேவைகளுக்கு நாம் செலவிட முடியும். கண்டிப்பாக, போக்குவரத்து வசதி இல்லாத இடங்களுக்கு நாம் செல்லும் போது, வரும் காலங்களில் மகிழ்ந்து ஏற்பாடு செய்வோம்.


No comments:

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌