Tuesday, September 12, 2017

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு

பெரிய புராணம்.

பெயரில் மட்டும் பெரிதன்று.கருத்தில் பெரிது,சிந்தனையில் பெரிது,ஆக்கத்தில் பெரிது,பண்பில் பெரிது,சிவ புண்ணியத்தில் பெரிது  என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.பெரிய புராணத்தில் சிவனார் பெருமைகள் பற்றி சொல்லவில்லை.மாறாக அடியார் பெருமை மட்டும் தான் சொல்லப் பட்டுள்ளது.அடியார் பெருமை பற்றி பேசி,ஏன் பெரிய புராணம்  வேண்டும்,இதோ நம் அவ்வை பாட்டியிடம் கேட்போம்.

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

அப்படியாயின் தொண்டர்கள்/அடியார்கள் பெருமை பேசும் புராணம்.எனவே தான் அது பெரிய புராணம்.நமக்கும் பெரிய புராண பேரின்ப களிப்பில் திளைக்க ஆசை.அவரிடமே விட்டுவிட்டோம்.விரைவில் ஒரு தொடராக பெரிய புராணம் பற்றி இந்த அடியேன் இங்கே பேச எல்லாம் வல்ல இறை வாய்ப்பு வழங்கட்டும்.

இந்த பதிவில் அன்னதான அறிவிப்பு இறுதியில் இடம்பெற்றுள்ளது.வாய்ப்புள்ள அன்பர்கள் எங்களுடன் இணையும்படி தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.அன்னதான சிறப்பை  வலியுறுத்தும் பெரிய புராண நிகழ்வினை "மூர்க்கற்கும் அடியேன்” என்ற பதம் மூலம் அறிவோம்.
மேற்சொன்ன வரிகளில் இந்த நாயன்மார் அடக்கம்.இருப்பினும் சற்று விளங்க காண்போம்.
தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். தொண்டை நாடு என்பது சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்களைக் குறிக்கும்.சென்னையைப் பற்றி சொல்லும் போது , தருமமிகு சென்னை என்று கூறுவார்கள்.ஏன்? தொண்டை நாடு சான்றோர் உடைத்தன்றோ? சான்றோர் இருந்தால் தானே தானம்,தருமம் என அனைத்தும் மேலோங்கும்.இந்த நாயன்மாரும் சான்றோர் தான்.அதிற் சிவனடிமைத் திறத்தில் சிறந்து வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்தவர். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியில் இடைவிடாமற் கடைப்பிடித்து வந்தார்.

இவ்வாறு அமுதூட்டி வரும் நாளில், அடியார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்திக் கொண்டே வந்தது.அவர் சற்றும் மனம் கோணாமல்,தம்மிடம் உள்ள செல்வத்தை அமுதூட்டும் திருத்தொண்டிற்கு அர்ப்பணித்தார்.தன்னிடம் உள்ள செல்வம் கரைந்தது.இப்போது நாமாக இருந்தால் என்ன செய்வோம் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அவர் அடுத்து அவருடைய சொத்துக்களை விற்று அன்னதான திருத்தொண்டு செய்ய ஆரம்பித்தார்.

சொத்துக்களும் விற்றுத் தீர்ந்தது.அடுத்து அவர் செய்த செயல் தான் நம்மை மூக்கின் மேல் விரல் வைத்து யோசிக்க வைக்கின்றது.அவர்க்கு தெரிந்த ஒரே செயலான சூதாடுதலை தேர்ந்தெடுத்தார்.எனவே சூதாடத் தொடங்கி,அதில் வரும் செல்வத்தைக் கொண்டு அமுதூட்டினார்.இங்கே நாம் சூதாடுதல் தவறு என்று தர்க்கம் கொள்ள வேண்டாம். அவர் செய்த செயலின் விளைவே முக்கியம்.அதுவும் அவர் நேரே கோயிலுக்கு சென்று, இறைவனிடம் வேண்டி,பின்பு தான் சூதாடுவார்.கடைசியில் கிடைக்கும் பொருளைக் கொண்டு அமுதூட்டுவார்.

இங்கும் சிவ பெருமான் ஒரு சோதனையை வைத்தார்.நாட்கள் செல்ல,செல்ல அவ்வூரில் யாரும் விளையாட வரவில்லை.பின்பு அங்கிருந்து சென்று,பல ஊர்களுக்குச் சென்று,ஆங்காங்கே விளையாடி,சேர்த்த பொருளை,அப்படியே அன்ன சேவையில் இட்டார்.இந்த நாட்களில் அவர் அப்படியே திருக்குடந்தை வந்து சேர்ந்தார்.அங்கும் இதே செயலில் ஈடுபட்டார்.அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடி,தன் பணியை நிறைவு செய்த அவருக்கு,மீண்டும் சோதனை ஏற்பட்டது.

இம்முறை சில ஆட்டங்களில் தோற்கலானார்.இருப்பினும் மனம் தளராது, கடைசி ஆட்டம் ஆடி வெற்றி பெறுவார்.அப்போது எதிராடுபவர் ஏதேனும் சண்டை இட்டால்,தன்னிடம் உள்ள உடைவாளால் குத்தி பணிய செய்வார்.சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.சூதினால் கிடைத்த பொருள் என்றாலும், அடியார்கள் அனைவரும் திருப்தியாக உண்ட பின்பு,கடைசி பந்தியில் இருக்கும் மிச்ச,சொச்ச உணவை உண்பதே இவரது வழக்கம்.இது தான் நாம் அறிய வேண்டிய பெரிய நீதி.

இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

அனைவரும் பெரியபுராண நாயகர் ஒருவரான நற்சூதர் – மூர்க்கர் பற்றி அறிந்து கொண்டோம்.இது ஒன்றும் கற்பனைக் கதை அன்று.உண்மையில் நடைபெற்ற சம்பவம்.நன்கு சிந்தித்துப் பாருங்கள்.சூதாட்டம் ஆடி, அன்ன தர்மம் செய்து ,சிவன் அடியில் சேர முடியும் என்று மெய்ப்பித்து அல்லவா மூர்க்கர் காட்டி இருக்கின்றார்.மூர்க்கர் என்றால் நாம் எப்போதும் எதிர்மறைப் பொருளே கொள்வோம்.ஆனால் மூர்க்கர் என்றால் பெரியவரும்  என்று பொருள் கொள்ளலாம் என்பது இங்கே உறுதி.இந்த பதிவின் நோக்கம்,  அன்னதான/பூரண தான் அருமை உணர்வது மட்டுமே.


முக்கிய அறிவிப்பு :
மெய் அன்பர்களே.

அகத்தியர்வனம் மலேஷியா மற்றும் TUT( தேடல் உள்ள தேனீக்களாய்) இணைந்து வருகின்ற சனிக்கிழமை (16/09/2017) மதியம் சுமார் 12 மணி அளவில்  வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்னதானம் செய்ய இறையருளும்,குருவருளும் கூட்டியுள்ளது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அன்னதானத்தில்
உதவும் படி வேண்டுகின்றோம்.

இவண்,

அகத்தியர்வனம் மலேஷியா - http://agathiyarvanam.blogspot.in/
தேடல் உள்ள தேனீக்களாய் - tut-temple.blogspot.in

முந்தைய பதிவுகளுக்கு :-


AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌