Monday, September 25, 2017

கஜேந்திரனின் சரித்திரம்:இந்திரத்யும்னன் என்ற பெயருடைய மன்னன் ஒருவர் பாண்டிய நாட்டை சிறப்புடன் ஆண்டு வந்தார். தீவிர பக்தனாகிய இந்திரத்யும்னன் பூஜை புனஸ்காரங்களை மிக விரிவாகச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பூஜை செய்யும்பொழுது தனது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் பூஜை அறைக்கதவை அடைத்துக்கொண்டோ அல்லது கண்களை இறுக்க மூடிக்கொண்டோ பூஜை செய்வது சிலரது வழக்கம்.

இது தவறு. பூஜை செய்யும் பொழுது கதவை அடைத்துக்கொள்ளக்கூடாது. மேலும் கண்களை மூடிக்கொண்டு பூஜை செய்தால் யாரேனும் பெரியோர்கள் வந்தால் அவர்களை கவனிக்க முடியாமலும், அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க இயலாமலும் போகும் வாய்ப்பு உண்டு.

இதை அறியாத பாண்டிய மன்னன், ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு பூஜையில் ஈடுபட்டிருக்கும்போது அகஸ்திய முனிவர் அங்கு வந்தார். மன்னர் அவர் வந்தததை அறியவில்லை. மன்னர் பூஜை விதிகளை அறியாமல் தடித்தனமாக (பேதமையாக) இருந்ததால் கோபமுற்ற அகஸ்தியர் தடித்த தோலுடைய, தடித்த குணமுடையதான மேலும் குளித்து முடித்தவுடன் தன் துதிக்கையாலே மண்ணை அள்ளி தலையிலும் உடம்பு முழுவதும் போட்டுக் கொள்ளும் பழக்கமுடையதான யானைப் பிறவியை அடையக் கடவது என சாபமிட்டார்.

அகஸ்தியரின் சாபத்தின்படி இந்திரத்யும்னர் யானைப்பிறவி எடுத்து யானைக்கூட்டம் ஒன்றின் மன்னன் ஆனான். இந்த யானைக் கூட்டம் திரிகூட மலைச்சரிவில் இருந்த அடர்ந்த காட்டில் வசித்து வந்தது. ஒருநாள் அந்தக் காட்டிலுள்ள பரந்த ஏரியில் இந்த யானைக் கூட்டம் நீராடிக் கொண்டிருந்தது.

திடீரென்று அந்த ஏரியில் இருந்த முதலை ஒன்று யானைப் பிறவி எடுத்திருந்த இந்திரத்யும்னரின் காலைப் பிடித்துக் கொண்டது. யானை மன்னனும் (கஜேந்திர) மற்ற யானைகளும் எவ்வளவோ போராடியும் முதலையின் பிடியிலிருந்து விடுபடமுடியவில்லை. சிறிது காலம் போராடிப் பார்த்துவிட்டு மற்ற யானைகள் கஜேந்திரனை தனியாகவிட்டுச் சென்று விட்டன.

பலகாலம் போராடியதால் கஜேந்திரனின் உடலும் உள்ளமும் சோர்ந்து போயின. 'நம்முடைய பலத்தால் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பது எத்தனை அறியாமை. அவனன்றி ஓரணுவும் அசையாது. எனவே இந்தப் போரிலிருந்து நான் தப்பிக்க வேண்டுமென்றால், எல்லாம் வல்ல நாராயணனைச் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற ஞானம் கஜேந்திரனுக்கு திடீரெனப் பிறந்தது. உடனே கஜேந்திரன் 'ஆதிமூலமே! என்னைக் காப்பாற்று' என்று கூறி முழுமையாக ஸ்ரீமன் நாராயணனிடம் சரணாகதி அடைந்தது.

உடனே ஸ்ரீமன் நாராயணன் அங்கு தோன்றி தனது சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காப்பாற்றினார். ஒரு முனிவரின் சாபத்தால் முதலையாக இருந்த கந்தர்வனும் தன்னுடைய பழைய உருவைப் பெற்றான்.

முதலை நெடுங்காலம் கஜேந்திரனின் காலைப் பற்றிக் கொண்டிருந்ததால் அந்தக் கால் புண்பட்டு ரணமாயிருந்தது. அதனால் முதலை காலை விட்ட பிறகும் வலியினால் கஜேந்திரன் துடித்தது. அதைக் கண்ட ஸ்ரீமன் நாராயணன் தனது திருக்கரத்தால் புண்பட்ட காலைத்தடவி கஜேந்திரனுக்கு வலியிலிருந்து நிவாரணம் அளித்தார். புண்பட்ட காலை ஸ்ரீமன் நாராயணனே தடவிக் கொடுக்கும் பாக்கியத்தை கஜேந்திரன் பெற்றதற்கு என்ன தவம் செய்தானோ?

இந்த அருமையான கஜேந்திர சரித்திரத்தில் ஒரு மகத்தான தத்துவம் புதைந்திருக்கிறது.

ஸ்ரீமன் நாராயணன் எல்லாம் வல்லவர். அவருடைய சக்ராயுதம் மாபெரும் வலிமை பெற்ற ஆயுதம். எனவே கஜேந்திரன் 'ஆதிமூலமே' என்று சரணாகதி அடைந்தவுடன் தனது சக்ராயுதத்தை அனுப்பி முதலையை சம்ஹாரம் செய்திருக்கக்கூடாதா? சர்வ சக்தி படைத்த ஸ்ரீமன் நாராயணனே, சிரமப்பட்டு நேரில் வரவேண்டுமா? என்பது கேட்பது இயல்பு.

ஸ்ரீமன் நாராயணன், முதலையைக் கொல்ல மட்டும் வரவில்லை. தன்னுடைய பக்தன் வலியால் துடிக்கும்பொழுது அவனுக்கு அன்பாக ஆறுதல் அளிக்க நேரில் வந்தார். வந்ததோடு மட்டுமல்லாமல், பக்தனின் காயமடைந்த காலை தன் கையால் தடவி கஜேந்திரனை குணப்படுத்தினார் என்பதுதான் இந்தச் சரித்திரத்தின் தாத்பரியம்.

நன்றி .திருமதி,ரமாசங்கர்.

No comments:

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌