Subscribe

BREAKING NEWS

10 September 2017

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம்


வினைகள் தீர்க்கும் வேல்மாறல் என்றே வேல்மாறல் பற்றி அறிகின்றோம்.இந்த வினைகள் மூலம் நமக்கு உடற்பிணி,உயிர்ப்பிணி (மனதின் மூலம் ) வருகின்றது.இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது வகையில் வினைகள் கொண்டே அனுபவித்து வருகின்றோம். அதாவது ஒவ்வொரு மனிதனும் உடலளவிலோ அல்லது மனத்தளவிலோ துன்பம் அனுபவித்து வருகின்றோம்.இந்த இரண்டு பிணிகளையும் போக்க நாம் நமக்குத் தெரிந்த வழிகளில் முயற்சி செய்து வருகின்றோம். இதோ அனைவருக்கும் பரம ஒளஷதமாய் விளங்கும் வேல்மாறல் அனுபவத்தை அனைவரும் அறிய இங்கே தருகின்றோம்.

"திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன்மலை
விருத்தன் எனது உளத்தில் உறை
கருத்தன் மயில் நடத்து குகன் வேலே."

கலியுகத்தில் நமது பிணிகளுக்கு – அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி – உற்ற மருந்தாக விளங்குவது "வேல் மாறல்"

வேல்மாறல் என்பது முருகனை போற்றி அருணகிரிநாதர் பாடியது. எப்படியான கடும் துன்பங்களில் இருந்தும் உடனடி நிவாரணியாக செயல்படுவது வேல்மாறல் பாராயணம். வேல்மாறல் பாராயணம் பாடி தங்களின் பிரச்சனைகளில் இருந்து இன்றும் விடுபட்ட பக்தர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கடும் வீரியமுடைய மந்திரம்தான் வேல்மாறல்.அருணகிரி நாதர் பாடிய ஒன்பது நூல்களுல் ஒன்றுதான் திருவகுப்பு. அந்த திருவகுப்பில் வேல் பற்றி கூறப்படும் 16 அடிகளை வேலூரின் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அவர்கள் திரும்ப திரும்ப முன்னும் பின்னும் வருமாறு கொஞ்சம் மாற்றி இன்னும் சக்தி ஏற்றப்பட்ட மந்திரம்தான் வேல்மாறல். தொடக்கத்திலும் முடிவிலும் கந்தரலங்கார பாடலை முன்னும் பின்னும் சேர்த்து பாடலின் பலனை பல மடங்கு பெருக்கியுள்ளார் சுவாமிகள்.



சரியாக சுமார் 11 மணி அளவில் ஸ்ரீ பொங்கி மடாலயம் சென்று சேர்ந்தோம். அனைவரும் பாராயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியே நாமும் அவர்களோடு சேர்ந்து ஒரு மூன்று முறை படித்தோம்.சுதி சேரவில்லை.எனவே அது படித்தல் தானே.



பொங்கி மடாலயம் முழுதுமே கலையில் வெகு சிறப்பாக இருக்கும்.பல வண்ணப் பூச்சுக்களோடு பார்ப்பதற்கே கவின்மிகு கலைவண்ணத்தில் மிளிரும்.நாமும் இப்போது தான் கவனித்தோம்.வேலும் மயிலும் சேவலும் துணை என்பதை வடித்துள்ள அழகைப் பார்த்தீர்களா? வேலையும்,மயிலையும்,சேவலையும் பார்க்க மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும் போல் நமக்குத் தோன்றுகின்றது.


மடாலயத்தின் வரவேற்பில் சாதுராம் சுவாமிகள் இருவரோடு அருள்பாலிக்கின்றார். சாதுராம் சுவாமிகள் பற்றி அறிய வேண்டும் என்றால் இந்த ஒரு பதிவு போதாது.அவரைப் பற்றி வேறொரு பதிவில் அறிவோம். இங்கே சிறிய முன்னுரை மட்டுமே.சாதுராம் ஸ்வாமிகள்  ஆசுகவி ஆயிற்றே....! (ஆசுகவி என்றால் எந்த இடத்திலும் சூழலிலும் கவிபாட வல்லவர்கள்!).அவர் பாடிய பாடல்கள் திருஅருட்புகழ் என்று வழங்கப்படுகின்றன. ஒன்றா? இரண்டா? விரிவான பதிவில் திருஅருட்புகழ் பற்றியும்,சாதுராம் சுவாமிகள் பற்றியும் அறிவோம்.


எந்த ஒரு பாராயண முறைக்கும் பலன் தெரியவேண்டும் என்றால் சிறிது அவகாசம் பிடிக்கும். குறைந்தது அரை மண்டலமோ அல்லது ஒரு மண்டலமோ அவகாசம் தேவை.
வேல்மாறல் ஒரு பரம ஔஷதம். நமது அத்தனை பிரச்னைகளுக்கும் அதில் தீர்வு உள்ளது. வேல்மாறல் வரிகளை சற்று ஊன்றிப் பார்த்தாலே அது புரியும். எத்தனை பேர் ஊன்றிப் பார்த்தீர்கள்?
நோய், பகை, கடன், உறவுகளில் பிரச்னை என அனைத்திற்கும் அதில் தீர்வாக வரிகள் உண்டு. அது தான் அதன் சிறப்பு.

துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் |

இதன் அர்த்தம் பார்த்தாலே புரியும். முருகனை வணங்கும் அடியார்களுக்கு யாரேனும் தீமை நினைத்தால், அவர்களுடைய குலத்தையே வேல் சென்று அழித்துவிடுமாம். இந்த வரிகளை எழுதியது அருணகிரிநாதர். வேல் வகுப்பில் இதை அவர் கூறியிருக்கிறார்.

அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிற்காலத்தில் 20 ஆம் நூற்றாண்டில், சேஷாத்திரி ஸ்வாமிகளின் கட்டளையையடுத்து சச்சிதானந்த சுவாமிகள் வள்ளிமலைக்கு வந்தபோது இதன் சக்தியை உணர்ந்து இதன் வரிகளை முன்னும்பின்னும் மாற்றிப்போட்டு இதை உருவாக்கினார். அப்படி மாற்றிப் போட மாற்றிப்போட இதற்கு சக்தி பன்மடங்காகிவிட்டது. (சூரியனுக்குள் ஏற்படும் அணுப்பிளவு, அணுசேர்க்கை போல!)

இதற்கு யந்த்ர வடிவம் கொடுத்து வேல்மாறல் யந்த்ரத்தை அறிமுகப்படுத்தியது ஸாதுராம் ஸ்வாமிகள். இவர் வள்ளிமலை சுவாமிகளின் நேரடி சீடர். வேல்மாறல் யந்திரம் தங்களுக்காக !





அங்கு திரு.எஸ்.வி.சுப்பிரமணியம் சுவாமிகளைக் கண்டோம். திருப்புகழ் சகோதரர்கள் என்றே இவருக்கு பெயர். மகா சுவாமிகள் இவரையும் இவரது தம்பி ஸாதுராம் ஸ்வாமிகளையும் எங்கேபார்த்தாலும் திருப்புகழ் பாடும்படி கேட்டுக்கொள்வாராம். வேல்மாறல் முழுதுமே தேன் தான்.தேனில் இருந்து ஒரு சொட்டை எடுத்து தங்கள் நாக்கில் வைக்கின்றோம்.சுவைத்துப் பாருங்கள்.

வேல்மாறல் மஹாமந்த்ர பாராயணப் பலன்!


வேலமாறல் யந்திரம்(velmaral yanthra)


கால்மாறி ஆடும் இறை கால்முளையாம் கந்தர்கைவேல் வகுப்பைக் கண்டு
நூல்மாரி வரத்தொகுத்து நோய்பிலிபேய் ஸுனியம்எலாம் நூற வேண்டி
'வேல்மாறல்' எனும்பேரால் வகுத்தருளி வள்ளிமலை மேதை வள்ளல்
பால்மாறல் இன்றிஉத(வு) அரிய மந்த்ரஜபப் பயன்மிக் காமே!
- ஸ்ரீ ஸாதுராம் ஸ்வாமிகள்

இதன் பொருள் என்ன தெரியுமா?

மதுரையில் ராஜசேகரப் பாண்டியனுக்காக இடது காலை கீழே வலது காலை மேலே தூக்கி, காலை மாற்றி நடனம் ஆடிய நடராஜப் பெருமானின் (கால் முளை) மைந்தனாகிய கத்தாப் பெருமானின் கையில் உள்ள வேலைப் புகழ்ந்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். அந்த வேல் வகுப்பில் உள்ள அடிகள் மாறி மாறி வரும்படியாகத் தயக்கமின்றி தொகுத்து வியாதிகள், பேய், பில்லி, சூனியம், போன்றவையால் வரும் கஷ்டங்கள் எல்லாம் பொடிப் பொடியாக ஆகுமாறு வகுத்து, அதற்கு 'வேல் மாறல்' என்று பெயரிட்டார் மகாமேதையாம் வள்ளிமலைத் திருப்புகழ் ஸச்சிதாநந்த ஸ்வாமிகள். அந்த அருமையான யந்த்ர மந்த்ரத்தை ஜெபிப்பதால் வரும் பயன் மிக மிக அதிகமாகும். * நூற வேண்டி என்றால் - சுக்கு நூறாக வேண்டி என்று பொருள்

இத்தகு சிறப்புமிக்க வேல்மாறல் பாராயணத்தில் நாம் பங்கு பெற்றது,எம் பெற்றோர் செய்த புண்ணியமே.3 முறை படித்து  முடித்ததும் சரியாக மணி 1 மணி ஆயிற்று.ஒவ்வொருவராக மதிய உணவிற்கு சென்று கொண்டிருந்தார்கள்.நாமும் சரியாக 2 மணியளவில் உணவருந்த சென்றோம்.மதிய உணவு அருமையான விருந்தாய். வாழை இலையில் இனிப்பு,காரம்,கூட்டு,பொரியல்,சாம்பார்,வத்தக்கொழம்பு ,ரசம்,மோர் என்று அமர்க்களப்படுத்தி விட்டனர்.உண்டி கொடுத்த பொங்கி மடாலயத்திற்கு நம் நன்றி !








உணவு முடித்து ,சற்று நேரம் ஓய்வெடுத்தோம். அப்போது நம் TUT குழு உறுப்பினர் திருமதி.ரேவதி அவர்கள், பொங்கி மடாலயம் வந்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.நாமும் அடுத்த பாராயணத்தில் அவரோடு சேர்ந்து கொள்ளலாம் என்று காத்திருந்தோம்.சரியாக ஒரு அரை மணி நேரத்தில் வந்து விட்டார்கள்.அப்படியே நேரே பாராயணத்தில் சேர்ந்து விட்டோம்.


மகளிர் அணியினர் தொடர்ச்சியாக பாடிக் கொண்டே இருந்தார்கள். நாம் அப்படியே கேட்டுக் கொண்டே இருந்தோம்.சிறிது நேரம் கழித்து, நம் புதிய நண்பர்,திரு கணபதி சுப்பிரமணியம் அவர்களும் வந்தார்கள்.நம்முடன் சுமார் அரை மணி நேரம் பேசினார்கள். அவரையும் உள்ளே பாராயணத்தில் ஈடுபடும்படி சொல்லிவ்ட்டு, நாம் வேல்மாறல் புத்தகம் வாங்க சென்று விட்டோம். சுமார் மணி 6 ஆகிவிட்டது.ஒவ்வொரு ஒரு மணிநேர நிறைவில் நைவேத்தியம் செய்து,தீபாராதனை செய்து கொண்டே இருப்பார்கள்.

பின்பு இருவரும் சற்று நேரத்தில் சுமார் 6:30 மணி அளவில் சென்றனர்.இருவரும் ஆளுக்கொரு வேல்மாறல் புத்தகமாய் மொத்தம் 3 புத்தகங்கள் வாங்கி சென்றனர்.இருவரையும் வழி அனுப்பி விட்டு அப்படியே உள்ளே நுழைய முற்பட்டோம்.அப்போது பார்த்தால்,அங்கே நம் TUT குழு உறுப்பினர் திருமதி.ஜானகி இருந்தார்கள்.பரஸ்பரம் நலம் விசாரத்திவிட்டு,வாருங்கள் உள்ளே சென்று பாராயணம் செய்யாலாம் என்றோம்.அவர்கள் இரு முறை உள்ளே முடித்து விட்டதாகவும், முருகனின் அழகை கண்டு கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது.அவர்களால் மடத்தை விட்டு நகர மனம் இல்லை. முருகா ..அழகா என்று கொஞ்சிக் கொண்டு,அவர்கள் வேண்டிய நிமிடம் ..சொல்ல வார்த்தை இல்லை.அப்படியே அவரையும் வழி அனுப்பிவிட்டு நாம் உள்ளே சென்றோம்.




உள்ளே செல்லும் முன்பாக, நமக்குள் ஒரு எண்ணம் எட்டிப் பார்த்தது.நாமும் வீட்டிற்கு செல்வோமா? என்று. மனதோடு பேசி, இந்த அகண்ட பாராயணம் வருடத்திற்கு ஒரு முறை தான் நடக்கின்றது.இப்போது விட்டு விட்டால்,இனி அடுத்த ஆண்டு தான்.சென்ற ஆண்டும் செல்ல வில்லை.கூறு கேட்ட மனமே..வீட்டில் சென்று என்ன செய்வோம்.மிஞ்சி..மிஞ்சி போனால் தொலைகாட்சி தானே..வேண்டாம்.இங்கே இரவு தங்குவோம்.ஏனெனில் காலை முதல் சரியாக பாராயணத்தில் ஈடுபடவில்லை. இரவிலாவாது ஒரு 2 முதல் 3  மணி நேரம் படிப்போம் என்று மனதிற்கு கட்டளையிட்டோம்.


மனதுள் மற்றுமொரு குறை இருந்தது.முதன் முதலாக நாம் இந்த நிகழ்வில் ஈடுபட்ட போது, சரியாக 2015 ம் ஆண்டு, முருக அடியார் ஒருவரை சந்தித்தோம். அன்று இரவு அவர்கள் இருந்தார்கள்.அருமையான குரல் வளத்தில்,பக்திப் பரவசத்தில் அந்த அம்மையார் வேல்மாறல் பாடியது தனி அனுபவம்.பின்னர் அவரோடு இணைந்தே நாம் சிறிது முயற்சித்தோம்.சென்ற ஆண்டு வேல்மாறல் நிகழ்வில் ஈடுபட வில்லை.இந்த ஆண்டு ..இதோ ..அந்த அனுபவத்தை மற்றவர்க்கு சொல்லும் விதமாய் நமக்கு வழிகாட்டும் வேலவன் இருக்க ..வெற்றி உறுதி தானே.மனதுள் அந்த அம்மையாரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

உள்ளே சென்று சுமார் 9 மணி அளவில்  பாராயணம் ஆரம்பித்தோம். இரண்டு முறை பாடி முடித்து விட்டு,திரும்பி பார்த்தால், அவர்கள் பின்னே அமர்ந்து இருந்தாங்க. வணக்கம் சொல்லிவிட்டு, பாராயணம் தொடர்ந்தோம். அப்படியே சுமார் 11:30 மணி வரை தொடர்ந்தோம்.சற்று நேரத்தில் தூக்கம் கண்களைக் கட்டியது. அப்படியே கொஞ்ச நேரம் தூங்கினோம்.காலை 4 மணிக்கு மீண்டும் எழுந்து, அடுத்த மற்றும் வேல்மாறல் பாராயண இறுதி கட்டத்தில் இருந்தோம். வேல்மாறல் பாராயணம் களை கட்டியது. திரு.எஸ்.வி.சுப்ரமணியம் அவர்களின் மகன் திரு.குஹானந்தம் அவர்கள் காலை 4 முதலே பரபரப்பில் இருந்தார். பூ மாலை மற்றும் இன்னபிற பூஜை பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தார்.

நேரம் சரியாக 5:45  மணி எட்டியதும், கடைசி பாராயணத்தில், வேல்மாறல் மஹாமந்த்ர பாராயணப் பலன்! பாடலை சுத்தி சுத்தமாக,ராகத்தோடு குஹானந்தம் பாடிய போது ,அந்த வேலவனே அங்கு எழுந்தருளி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.சரியாக 6 மணிக்கு தீபாராதனை செய்து,பிரசாதங்கள் வழங்கப் பட்டது. நாமும் பிரசாதம் வாங்கி கொண்டு, நம்மை அவர்களிடம் அறிமுகம் செய்து விட்டு வந்தோம்.



                                                     திரு.குஹானந்தம்



                                 பொங்கி மடாலயம் - தங்களின் பார்வைக்காக
























அவர்களிடம் அனுமதி வாங்கி விட்டு, காட்சிகளை பதிவு செய்தோம். நீங்களே பார்த்து அனுபவியுங்கள்.

நிகழ்வின் முடிவில் ,அந்த அம்மையாரிடம் பரஸ்பரம் நலம் விசாரித்தோம். அவர்கள் மற்றும் அவரோடு சேர்ந்து வந்தவர்கள் விழுப்புரத்திலிருந்து இந்த பாராயண நிகழ்விற்கு வந்ததாக சொன்னார்கள்(2015 ம் ஆண்டு இதே போன்று தான் காலையில் பூஜை முடித்து அவசரமாக புறப்பட்டார்கள்).நமக்கு தூக்கி வாரிப்போட்டது. முருகன் அருளில் திளைத்தால்  தானே..இது போன்று வந்து, பாராயணம் செய்ய முடியும். இந்த பாராயணத்திற்காக ,விழுப்புரத்தில் இருந்து வந்து,இரவு முழுதும் பாடி,காலையில் சென்ற அவர்களை பார்க்கும் போது ,முருகன் அருளின்றி இது சாத்தியம் இல்லை என்றே தோன்றியது.நாமும் அன்றிரவே,வீட்டிற்கு சென்றிருந்தால், இது போன்ற அருள் நமக்கு கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே .அடுத்த ஆண்டு ஆடிக் கிருத்திகை அன்று  நம் TUT குழுவோடு இணைந்து ,இங்கே பாராயணம் செய்ய அருள் வேண்டி முருகனை பிரார்த்தித்தோம்.

மீண்டும் ஒருமுறை பொங்கி மடாலயம் சென்று, பொங்கி மடாலயம்,சாதுராம் சுவாமிகள்,திருஅருட் புகழ் போன்ற செய்திகளை விரிவான  பதிவைத் தர முயற்சி செய்கின்றோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

வேல்மாறல் அகண்ட பாராயணம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_12.html

வெற்றியைத் தரும் வேலவா போற்றி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_6.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html

64 வது நாயன்மார் - http://tut-temple.blogspot.in/2017/06/64.html


சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html




No comments:

Post a Comment