Subscribe

BREAKING NEWS

01 September 2017

மஹாளய தர்ப்பணம் எதற்குச்  செய்கிறோம் ?


கர்ணன் மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு யமன் அவரை அழைத்துக் கொண்டார். யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்க்கத்தை நன்றாக அனுபவித்துக் கொள் என்றார். கர்ணன் மகிழ்வுடன் சொர்க்கத்தை அனுபவிக்கிறார். சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்க வாசிகள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள்.
தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றை கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்கச் சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது. கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார். குரு விளக்குகிறார் " கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்".
ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்? எனக் கேட்கிறார் கர்ணன்.



குரு விளக்குகிறார் " கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது. "



rameswaram



கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே யம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறார். நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார். யமதர்ம ராஜனும் அனுமதிக்கிறார்.
கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்கிறார். கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்க்கம் வரச் சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.



யமன் நகர்ந்து கொண்டே சொல்கிறார். மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார்.
கர்ணன் " யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறார்."
யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்.
" யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1371: தேதி 26 அக்டோபர் 2014
தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145
“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145
உலகில் மிகவும் ஆச்சர்யமான பிறவிகள் இந்துக்கள். முன்னோர்களை அவர்கள் வழிபடும் முறை தனிச் சிறப்புடைத்து. இவர்கள் போல இறந்து போனோரைக் கொண்டாடும் இனம் உண்டோ என்றில், இல்லை என்று பகர ஒரு நொடியும் தேவை இல்லை. பெரிய தலைவர்கள் இறந்தால் அடக்கம் நடைபெறும் போது 21 முறை பீரங்கிக் குண்டு வெடித்து மரியாதை செய்வர். இதற்கு கடற்படை சம்பிரதாயமே காரணம் என்று கலைக் களஞ்சியங்கள் செப்பும். பின்னர் ஆண்டுதோறும் அவர்கள் கல்லறைக்குச் சென்று மலர் தூவுவர். ஆனால் இந்துக்களோ ஆண்டுக்கு குறைந்தது 96 முறை வணங்குவர். ஆதிகாலத்தில் மூன்று வர்ணத்தாரும் செய்த இக்கடன் இப்போது குறுகிப்போய் ‘’பிராமணர் மட்டும்’’ என்று ஆகிவிட்டது. அதுவும் அருகிப் போய் 96 முறைக்குப் பதில் 12 அல்லது 24 முறை என்று சுருங்கிவிட்டது. காலத்தின் கோலம்!!
தினமும் முன்னோர்களை வழிபடும் வழக்கத்தைப் “பஞ்ச யக்ஞம்” என்ற தினசரிக் கடமைகளில் காண்கிறோம். அது என்ன ஐவேள்வி?
திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)
தென்புலத்தார்= தெற்கு திசையில் வசிக்கும் முன்னோர்கள்
தெய்வம்= கடவுள் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்
விருந்து = வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் (சாது, சந்யாசிகள்)
ஒக்கல் = சுற்றத்தார்,
தான் = தான் (அதாவது தனது சொந்தக் குடும்பம், அவர் வளர்க்கும் ஆடு, மாடு, மரத்தில் வசிக்கும் காக்கை, குருவி, வீட்டில் ஓடும் எறும்பு முதலியன. இதை பூத யக்ஞம் என்பர்= உயிரின வேள்வி)
என்று = என்ற
ஐம்புலத்து = ஐந்து இடங்களில் செய்ய வேண்டிய (பஞ்ச வேள்வி)
ஆறு= வழியினை
ஓம்பல் = பாதுகாத்தல்
தலை= சிறந்த அறம் ஆகும் (தர்மம்)
மனு ஸ்மிருதியில் 3-72 ஸ்லோகத்தில் கூறியதற்கும் இதற்கும் சிறிதும் வேறு பாடு இல்லை — மேலும் குறள் 41-ல்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)
என்பது மனு ஸ்மிருதியின் 3-78 ன் மொழியாக்கம் என்பதையும் இரண்டையும் கற்ற சான்றோர் உணர்வர்.
அதாவது கிருஹஸ்தன் என்பவன் வானப் ப்ரஸ்தம், சன்யாசம், பிரம்மசர்யம் என்ற மற்ற மூன்று நிலையில் உள்ளவர்க்கும் உதவுவதால் அதுதான் சிறந்த அறம் — கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மற்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் ஆதரிப்பவர்கள் போற்றுதலுக் குரியவர்கள்.
thai amavasya
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பிள்ளை பெறுவது எதற்காக என்று புற நானூற்றில் கோப்பெருஞ்சோழன் சொல்கிறான் — சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்த பல புலவர்களில் ஒருவர் பொத்தியார். அவருக்கு இடம் தர மறுத்த சோழ மன்னன் புதல்வன் பிறந்த பின் வருக — என்கிறான். புதல்வர் எதற்காக? பிண்டோதக் கிரியை என்னும் இறுதி யாத்திரைக் கிரியை செய்வதற்காகும் என்று உரைகாரர்கள் நவில்வர்.
உரைகாரர் சொன்னால் நாங்கள் நம்பவேண்டுமா? என்போருக்கு அகநானூற்றுப் புலவர் செல்லூர் கோசிகன் கண்ணனார் — (கௌசிக கோத்ரத்துதித்த கிருஷ்ணன் என்னும் புலவர்) — வாய்மொழியாக உண்மை அறிதல் நலம்:
“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர்காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்” எனப்——— அகம்.66
பிள்ளைகள் இல்லாவிட்டால் நரகமா?
பிள்ளைகள் எள்ளும் நீரும் இரைத்து தர்ப்பணம், திதி முதலியவற்றைச் செய்தால் மறுமை இன்பம் கிடைக்கும் என்றால், பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதோருக்கும், பிள்ளைகளே பிறவாதோருக்கும், இது பற்றி அறியாத ஜாதியினருக்கும் நரகம் வாய்க்குமா?
இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து பிராமணர்கள் எள்ளும் நீரும் தெளித்து விடுகின்றனர். ஐயர்கள் சொல்லும் தர்ப்பண மந்திரங்களை அறிந்தோருக்கு இது தெள்ளிதின் விளங்கும் —( ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் அண்ணா அவர்கள் எழுதிய தமிழ் மொழியாக்காத்தையும் உரையையும் அனைவரும் பயிலுதல் நன்று )
இதனால்தான் பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளையும் தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியதை சங்க இலக்கியத்திலும் 80,000 கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.
TharpaNam Pic
இதோ அவர்கள் சொல்லும் அற்புத மந்திரங்கள்:
எவர்களுக்குத் தாயோ தந்தையோ, சிநேகிதரோ, தாயாதிகளோ, பந்துக்களோ இல்லையோ — (தர்ப்பணம் செய்ய) — அவர்கள் எல்லாம் தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்.
ஆகாய வழியாக வந்து இந்தத் தர்ப்பைப் புல்லில் எழுந்தருளுங்கள் என்று வேண்டும் போது அவர்கள் சொல்லும் மந்திரம் எல்லா இடங்களிலும் மங்களத்தையும் அமைதியையும் உண்டாக்கும்:
காற்று இனிமையாக வீசட்டும்
நதிகள் இனிமையைப் பெருக்கிக்கொண்டு ஓடட்டும்
செடி கொடிகள் இனிமை அளிக்கட்டும்
காடுகளில் உள்ள மரங்கள் இன்பம் தரட்டும்
சூரியன் மகிழ்ச்சி அளிப்பானாகுக
பசுக்கள் இனிமையான பாலைப் பொழியட்டும். (மதுவாதே ருதாயதே…..)
இவ்வாறு ஒரு ஆண் — தனது வம்சத்தில் பிறந்து இறந்த தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகிய மூவருக்கும் நீர்க்கடன் செலுத்திய பின்னர், தாயின் வம்சத்திலும் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று எள்ளும் நீரும் இரைப்பர். இந்த ஆறு பேருடைய மனைவிமார்களும் இதே போல மரியாதை பெறுவர். எல்லோரும் இறந்து போயிருந்தால் இப்படி 12 பேருக்கும் வழிபாடு நடக்கும். இந்த அற்புத முறையை உலகில் வேறு எங்கும் காண முடியாது!!
இனி இந்துக்கள் – குறிப்பாக பிராமணர்கள் செய்ய வேண்டிய 96 இறந்தார் கடமைகளைத் தருகிறேன் (ஸ்ரீரங்கம் பி.ஜே.ஸ்ரீனிவாசன் எழுதிய நூலில் இருந்து)
அந்தக் காலத்தில் தீ மூட்டி சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது. அதில் ஆண்டுக்கு குறைந்தது 96 முறை இதைச் செய்ய வேண்டும் என்று சான்றோர் எழுதிய சாத்திரங்கள் கூறும்:
adi amavasya
12 மாதப் பிறப்பு தர்ப்பணங்கள்
12 அமாவாசை தர்ப்பணங்கள்
12 அஷ்டக தினங்கள் (மார்கழி, தை,மாசி,பங்குனி ஆகிய 4 மாதங்களின் சப்தமி,அஷ்டமி, நவமி தினங்கள்)
16 மஹாளய பட்ச தினங்கள் (சூரியன் கன்யா ராசியில் பிரவேசிக்கும் போது புரட்டாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் செய்யப்படும்)
4 யுக நாட்கள் (கிருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் தொடங்கிய யுகாதி நாட்கள்)
14 மன்வந்தர நாட்கள் (14 மனுக்களின் ஆட்சி துவங்கிய நாட்கள்)
26 வ்யதீபாத—வைக்ருதி—விஷ்கம்ப தர்ப்பணங்கள் (27 வகை யோகங்களில் வ்யதீபாத யோகம் வரும் 13 + வைக்ருதி—விஷ்கம்ப யோகம் வரும் 13 தர்ப்பணங்கள்)
இது தவிர கிரகண காலங்களிலும் இறந்தோர் திதி வரும் நாட்களிலும் செய்வர்.
-சுபம்-
இந்த வருடபுரட்டாசி மாளயபட்ச நாட்கள் 6.9.2017 முதல் 19.9.2017 வரை
மாளய அமாவாசை 19.9.2017
நவராத்திரி உற்சவம் 21.9.2017 முதல் 30.9.2017 வரை
பௌர்ணமி திதி
5.9.2017 செவ்வாய் பகல் 12:42 மணி முதல் 6.9.2017 புதன் பகல் 12:32 மணி வரை
செப்டம்பர் 2017 பௌர்ணமி கிரிவல நாள் : 5.9.2017  செவ்வாய் இரவு
அக்டோபர் 2017  பௌர்ணமி கிரிவல நாள் : 5.10.2017
முன்னோர்கள் நமக்காய் குருவருளை யாசித்துப் பெற்றுத் தரும் புரட்டாசி மாளயபட்சத்தின்
யதிமாளயத் திருநாள் 17.9.2017

Thanks to:-https://tamilandvedas.com

No comments:

Post a Comment