Subscribe

BREAKING NEWS

28 February 2018

அகண்டபரி பூரணத்தை காண வேணும் - ஸ்ரீ ராம தேவர் சித்தரின் 10 ஆம் ஆண்டு குரு பூசை விழா

ஸ்ரீ ராம தேவர் 

ராமதேவர் நாகப்பட்டினத்தில் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இளம் வயதிலேயே அஷ்டமாசித்திகள் கைவர பெற்றவர். சில சித்தர்கள் தங்கள் உடலை கிடத்திவிட்டு, ஆன்மாவை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். ஆங்காங்கு கிடைக்கும் உடல்களில் புகுந்து கொண்டு சேவை செய்வார்கள்.

          ராமதேவர் மிகவும் வித்தியாசமானவர். முயற்சி... முயற்சி... முயற்சி... இதுவே அவரது தாரக மந்திரம். இந்த மந்திரத்திற்கு மாபெரும் பலன் கிடைத்தது. ராமதேவர் தன் உடலுடனேயே பிற தேசங்களை விரைவில் அடையும் சித்தியை பெற்றார். ஒருமுறை இவர் கங்கைக்கு நீராடச் சென்ற போது, சட்டைநாதரின் விக்ரகம் அவருக்கு கிடைத்தது. அதை நாகப்பட்டினம் கொண்டு வந்து ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.
 சித்தர்களின் ஆசி

சில சித்தர்களின் தரிசனமும் இமயமலைக் காடுகளில் அவருக்கு கிடைத்தது.அவர்கள் ராமதேவரிடம்,சித்தனே! நீ மெக்கா செல். அங்கே ஏராளமான காயகல்ப மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து, மருந்து தயாரித்து மக்களின் பிணி செய், என்று வற்புறுத்தினர்.

ராமதேவரின் மெக்கா பயணம்

          அவர்களது கட்டளையை ஏற்ற ராமதேவர் தன் சித்தியால் மெக்கா சென்றடைந்தார். புதியவர் ஒருவர் தங்கள் நாட்டுக்கு வந்ததும், அரபு நாட்டு மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அரபு நாட்டவரைத் தவிர மற்றவர்கள் அங்கு தங்க அனுமதி கிடைக்காது என்று கூறி அவரை திரும்பி விடும்படி எச்சரித்தனர். நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்று அவர் அவர்களிடம் சொல்லவே, மிக நல்லது, அப்படியானால், நீங்கள் எங்கள் மதத்தில் இணைந்து விட வேண்டியது தானே! குர்ஆனையும் நீங்கள் ஓத வேண்டும். அவ்வாறு செய்தால், நீங்கள் இங்கிருக்க அனுமதி தருகிறோம், என்று மக்கள் கூறினர்.
 யாக்கோப்பு ஆகிய ராமதேவர்

          அவ்வளவுதானே! அதை நான் செய்கிறேன், என்றார் ராமதேவர். அவருக்கு யாக்கோபு என்று பெயரிட்டு தங்கள் மதத்தில் சேர்த்துக் கொண்டனர் அரபு மக்கள். ராமதேவ சித்தர் இப்போது யாக்கோபு சித்தர் ஆகிவிட்டார். அரபுநாட்டில் கிடைத்த பலவகை மூலிகைகளை ஆய்வு செய்து அவற்றின் குணம்,குணப்படுத்தும் நோய்கள் ஆகியவை குறித்து எழுத ஆரம்பித்தார்.
சிறிது காலத்திலேயே அரபு மொழியையும் கற்று, அந்நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் வைத்திய சிந்தாமணி என்னும் நூலை அரபு மொழியில் எழுதினார். அரபு மக்கள் அவரை போற்றத் துவங்கினர். அவரிடம் பலர் மருத்துவ முறைகளையும் கற்றுக் கொண்டனர்.

போகரின் ஆணை 

          இந்நிலையில், போகர் சித்தர் அவர் முன்பு தோன்றினார். ராமதேவா! நீ வைத்திய முறைகளை முழுமையாக அறிந்து கொண்டு விட்டாய். இனி நீ நாடு திரும்பு. சதுரகிரி மலைக்குச் சென்று இந்த மூலிகைகளை ஆய்வு செய்தது குறித்து எழுது. மேலும், இம்மூலிகைகளை ஆய்வு செய், என்றார்.

சதுரகிரி விஜயம்

          அதன்படி ராமதேவர் சதுரகிரி மலை வந்து சேர்ந்தார். தனது சீடர்களிடம், போகரின் அறிவுரைப்படி நான் பத்தாண்டுகள் ஒரு சமாதிக்குள் இருந்து பாலைவன மூலிகைகள் குறித்து ஆய்வு செய்யப் போகிறேன். நான் வரும் வரை நீங்கள் சமாதி வாசலில் காத்திருங்கள், என்றார்.பத்தாண்டு காலம் சமாதிக்குள் இருக்கும் ஒருவர் எப்படி திரும்புவார்? இது சாத்தியமல்ல என்று நினைத்த சீடர்கள், அவர் சமாதிக்குள் சென்றதும் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரே ஒரு சீடர் மட்டும் தனது குரு நிச்சயம் திரும்புவார் என நம்பி சமாதி வாசலில் காத்திருந்தார்.

          சமாதிக்குள் சென்ற சித்தர், மூலிகைகளை ஆய்வு செய்தார். சமாதிக்குள் இருந்தே யாரும் அறியாத வண்ணம்         பல்வேறு     இடங்களுக்குச் சென்றார். ஒருமுறை சமாதிக்குள் இருந்த காலங்கிநாத சித்தரைத் தரிசித்தார். அவர் தன்னுடைய அனுபவங்களையெல்லாம் ராமதேவருக்கு போதித்தார். ஆக, ராமதேவ சித்தர் மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார்.

சமாதியில் இருந்து மீண்ட அற்புதர்

          எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்ற பிறகு, அவர் சொன்னபடியே சமாதிக்குள் இருந்து பத்தாண்டுகள் கழித்து வெளிப்பட்டார். தன்னுடைய சீடர்களே தன்னை நம்பாமல் சென்றது பற்றி அவர் சிறிதும் வருந்தவில்லை.

          ஒரே ஒரு சீடன் விசுவாசத்துடன் தங்கியிருந்தது பற்றி சந்தோஷம் கொண்ட அவர், சீடனே! மற்றவர்கள் என்னைத் தூற்றி விட்டு சென்றது பற்றி நான் கவலைப்படவில்லை.

          ஏனெனில், நான் எத்தனை ஆண்டுகாலம் இந்த சமாதிக்குள் தங்கி மூலிகை ஆய்வு செய்தாலும், நோய்கள் தற்காலிகமாக குணப் படுத்தப்பட்டாலும், பல நூறு ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்தாலும், ஒருநாள் மரணம் சம்பவிக்கத்தான் செய்யும்.

          இந்தக் கருத்தின்படி பார்த்தால், நமது குரு தேவையில்லாமல் சமாதிக்குள் அமர்ந்து, மூலிகை ஆய்வு செய்கிறார் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கும். அது நியாயமான சிந்தனை தானே! இருப்பினும்,வாழும் காலத்தில் மனிதன் சுகமாக வாழவே இந்த ஆய்வை மேற்கொள்கிறேன். நான் மேலும் முப்பதாண்டுகள் சமாதியில் இருக்கப்போகிறேன். மூலிகை ஆய்வைத் தொடர்வேன், எனச் சொல்லிவிட்டு சமாதிக்குள் சென்று விட்டார்.அந்த சீடனும் அங்கேயே காத்திருந்தான்.

 அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர்
          முப்பதாண்டுகள் கழித்து வெளிப்பட்ட சித்தர், பொறுமைக்கார சீடனுக்கு தான் கற்றவற்றையெல்லாம் போதித்தார். அந்த சீடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவனது பொறுமைக்கு மிகுந்த பரிசு கிடைத்தது.

        இதனிடையே ராமதேவர் சமாதிக்குள் சென்ற பிறகு, அவரை நம்பாமல் சென்ற சீடர்களின் பார்வை பறிபோய் விட்டது. அவர்களும் சித்தரை வணங்கி மன்னிப்பு கேட்டு பார்வை பெற்றனர். அவர்களிடம், நான் இப்போது நிரந்தர சமாதிக்குச் செல்கிறேன். அழகர் மலையில் (மதுரை அருகிலுள்ளது) சமாதியாகி மக்களுக்கு அருள் செய்வேன், என சொல்லிவிட்டு சென்றார். அங்கேயே சமாதியானார்.

          காலம்: ராமதேவர் முனிவர் மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர்வாழ்ந்த காலம்  700 ஆண்டுகள்  6  நாள் ஆகும்.

          ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திரத்தன்று அருள் சித்தர் ஸ்ரீ ராம தேவ ஆன்ம பீடம் குழுவினரால் கைலாச நாதராய் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராமதேவ சித்தருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.

          ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராமதேவ சித்தருக்கு மாசி மாதம் பூரம் நட்சத்திரம் அன்று குருபூஜை விழாவானது அருள் சித்தர் ஸ்ரீ ராம தேவ ஆன்ம பீடம் குழுவினரால் அபிஷேகம், ஆராதனை , அன்னதானம் என்று சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

அனைவரும் எதிர்பார்க்கும் ஸ்ரீ ராம தேவரின் 10 ம் ஆண்டு குருபூசை விழா நாளை மாலை 5:30 மணி முதல் தொடங்கி நாளை மறுநாள் 02/03/2018 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப் பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு அழைப்பிதழை சரி பார்க்கவும்.







- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


மார்ச் மாத அடியார்கள் பூசை


அன்பிற்கினிய அடியார்களே.

அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள சிவ அடியார்களின் பூசை பற்றியும், அடியார்க்கு அடியாரைத் திகழ்கின்றவர்களைப் பற்றியும் காண உள்ளோம். மார்ச் மாதத்தில் நான்கு அடியார்களின் பூசை வருகின்றது.

மாசி - அஸ்தம் - எறிபத்த நாயனார்
மாசி - பூராடம் - காரி நாயனார்
பங்குனி - ரோகிணி - நேச நாயனார்
பங்குனி - திருவாதிரை  - கணநாத நாயனார்

இந்த நான்கு அடியார்களைப் பற்றி அறிந்து, அவர்கள் செய்த திருத்தொண்டு நோக்குவோம்.

மாசி - அஸ்தம் - எறிபத்த நாயனார் - மார்ச் 4

எறிபத்த நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். கையில் எப்போதும் மழுவுடன் இருப்பவர், ஒரு முறை அடியார் எடுத்துவந்த சிவ பூசைக்குறிய பூக்களை புகழ் சோழரின் பட்டத்து யானை தட்டிவிட, அந்த யானையும், அதன் பாதுகாவலறையும் எறிபக்த நாயனார் மழுவால் வெட்டி தண்டித்தார். அதன் பின்பு செய்தியறிந்த புகழ் சோழர், தன்னையும் தண்டித்துக் கொள்ள முனைய, சோழரின் வாளைப் பெற்று தன்னையை வெட்டிக் கொள்ள முற்பட்டார். அடியாரின் பெருமையை அறிந்து சிவபெருமான் உமையம்மையுடன் ரிசப வாகனத்தில் தோன்றி, இறந்தோர்களை உயிர்பித்து அருள் வழங்கினார்.



கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே அவதரித்தார். அவ்வூரிலுள்ள ஆனிலை என்னும் திருக்கோயில் எழுந்தருளிய பெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்து வந்தார். இவர் சிவனடியார்களுக்கு ஒரு இடர் வந்து உற்றவிடத்து உதவும் இயல்பினை உடையவர்; அடியார்களுக்கு இடையூறு வந்த காலத்து அங்கு விரைந்து சென்று அடியார்களுக்குத் தீங்கு புரிந்தோரைப் பரசு என்னும் மழுப்படையால் எறிந்து தண்டிப்பார். அதன் பொருட்டு அவர் கையிலே எப்பொழுதும் மழுப்படை இருக்கும்.

அந்நகரிலே திருவானிலைத் திருக்கோயிலில் வீற்றிருக்கும் இறைவர்க்குப் பள்ளித்தாமப் பணி செய்துவந்த சிவமாமியாண்டர் என்னும் ஒரு முதிய அடியவர் ஒருவரும் இருந்தார். அவர் ஒருநாள் வைகறையில் துயிலெழுந்து நீராடித் தூய்மை உடையவராய் வாயைத் துணியாற் கட்டித் திருநந்தவனஞ் சென்றார். அங்கு மலர் கொய்து பூக்கூடையில் நிறைத்து பூக்கூடையைத் தண்டில் மேல் வைத்து உயரத் தாங்கிக் கொண்டு திருக்கோயிலை நோக்கி விரைந்து வந்தார். அன்று மகாநவமியின் முதல் நாள். அந்நகரில் அரசு வீற்றிருக்கும் புகழ்சோழரது பட்டத்து யானை, ஆற்றில் நீராடி, அலங்கரிக்கப் பெற்று மதச் செருக்குடன் பாகர்க்கு அடங்காது விரைந்து வந்தது. அது சிவகாமியாண்டரைப் பின்தொடர்ந்து ஓடி அவர் தம் கையிலுள்ள பூக்கூடையைப் பறித்துச் சிதறியது. யானை மேல் உள்ள பாகர்கள் யானையை விரைந்து செலுத்திச் சென்றனர். சிவகாமியாண்டவராகிய அடியவர், இறைவர்க்கு சாத்தும் திருப்பள்ளித் தாமத்தைச் சிதறிய யானையின் செயல் கண்டு வெகுண்டு அதனைத் தண்டு கொண்டு அடிப்பதற்கு விரைந்து ஓடினார். ஆனால் முதுமை காரணமாக இடறிவிழுந்து நிலத்திலே கைகளை மோதி அழுதார்.

சடாமுடியில் ஏறும் மலரை யானை சிந்துவதோ எனப் புலம்பினார். ‘சிவதா, சிவதா’ எனும் அடியாரது ஓலத்தைக் கேட்டு விரைந்து அங்கு வந்த எறிபத்தர் யானையின் செய்கை அறிந்து வெகுண்டார். சிவகாமியாண்டாரைக் கண்டு வணங்கி “உமக்கிந்த நிலைமையைச் செய்த யானை எங்கே போய்விட்டது” என்று கேட்டார். சாமிக்குச் சாத்தக் கொண்டு வந்த பூவைச் சிதறிவிட்டு இந்தத் தெருவழியேதான் போகிறதெனக் கூறினார். ‘இந்த யானை பிழைப்பதெப்படி’ என யானையைப் பின்தொடர்ந்து சென்று யானையின் துதிக்கையை மழுவினால் துணித்தார்; அதற்கு முன்னும் இருமருங்கும் சென்ற குத்துக்கோற்காரர் மூவரையும் யானை மேலிருந்த பாகர் இருவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தி நின்றார்.

தமது பட்டத்து யானையும், பாகர் ஐவரும் பட்டு வீழ்ந்த செய்தியைக் கேட்ட புகழ்ச்சோழர் வெகுண்டார். ‘இது பகைவர் செயலாகும்’ என எண்ணி, நால்வகைச் சேனைகளுடன் அவ்விடத்தை அடைந்தார்; யானையும், பாகரும் வெட்டப்பட்டிருந்த அவ்விடத்தில் பகைவர் எவரையும் காணாதவராய் இருகை யானைபோல் தனித்து நிற்கும் எறிபத்தராகிய சிவனடியாரைக் கண்டார். தம் யானையையும் பாகர்களையும் கொன்றவர் அங்கு நிற்கும் அடியவரே என அருகிலுள்ளார்கள் கூறக் கேட்டறிந்த வேந்தர், சிவபெருமானுக்கு அன்பராம் பண்புடைய இச்சிவனடியார் பிழைகண்டாலல்லது இவ்வாறு கொலைத்தண்டம் செய்யமாட்டார். எனவே என்னுடைய யானையும், பாகர்களும் பிழை செய்திருக்கவேண்டும் எனத் தம்முள்ளே எண்ணியவராய், தம்முடன் வந்த சேனைகளைப் பின்னே நிறுத்தி விட்டுத் குதிரையின்று இறங்கி, ‘மலைபோலும் யானையை இவ்வடியார் நெருங்கிய நிலையில், அந்த யானையால் இவர்க்கு எத்தகைய தீங்கும் நேராது விட்ட தவப்பேறுடையேன், அம்பலவானரடியார் இவ்வளவு வெகுளியை (கோபத்தை) அடைவதற்கு நேர்ந்த குற்றம் யாதோ? என்று அஞ்சி எறிபத்தரை வணங்கினார். எறிபத்தர், யானையின் சிவபாதகச் செயலையும், பாகர் விலகாதிருந்ததனையும் எடுத்துரைத்தார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழர், ‘சிவனடியார்க்குச் செய்த இப்பெருங் குற்றத்திற்கு இத்தண்டனை போதாது; இக் குற்றத்திற்குக் காரணமாகிய என்னையும் கொல்லுதல் வேண்டும் ஆனால் மங்கலம் பொருந்திய மழுப்படையால் கொல்வது மரபன்று. வாட்படையாகிய இதுவே என்னைக் கொல்லுவதற்கு ஏற்ற கருவியாம் என்று தமது உடைவாளை ஏற்றுக் கொள்ளும்படி எறிபத்தரிடம் நீட்டினார்.

அதுகண்ட எறிபத்தர் ‘கெட்டேன், எல்லையற்ற புகழனாராகிய வேந்தர் பெருமான் சிவனடியார்பால் வைத்த அன்பிற்கு அளவில்லாமையை உணர்ந்தேன்’ என்று எண்ணி, மன்னார் தந்த வாட்படையை வாங்கமாட்டதவராய்த் தாம் வாங்காது விட்டால் மன்னர் அதனைக் கொண்டு தம்முயிரைத் துறந்துவிடுவார் என்று அஞ்சித் தீங்கு நேராதபடி அதனை வாங்கிக் கொண்டார். உடைவாள் கொடுத்த புகழ்ச்சோழர், அடியாரை வணங்கி ‘இவ்வடியார் வாளினால் என் குற்றத்தைத் தீர்க்கும் பேறு பெற்றேன்’ என உவந்து நின்றார். அதுகண்ட எறிபத்தர் தமது பட்டத்து யானையும், பாகரும் என் மழுப்படையால் மடிந்தொழியவும், உடைவாளும் தந்து, ‘எனது குற்றத்தைப் போக்க என்னைக் கொல்லும், என்று வேண்டும் பேரன்புடைய இவர்க்கு யான் தீங்கு இழைத்தேனே என மனம் வருந்தி, இவ்வாளினால் எனது உயிரை முடிப்பதே இனிச் செய்யத்தக்கது’ என்று எண்ணி வாட்படையினை தம் கழுத்திற்பூட்டி அரிதற்கு முற்பட்டார். அந்நிலையில் புகழ்ச்சோழர், ‘பெரியோர் செய்கை இருந்தவாறு இது கெட்டேன்’ என்று எதிரே விரைந்து சென்று வாளையும் கையையும் பிடித்துக் கொண்டார்.

அப்பொழுது சிவபெருமான் திருவருளால் ‘யாவராலும் தொழத்தகும் பேரன்புடையவர்களே! உங்கள் திருத்தொண்டின் பெருமையினை உலகத்தார்க்குப் புலப்படுத்தும் பொருட்டு இன்று வெகுளிமிக்க யானை பூக்கூடையினை சிதறும்படி இறைவனருளால் நிகழ்ந்தது” என்று ஒரு அருள்வாக்கு எழுந்தது. அதனுடனே பாகர்களோடு யானையும் உயிர்பெற்றெழுந்தது. எறிபத்தர் வாட்படையை நெகிழவிட்டுப் புகழ்சோழர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். வேந்தரும் வாட்படையைக் கீழே எறிந்து விட்டு எறிபத்தர் திருவடிகளைப் போற்றி நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினார். இருவரும் இறைவன் அருள்மொழியினை வியந்துபோற்றினர். இறைவர் திருவருளால் சிவகாமியாண்டாரது பூக்கூடையில் முன்புபோல தூய நறுமலர்கள் வந்து நிரம்பின. பாகர்கள் யானை நடத்திக் கொண்டு மன்னரை அணுகினர். எறிபத்தர் புகழ்ச்சோழரை வணங்கி, அடியேன் உளங்களிப்ப இப்பட்டத்து யானைமேல் எழுந்தருளுதல் வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார். புகழ்ச்சோழர் எறிபத்தரை வணங்கி யானைமேலமர்ந்து சேனைகள் சூழ அரண்மனையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையைக் கொண்டு இறைவர்க்குத் திருமாலை தொடுத்தணித்தல் வேண்டித் திருக்கோயிலை அடைந்தார். எறிபத்த நாயனார் இவ்வாறு அடியார்களுக்கு இடர் நேரிடும்போதெல்லாம் முற்பட்டுச் சென்று தமது அன்பின் மிக்க ஆண்மைத் திறத்தால் இடையூறகற்றித் திருக்கயிலையை அடைந்து சிவகணத்தார்க்கு தலைவராக அமர்ந்தார்.

மாசி - பூராடம் - காரி நாயனார் மார்ச் 11

“கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.



மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார். அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.

அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார். 

பங்குனி - ரோகிணி - நேச நாயனார் - மார்ச் 23


    “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்
    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்” – திருத்தொண்டத்தொகை.



நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்.

பங்குனி - திருவாதிரை  - கணநாத நாயனார் - மார்ச் 24


“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
ஆளுடைய பிள்ளையார் அவதரித்த சீர்காழிப்பதியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார் கணநாத நாயனார்.



அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு தொழும்பு செய்தார். தொழும்பு செய்தலில் தேர்ச்சி பெற்றிருந்த இத்தொண்டரை நாடிப்பலரும் தொண்டு பயிலவந்தனர். தம்மிடம் வந்த நந்தவனப்பணி செய்வோர், மலர்பறிப்போர், மாலை புனைவோர், திருமஞ்சனம் கொணர்வோர், திருவுலகு திருமெழுக்கமைப்போர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்றிவர்களையெல்லாம் அவரவர் குறையெல்லாம் முடித்தார். வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தார். இவற்றால் கைத்திருத்த தொண்டில் தேர்ந்த சரியையார்களையும் உருவாக்கினார்.
இல்லறத்தில் வாழ்ந்த இவர் அடியார்களை வழிபட்டார். ஆளுடைய பிள்ளையார் திருவடியில் மூண்ட அன்போடு நாளும் முப்பொழுதும் செய்தார். ஞானசம்பந்தப் பெருமாளை நாளும் வழிபட்ட நலத்தால் இறைவரது திருக்கயிலை மாமலையில் சேர்ந்து கணங்களுக்கு நாதராகி வழித்தொண்டில் நிலைபெற்றார்.

மீண்டும் ஒருமுறை குறிப்பால் தருகின்றோம்.

மாசி - அஸ்தம் - எறிபத்த நாயனார் -  மார்ச் 4
மாசி - பூராடம் - காரி நாயனார்  - மார்ச் 11
பங்குனி - ரோகிணி - நேச நாயனார் - மார்ச் 23
பங்குனி - திருவாதிரை  - கணநாத நாயனார் - மார்ச் 24

தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அருகில் உள்ள சிவாலயம் சென்று அடியார் பெருமக்கள் அருள் பெறுங்கள்.

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.










27 February 2018

அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் - மாசிமக திருத்தேர் திருவிழா (01/03/2018 முதல் 10/03/2018 வரை)


இறை வழிபாட்டோடு இணைந்த மாதங்களில் சிறப்பு பெற்றது மாசி மாதமாகும். அதிலும் மகம் நட்சத்திரம் இன்னும் சிறப்பு வாய்ந்தது. ‘மகத்தில் பிறந்தார் ஜகத்தை ஆள்வார்’ என்பது ஜோதிட வாக்கு. எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த நாளின் சிறப்புகளை இங்கே காண்போம்.

இந்நாளில் தான் உமா தேவியார் தக்கன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

தக்கன் தனது மகளாக சிவபெருமானின் சக்தியாகிய உமாதேவியார் வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டி தவம் இருந்தார். அவனது தவத்தை மெச்சிய சிவன் அவன் முன் தோன்றி அவன் கேட்ட வரத்தை வழங்கினார். உமாதேவியாரும் தக்கனுக்கு மகளாக பிறந்தார். அந்த தெய்வக்குழந்தைக்கு தாட்சாயிணி என பெயரிட்டு அன்போடு வளர்த்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார். தாட்சாயிணி மாசி மகத்தன்று அவதாரம் செய்ததால் தேவியின் பிறந்த தினமாக அப்புனித நாள் மகத்துவம் பெறுகிறது.

கோடீஸ்வர யோகம் மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும்  வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர்.மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது.

மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது.
இதனை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

ஒருமுறை சமுத்திரராஜனான வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது.
அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும் படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார்.

அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும். விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானிடம் வரம் கேட்டார்.

தான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடல் நீரில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதை போன்று மாசிமகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் பாவவினைகள், பிறவி பிணிகள் துன்பங்கள் யாவும் நீங்கி அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார்.அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.மாசிமகத்தன்று பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலம் தரும்.

நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவதும் மாசி மகத்தில் தான்.

மாசி மகத்தில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம்.

மாசி மகம் மகத்துவம் மிக்கது.சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது.

கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன.

சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

மாசிமகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும்.ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை பிறப்பதாக ஐதீகம்.

மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும்.காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.

ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உதைத்து விட்டார்.அமிர்தம் சிதறியது.உடைந்து போன குடம் சிதறி உருண்டு ஓடியது.அந்த குடம் நின்ற இடம் தான் கும்பகோணம்.சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம்.அமிர்த துளிகள் லிங்கமானது.அவர் தான் கும்பேஸ்வரர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவேரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.

எங்களிடம் வரும் பாவத்தை எப்படி தொலைப்போம் என கேட்டனர்.அதற்கு பரமசிவன் நதிகளே!
மகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள்.பன்னிரெண்டு நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம்.

மாக மாத சுக்ல சதுர்த்தி (வளர்பிறை) “குந்த சதுர்த்தி” என்று வழங்கப்படுகிறது.இந்த நாளில் பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் குந்த (மல்லிகை) புஷ்பத்தால் சதாசிவனை அர்ச்சித்துப் பூஜை செய்வது குறைவற்ற செல்வம் மற்றும் நிறைவான வாழ்வுக்கு அடிகோலும் என்று கூறுகிறார்கள்.

இதன் அடுத்த நாளான பஞ்சமி தினமானது “வஸந்த பஞ்சமீ” என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் மஹாவிஷ்ணுவை லக்ஷ்மியுடன் சேர்த்துப் பூஜிப்பதும், நாம சங்கீர்த்தனம் போன்றவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.இந்த வழிபாட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், தம்பதியிடத்து அன்யோன்யமும் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த இரு விசேஷங்களும் சாந்திரமான மாசி மாதத்தை அடிப்படையாகக் கொள்ளாது, தைமாத அமாவாசைக்குப் பின்னர் வரும் சதுர்த்தி மற்றும் பஞ்சமீ திதிகளைக் கொண்டு அமைகிறது என்பது கவனிக்கத்தக்கது. 

சாதாரணமாக ஏகாதசி விரதம் என்பது மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் அவசியம் என்று கூறுகிறது புராணங்கள்.அந்த வகையில் இந்த மாதத்தில் வரும் இரு ஏகாதசிகளும் சிறப்பானவை. மாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘ஜயா ஏகாதசி’ என்று பெயர்.

இந்திரன் சபையில் நடனமாடும் கந்தர்வர்கள் தவறாக நடனமாடியதால் சாபம் பெற்று, பின்னர் இந்த ஏகாதசி விரதத்தின் மூலமாக விமோசனம் பெற்றதாகச் சொல்கிறார்கள்.இந்த ஏகாதசியன்று விரதமிருப்பவர்கள் செயல்படும் காரியம் யாவும் ஜெயம் என்கிறார்கள்.

காவிரிக்கரையில் உள்ள திருஈங்கோய் மலைக்குச் சென்று அங்கு அருள் பாலிக்கும் மரகதேஸ்வரர் மற்றும் அகஸ்தியர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ர பீடத்தை தரிசிப்பது பல பாவங்களையும் போக்கக்கூடியதாகச் சொல்கிறார்கள்.

மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) ஏகாதசிக்கு ‘ஷட்திலா ஏகாதசி’ என்று பெயர்.

இந்த நாளில் எள்ளை அரைத்துப் பூசிக் குளிப்பது, எள்ளை தானமாக அளிப்பது, எள்ளை திரவியமாகக் கொண்டு ஹோமம் செய்வது, எள் மற்றும் நீர் தானமாக அளிப்பது, எள் கலந்த உணவினை உண்பது என்பதாக எள்ளை வைத்து ஆறுவிதமான செயல்களைச் செய்வதால் இந்த ஏகாதசிக்கு இப்பெயர்.

தெளலப்யர் என்னும் மஹரிஷியின் சிஷ்யர் ‘பசுவைக் கொன்றவர்கள், பிறர் பொருட்களை அபகரித்தவர்கள்’ போன்றோருக்கு பிராயச்சித்தம் என்ன என்று கேட்ட சமயத்தில், தெளலப்யர் இந்த விரதம் குறித்துச் சொன்னதாகத் தெரிகிறது. ஈஸ்வரனின் சாபம் பெற்ற அம்பிகை, ஒரு மாசி மகத்தில் பூமியில், காளிந்தி நதிக்கரையில், தக்ஷனின் மகளாக  அவதரித்ததாகச் சொல்லப்படுகிறது.

மாசி மகம் என்பது “ஸ்ரீ லலிதா ஜெயந்தி” என்று அழைக்கப்படும் அளவிற்கு சாக்தத்தில் சிறப்பான தினமாகச் சொல்லப்படுகிறது.

மாக மாசம் என்று சொல்லப்படும் மாசி மாத பெளர்ணமி தினத்தன்று மாலையில்ஸ்ரீலலிதையின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.ஆகவே எல்லா பெளர்ணமி தினங்களிலும் செய்யப்படும் ஆவரண பூஜைகள் இந்த மாசி மாத பெளர்ணமியன்று மாலை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.இந்த மாசி மாத பெளர்ணமி தினமே ஹோலிப் பண்டிகை என்று வடநாட்டில் கொண்டாடப்படுவதாம்.

இந்த ஹோலிப் பண்டிகையானது கண்ணுக்குத் தெரியாத ராக்ஷர்களிடத்திருந்து குழந்தைகளைக் காப்பதற்காக என்று பவிஷ்யோத்தர புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

மாசிமாத ஞாயிற்றுக் கிழமையில் அமாவாசை, திருவோணம் வருமானால் அந்த தினம் மிகச் சிறப்பானதாக ‘அர்த்தோதயம்’ என்று சொல்லப்படுகிறது.

இதுவே ஞாயிறுக்கு பதிலாக திங்கள் வருமாயின் ‘மகோதயம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த தினங்களில் செய்யும் கர்மாக்கள் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் பெரியோர்.

மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்குமாம்.

மக ஸ்நானம் என்பது மிகுந்த நற்பலன்களை அளிக்கக் கூடியது என்று கூறியிருக்கிறார்கள்.

தை அமாவாசைக்கு அடுத்த தினத்தில் இருந்து,  பிரம்ம முஹூர்த்த காலத்தில் சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்தவருக்கு என்று ஸ்லோகம் செய்து கொடுத்திருக்கிறார்கள் பெரியோர்.பலகாலம் விசேஷ தீர்த்தங்களில் நீராடிய பலனை மக ஸ்நானம் அளித்து
விடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து,  சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்”

என்று சம்பந்தர் கூறுவதன் மூலமாக மாசியில் கடலாடுவதன் சிறப்பும், கபாலி கோவிலில் மாசி மாதச் சிறப்பு உற்சவம் பற்றியும் தெரிகிறது.

இந்த மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி (மஹா அஷ்டகை) பித்ருக்களது ஆசிகளை நமக்கு கொடுக்கும் என்று தெரிகிறது.

இத்துணை புண்ணியமிக்க நன்னாளில் நாம் இறை தரிசனம் செய்து, நலம் பல பெறுவோம். மாசி மகம் தீர்த்தவாரி சென்னையில் மிகவும் விசேஷம். கும்பகோணம்,தஞ்சை போன்ற ஊர்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. தங்கள் வீட்டின் அருகில் உள்ள கடவுளை கோயில் சென்று வணங்குங்கள். இதோ. நமக்கு கிடைத்த அழைப்பை இங்கே பதிக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் விடுமுறை நாட்களை பயன்படுத்துங்கள். தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக திருத்தேர் திருவிழா வருகின்ற 01/03/2018 முதல் 10/03/2018 வரை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. கீழே உள்ள அழைப்பிதழில் மேற்கொண்டு தகவல்கள் உண்டு.




மாசி மகம் கொண்டாடி, மாசில்லா வாழ்வு பெறுவோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் 


மீள்பதிவாக:-

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_17.html


ஸ்ரீ சக்கரை அம்மாவின் அருள் பெறுவோம்

சக்கரை அம்மாள்

பெயரில் மட்டும் இனிமை கொண்டவர் என்றல்லாது, அன்பில், கருணையில்,பாசத்தில் ,நேசத்தில் இனிமை கொண்ட பெண் சித்தர். சில பதிவுகளுக்கு முன்னால், நாம்  ஸ்ரீ சக்கரை அம்மா பற்றி தெரிந்து கொண்டோம். சென்ற வாரம் நடை பெற்ற குரு பூசையின் நிகழ்வுகளை இங்கே பதிய விரும்புகின்றோம்.

தற்போது மிகுந்த அதிர்வுகளுடன்,வேண்டியதை கொடுக்கும் திருத்தலமாக சக்கரை அம்மாவின் சமாதி திருக்கோயில் திகழ்கிறது.இன்றும் இந்த ஜீவ சமாதியில்இங்குமங்கும் சக்கரை அம்மா நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை கேட்க முடியும் என்கிறார்கள் அடியவர்கள்..இங்கு மாதாந்திர திருவாதிரை,பௌர்ணமி நாட்கள் சிறப்பு...இதன் அருகிலேயே முருக அடியவர் மகான் பாம்பன் சுவாமிகள் சமாதி திருக்கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது..

























குருபூசை நிகழ்வுகளை நமக்கு அளித்த செல்வி சௌமியா & திருமதி. சாந்தி பாலச்சந்தர் அவர்களுக்கும் இங்கே நாம் நம் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். நாமும் நேரில் செல்ல நினைத்தோம். இறையருள் நமக்கு வேறொரு யாத்திரையை நிகழ்த்தியது. வரும் நாட்களில் நேரில் சென்று, நம் அனுபவத்தை மற்றொரு பதிவில் தருகின்றோம்.

மீள்பதிவாக:-

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_22.html

26 February 2018

நம் கடன் உழவாரப் பணி செய்து கிடப்பதே

ஒவ்வொரு முறை உழவாரப் பணி செய்யும் போதும்  நாம் பெறுகின்ற அனுபவம் வார்த்தைகளில் சொல்ல இயலாத ஒன்று. நம் தளத்தில்  பணிகள்/ சேவைகள் செய்த அறிவிப்பு இல்லையே என்று ஏங்க வேண்டாம். அனைத்தும் குருவருளால் சிறப்புற நடைபெற்று வருகின்றது. நம் ஆண்டு விழா முடித்து விட்டோம், இந்த மாதம் அன்னசேவை சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் செய்தோம். இன்று காலை அடுத்த மாதம் உழவாரப் பணி செய்வது பற்றிய தகவல் உறுதியானது.விரைவில் தனிப்பதிவில் அறிவிக்கின்றோம்.

திருநாவுக்கரசர் அருளிய  தேன் வழங்கும் தேவாரம் ' என் கடன் பணி செய்து கிடப்பதே"  என்று உரைக்கின்றது.

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்

என்க டன்பணி செய்து கிடப்பதே.

 இறைவனுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது. அது அடியார்களை தாங்குவது.  தாங்குதல் என்றால் கீழே விழாமல் பிடித்துக் கொள்ளுவது. தவறி விழுந்து விடாமல் தாங்கிப் பிடிப்பது.

இறைவா, உன் கடமை என்னை தாங்கிப் பிடிப்பது என்று . கட்டளையாகச் சொல்கிறார். நான் உன்னை வணங்கி, வேண்டி, பெற்றுக் கொள்ளுவது எல்லாம் தேவை இல்லை. என்னை தாங்க வேண்டியது உன் கடமை. நீ உன் கடமையைச் செய்.

அதையும்  சொல்லுகிறார் என்றார், அந்த முருகனைப் பெற்ற பார்வதியை இடப் பாகமாக கொண்டவனே, என்னை தாங்குவது உன் கடமை.

யாருக்கும், அவர்களின் பிள்ளை பேரை சொன்னால் கொஞ்சம் மனம் கனியும். அதோடு மனைவியின் போரையும் கொஞ்சம் சேர்த்து  கொண்டால் இன்னும் இனிமை சேரும்.

அப்படி இறைவனுக்கு கடமையை சொன்ன நாவுக்கரசர், அடிவர்களுக்கும் ஒரு கடமை உண்டு என்று சொல்கிறார். அது, எப்போதும் பணிசெய்வது. பணி செய்த பின் அதற்கு என்று கூலி எதுவும் எதிர் பார்க்காமல் சும்மா கிடப்பது. அது அடியவர்களின் வேலை. திருத் தொண்டு புரிவது.

நம் வேலை திருத் தொண்டு புரிவது தான். அந்த திருத்தொண்டில் உழவாரப் பணியும் உளது. இதை பெரியவா வாக்கில் காண்போம். ஏற்கனவே நம் தளத்தில் பதிவிட்டு இருக்கின்றோம். இருந்தாலும் நல்ல செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்வதும், பேசுவதும் நம் நிலை உணர்த்தும்.

”நம் கடன் பணிசெய்து கிடப்பதே” என்பதுதான் நம் வாழ்க்கையின் குறிக்கோளாக, Motto – வாக் இருக்க வேண்டும்.

கடன் என்றால், ‘கடனே என்று செய்தேன்’, ‘கடனிழவே என்று செய்தேன்’ என்றெல்லாம் சொல்லுகிறோமே, அந்த மாதிரி வேண்டா வெறுப்பாகச் செய்வது என்று அர்த்தமில்லை. கடன் என்றால் கடமை, Duty .அதை அன்போடு, ஆர்வத்தோடு ஹ்ருதய பூர்வமாகச் செய்ய வேண்டும்.
லோகத்தில் இத்தனை ஜீவராசிகள், பசு பக்ஷிகள், தாவர வர்க்கங்கள் இருக்கிறோமே, இதில் ஒன்றுக்கொன்று வாழ்வுக்கு அவசியமானவைகளைப் பரஸ்பரம் கொடுத்துக் கொண்டுதான் ஜீவிக்கிறோம். இதிலே மநுஷ்யர்களான நாம், நம் போன்ற ஸஹ மநஷ்யர்களிடமிருந்தும், மிருகங்கள், பக்ஷிகள், தாவரங்கள், இன்னும் inanimate என்கிற ஜடவஸ்துக்களிடமிருந்துங்கூட எத்தனையோ உதவி பெறுவதால்தான் ஜீவ யாத்திரையை நடத்திக்கொள்ள முடிகிறது. இதனால்தான் ஜடம் என்று நினைக்கிற பூமி, ஜலம், அக்னி இவற்றுக்குக்கூட நாம் செய்கிற பிரதியாக வைதிக மதத்தில் பலவிதமான சடங்குகள் இருக்கின்றன.

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது, உணர்ச்சிகள் இருக்கின்றன என்று ஜகதீஷ்சந்திர போஸ்தான் கண்டு பிடித்தார் என்றில்லை. வனஸ்பதி, அச்வத்தம் என்கிற மாதிரியாக அதுகளையும் உயிரும் உணர்ச்சியும் கொண்டதாகப் பார்த்து மந்திரபூர்வமாக அவற்றுக்கும் நம் ப்ரத்யுபகாரமாக பூஜைகளைப் பண்ண சாஸ்த்திரம் இருக்கிறது. ‘தூர்வா ஸூக்தம்’, ‘ம்ருத்திகா ஸூக்தம்’ என்றெல்லாம் அருகம்புல், மண் முதலானவற்றிலிருக்கிற தெய்வ சக்தியைக்கூட ஆராதிக்க வேத மந்திரங்கள் இருக்கின்றன. தினமும் செய்கிற ‘ப்ரஹ்ம யஜ்ஞ’த்தில் சேதன-அசேதனங்கள் அத்தனையிலும் இருக்கிற சைதன்ய சக்திக்கு நம் நன்றியறிதலாகத் தர்ப்பனம் சொல்லியிருக்கிறது.


ஒரு காக்கை இருக்கிறது. எங்கேயோ ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு நம் தோட்டத்திலே வந்து எச்சமிடுகிறது. அந்தப் பழத்தின் கொட்டை இங்கே நம் வீட்டுத் தோட்டத்தில் விழுந்து மரமாகிறது. அந்தக் காக்கை நமக்கு ஓர் உபகாரம் பண்ணிவிட்டது. நாய் காவல் காக்கிறது. குதிரையை வண்டியில் கட்டி ஸவாரி பண்ணுகிறோம். கோமாதா நமக்கு பௌதிகமாகவும் ஆத்மார்தமாகவும் பண்ணுகிற உபகாரம் கொஞ்சநஞ்சமில்லை. இப்படி எல்லாரிடமும் உபகாரம் பெற்றுவிட்டு, மநுஷ்ய ஜன்மா எடுத்துள்ள நாம் பிரதி உபகாரம் பண்ணாமல் இருந்தால் பாபம் அல்லவா? ”நன்றி மறப்பது நன்றன்று”, ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்றெல்லாம் மஹா பெரியவர், வள்ளுவர், இன்னும் மநு, வியாஸர் எல்லாரும் சொல்கிறார்களே!


சென்ற உழவாரப் பணியில் கிடைத்த அனுபவத்தை இங்கே பகிர்கின்றோம்.





மகளிர் அணி அதிரடி ஆரம்பம். ஆசிரமத்தில் உள்ள குப்பைகளை கூட்டித் தள்ள ஆரம்பித்து விட்டார்கள். சதானந்த சுவாமிகள் குரு பூஜை இருந்ததால், சுவாமிகளின் கோயில் இடப்புறம் இருந்த செடி,கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த சொன்னார்கள். நாங்கள் இருந்ததோ நான்கே நான்கு பேர். எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ணங்களே முக்கியம் என்ற கூற்றை மனதில் இருத்தி, அங்கிருந்த களைகளை வெட்ட ஆரம்பித்தோம். கணினி பிடிக்கும் கைகள் அன்று அரிவாள் பிடித்தது.








எங்களால் முடிந்த அளவில், குப்பைகளை அகற்றினோம்.



பின்னர் சற்று நேரத்தில், நாம் பொத்தேரி வரை சென்று நம் ஆண்டு விழாவிற்கு வரும் படி, சிறப்பு சொற்பொழிவாளர் சிவத்திரு வேதகிரி ஐயா மற்றும் நால்வரின் பாதையில் சுரேஷ் அவர்களை அழைப்பிதழ் கொடுத்து வர சென்றோம். ஆசிரம முன் பகுதியில் சற்று மண்ணைக் கொட்டி நிரப்பும் படி கேட்டார்கள். அதனை திரு.வினோத்குமார் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நாம் பொத்தேரி சென்றோம்.


இருவரையும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்து விட்டு, நாம் மீண்டும் ஆசிரமம் வந்தோம், மதியம் சுமார் 1 மணி ஆகி இருந்தது. சுமார் 15 பேர் கொண்ட குழுவில் நாம் செய்த பணி, நமக்கு நிறைவைத் தந்தது. மதிய உணவு முடித்து, குழு ஒன்று கூடல் நிகழ்விற்கு தயாரானோம். வழக்கமாக பணியில் ஈடுபட்ட அடியார்களுக்கு தளத்தின் சார்பாக சிறு அன்பளிப்பு கொடுப்பது வழக்கம். இந்த முறை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலின் தினசரி நாட்காட்டி கொடுக்க இறையருள் பணித்தது.








மேலும் அன்று காலை நாம் உழவாரப்பணிக்கு செல்கின்றோம் என்று சொன்ன போது , நம் நண்பர் வீட்டில் இருந்து உபயோகிக்க முடியாத பழைய துணிகளை கொடுத்தார்கள். அவற்றையும் நாம் கொண்டு வந்து, ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளிடம் கொடுத்தோம். இங்கே பழைய துணி, புதிய துணி என்று நாம் ஆராயத் தேவையில்லை. கொடுக்கும் எண்ணமே முக்கியம்.









நம் குழுவின் சார்பாக சதானந்த சுவாமிகள் குரு பூசைக்காக நம்மால் இயன்ற பொருளை கொடுத்தோம்.


வழி நடத்தும் குருவிற்கு நன்றி சொல்லி, அப்படியே நம் ஆண்டு விழாவிற்காக சில முன்னேற்பாடுகள் பற்றி பேசிவிட்டு, குருவருள் பெற்று சென்றோம். சதானந்த சுவாமிகள் அருளைபற்றி பேசினால் கண்டிப்பாக விநாயகர் பற்றி சொல்வார்கள். சுவாமிகள் அங்கிருந்த விநாயகரை மாற்றி ,ம் மாற்றி அமைத்து மழை வளம் பெற செய்தார்கள். அது போல் மூத்தோனை வணங்கு ! என்று இந்த தினசரி நாட்காட்டி வழியாக நமக்கு செய்தியை சொல்லி இருக்கின்றாரா என்று நாம் நம்புகின்றோம்.

- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.

24 February 2018

மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு (4)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது


இரு மனம் கைகோர்க்கும் திருமண பந்தத்தில் நாம் அடிக்கடி கேட்கும் ஒரு குறளாய் இந்தத் திருக்குறள்.

இந்த திருவின் குறளோடு மணப் பொருத்தம் தொடர்பதிவில் இங்கே தொடர்வோம்

இல்வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கை பற்றியது. குடும்பம் என்னும்   சொல்,இல்வாழ்வான், துணைவி, பெற்றோர், பிள்ளைகள் போன்ற உறவுகளைக் கொண்ட அமைப்பைக் குறிக்கும். இல்வாழ்க்கையில் அன்பு தழைக்க வேண்டும்; அறம் செழிக்க வேண்டும். அது குடும்பவாழ்வின் தன்மையையும் அர்த்தத்தையும் உணர்த்தும் என்கிறது இக்குறள்.

இல்வாழ்க்கை அன்பின் விளைநிலமாகும். குடும்ப வாழ்க்கை தன்மைபெற அன்பு என்ற பண்பு நிறைந்திருக்கவேண்டும். குடும்பத்தில் உள்ளோர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழும் சூழல் இனிமையானது. அன்பு நிறைந்த இடத்தில் அருள் இயல்பாக மலரும். அன்பு இல்லத்தின் குணச்சிறப்பாக இருக்கவேண்டும்.
இல்வாழ்க்கை பொருள் பொதிந்த வாழ்க்கையாக அமைய அங்கு அறச்செயல்கள் நிகழவேண்டும். அறன் என்றது இல்வாழ்வாரது குற்றமற்ற வாழ்க்கையையும், இல்லத்திற்கு வெளியே உள்ள உலகில் உள்ளோருக்குச் செய்யும் நல்வினைகள் பற்றியதும் ஆகும். ஒருவனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் அதில் அறம் நிறைந்திருக்கவேண்டும்.

அன்பானது இல்லறத்துக்குக் குணம் சேர்க்கிறது. அறம் இல்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. அன்பும் அறமும் இணைந்த குடும்ப வாழ்க்கை பொலிவுடன் விளங்கும்.

 மணக்குடவர் தனது உரையில் 'இல்வாழ்க்கையாகிய நிலை எல்லோரிடத்திலும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதுவே வாழ்க்கையின் குணமும் பயனும் ஆம்' எனக் கூறி 'பயன் வேறு வேண்டாம்; தமக்கும் பிறர்க்கும் உண்டாகும் முகமலர்ச்சியே போதும்' என்கிறார். எளிய விளக்கமான இது, அன்பும் அறனும் நிறைந்த குடும்பத்தின் அழகையும் மகிழ்ச்சியையும் காட்டி, குறளின் உட்பொருளையும் தெளிவாக்குகிறது.
அனைவரிடத்தும் செலுத்தப்படும் அன்பையும் பிறர்க்குதவும் அறனையும் உடைய இல்வாழ்க்கை தன்மை உடையதாயும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கும் என்பது கருத்து.

யார் யாரிடம் செலுத்தும் அன்பு இங்கு குறிக்கப்பெறுகிறது?

தொல்லாசிரியர்களுள் மணக்குடவர் யாவர் மாட்டுஞ் செய்யும் அன்பு பற்றிப் பேசுகிறார். ஆனால் பரிமேலழகர் தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினைச் சொல்கிறார். குறள் காட்டும் இல்லறத் தலைவனும் தலைவியும் ஒத்த மனமுடையோராகி வாழ்க்கையறத்தை மேற்கொண்டவர்கள், இவர்கள் இருவரிடை உள்ள அன்பாகிய அப்பண்பு இங்கு கூறப்பட்டது என்று சொல்வது அவ்வளவு சிறப்பு இல்லை. இங்கே சொல்லப்படுவது குடும்பத்தில் உள்ளோரிடையே முகிழ்த்து நிலைக்கும் அன்பு பற்றியே எனக் கொள்வது பொருத்தம். தொடர்ந்துவரும் அறன் என்ற சொல், எல்லோரிடத்தும் பரந்து விரிந்த அன்பு அருளாவதைக் குறிப்பதாகும்.
அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை தன்மையும் பொருளும் கொண்டது ஆகும் என்பது இக்குறட்கருத்து.






திருமணம் என்பது இரு மனம் ஒன்றாக இணைந்து உயிர்கலப்பு பெறுவதாகும், ஆனால் இன்று நடைமுறையில் 
திருமணத்தில் உயிர் கலப்பை நாம் காண முடிவதில்லை. மாறாக உடல் கலப்பை மட்டும் தான் காண முடிகிறது.
மேலும் இரு மனங்களும் ஒன்றாகவும் இணைவதில்லை.



ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால், அதற்காக நாம் எப்படி எல்லாம் திட்டமிடல் செய்கின்றோம், பயண நாள்,நேரம் , பயண வழி, பயண ஊர்தி, யாருடன் செல்கின்றோம், என பட்டியல் நீளுகின்றது.இதில் ஏதாவது ஒன்று சரிவர அமையவில்லை என்றால் பயண திட்டம் மீண்டும் மாறும்.
சாதாரண பயணத்திற்கே, இத்துணை திட்டமிடல் அவசியம் எனில், திருமணம் வாழ்க்கைப்பயணத்தில் மிகப்பெரிய பயணம். அதனை நாம் எப்படி எல்லாம் திட்டமிட வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பத்துப் பொருத்தங்கள் பார்த்து, ஒன்பது கிரகங்களின் நிலை கண்டு, எட்டுத்திக்கு உறவினர்களை அழைத்து, ஏழு அடிகள் எடுத்து வைத்து,அறுசுவை உணவை பந்தியில் பரிமாறி,ஐம்பூதங்களை சாட்சியாக வைத்து, நான்கு வேதங்கள் உரைத்து, மூன்று முடிச்சு மனைவியின் கழுத்தில் இட்டு, இரு மனமும் இணைந்து ஒரு மனமாவதே திருமணம். இந்த காலத்தில் இப்படி எல்லாம் நடப்பதில்லையே என்ற மிகப்பெரிய கேள்விக்குறி நம் முன் நிற்கின்றது . வாழ்வியலைத் தொலைத்து விட்டோம். பிழைப்பை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கின்றோம்

மணம் என்ற சொல்லுக்கு வாசனை என்று பொருள். மணத்துடன் திரு சேர்ந்தால் தெய்வீகம். பொருந்திய, உயர்ந்த வாசனை எனலாம். அப்படியாயின் திருமணம் என்பது இரு மனம் உயிர் கலப்பு பெற்று, ஒரு மனதாகி,தெய்வீகம் தரும் உயரிய வாசனை தரும் இனிய நிகழ்வு. இந்த வாசனைக்கு முன் மற்ற வாசனை வெறுமையே. அதாவது திருமணத்திற்கு முன்னால் மணம் என்பது வெறும் வாசனையே. இன்னும் விளங்க வேண்டின், மணம் என்பது வாசம் என்றால், திருமணம் என்பது சுவாசம் என கைக்கொள்ளலாம்.


இப்போது வள்ளுவருக்கு வாருங்கள். தெய்வீக மணம் கமழும் திருமண உறவு வேண்டின் நாம் என்ன செய்ய வேண்டும்? அன்பையும்,அறத்தையும் கடைப்பிடித்து போற்ற வேண்டும். அன்பை மணமகளும், அறத்தை மணமகனும் கடைப்பிடித்திட, வாழ்வின் பண்பும், பயனும் நமக்கு புலப்படும். ஆனால் இன்று அன்பு என்றால் கிலோ என்ன விலை ? என கேட்கும் சமுதாயத்தில், அறம் என்றால் அறம் செய்ய விரும்பு என பள்ளியில் படித்தது தானே என்று ஒதுங்கி விடுகின்றோம். இதனால் தான் அனைத்து சிக்கல்களும் உருவாகின்றன. அன்பை வளர்க்க, அறத்தைப் போற்றத்தான் திருமணம் என உணர வேண்டும்.






வாழ்வின் பயணத்தில் திருமண வாழ்க்கை நாம் செய்யும் பயணத்துடனும், அன்பு, அறம் பற்றி வள்ளுவர் கூறுவது பற்றியும் நீங்கள் சிந்தித்தால் அதுவே இந்தப் பதிவின் நோக்கமாகும்.

- மணப் பொருத்தம் இன்னும் மணம் வீசும்