அனைவருக்கும் வணக்கம். முருகன் அருள் முன்னிற்க இன்றைய பதிவில் ஒரு குட்டிக் கதை ஒன்றை பார்ப்போம்.கதை சொல்லும் நீதி அளப்பரியது. அனைவரும் இந்தக் கதையை கட்டாயம் கேட்டிருப்பீர்கள். இருப்பினும் மீண்டும் இங்கே சிந்திப்போம்
ஒரு ஊர்ல பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.
ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.
கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான் பிச்சைக்காரன்.
இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க? எனக்கேட்க..எங்க அப்பா, தாத்தா,
தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா.... ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..
அடப்பாவி!பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா?
எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,
பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்...அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான்.நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல...அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!என பரிதாபமாக கேட்க...
கடைக்காரர் சிரிக்கிறார்.மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.பிச்சைக்காரன்அழுதான்.அங்கலாய்த்தான்.
ராசியான ஓடு சாமி!மகான் கொடுத்த ஓடு ஐயா...தர்மப்பிரபு! கடைக்காரர் ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார்.சுரண்டச் சுரண்ட... அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...மெள்ள மெள்ள...
மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!
பிச்சைக்காரனின் கையில் அந்தத் தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்வேதனையுடன் சொன்னார்!
அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்ககடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?என சொல்கிறார்.
அட்டா....பார்ப்பதற்கு மிக எளிமையான கதையாய் தோன்றுகிறது. இதே போலத்தான்... நாமும்நமக்குள்இருக்கும்...ஆழ்மனத்தின்...தன்னம்பிக்கை- யின் மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை....,உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...
உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..! மறைபொருளான மனதை சரியாக உபயோகிக்க கற்றுக் கொண்டால், நம்மிடம் உள்ள தங்கத் திருவோடு பற்றி தெளிவோம். நாம் பிறந்தது முதல் இக்கணம் வரை நம்மிடம் உள்ள இந்த உடலும் மாபெரும் தங்கமே. ஆனால். நாம் அதைப் பற்றி என்றாவது சிந்தித்து இருக்கின்றோமா? தினமும் கூத்தாடி, கூத்தாடி போட்டு உடைத்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த உடலில் மனம் எங்கே இருக்கின்றது?உயிர் எங்கே இருக்கின்றது ? என்று சிந்தித்து இருப்போமா? இது போன்ற பல மறைபொருள்கள் நம்முள்ளே புதைந்து கிடக்கிறது. வெறும் சாதாரணத் திருவோடா? இல்லை தங்கத் திருவோடா ? முடிவு உங்கள் கைகளில் ...
குட்டிக்கதையில் மீண்டும் ஒரு குட்டிக்கதை
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவனது வழக்கம். ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில் பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார். அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. கோபம் கொண்ட அரசர் பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.
பிச்சைகாரன் கலங்கவில்லை. கல கலவென சிரிக்கத் தொடங்கினான்.அரசருக்கு மேலும் கோபம். மற்றவர்களுக்கு திகைப்பு. அரசன் பிச்சைக்காரனை "ஏன் சிரிக்கிறாய்?" என்று கோபமாக கேட்க, பிச்சைக்காரன் "என் முகத்தில் நீங்கள் விழித்ததால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே. உங்கள் முகத்தில் நான் விழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணி சிரித்தேன்" என்றான்,அரசன் தன் தவறை உணர்ந்து தலை குனிந்தான். தண்டனை ரத்து செய்யப் பட்டது.
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும். எதை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்!
இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் பிரச்சினைகளை சந்தித்தே தீர வேண்டும் . மனிதன் என்றாலே மனம் உடையவன். மனம் என்ற மறைபொருள் வந்தாலே...அது சொல்வதை நாம் கேட்டு, மனிதனிலிருந்து குரங்கு போல வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.எதிர்பார்ப்போடு விடியும் ஒவ்வொரு நாளும், அனுபவத்தை தந்து செல்கிறது . அந்த அனுபவத்தைக் கொண்டு, தன்னம்பிக்கையோடு வாழ்க !
- அடுத்த பதிவில் சந்திப்போம்
No comments:
Post a Comment