Subscribe

BREAKING NEWS

12 February 2018

சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது

சிவராத்திரி நாளை ஆரம்பம். சென்ற ஆண்டு திருஅண்ணாமலை சென்று கிரிவலம் செய்து விட்டு வந்தோம் . இந்த ஆண்டு நம் TUT தளத்தில் சிவராத்திரி விரதம் மேற்கொள்ள உள்ளோம். இம்முறை கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயில், வேலி அம்மன் ஆலயம், நந்தீஸ்வரர் கோயில் என்று இங்கேயே தரிசனம் பெற முடிவு செய்துள்ளோம்.

சிவராத்திரி விரதம் கடந்த இரண்டு ஆண்டுகளாய் இருந்து வருகின்றோம். இருந்தும் இந்த ஆண்டு சென்ற ஆண்டை விட ,இன்னும் ஒரு படி விரதத்தில் வீரியம் கடைபிடிக்க முயற்சி செய்ய விரும்புகின்றோம்.

சிவராத்திரி விரதம் இருக்குமன்று அதாவது நாளை  முழுதும் எதுவும் சாப்பிடக்கூடாது. நாள் முழுதும் உபவாசம் இருந்து மனதை சிவனின் மீது வைத்து, இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து சிவாலயங்களில் நடைபெறும் 4 ஜாம பூஜைகளிலும் பங்கேற்க வேண்டும். இன்றைய ஒரு நாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூஜை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது.

மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண்விழித்து இறைவனின் நாமத்தை சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும். முடிவாக இனிப் பிறவா தன்மை பெறலாம் என முன்னோர்கள் கூறுகின்றனர்.


விரதத்தை சாஸ்திர சம்பிரதாயங்களில் கூறியுள்ளபடி அனுஷ்டிக்க பயந்து பலர் விரதமிருக்க முயற்சிப்பதில்லை. இன்றைய சூழ்நிலையில் 100% உண்மையான விரதத்தை எடுத்தவுடன் அனுஷ்டிப்பது எவராலும் இயலாது. விரதமிருந்து உடலையும் மனதையும் பழக்கவேண்டும். ஒவ்வொரு மகா சிவராதிரியின்போதும்  முந்தைய சிவராத்திரியைவிட சிறப்பாக அனுஷ்டிக்க சங்கல்பம் செய்துகொண்டால் நாளாவட்டத்தில் விரதம் கைவரப்பெறும்.

நாமும் இப்படித் தான் முதல் ஆண்டில் எப்படி விரதம் இருப்பது என்று தெரியாமல் நமக்குத் தெரிந்த வழிகளில் வழிபாடு செய்தோம். பின்னர் இரண்டாம் ஆண்டில் கிரிவலம் செய்தோம்.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தான் விரதம் இருக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது? மனதில் தூய எண்ணத்துடன் மாசு நீக்கி, இன்று ஒரு நாள் சிவ சிந்தனையில் இருந்தால் கூட போதும்., இரவில் கண் விழித்து விரதம் இருக்க முடியாதவர்கள், நாளை முழுதும் உபவாசம் இருந்து, மாலை தங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயம் சென்று, முதல் கால பூசையாவது கண்டு இன்புறுங்கள். மற்றவர்கள் கண்டிப்பாக 4 கால பூசை பார்க்கவும்.

நாங்களும் விரதம் இருக்க விரும்புகின்றோம்? வீட்டிலேயே விரதம் இருக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும். கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் விரதம் இருப்பவர்கள் திருவிளையாடல்,திருவருட்ச்செல்வர்,கந்தன் கருணை போன்ற பக்திப் படங்களை பார்த்தும், சிவபுராணம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் போன்ற பொக்கிஷங்களை படித்தும் சிவா சிந்தனையில் இருக்கலாம்.



செய்யவேண்டியது:

1) சிவாலயத்தில் இருந்தபடி நான்கு கால பூஜைகளையும் பார்ப்பது

2) சிவ சிந்தனையுடன் உபவாசம் இருத்தல்

3) சிவ நாமத்தை மனதுக்குள் தியானித்தபடி இருத்தல்

4) பக்தி இலக்கியங்களையும் பக்தி நூல்களையும் படித்தல் (இன்று பன்னிரு திருமுறைகளுள் “போற்றித்திருத்தாண்டகம்” பாடுவது மிகச் சிறந்தது.

5) சிவராத்திரி தரிசனத்திற்கு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உதவுவது; ஆலய நிர்வாகத்திற்கு உதவுவது

6) ஆலயத்தில் விழித்திருந்து துப்புரவு பணிகளை மேற்கொள்வது

7) சிவபூஜை செய்பவர்களுக்கு கூட மாட உதவுவது

8) கோ-சம்ரோக்ஷனம் செய்வது

9) தான தர்மங்களை (அடுத்த நாள்) மேற்கொள்வது. – இவைகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும்.

செய்ய வேண்டிய செய்திகளை மேலே சொல்லி விட்டோம். இதிலே கவனம் செலுத்தினாலே, செய்ய வேண்டாதது நம்மை விட்டு அகலும். இருப்பினும் அவற்றை ஒரு பட்டியலாக தருகின்றோம்.








செய்யக்கூடாதது :

1) லௌகீக உலகியல் சார்ந்த விஷயங்களை பார்ப்பது, பேசுவது, படிப்பது

2) சினிமா, சீரியல் பார்ப்பது

3)​ கடுஞ்சொல் பேசுவது, கேட்பது

4) பொய் பேசுவது

5) மற்றவர்களை தரிசிக்க விடாமல் தான் மட்டுமே இறைவனை பார்த்தபடி இருப்பது

6) வயிறு முட்ட சாப்பிடுவது (பெருந்தீனி), மற்றும் அப்படி சாப்பிடுபவர்களுடன் பழகுவது. – இவைகளை இன்று அறவே தவிர்க்க வேண்டும்.

நாளை ஒரு நாள் தொ(ல்)லைக்காட்சிக்கு  விடுப்பு அளித்து, எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும் சரி. இன்று கடுஞ்சொல் பேசமாட்டேன் என்று மனதில் உறுதி பெறுங்கள். அதே போல், இன்று ஒரு நாள் பொய்யும் பேசமாட்டேன் என்று உறுதியாய் இருங்கள். வயிற்றை பட்டினி போடுங்கள். இங்கே ஆரோக்கியமும் கைவரப் பெரும். உடலை உணர உபவாசம் இருங்கள். உள்ளம் உணர சிவ சிந்தனை கொள்ளுங்கள். பிறகென்ன! அந்த சிவனோடு நித்தமும் சிவ ராத்திரி தான்.




No comments:

Post a Comment