Subscribe

BREAKING NEWS

05 February 2018

அர்த்தமுள்ள இந்து மதம்

அர்த்தமுள்ள இந்து மதம். ஆன்மிகத்தின் சூத்திரங்களை வாழ்வியலோடு பேசும் என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். தற்போது நடைபெற்ற சென்னை புத்தகத் திருவிழாவில் நாம் விரும்பிய நூலில் இது மிக முக்கியமான ஒன்று. காலம். கடந்து பேசும் காவியத்தைப் பற்றிய கருத்துகள் நம் தளத்தில் இனி பதிவாக பவனி அவர் இருக்கின்றது.

 வள்ளலார் வாழும் போது அவர்மீது வழக்கிட்டவர் உண்டு.சாய்பாபா போன்ற பல மகான்கள் வாழும் போது அவரை உணராமல் உதாசீனம் செய்தவர் பலர் உண்டு.பாரதியார் அற்புத கவிதைகள் ஆயிரம் படைத்தும் அவர் மகத்துவம் உணராமல் இருந்தனர் மக்கள். அவர் மறைந்து வாந்ததும் உண்டு.

கண்ணதாசன் ஆயிரமாயிரம் ஞானத்தை போதித்த போதிலும் மக்களின் மனதில் இன்றும் நிற்பது ஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என்துணையிருப்பு என்ற தன் சுய வாழ்வு பாடல் மட்டுமே. இதை மனதில் வைத்து கொண்டு அற்புத ஆன்மீகத்தை அர்த்தமுள்ள இந்துமதம் என்று அத்தனை படைத்த பின்பும் அவரை ஞானி என்று ஏற்க மனமில்லாமல் பெண்பித்தன் குடிகாரன் என்றே அடையாளப்படுத்தி கொண்டுள்ளது நம் இனம்.

இன்றளவும் இருக்கும் போது மதிக்கும் ஞானமில்லை என்று சொல்வதைவிட இருக்கும் போதே அவர்களை போன்றவர்களை போற்றி வணங்கி புண்ணியம் கூட்டிக்கொள்ளும் பாக்கியமில்லாதவர்களாகவே நாம் வாழ்கிறோம்.வெறும் ஜீபூம்பாக்களை நம்பியும் பிரமாண்ட மேடையையும் கூட்டத்தையும் கண்டு அவதார புருஷர்களாக அடையாளம் காண்கிறோம்.

நவ கோடி சித்தர்கள் அவதரித்த பூமி இது ஆர்பாட்டங்களை நம்பியதில்லை.ஆனால் அற்ப மானிடர் ஞானத்தையே ஆடம்பரத்தை கொண்டே அளக்கின்றார்.இந்த மாயையிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.அல்லதை விடுத்து, நல்லதைச் செய்து, உள்ளதை உணர வேண்டும். அதுவே இந்த பதிவின் நோக்கமாகும்.இனி நம்மிடம் அர்த்தமுள்ள இந்து மதம் பேசப் போகின்றது.

எந்த நிலையிலும் தனக்கு மரணமில்லாத கவிஞர் கண்ணதாசனின் அற்புதப் படைப்புகளில் ஒன்று, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’. ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கையில் தொடராக வந்த இந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியாகி, பல்லாயிரக்கணக்கான ஆன்மிக வாசகர்களைத் தன்வசம் ஈர்த்தது. அமரத்துவம் பெற்ற அந்தப் படைப்பு, எந்த காலத்துக்கும், எந்த யுகத்துக்கும் பொருந்தக்கூடிய யதார்த்தம் கொண்டது. மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டுகிற, ஒரு பொக்கிஷமாக வைத்துக் கொள்ள விரும்புகிற ஆன்மிகக் களஞ்சியம் என்றே சொல்லலாம். தன் வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவ பாடங்களாகக் கவிஞர் வர்ணித்திருக்கும் பாங்கு, படிப்போர் ஒவ்வொருவரையும் தன்னை அவற்றுடன் ஒப்பிட்டு அடையாளப்படுத்திக்கொள்ள வைக்கும். இந்து மதம் என்றால் என்ன என்று விளக்க முனைவதல்ல அவரது நோக்கம்.



மாறாக, அந்த மதத்தோடு தன்னையும், நம்மையும் ஐக்கியப்படுத்திக்கொள்ள முயல்வதே ஆகும். இந்த ஐக்கியப்பாட்டால் ‘இறை’ என்பதன் கருணையை, பேரழகை, அருளை நாம் புரிந்துகொள்ள முயன்றால், அதுவே கவிஞரின் இந்தப் படைப்புக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். இந்த இதழ் முதல் இந்து மதத்தை நமக்கு அர்த்தமுள்ளதாக்குகிறார், கவிஞர் அவர்கள். இனி கவிஞர் நம்முடன் தொடர்ந்து உரையாடுவார்: என் இனிய நண்பர்களே, இந்து மதத்திற்குப் புதிய பிரசாரங்கள் தேவையில்லை. ஏற்கெனவே உள்ள பிரசாரகர்கள், உபன்யாசகர்கள் யாரும் சக்தி குறைந்தவர்களல்லர். சொல்லப் போனால், அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களையே, நான் இப்போது எழுதப் போகிறேன். ஆகவே, ‘புதிய பிரசாரகன் கிளம்பி இருக்கிறான்’ என்ற முறையில், இந்த தொடர் கட்டுரையை யாரும் அணுகத் தேவையில்லை.

நான் நாத்திகனாக இருந்தது, இரண்டு மூன்று ஆண்டுகளே! அதுவும், நாத்திகத்திற்கு ஒரு போலித்தனமான மரியாதை கிடைக்கத் தொடங்கிய இடைக்காலத்திலேயே! நான் எப்படி ஆத்திகனானேன்? கடவுளையும், புராணங்களையும் கேலி செய்வதற்காகக் கந்தபுராணம், பெரியபுராணம், கம்பனின் ராமகாதை, திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, அதை உள்ளிட்ட நாலாயிர திவ்யப் பிரபந்தம், வில்லிபாரதம் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன். அறிஞர் அண்ணா அவர்கள், கம்பனை விமர்சித்து, ‘கம்பரசம்’ எழுதியதற்குப் பின் அதன் எதிரொலியாகவே எனக்கு இந்த ஆசை தோன்றிற்று. படித்தேன்; பல பாடல்களை மனனம் செய்தேன். விளைவு? கம்பனைப் படிக்கப் படிக்க நான் கம்பனுக்கு அடிமையானேன். புராணங்களிலுள்ள தத்துவங்களைப் படிக்கப் படிக்க நான் கடவுளுக்கு அடிமையானேன்.

நாத்திகவாதம் என்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பதையும், உள் மனத்தின் உண்மையான உணர்ச்சி அல்ல என்பதையும் உணர்ந்தேன். மேலும் மேலும் கம்பனைப் படித்தேன்; கடவுளைப் படித்தேன்! என் சிறகுகள் விரிந்தன; சொற்கள் எழுந்தன; பொருள்கள் மலர்ந்தன; காண்கின்ற காட்சிகளெல்லாம் கவிதையிலேயே தோன்றின. புரட்சி என்கிற பேரில் குருட்டுத்தனமான நாத்திக மனப்போக்குத் தொடர்ந்திருந்தால், எனது எழுத்துகள் சுருங்கி, கருத்துகள் சுருங்கி, என் பெயரும் சுருங்கியிருக்கும். ரஷ்ய மக்களுக்கு நாத்திகவாதம் பொருத்தமாக இருக்கலாம். அவர்களது மூதாதையர்கள் ஆக்கி வைத்த மதங்களில், இந்து மதத்தில் உள்ளது போல் இவ்வளவு ஆழ்ந்த தத்துவங்கள் இல்லை. அருமையான கவிதை கலைகளில்லை. ‘வாழ்க்கையில் நீ எந்தச் சாலையில் போனாலும் சரி, எதிர்ப்படும் மகிழ்ச்சியிலோ, துன்பத்திலோ நீ இறைவனின் எதிரொலியைக் கேட்கிறாய்.

அந்த எதிரொலியில் இந்து மதத்தின் சாரத்தைக் காண்கிறாய்!’ ஒருவன் சராசரி மனிதனாயினும் சரி, தலைமை வகிக்கும் மனிதனாயினும் சரி, ஒரு கட்டத்தில் உள்ளூர இறைவனை நம்பத் தொடங்குகிறான். அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக, ஏதாவதொரு, இந்துமதக் கதை அவன் நினைவுக்கு வருகிறது. ‘அன்றைக்குச் சொன்னது சரியாகப் போய்விட்டது’ என்று மனத்திற்குள்ளேயே கூறிக் கொள்கிறான். நாத்திக வாதத்தில் பணம் கிடைப்பதால், ஒரு சிலர் மட்டுமே, தங்களை ‘இங்கர்சாலின் மாப்பிள்ளை’களாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமுதாயத்தை ஏமாற்றாத எந்தச் சராசரி மனிதனும், இந்துமதத் தத்துவத்தை விட்டு விலகிச் செல்ல முடியாது. அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவன் போகும் சாலை, இந்து மதம் போட்ட சாலையாகத்தான் இருக்கும்.

‘தெய்வ தண்டனை’ என்று இந்து மதம் சொல்கிறதே, அதை நானே பலமுறை கண்ணெதிரில் கண்டிருக்கிறேன். சிறுவயதில் நான் வேலையில்லாமல் அலைந்த போது, ஒருவர் ஒரு மோசமான வேலையைச் சொல்லி, கேலியாக, ‘‘அந்த வேலைக்குப் போகிறாயா?’’ என்று கேட்டார். ‘அதற்குத்தானா நாம் லாய்க்கு’ என்றெண்ணிய நான் அழுதுவிட்டேன். என்ன ஆச்சர்யம்! சில ஆண்டுகளில், அதே வேலைக்கு அவருடைய மகன் போய்ச் சேர்ந்தான்! நான் இதோ உங்கள் மத்தியில் நிற்கிறேன். எனக்குத் தெரிந்த நண்பர் ஓர் அதிகாரியின் மனைவியோடு கள்ள நட்பு வைத்திருந்தார். தன் மனைவியைப் பற்றி மட்டும் அவர் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார். ஆனால், அவருடைய நல்ல மனைவிகூடச் சில ஆண்டுகளில் வேறு ஒருவரோடு கள்ள நட்புக் கொண்டார். அந்த மனிதர் நிம்மதியின்றி அழுதார், அலைந்தார்.

அவரை நான் சந்தித்தபோது, என் நினைவுக்கு வந்தது இந்து மதம்! நான் படமெடுத்தபோது, என் பங்காளி ஒருவருக்குக் கையெழுத்துப் போடும் உரிமை கொடுத்திருந்தேன். அவர், தமக்கு வேண்டிய ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு, என் கம்பெனி லெட்டர் பேப்பரில், வெறும் பேப்பரில், கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டார். அவர், அதை அறுபதாயிரம் ரூபாய்க்குப் பூர்த்தி செய்து கொண்டு என்னை மிரட்டினார். இரண்டு வருட காலங்கள் நான் நிம்மதியில்லாமல் இருந்தேன். இரவில் திடீர் திடீரென்று விழிப்பு வரும். ‘கண்ணா கண்ணா!’ என்று அழுவேன். அந்தப் ‘பினாமி’ நபர், ஒரு கம்பெனி ஆரம்பித்தார். அந்தக் கம்பெனியின் உபயோகத்திற்காக, அவரசமாக ஒரு வெறும் பேப்பரில் கையெழுத்துப் போட்டு, கம்பெனி மானேஜரிடம் கொடுத்து விட்டுப் போனார்.

அந்த மானேஜருக்கும் அவருக்கும் ஒரு நாள் சண்டை வந்தது. அந்த மானேஜருக்கு, நான் ஏமாற்றப்பட்ட விதம் தெரியும். ஆகவே, ஒரு நாள் அதிகாலையில் அந்தப் பேப்பரைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். நான் அதிலே எழுபத்தையாயிரத்துக்குப் பூர்த்தி செய்து அவரைக் கூப்பிட்டுக் காட்டினேன். பினாமி நபர் என் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். பிறகு இரண்டு பேருமே இரண்டு பேப்பர்களையும் கிழித்துப் போட்டு விட்டோம். அப்போது என் நினைவுக்கு வந்தது இந்துமதம்! என் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு எதிரொலியிலும், நான் அடிக்கடி சொல்வது ‘நம் மூதாதையர்கள் முட்டாள்களல்ல’ என்பதே. ஆலமரம் போல் தழைத்துக் குலுங்கி நிற்கும் இந்து மதம், உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும், ஒவ்வொரு விநாடியையும் அளந்து கொடுக்கிறது.

இந்தியாவின் வடஎல்லையில் தோன்றி, இந்தியா முழுமையிலும் ஓடி, சீனா முழுவதையும் கவர்ந்து ஆசியாக் கண்டத்தையே அடிமை கொண்ட பெளத்த மதம், இந்து மதத் தத்துவங்களாலே சீரணிக்கப்பட்டு, இந்தியாவில் இல்லாமல் ஆகிவிட்டது. தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவக சிந்தாமணி நான்கும், சமண, பெளத்த மரபுகளைக் காட்டுவதை நாம் எண்ணிப் பார்த்தால், சமண, பெளத்தத்தின் செல்வாக்கு தென்குமரிவரை எப்படியிருந்தது என்பதை அறிய முடியும். ஜைன - பெளத்த மதங்கள் பெற்றிருந்த செல்வாக்கை நமது வரலாறுகள் குறிப்பிடுகின்றன. அவை எங்கே? இந்து மதத்தின் தத்துவங்களுக்குள் அவை அடங்கி விட்டன. அந்த நதிகள் இந்துமாக்கடலில் சங்கமமாகி விட்டன. வள்ளுவன் குறிப்பிடும் ‘ஆதிபகவன், உலகியற்றியான்’ அனைத்தும், புத்தனை அல்லது ஜைன சமயக் கடவுளையே!

இப்படி நான் சொல்வதற்குக் காரணம், வள்ளுவனுக்குப் பின்வந்த ஐம்பெரும் இலக்கியங்களில் சமண, பெளத்த மரபு கலந்திருப்பதுதான். ராமானுஜர் காலத்திலிருந்து இந்துமதம் உத்வேகத்தோடு எழுந்திருக்கிறது. அமைதியான முறையிலேயே அத்தனை மதங்களையும் ஆட்கொண்டிருக்கிறது. காரணம், அதன் ஆழ்ந்த தத்துவங்களே! சிலப்பதிகாரத்திலும் துர்க்கை கோயில் வருகின்றதென்பதிலிருந்து இந்து மதம் முன்பும் செழிப்பாகவே இருந்தது என்றாகிறது. ஆனால், பல பூர்வீக மதங்களையும், தன்னுடைய கிளை அலுவலகமாக ஆக்கிக் கொண்டு, தானே தலைமை தாங்கத் தொடங்கிய காலம் ராமானுஜர் காலமே! அத்தகைய இந்து மதத்தைப்பற்றி என்னுடைய குறைவான அறிவில் தோன்றிய குறைபாடான கருத்துகளைத் தொடர்ந்து எழுதப் போகிறேன். இந்தத் தொடர் கட்டுரையில் நான் இந்து மத வரலாற்றை ஆராயப் போவதில்லை. அதன் தத்துவங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு பயன்படுகின்றன என்பதை மட்டும் எழுதுவேன்.

- அன்பன் கண்ணதாசன்


“வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,
கந்தனென்று சொல்லக் கலங்கும்”

ஆனால், செய்த வினையும் செய்கின்ற் தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.
நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்தபின்னால்தான் அந்த நிலத்தில் வேறுபயிர்களைப் பயிரிட முடியும்.

கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோயிலுக்குக் கூட வரமாட்டான்.

இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.

என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான கணக்குக்காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.

வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.

அவர் ஏற்கெனவே ஒரு பணக்கார செட்டியாரையும் ஆச்சாள்புரத்துக்கார்ர் ஒருவரையும் ஏமாற்றியவர்.

அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.

ஏமாற்றி என்ன பயன்?

அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய், அன்றாடச் சோற்றுக்கே இன்று அலை மோதுகிறார்.

அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.

உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக்கொண்டு, அந்தப் ‘பாபாத்மா’ தினமும் கோயிலுக்கு வருகிறது.

நெற்றியில் கட்டுக்கட்டடாக விபூதி; இரண்டு காதிலும் கதம்ப பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.

அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.

முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.

ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், கந்தன் வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான்.

ராஜாங்கம் கட்டி ஆண்டவனுங்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.

இறைவனில் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.

குளத்திலே ஒருரூபாயைத்தவறிப் போட்டு விட்டால், குளம் வற்றியதும் அது உன் கைக்கே கிடைக்கிறது- அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.

ஒரு நடைபாதையில் நீ கண்ணாடித் துண்டைப்போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.

குளிக்கும் அறையில் நான் எச்சிலைத் துப்பி விட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளே போன போது, அது என் காலையே வழுக்கி விட்டது.

விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.

ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு  செல்வந்தர். ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!

பக்தி செய்யும் எல்லாருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.

அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

‘உண்மையே தெய்வம்’ ‘ அன்பே  தெய்வம்’ என்று இந்து மதம் சொன்னது அதனால்தான்.

‘நம்பினோர் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” உண்மைதான். ‘கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.

அதுவும் உண்மைதான்.

காலங்களை நிர்ணயிக்கின்றவனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

நதியின்  ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.

ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாபங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!

அவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.

அறிந்து செய்யும் தவறு தவறல்ல: அது குற்றம்.
அதற்கு மன்னிப்புக் கிடையாது!

ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல்தவறு செய்திருப்பதாக வழக்குக்கதைகள் உண்டு.

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச்சென்றார்.

அவரது அம்பாறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.
அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.

‘ஒற்றை அம்பை ஊன்றி வை என்பது வழக்கு. அம்பை ஊன்றிய ராம்பிரான், கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறினார்.

ஊன்றிய அம்பை எடுத்தார்.

அதிலொரு தேரைக்குஞ்சு குத்தப்பட்டிருந்தது.

பூமிக்குள்ளிருந்த தேரைக்குஞ்சை  அவர் அறியாமல் குத்திவிட்டார்.

தேரைக்குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.

ராம்பிரான் கண்கள்  கலங்கிவிட்டன்.

“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே. ஏன் கத்தவிலை?” என்றார்.

அதற்குத் தேரை சொன்னது;

“பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும்போதெல்லாம் நான் ‘ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”

ராம்பிரான் கண்ணீரோடு சொன்னார்: “தேரையே, என்னை மன்னித்துவிடு. இதுநான் அறியாமல் செய்த பிழை.”

தேரை சொன்னது:

“பெருமானே! ‘அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”

தேரையின் ஆவி முடிந்தது. நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாபக்கணக்கில் சேர்க்காதே.

சிறு வயதில் கடன் தொல்லை தாங்காமல் நான் ‘திருடியிருக்கிறேன்’ - என் தாயின் பணத்தைத்தான்.

திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன். கடவுளை வேண்டியிருக்கிறேன் - “இறைவா மன்னி” என்று.

அந்தத்தவற்றைக்கடவுள் மன்னிக்கவில்லை  என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?

என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர் குறைவு.

உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.

உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.

என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.

ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.

எழுத்தின்மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.

சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.

இவ்வளவு அறியாமைக்கிடையிலேயும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாறுகிறது.

ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?

‘தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.

செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம் தலையைக்காக்கிறது.

ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.

புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!

பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.

கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைத்திருக்க செய்திருக்கிறேன்.

அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.

ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத்தியானித்தால் உன் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

நான தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.

இந்துமத்த்தின் ஒவ்வொரு அணுவையும் நான் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை.

சாதாரணம் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன



என்ன அன்பர்களே, ஒரே பதிவில் பல தத்துவங்களை..இல்லை இல்லை அனுபவ புதையலை கண்டோம் அல்லவா? பதிவை மீண்டும் மீண்டும் படித்து, இணையப் பதிவை உங்கள் இதயப் பதிவாக மாற்றுங்கள்.

- அர்த்தமுள்ள இந்து மதம் தொடரும் ...

No comments:

Post a Comment