Subscribe

BREAKING NEWS

24 February 2018

மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு (4)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது


இரு மனம் கைகோர்க்கும் திருமண பந்தத்தில் நாம் அடிக்கடி கேட்கும் ஒரு குறளாய் இந்தத் திருக்குறள்.

இந்த திருவின் குறளோடு மணப் பொருத்தம் தொடர்பதிவில் இங்கே தொடர்வோம்

இல்வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கை பற்றியது. குடும்பம் என்னும்   சொல்,இல்வாழ்வான், துணைவி, பெற்றோர், பிள்ளைகள் போன்ற உறவுகளைக் கொண்ட அமைப்பைக் குறிக்கும். இல்வாழ்க்கையில் அன்பு தழைக்க வேண்டும்; அறம் செழிக்க வேண்டும். அது குடும்பவாழ்வின் தன்மையையும் அர்த்தத்தையும் உணர்த்தும் என்கிறது இக்குறள்.

இல்வாழ்க்கை அன்பின் விளைநிலமாகும். குடும்ப வாழ்க்கை தன்மைபெற அன்பு என்ற பண்பு நிறைந்திருக்கவேண்டும். குடும்பத்தில் உள்ளோர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழும் சூழல் இனிமையானது. அன்பு நிறைந்த இடத்தில் அருள் இயல்பாக மலரும். அன்பு இல்லத்தின் குணச்சிறப்பாக இருக்கவேண்டும்.
இல்வாழ்க்கை பொருள் பொதிந்த வாழ்க்கையாக அமைய அங்கு அறச்செயல்கள் நிகழவேண்டும். அறன் என்றது இல்வாழ்வாரது குற்றமற்ற வாழ்க்கையையும், இல்லத்திற்கு வெளியே உள்ள உலகில் உள்ளோருக்குச் செய்யும் நல்வினைகள் பற்றியதும் ஆகும். ஒருவனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் அதில் அறம் நிறைந்திருக்கவேண்டும்.

அன்பானது இல்லறத்துக்குக் குணம் சேர்க்கிறது. அறம் இல்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. அன்பும் அறமும் இணைந்த குடும்ப வாழ்க்கை பொலிவுடன் விளங்கும்.

 மணக்குடவர் தனது உரையில் 'இல்வாழ்க்கையாகிய நிலை எல்லோரிடத்திலும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதுவே வாழ்க்கையின் குணமும் பயனும் ஆம்' எனக் கூறி 'பயன் வேறு வேண்டாம்; தமக்கும் பிறர்க்கும் உண்டாகும் முகமலர்ச்சியே போதும்' என்கிறார். எளிய விளக்கமான இது, அன்பும் அறனும் நிறைந்த குடும்பத்தின் அழகையும் மகிழ்ச்சியையும் காட்டி, குறளின் உட்பொருளையும் தெளிவாக்குகிறது.
அனைவரிடத்தும் செலுத்தப்படும் அன்பையும் பிறர்க்குதவும் அறனையும் உடைய இல்வாழ்க்கை தன்மை உடையதாயும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கும் என்பது கருத்து.

யார் யாரிடம் செலுத்தும் அன்பு இங்கு குறிக்கப்பெறுகிறது?

தொல்லாசிரியர்களுள் மணக்குடவர் யாவர் மாட்டுஞ் செய்யும் அன்பு பற்றிப் பேசுகிறார். ஆனால் பரிமேலழகர் தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினைச் சொல்கிறார். குறள் காட்டும் இல்லறத் தலைவனும் தலைவியும் ஒத்த மனமுடையோராகி வாழ்க்கையறத்தை மேற்கொண்டவர்கள், இவர்கள் இருவரிடை உள்ள அன்பாகிய அப்பண்பு இங்கு கூறப்பட்டது என்று சொல்வது அவ்வளவு சிறப்பு இல்லை. இங்கே சொல்லப்படுவது குடும்பத்தில் உள்ளோரிடையே முகிழ்த்து நிலைக்கும் அன்பு பற்றியே எனக் கொள்வது பொருத்தம். தொடர்ந்துவரும் அறன் என்ற சொல், எல்லோரிடத்தும் பரந்து விரிந்த அன்பு அருளாவதைக் குறிப்பதாகும்.
அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை தன்மையும் பொருளும் கொண்டது ஆகும் என்பது இக்குறட்கருத்து.






திருமணம் என்பது இரு மனம் ஒன்றாக இணைந்து உயிர்கலப்பு பெறுவதாகும், ஆனால் இன்று நடைமுறையில் 
திருமணத்தில் உயிர் கலப்பை நாம் காண முடிவதில்லை. மாறாக உடல் கலப்பை மட்டும் தான் காண முடிகிறது.
மேலும் இரு மனங்களும் ஒன்றாகவும் இணைவதில்லை.



ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால், அதற்காக நாம் எப்படி எல்லாம் திட்டமிடல் செய்கின்றோம், பயண நாள்,நேரம் , பயண வழி, பயண ஊர்தி, யாருடன் செல்கின்றோம், என பட்டியல் நீளுகின்றது.இதில் ஏதாவது ஒன்று சரிவர அமையவில்லை என்றால் பயண திட்டம் மீண்டும் மாறும்.
சாதாரண பயணத்திற்கே, இத்துணை திட்டமிடல் அவசியம் எனில், திருமணம் வாழ்க்கைப்பயணத்தில் மிகப்பெரிய பயணம். அதனை நாம் எப்படி எல்லாம் திட்டமிட வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பத்துப் பொருத்தங்கள் பார்த்து, ஒன்பது கிரகங்களின் நிலை கண்டு, எட்டுத்திக்கு உறவினர்களை அழைத்து, ஏழு அடிகள் எடுத்து வைத்து,அறுசுவை உணவை பந்தியில் பரிமாறி,ஐம்பூதங்களை சாட்சியாக வைத்து, நான்கு வேதங்கள் உரைத்து, மூன்று முடிச்சு மனைவியின் கழுத்தில் இட்டு, இரு மனமும் இணைந்து ஒரு மனமாவதே திருமணம். இந்த காலத்தில் இப்படி எல்லாம் நடப்பதில்லையே என்ற மிகப்பெரிய கேள்விக்குறி நம் முன் நிற்கின்றது . வாழ்வியலைத் தொலைத்து விட்டோம். பிழைப்பை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கின்றோம்

மணம் என்ற சொல்லுக்கு வாசனை என்று பொருள். மணத்துடன் திரு சேர்ந்தால் தெய்வீகம். பொருந்திய, உயர்ந்த வாசனை எனலாம். அப்படியாயின் திருமணம் என்பது இரு மனம் உயிர் கலப்பு பெற்று, ஒரு மனதாகி,தெய்வீகம் தரும் உயரிய வாசனை தரும் இனிய நிகழ்வு. இந்த வாசனைக்கு முன் மற்ற வாசனை வெறுமையே. அதாவது திருமணத்திற்கு முன்னால் மணம் என்பது வெறும் வாசனையே. இன்னும் விளங்க வேண்டின், மணம் என்பது வாசம் என்றால், திருமணம் என்பது சுவாசம் என கைக்கொள்ளலாம்.


இப்போது வள்ளுவருக்கு வாருங்கள். தெய்வீக மணம் கமழும் திருமண உறவு வேண்டின் நாம் என்ன செய்ய வேண்டும்? அன்பையும்,அறத்தையும் கடைப்பிடித்து போற்ற வேண்டும். அன்பை மணமகளும், அறத்தை மணமகனும் கடைப்பிடித்திட, வாழ்வின் பண்பும், பயனும் நமக்கு புலப்படும். ஆனால் இன்று அன்பு என்றால் கிலோ என்ன விலை ? என கேட்கும் சமுதாயத்தில், அறம் என்றால் அறம் செய்ய விரும்பு என பள்ளியில் படித்தது தானே என்று ஒதுங்கி விடுகின்றோம். இதனால் தான் அனைத்து சிக்கல்களும் உருவாகின்றன. அன்பை வளர்க்க, அறத்தைப் போற்றத்தான் திருமணம் என உணர வேண்டும்.






வாழ்வின் பயணத்தில் திருமண வாழ்க்கை நாம் செய்யும் பயணத்துடனும், அன்பு, அறம் பற்றி வள்ளுவர் கூறுவது பற்றியும் நீங்கள் சிந்தித்தால் அதுவே இந்தப் பதிவின் நோக்கமாகும்.

- மணப் பொருத்தம் இன்னும் மணம் வீசும்

No comments:

Post a Comment