Subscribe

BREAKING NEWS

08 February 2018

பராபரக் கண்ணி தந்து ,எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி

காரணமின்றி காரியமில்லை என்று நாம் கேள்விப்பட்டதுண்டு. அது போல் தான் இந்தப் பதிவும்.
இன்றைய பதிவில் திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் பற்றியும், அங்கே அருள் பாலித்து வரும் தாயுமானவர் சுவாமிகள் பற்றியும் அறிய தருகின்றோம். பதிவின் இறுதியில், பதிவின் ஆரம்பம் பற்றிய ஒரு சிறப்பை அறிவோம்.



திருச்சி என்றால் மலைக்கோட்டை என்பதும், மலைக்கோட்டை என்ற உடன் உச்சிப் பிள்ளையார் கோயிலும் தான் நினைவிற்கு வரும். இவற்றைத் தாண்டி அங்கே நமக்குத் தாயாய் விளங்கும் தாயுமானவர் திருக்கோயில் அழகாய் பிரம்மாண்டமாய், நின்று பேசுகின்றது.

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது ஐதிகம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.

இத்திருக்கோயிலின் தல வரலாறு கீழே

    எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.
    திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்ட இடமாதலின் இஃது 'திரிசிராப்பள்ளி ' என்று பெயர் பெற்றது.

    உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.

வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு.

    தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்கு கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்கு பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரிடம் வேண்டினாள் ரத்னாவதி. அப்போது, சிவன் அவளது தாயின் வடிவில் சென்று, பிரசவம் பார்த்தார்.

காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார்.

இத்தலத்தின் சிறப்புகள் ஒன்றா? இரண்டா? நீங்களே படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

  •     இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு.
  •     மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரைத் தொழுதுதான் மலையேற வேண்டும்.
  •     வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது.
  •     மலையின் உச்சியில் "பிள்ளையார் " உச்சிப் பிள்ளையார் கோவில் உள்ளது.
  •     தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
  •     சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
  •     தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள்.
  •     சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப் பிராணம்) பாடியுள்ளார்.


    கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது. சிவனுக்கு பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர்.








இனி  தான் தாயுமான சுவாமிகள் பற்றி அறிய உள்ளோம்.


தாயுமானவர் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார்:கேடிலியப்பர், தாயார்: கெஜவல்லி அம்மையார். இவர் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.



 தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு.பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.








தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

 ஆழ்வார்களைப் போன்று காதல் துறைகளின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தினார். கண்ணி என்றழைக்கப்படும் இரண்டடிப் பாடல் வகையை இவர் கையாள்கிறார். இவரது பாடல்கள் அனைத்தும் தாயுமானவர் பாடல்கள் என்ற நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. சிற்சில இடங்களில் சித்தர் கருத்தை ஒத்துப் பாடும் இவர், தம் காலத்தில் சமயப் போராட்டங்களையும் பூசல்களையும் கண்டு மனம் வெறுத்துச் சமரச ஒளியையே அதிகம் பாடியுள்ளார். தேசோமயானந்தம், கருணாகரம், பரஞ்சோதி, பரதெய்வம் போன்ற சொற்கள் இவர்க்கே உரியவை. “சும்மா இருக்க அருளாய்” என்று இறைவனிடம் வேண்டுபவர்,

    எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
    அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
                             (பராபரக்கண்ணி - 221)

என்று பாடுகிறார்.









தான் செய்யும் இறைவழிபாட்டை,

    நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
    மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே
                             (பராபரக்கண்ணி -151)

என்று கூறுகிறார். ஆனந்தக் களிப்பு, பைங்கிளிக் கண்ணி, ஆகாரபுவனம் என்பன கண்ணி வடிவில் அமைந்தவை. மொத்தம் 1452 பாக்களை 56 பிரிவுகளில் இவர் பாடியுள்ளார்.

    பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும்
                பொய்யெனவே
    மெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே
           காண்பேனா - காண்
                    (காண்பேனா கண்ணி - 6)



                                    கோயில் மேல்புறம் வரைந்த கலைவண்ணம்










இது போன்ற, பித்தத்தை தெளிய வைத்து, சித்தம் உணர்த்தும் சித்தர் பாடல்களை இங்கே, இனிவரும் பதிவுகளில் அளிக்க சித்தர்களின் ஆசி வேண்டுகின்றோம்.

காரணமின்றி காரியமில்லை என்று பதிவை ஆரம்பித்தோம். ஆம் ! இதோ..இன்று காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை, திருச்சி தாயுமானவர் திருக்கோயிலில் உள்ள மகான் தாயுமானவர் சுவாமிகளுக்கு இன்று குரு பூஜை நடைபெற்று வருகின்றது. தாளை வணங்கும் தலையாய், அவரது பொற் பதத்துடன், பொற் பாதம் பணிவோம்.












இந்த கோயிலுக்கு நீங்கள் சென்றால், மலையடிவார மாணிக்க விநாயகர், எம் பெருமானாய் தாயுமானவர், மகான் தாயுமானவர், உச்சி பிள்ளையார் கோயில் என ஒன்றுள் பலவாய், பலவற்றுள் ஒன்றாய் உள்ள தரிசனம் பெற முடியும். ஏகப்பட்ட கண்கவர் கலைவண்ணங்களை கருத்தாய் கவரவும் முடியும்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment