Thursday, February 8, 2018

ஆலய தரிசனம் எனும் அற்புத மருந்து

மெய்யன்பர்களே....

இன்றைய பதிவில் ஆலய தரிசனம் பற்றி பற்றிக் கொள்ள இருக்கின்றோம். இந்த புண்ணிய பூமியில் எண்ணற்ற ஆலயங்கள். ஒவ்வொன்றும் ஒருவிதம். பாடல் பெற்ற சைவத் தலங்கள், 108 திவ்ய தேசங்கள், திருப்புகழ் தலங்கள், பாடல் வைப்புத் தலங்கள் , பழந்திருக்கோயில்கள, சித்தர்கள் விளையாடும் மலைக்கோயில்கள் என பட்டியல் நீண்டு செல்கின்றது. இந்த பட்டியல் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஓரிரு கோயிலுக்காகவாவது சென்றிருப்போம். இருப்பினும் நம்முள் எந்த ஒரு மாற்றமும் , சிறிய அருள்நிலையாவது உணராதவராக இருக்கிறோம் என்றால் ...பத்தோடு பதினொன்று...அத்தோடு இது ஒன்னு...என்று தான் ஆலய தரிசனம் செய்கின்றோம்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஓரளவாவது விடை காணத் தான் இந்தப் பதிவு. முதலில்ஆலய தரிசனத்தை ஆன்ம தரிசனமாக கைக் கொள்ள வேண்டும். நாம் ஓராண்டாக, திருஅண்ணாமலை கிரிவலம் சென்று வருகின்றோம். ஒவ்வொரு முறை செல்லும் போதும், வாழ்வின் உணர்தலை புது புது அர்த்தங்களாக புரிய வைத்து வருகின்றார். இப்போது சென்றாலும், நாம் ஒன்றும் தெரியாதவராக தான் செல்வோம். மனதிலே கிரிவலம் செல்வது போல, நாம் சென்று வருவோம். இந்த அனுபவம் நம்முள் உள்ள பரத்தை வசமாக்கி, பரவசம் காட்டும்..கூட்டும்....ஊட்டும்...

திருஅண்ணாமலை கிரிவலத்தை ஏனோதானோ என்று செய்ய வேண்டாம். கிரிவலம் பற்றி தனிப்பதிவில் பேசுவோம். பகவான் ராமகிருஷ்ணரிடம் பக்தர்கள் சுவாமி! இல்லறத்தில் எவ்வாறு வாழ வேண்டும்? என்று கேட்டார்கள்.

ஆமை, தண்ணீரில் இங்குமங்கும் திரிகிறது. ஆனால் அதன் மனமெல்லாம், தான் கரையில் இட்ட முட்டைகளின் மீது இருக்கும். அதுபோல் மனைவி, மக்கள் தாய், தந்தை எல்லோருடனும் சேர்ந்து வாழ்! அவர்களுக்கு சேவை செய்! ஆனால் மனத்தை இறைவனிடம் வை! இவ்வாறு வாழ்ந்து வந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும்! என்றார் பகவான் ராமகிருஷ்ணர்..

ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்... "ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும். ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவனிடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ? என்று சுவாமி கேட்டார். அவன் உடனே ஓடிப் போய்  ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான்.சுவாமி கேட்டார். நான் தண்ணீர் தானே கேட்டேன்.. எதற்கு இந்த சொம்பு.?

செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?குழம்பிப் போனான் அது எப்படி முடியும்? என்று கேட்டான்.

இப்போது பதில் சொன்னார் சுவாமி ...  ஆம் தண்ணீரைக் கொண்டுவர சொம்பு தேவைப் படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா?அதுதான் ஆலயம்..! ஆனாலும்
சொம்பே தண்ணீர் ஆகாது..!ஆலயமே ஆண்டவனாகாது. எத்துணை உயர்ந்த கருத்துக்கள்.சோம்பே தண்ணீர் ஆகாது என்ற நிலைக்கு நாம் அடுத்து முயற்சி செய்வோம்.இப்போது கடவுளை உணர ஆலயமே தேவை. தண்ணீரை கொண்டு வர சொம்பு தேவை என்பதை உணர்வோம்.சரி..இனி கோயிலுக்கு எப்படி செல்ல வேண்டும் எனபது போன்ற சில குறிப்புகளை காண்போம்.

 • எந்தக் கோவிலுக்கும் செல்வதற்கு முன்னால் அந்த கோவிலைப் பற்றி ஓரளாவாவது தெரிந்துவைத்துக்கொண்டு பின்னர் செல்லவேண்டும். முதன்முறையாக செல்லும் கோவில் என்றால், அந்த கோவிலைப் பற்றிய விபரங்களை அர்ச்சகரிடமோ அல்லது கோவில் அலுவலகத்திடமோ கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும். இதனை நாம் இப்போது கடைபிடித்து வருகின்றோம். கூடுமானவரை தல புராணம் வாங்கி வருகின்றோம்.
 • குளித்துவிட்டு தூய்மையான ஆடைகள் அணிந்து அவரவர் வழக்கப்படி திருநீறு அல்லது திருமண் ஆகியவற்றை அணிந்து கோவிலுக்கு செல்லவேண்டும்.
 • பெண்கள் இறுக்கமான ஆடைகள், டீ-ஷர்ட் உள்ளிட்டவைகளை அணிந்து கோவிலுக்கு செல்லவே கூடாது.
 • ஆண்கள் பெர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து செல்லவே கூடாது. நாம் போவது பொழுது போக்கிற்கு அல்ல. நமது உடைகள் நாகரீகமாக இருப்பது மிக மிக அவசியம். உடை விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவும்.
 • உள்ளே செல்லும் முன், அவரவர் மொபலை சுவிச் ஆஃப் செய்யவேண்டும் அல்லது சைலண்டில் வைக்க வேண்டும். இது மிக மிக தேவைப்படும் ஒன்று. ஆண்டவனிடம் தொடர்பு கொள்ள செல்லும் போது, அலைபேசி வேண்டாமே.
 • கோவில் கோபுரத்தை கண்டவுடன் கைகூப்பி வணங்கவேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அன்றோ !
 • ஆலயத்தில் கை, கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் வசதி இருக்குமானால நமது கை, கால்களை கழுவிக்கொள்ளவேண்டும்.
 • மலர்கள், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, வாழைப் பழம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அர்ச்சனைக்காக வாங்கி செல்லவேண்டும். (வாழைப்பழத்தில் புதிதாக வந்திருக்கும் மரபணு மாற்றப்பட்ட மஞ்சள் வாழைப்பழம் மற்றும் பச்சை நாடன் கூடவே கூடாது.) இவற்றை வாங்கி அப்படியே பாலிதீன் பைகளில் அடைத்து, நேரே கோயில் சென்று,அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டாம். கையில் துணிப்பை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். பாலிதீன் பைகளில் இருந்து, துணிப்பைக்கு மாற்றுங்கள், உங்கள் கைகளால், வாங்கிய பொருட்கள் மீது, தொட்டு கொடுக்கவும். 
 • சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டி பைகள் மற்றும் கேரி பேக்குகளை தவிர்க்கவேண்டும். நமது வீட்டிலிருந்து அர்ச்சனைத் தட்டோ, சிறு மூங்கில் கூடையோ, காகிதப் பையோ அல்லது துணியினால் ஆன பையையோ கொண்டு சென்று, அதில் மேற்படி மங்கலப் பொருட்களை எடுத்துச் செல்லவும். பையும் மாறாது. உங்கள் பொருள் உங்களுக்கே கிடைக்கும். 


 • கோவிலுக்கு உள்ளே உள்ள விநாயகரை முதலில் தரிசித்து குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இடவேண்டும். பிரார்த்தனை நல்லபடியாக நிறை வேற, ஆலய தரிசனம் முழுமையான பலன் தர தும்பிக்கையான் அருளை வேண்டிக்கொள்ளவேண்டும். உங்களுக்கு  விநாயகர் மந்திரங்களை துதிக்கவும்.
 • பின்னர் நந்தி, கருடன் மற்றும் மயில் உள்ளிட்ட பிரதான வாகனங்களை வணங்கவேண்டும்.
 • மூலஸ்தானத்துக்கு வெளியே நிற்கும் துவார பாலகர்களை (இறைவனின் மெய்க்காப்பாளர்கள்) மானசீகமாக வணங்கி இறைவனை தரிசிக்க அவர்களது அனுமதியை பெறவேண்டும்.
 • மூலமூர்த்தியை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள மற்ற மூர்த்தங்களை வழிபடல் வேண்டும்.
 • சண்டேசுவரரை அமைதியாக வணங்க வேண்டும். கைகளை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது.
 • ஆலயத்தில் தரப்படும் விபூதி, குங்குமம் உள்ளிட்டவைகளை மேல்நோக்கி தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும். கீழே சிந்துதல் கூடாது. நாம் அணிந்தது போக கைகளில் மிகுதியாக உள்ளவற்றை ஒரு பேப்பரில் மடித்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். அல்லது அதற்கு என்று வைக்கப்பட்டுள்ள கிண்ணத்தில் போடலாம். கண்ட கண்ட இடத்தில் அவற்றை போடுதல் கூடாது.


 • அதே போல், விளக்கேற்றிய பின்னர் கைகளில் எண்ணெய் படிந்திருந்தால் அதை நாம் கொண்டு சென்ற துணியில் துடைத்துக்கொள்ளவேண்டுமே தவிர கோவில் சுவற்றில் தேய்த்தல் கூடாது.
 • கோவில் சுவற்றில் கிறுக்குதல், பெயரை எழுதுதல், பரீட்சை எண்ணை எழுதுதல் இவை அனைத்தும் மிகப் பெரிய தவறு. உங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் சொல்லவேண்டுமேயன்றி சுவற்றில் அல்ல.
 • ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வருதல் வேண்டும். வலம் வருகையில் கைகளை வீசிக்கொண்டு நடக்காது, பொறுமையாக இறைவனின் நாமத்தை உச்சரித்தபடி கைகளை கூப்பிய நிலையில் வணங்க வேண்டும்.
 • கர்ப்ப க்ரஹத்தில் மேல் உள்ள விமானத்தை கைகளை கூப்பி வணங்கவேண்டும்.
 • இறைவனைத் தவிர ஆலயத்தில் வேறு எவரையும் வணங்கக்கூடாது.
 • கோவிலில் வம்பு பேசுதல், உலக விஷயங்களை, லௌகீக விஷயங்களை பேசுதல் அறவே கூடாது.
 • அந்தந்த கோவிலுக்கு செல்லும்போது அந்தந்த கடவுளரின் ஸ்லோகத்தை ஸ்தோத்திரங்களை பாக்களை பக்தியுடன் கூறிக்கொண்டே வலம் வரவேண்டும்.
 •  கலகலவென சிரித்தல், அதிர்ந்து பேசுதல், கூச்சல் போடுதல், மற்றவர்களை கடுகடுத்தல், அதிகாரம் செய்தல் இவை கூடவே கூடாது. ஆனால் இது தான் பெரும்பாலான ஆலயங்களில் நடைபெற்று வருகின்றது.
 • பிறரின் உடைகளை, ஆபரணங்களை பார்த்து பொறாமைப்படுதல் பெரிய தவறு.
 • மற்றவர்களை தரிசிக்க விடாது இடையூறாக இருப்பது கூடாது.
 • வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் சுலபமாக தரிசனம் செய்ய உதவவேண்டும்.
 • இலகு தரிசனத்திற்க்காக கையூட்டு கொடுத்தல் கூடவே கூடாது.


 • அர்ச்சகருக்கு தட்டில் உங்கள் தட்சணையை போடுவது தவறல்ல. ஆனால் ஆலயத்திற்கு ஏதாவது செய்ய நினைத்தால் ஆலய உண்டியலில் உங்கள் காணிக்கையை போடவும். முடிந்தால் நேரிடையாக பொருட்கள் வாங்கித் தந்து உதவவும்.
 • கோவிலில் பிரசாதம் அளித்தால் அதை சாப்பிட்டவுடன் அந்த இலையையோ அல்லது தொன்னையையோ கண்ட இடத்தில் போடாமல், அதற்கென உள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போடவேண்டும்.
 • கொடிமரத்தித்திற்கு அப்பால் அதற்கு கீழே மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தில் வேறு எங்கும் கீழே விழுந்து வணங்குதல் கூடாது.
 • கோவிலில் பசு கொட்டில் இருந்தால், அதை பராமரித்து வருபவர்களிடம் அனுமதி பெற்றே பசுக்களுக்கு பழம், கீரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுக்கவேண்டும். (அவங்களுக்கு தான் அவைகளோட உணவு முறைகள் மற்றும் ஒவ்வாமை பற்றி தெரியும்.)
 • வடக்கு திசை நோக்கி சற்று அமர்ந்து இறைவனின் பெயரை கூறி வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும்.
 • சிவாலயத்தின் குங்குமம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வரலாம். தவறு அல்ல.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றுங்கள். ஆலய தரிசனத்தின் பலன்களை முழுமையாக பெறுங்கள்.மீள்பதிவு - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.htm

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌