அன்பின் நேயர்களே...
இன்று முதல் நவராத்திரி கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டது. நேற்றைய பதிவில் நாதுலா பாஸ் (Nathula Pass) கதாநாயகன் - சித்தர் பாபா ஹர்பஜன் சிங் கோயில் தரிசனம் பெற்றோம். அங்கிருந்து பார்க்கும் போது சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் சிவ பெருமான் தரிசனம் பெற்றோம். சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா!!
தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமானை மகாதேவன் என்பர். அவரை சம்போ மகாதேவா என்று வாய்விட்டு கூவி அழைப்பதை கேட்டிருப்பீர்கள். சிவபெருமானுக்கு பல நாமங்கள் உண்டு. அதில் சம்பு என்பதும் ஒன்று, சம்பு என்றால் இன்பத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர் என்பது பொருளாகும். சம்பு என்பது பின்னாளில் சாம்பவன், சாம்பான், சாம்பு எனப் பலவகைகளிலும் திரிந்தது.தட்சிணாமூர்த்தியை உற்றுப்பார்த்தால், அவர் தியானத்தில் இருப்பது நன்றாகத் தெரியும். அவரது மொழி மவுனம். அவரை சம்பு என்று அழைப்பர். அவர் சிவனின் வடிவம். சிவனை சம்போ மகாதேவா என்று அழைப்பது சம்பு என்ற சொல்லில் இருந்து தான் வந்தது. சம்பு என்றால் ஞானம் என்னும் நித்ய சுக தீர்த்தத்தின் உற்பத்தி ஸ்தானம் அல்லது சம்சாரக் கடலைக் (உலக வாழ்வு) கடக்க உதவும் ஞானசொரூபன் என்று பொருள். அதனால் தான் அவர் ஞான ஆசிரியராக, நான்கு முனிவர்களுக்கு உபதேசிப்பவராக அருள் செய்கிறார்.
பாபா கோவிலுக்கும் சற்றுத் தூரத்தில் சிவபெருமானின் பெரிய அமர்ந்த நிலையில் தியானம் செய்வதைப்போல உள்ள சிலை, வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றது. இங்கிருந்து அரைகிலோமீட்டர் தொலைவில் அச்சிலை உள்ளது. யாரும் நடந்துச் சென்று பார்த்து வரலாம். இந்தியாவிலேயே மிக அதிகமான உயரத்தில் அமைந்துள்ள சிவன் இவர் தான். 13000 அடி உயரத்தில் சிவனார் அமர்ந்துள்ளார்.அம்மலையிலுள்ள தாவரங்களுக்கோ விலங்கினங்களுக்கோ எவ்வித இடையூறுமில்லாத இடத்தைத் தேர்வு செய்து சுவாமியை அமைத்துள்ளனர். 12 அடி உயரம் கொண்ட இச்சிலையானது, மிக உயர்ந்த தரத்திலான பைபர் கிளாஸ்சில் (Fibre Glass) செய்யப்பட்டுள்ளது. இது ரிசிகேசில் (Rishikesh) உள்ள சிவன் மாதிரி வடிவமாகும்.
இச்சிலைக்கருகில் மிக அழகான ஒரு சிறிய அருவியும் (Namnang Chho Water Falls) மேலிருந்து சிவனை நோக்கி வந்து தொப தொப என்று வீழாமல் சிவ சிவ என்று வீழ்ந்துக்கொண்டிருப்பது பார்ப்பதற்கு தெய்வீகமாக உள்ளது.
சரி.இனி தரிசனம் பெற செல்வோமா?
பாபா ஹர்பஜன் சிங் கோயில் தரிசனம் பெற்று வெளியே வந்து பார்த்த போது சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருப்பது தெரிந்தது.நம்முடன் வந்தவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாம் கடைசியாக பொறுப்பாளரிடம் சொல்லிவிட்டு சென்றோம். சரியாக 30 நிமிடத்தில் வர வேண்டும் என்று நமக்கு செய்தி கிடைத்தது.
பார்ப்பதற்கு சுமார் அரை கிலோ மீட்டர் மாதிரி தெரிய வில்லை. தூரத்தில் இருந்து பார்ப்பது போல் தெரிந்தது.எனவே ஓட்டமும் நடையுமாக ஓடினோம். அந்த குளிரில் கதகதப்பை தேடி ஓடுவது போல் சிவனார் நோக்கி ஓடினோம்.செல்லும் வழியில் கிடைத்த காட்சிகள் இங்கே
அட..பக்கத்தில் ஒரு அருவியும் ஓடிக் கொண்டிருப்பதை கவனித்தீர்களா?
கொஞ்ச தூரம் சென்ற பின்னர் கல்லும் மண்ணும் இருந்தது. நமக்குத் தான் மலை யாத்திரை என்றாலே சுகானுபவம் அல்லவா? கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று கூறிக் கொண்டு நடந்து சென்று கொண்டே இருந்தோம். இங்கிருந்த கற்கள் மிக மிக வித்தியாசமாக புதுவித நிறத்தில்,குணத்தில் இருந்தது. கல்லுக்கு குணமா? என்றால் இவ்வுலகில் உள்ள அனைத்து பொருளிலும் உயிர் இருப்பதால் தானே? தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நாம் சொல்கின்றோம்.
இதோ..நெருங்கிக் கொண்டே இருந்தோம்.
காண காண களியாட்டம். பசுமை போர்த்திய சூழலில், பனி போர்த்திய நிலையில் நெஞ்சமெல்லாம் சிவனின் நினைப்பில், தூய பஞ்சபூத இருப்பில், அருவியின் சில்லிடும் ஓசையில்..அப்பப்பா..சொல்வதற்கு வார்த்தையில்லை.இதோ..அருவியின் அருகில் சென்றோம்.அனைவரும் சிவனை வணங்கி விட்டு,அருவிக்கு காட்சிப்படம் எடுக்க வந்தார்கள்.நாம் ஏன் அருவிக்கு சென்றோம்?
அருவியின் அருகில் சென்று சிறிது நீரை கையால் அள்ளினோம், குருநாதர்களை வணங்கிவிட்டு கால் பதித்தோம். குளிரின் வெம்மை உடல் முழுதும் பரவியது, அப்படியே சிறிது நேரம் இந்த அருவியில் நனைய வேண்டினோம், பாதுகாப்பிற்காக அருவியின் ஆழம், கற்கள் போன்றவற்றை உறுதி செய்தோம். அனைத்தும் மிகச்சரியாக இருந்தது. அப்படியே உள்ளே சென்று தலையை நனைத்தோம். சம்போ மகாதேவா என்று ஓதினோம். சுமார் 5 மணித்துளிகள் அப்படியே இருந்தோம். ஐம்புலனும் அடங்கியது, மனமும் ஒடுங்கியது, பரத்தை உணர்ந்த நிலை அது; சுமார் 13000 அடி உயரத்தில் குளிரில், தூய தண்ணீர் நிரம்பிய தீர்த்தத்தில் நீராடினோம், நமக்கு தெரிந்த சில மந்திரங்களை மனம் திறந்து உச்சரித்தோம். நீங்கள் உபாசனை செய்யும் மந்திரங்களை இது போன்ற நீர்நிலை அருகில் செய்தால் அவற்றின் பலனே தனி....
உடலும் சுத்தமானது, உள்ளமும் சுத்தமானது...ஏன் இதோ..இந்த பிரார்த்தனைக்காகவே...
கனவிலும் நினைக்காத நிலை இது. ஐயனை தொட வேண்டும் என்றால் பரிசுத்தம் வேண்டும் அல்லவா? அதற்காகத் தான் நம்மை அருவி பக்கம் இழுத்து,சிறிய அளவில் தீர்த்தமாட வைத்தார் என்று நினைக்கும் போது..சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் உள்ள அனைவருக்காகவும் பிராத்தனை செய்தோம். வேண்டத்தக்கது அறிந்த அவனிடம் என்ன வேண்டுவது? வேண்டியவற்றை தருபவனிடம் என்ன வேண்டுவது? வேண்டினோம்..வேண்டினோம்..வேண்டிக் கொண்டே இருந்தோம்.பின்னர் அப்படியே . முன்னே வந்தோம்.
தலைவரின் தரிசனம் கண்டோம், நம்மை அவர் கண் திறந்து பார்ப்பது போல் இருந்தது. என்ன ஒரு கம்பீரம், பிறை சூடிய வேந்தே.. எம்மை வெல்வாய், உடுக்கை அடித்து இந்த உலகை வெல்வாய்...நமக்கு நேரம் தான் போதவில்லை.அங்கிருந்து மீண்டு வர மனது இடம் கொடுக்க வில்லை. தென்னாடுடைய சிவனை பார்த்து பழகிய மனது, 13000 அடி உயரத்தில் பளிங்கு நிறத்தில் நம்மிடம் உள்ள கருமை நீங்க தரிசனம் தருவதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.
தலைவருக்கு நன்றி சொல்லி, இதோ விஸ்வரூபத்தில் இருந்து ஒரு புள்ளியாய் தரிசனம் கண்டு அங்கிருந்து விடை பெற்றோம்.
நாதுலா பாஸ் (Nathula Pass) கதாநாயகன் - சித்தர் பாபா ஹர்பஜன் சிங் கோயில் தரிசனம் செய்பவர்கள் நேரம் காலம் பார்க்காது ,13000 அடி உயர சம்போ மகாதேவா தரிசனமும் பெறுங்கள். இனி வரும் பனிக்காலங்களில் இந்த இடம் எப்படி இருக்கும், பார்க்கும் இடமெல்லாம் வெண்ணிறத்தில் ..அப்பப்பா..கற்பனையில் பார்க்கும் போதே கண்கள் பணிக்கின்றது. இறைவா..மீண்டும் ஒரு முறை பனிக்காலத்தில் தங்களை காண ஏங்குகின்றோம்.
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_10.html
நவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (8) - https://tut-temple.blogspot.in/2017/10/8.html
விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html
No comments:
Post a Comment