Subscribe

BREAKING NEWS

17 October 2018

துன்பத்திலிருந்து விடுபட அர்த்தமுள்ள இந்து மதம் காட்டும் வழி

அனைவருக்கும் வணக்கம்.

ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும் தத்துவங்களையும்  பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள். இன்று அவரது நினைவை போற்றும் வகையில் துன்பத்திலிருந்து விடுபட கண்ணதாசன் காட்டிய வழியை இங்கே பகிர்கின்றோம்.



”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன். ”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.

அர்த்தமுள்ள இந்து மதம். ஆன்மிகத்தின் சூத்திரங்களை வாழ்வியலோடு பேசும் என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். தற்போது நடைபெற்ற சென்னை புத்தகத் திருவிழாவில் நாம் விரும்பிய நூலில் இது மிக முக்கியமான ஒன்று. காலம். கடந்து பேசும் காவியத்தைப் பற்றிய கருத்துகள் நம் தளத்தில் இனி பதிவாக பவனி அவர் இருக்கின்றது.

 வள்ளலார் வாழும் போது அவர்மீது வழக்கிட்டவர் உண்டு.சாய்பாபா போன்ற பல மகான்கள் வாழும் போது அவரை உணராமல் உதாசீனம் செய்தவர் பலர் உண்டு.பாரதியார் அற்புத கவிதைகள் ஆயிரம் படைத்தும் அவர் மகத்துவம் உணராமல் இருந்தனர் மக்கள். அவர் மறைந்து வாந்ததும் உண்டு.

கண்ணதாசன் ஆயிரமாயிரம் ஞானத்தை போதித்த போதிலும் மக்களின் மனதில் இன்றும் நிற்பது ஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என்துணையிருப்பு என்ற தன் சுய வாழ்வு பாடல் மட்டுமே. இதை மனதில் வைத்து கொண்டு அற்புத ஆன்மீகத்தை அர்த்தமுள்ள இந்துமதம் என்று அத்தனை படைத்த பின்பும் அவரை ஞானி என்று ஏற்க மனமில்லாமல் பெண்பித்தன் குடிகாரன் என்றே அடையாளப்படுத்தி கொண்டுள்ளது நம் இனம்.

இன்றளவும் இருக்கும் போது மதிக்கும் ஞானமில்லை என்று சொல்வதைவிட இருக்கும் போதே அவர்களை போன்றவர்களை போற்றி வணங்கி புண்ணியம் கூட்டிக்கொள்ளும் பாக்கியமில்லாதவர்களாகவே நாம் வாழ்கிறோம்.வெறும் ஜீபூம்பாக்களை நம்பியும் பிரமாண்ட மேடையையும் கூட்டத்தையும் கண்டு அவதார புருஷர்களாக அடையாளம் காண்கிறோம்.

நவ கோடி சித்தர்கள் அவதரித்த பூமி இது ஆர்பாட்டங்களை நம்பியதில்லை.ஆனால் அற்ப மானிடர் ஞானத்தையே ஆடம்பரத்தை கொண்டே அளக்கின்றார்.இந்த மாயையிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.அல்லதை விடுத்து, நல்லதைச் செய்து, உள்ளதை உணர வேண்டும். அதுவே இந்த பதிவின் நோக்கமாகும்.இனி நம்மிடம் அர்த்தமுள்ள இந்து மதம் பேசப் போகின்றது.

‘துன்பத்தில் இருந்து விடுபட உத்தமர்களுடன் சேருங்கள்’ – கவியரசு கண்ணதாசன்




`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பார்கள்.

பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான்.

யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது.

ஏன், வர்ணங்களிலேகூட ஒரு மனோதத்துவம் உண்டு.

வாசனையிலும் அந்தப் பேதம் உண்டு.

நறுமண மலர்களை முகரும் போது உன் மனமும், முகமும் பிரகாசிக்கின்றன.

நாற்றத்தை முகரும் போது உனக்கே அருவருப்பு.

அதுவே உனக்குப் பழக்கமாகி விட்டால், உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எதிரிகளுக்கு அருவருப்பு.

சகவாச தோஷமும் இதுதான்.

நான் பன்னிரண்டு வயதில் தமிழ் வித்துவான் பரீட்சையில் புகுமுக வகுப்பு எழுதினேன். அப்போது அமராவதி புதூர் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அங்கேயே வித்துவான் பட்டப்படிப்புத் தொடங்கினார்கள். அப்போது வித்துவான் பட்டப்படிப்புக்கு இவ்வளவு ஆங்கிலப்படிப்பு வேண்டும் என்ற விதிமுறை இல்லை.

முதல் வருடம் `என்ட்ரன்ஸ்’ பாஸ் செய்தேன். அப்போது எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ராமநாதபுரம் வித்துவான் ராமசாமிப் பிள்ளை. அவரது எளிய தோற்றம் என்னைக் கவர்ந்தது.

அத்தோடு நான் கிராமத்துக்கு வந்துவிட்டேன்.

வித்துவான் படிப்பைத் தொடர வேண்டும் போல் தோன்றிற்று.

பக்கத்து ஊரான கீழ்ச்செவல்பட்டியில் இருந்த வித்துவான் முத்துகிருஷ்ண ஐயரிடம், தினமும் நான்கு மைல்கள் நடந்து போய்த் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டேன்.

அதையும் முழுமையாகக் கற்கவில்லை.

குருகுலத்திலும், பிறகு சென்னைக்கு வந்ததும், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களிடம் தான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

குருகுலத்தில் நான் படித்த போது அவர்தான் தலைமை ஆசிரியர்.

அவர்களிடம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்; பழகியும் வந்தேன்.

அந்தப் பழக்கத்தில் தான், எனக்குப் பணிவு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, ராயவரத்தில் ஒரு பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்த போது, சில நண்பர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அந்தத் தொடர்பில்தான் மதுப்பழக்கம் ஆரம்பமாயிற்று.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.

திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.

நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.

அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.

பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.

1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.

இன்று எனக்கே நான் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறேன்.

பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:

ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி


நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.

அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.

அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.

அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.

நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!

காஞ்சிப் பெரியவர்களைப் பார்க்கும் போதெல்லாம், `நாமும் அவரது மடத்தில் ஊழியம் பார்க்கக் கூடாதா?’ என்று எனக்குத் தோன்றுகிறது.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.

அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன்.

சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.

லண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ், இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.

கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி, புத்தபிரானைச் சந்தித்ததும் ஞான தீட்சை பெற்று விட்டாள்.

திருமாலை வணங்கிய சேர மன்னன், முடி துறந்து குலசேகர ஆழ்வாரானான்.

கண்ணனை நம்பிய குசேலன் குபேரனானான்.

துரியோதனன் சோற்றைத் தின்று விட்டதால் தான், சூரகர்ணன் அநியாயத்திற்கே துணை போக வேண்டி வந்தது.

சகுனியைச் சார்ந்த கெளரவர்கள் அழிந்தார்கள்; கண்ணனைச் சார்ந்த பாண்டவர்கள் வாழ்ந்தார்கள்.

அண்ணனைத் துறந்து ராமனைச் சார்ந்த விபீஷணன் அரசுரிமை பெற்றான்.

இராவணனை அண்டி நின்றார், அவனது முடிவையே பெற்றார்கள்.

ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில் தோன்றிற்று.

`சிறிய இனங்களைக் கண்டு அஞ்சுங்கள்; சேராதீர்கள்’ என்றான் வள்ளுவன்.

செம்மண்ணில் மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.

மனிதனின் சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இதுவும் வள்ளுவன் சொன்னதே.

`உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் யோக்கியதை தீர்மானிக்கப்படும்’ என்பது வள்ளுவன் சொல்லே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால், எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.

திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.

நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல துன்பமும் இல்லை.

நல்லது.

இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

அவனோடு ஒட்டாமலேயே பல நாட்கள் ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த பின் உறவு கொள்வது.

`ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.

மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது இருக்கும் புத்தி, மற்ற சகவாசங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் இருக்க வேண்டும்.

`தீயவர்’ என்றால் தீயைப் போன்றவன் என்று அர்த்தம்.

அதற்கு எதிர்மறை என்ன?

`நல்லவர்’ என்பார்கள்; அது தவறு.

தீயைப் போன்றவர் என்பதற்கு எதிர்மறை தண்ணீரைப் போன்றவர் என்பதாகும்.

அதை `நீரவர்’ என்றான் வள்ளுவன்.

தீ சுடும்; தண்ணீர் குளிரும்.

குளிர்ச்சியான உறவுகளே, குதூகலமான உறவுகள்.

நம்பிப் பணத்தைக் கொடுத்தால் ஏமாற்றுகின்றவன், நம்பி வீட்டுக்குள் விட்டால் நடத்தை தவறுகிறவன், நம்பித் தொழிற் பங்காளியாக்கினால் மோசம் செய்கிறவன், நம்பிப் பின் பற்றினால் நட்டாற்றில் விடுகிற தலைவன்- இவர்களால்தான் பெரும் நஷ்டங்களும், துன்பங்களும் வருகின்றன.

ஆகவே, இளம்பருவத்தில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு பழகத் துவங்கினால், பல வகையான துன்பங்கள் அடிபட்டுப் போகும்


அது மட்டுமல்ல, நீ நஷ்டப்படும் போது மளமளவென்று உதவிகளும் கிடைக்கும்.

சாதாரணமாக வழித்துணைக்குக் கூட ஒரு அயோக்கியனை நம்பக்கூடாது; ஆனால் மரண பரியந்தம் ஒரு உத்தமனை அவன் பரம ஏழையாக இருந்தாலும் நம்பலாம்.

தான்கூடச் சாப்பிடாமல், உனக்குப் பரிமாறும் ஏழைகளும் உண்டு.

உன் மேலாடையைத் திருடி வைத்துக் கொள்ளும் பணக்காரர்களும் உண்டு.

இனமும் குணமும் தான் முக்கியமே தவிரப் பணம் அல்ல இதில் முதலிடம் வகிப்பது.

முதலாளி நொடித்துப் போனபோது, அவரைத் தன் வீட்டிலேயே வைத்துச் சோறு போட்ட வேலைக்காரனைக் கண்டிருக்கிறேன்.

அவராலே பணக்காரரானவர்கள் எல்லாம், அவரைக் கைவிட்டதையும் பார்த்திருக்கிறேன்.

`இனம்’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; குணத்தைக் குறிப்பது.

`சிற்றினம்’ என்பது குணத்தால் கீழ் மக்களைக் குறிப்பது.

அவர்களிடமிருந்து அறவே விலகி, ஒவ்வொரு துறையிலும் உத்தமர்களையே சார்ந்து நின்று பாருங்கள்; பெருமளவு துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள்.



நன்றி :  கவியரசு கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’

மீண்டும் அடித்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

அர்த்தமுள்ள இந்து மதம் - http://tut-temple.blogspot.com/2018/02/blog-post_42.html 

No comments:

Post a Comment