Subscribe

BREAKING NEWS

25 July 2018

குரு பூர்ணிமா (27/7/2018) சிறப்புப் பதிவு (2)

அனைவருக்கும் வணக்கம்.

இரண்டு, மூன்று பதிவுகளுக்கு முன்னர் ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு ஒன்றை அளித்து இருந்தோம். அனைவரும் குரு பற்றி உணர்ந்து தெளிந்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இன்றும் தொடர்கின்றோம். குரு பூர்ணிமா பற்றி சிறிது அறிந்துவிட்டு  இம்முறை சீடர்கள் செய்ய வேண்டிய செயல்கள் அதாவது விலக்க வேண்டிய பாவங்கள் என்னென்ன என்று அறிய தருகின்றோம். இவை எம் குருவின் வாயிலாக நமக்கு தெரிவிக்கப்பட்டவை ஆகும்.

குரு பூர்ணிமா , ஆடி மாதத்தில் (சூன் - சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.



இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

பௌத்தர்களும், புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.

தருவழி யாகிய தத்துவ ஞானங்
குருவழி யாகுங் குணங்களுள் நின்று
கருவழி யாகுங் கணக்கை யறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே. என்று திருமந்திரம் கூறுகின்றது.

வீடுபேற்றினைத் தருதற்குத் திருவடியுணர்வு - சிவஞானம் கைவருதல்வேண்டும். அது 'தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தக்' கைகூடும். குருவருள் கிடைத்ததும் சிவபெருமானின் எண் குணங்களும் ஆருயிர்மாட்டு மேம்பட்டுத் திகழும். திகழவே பிறப்புக்குக் காரணமாகிய வினைத்தொடக்கு அறும். வினைத்தொடக்கறப் பெருவழியாகிய செல்லாத செந்நெறிச் செல்வர். செல்லவே திருவருட் பேரொளி முன்னிற்கும்.



சரி.. அடுத்து சிஷ்யர்கள் விலக்க வேண்டிய பாபங்கள் (பூர்ண வித்யா - என்ற நூலில் இருந்து தட்டச்சு செய்தது)

பல சிஷ்யர்கள் அனேக சமயங்களில் குருவிடம் செயல்படும் தன்மை, பழகும் விதம், பேசுகின்ற முறை, தனித்து சொல்கின்ற சொற்கள், கேட்கின்ற விதம் முதலியன ஸத்சிஷ்யர்களுக்கு உகந்தவைகளாக காணப்படவில்லை.

ஆதலின் சிஷ்யர்கள் விலக்க வேண்டிய சில தவறான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன:

1.குருவை கேலி அல்லது தூஷணை செய்தல்

2.குருவை தன் மனம்படி செயல்பட கட்டளையிடல்

3. குருவுடன் கொடுக்கல் வாங்கல் முதலியவை செய்தல்

4.குருவின் எதிரியோடு பழகுதல். குரு தூஷணையை காதால் கேட்டல்

5. குருவின் சொல்லும் செயலும் - உலக இயல்புக்கு மாறாக உள்ளதே என்று நினைத்தல்; சொல்லுதல்

6. குருவும் மனிதப்பிறவிதானே அதனால் குறைகள் இருக்கும் என்று எண்ணுதல்

7. பகவானே குருவாக எழுந்தருளி இருக்கிறார் என்பதில் சந்தேகம்

8. குரு ஸமர்ப்பணத்தில் லோபமான எண்ணம்

9. குருவின் கட்டளையை உலகுக்கு பயந்து செய்யாமல் இருத்தல்

10. பிறர் பார்க்கிறார்களே என்று குருவுக்கு நமஸ்காரம் செய்ய வெட்கப்படுதல்

11. குருவை நீண்ட நாட்கள் பார்க்காது இருத்தல்

12. குருபாதுகை தான் கிடைத்து விட்டதே இனி ஸ்தூலமாக குரு எதற்கு என்ற எண்னம்

13. குருவிடம் இன்ன பலன் பெறுவதற்கு இன்ன மந்த்ரங்கள் கொடுங்கள் என்று கேட்பது. இந்த மந்த்ரம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று அவரிடம் கூறுதல்

14. எனக்கு ஒரு விதமாகவும் அவனுக்கு ஒருவிதமாகவும் கொடுத்தீர்களே என்று குருவிடம் கேட்டல்; மந்த்ரம் இவ்வளவு சின்னது தானா? என்று கேட்டல்

15. வேறு சிஷ்யர்கள் குருவிடம் நெருங்கி பழகுதல் கண்டும், அவர்களுக்கு குரு செய்யும் அதிக சலுகைகள், உபசாரங்களைக் கண்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அஸூயை(பொறாமை) கொள்ளுதல்

16. பிறர் குருவிடம் பேசும் போது அது என்ன என்று அறிந்து கொள்ள முயற்சி செய்தல்

17. எல்லா மந்த்ரங்களும் உபதேசம் பெற்றாகி விட்டது; இனி என்ன பயம் என்ற எண்ணம்

18. (குரு உறவினரக இருப்பின்) உபதேசம் செய்து கொண்ட பின்னரும் உறவு கொண்டாடுதல்

19. உபாஸனைகள் பல இருக்கும் போது, தான் செய்வதே சிறந்தது அல்லது முக்யமானது எனக் கூறிக் கொள்ளல்

20. தான் இதை இவ்வாறு செய்து முடித்தேன் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளுதல்

21. வாழ்கை நடத்த வேண்டிய பணம் இல்லாத நபர்களையும், உபாஸனைக்கு பணம் செலவழிக்க முடியாதவர்களையும் கேலி செய்தல்

22. தன் அனுபவங்களை குருவிடம் கூறாமல் பிறரிடம் கூறுதல்

23. மந்த்ர சாஸ்த்ர ரஹஸ்யங்களை ப்ரஸித்தமாக வெளியே பேசுதல்

24 அங்க ஹீனர்களை கேலி செய்தல்

25 ஸ்த்ரீகளை தூஷித்தல், துன்பம் உண்டாக்குதல் - மரியாதையின்றி அடி என்று அழைத்தல்

26 ஸ்த்ரீகளை அடிமையாக நினைத்தல் கேலியாக பேசி சிரித்தல்

27. எல்லா ஸ்த்ரீகளும் தேவியின் வடிவங்களே என்ற அடிப்படை உண்மையை நம்பாமை

28. நான்தான் குருவிற்கு அத்யந்தம், ப்ரியமானவன் என்று கூறல்


இத்தகு சிறப்பு வாய்ந்த குரு பூர்ணிமா வியாழன் 26/07/2018 நள்ளிரவு 12:25 மணி முதல் வெள்ளி 27/07/2018 அன்று நள்ளிரவு 2:23 மணி வரை உள்ளது. இந்த நாளில் மேலும் சந்திர கிரகணம் சேருகின்றது. கூடுவாஞ்சேரி வேலி அம்மன் கோயிலில் நமக்கு கிடைத்த செய்தியையும் இங்கே சேர்க்கின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.



இந்த பௌர்ணமி நாளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவும். ஒவ்வொருவரும் தங்களில் குருவை நேரிலோ, மானசீகமாகவோ வணங்கவும். இன்றைய தினம் செய்யும் எந்த ஒரு மந்திரமும் கோடிக்கணக்கில் வரவு வைக்கப்படும். பூசை,சாதனை , பிரார்த்தனை போன்றவற்றை சிறப்பாக செய்து குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_23.html

குருவருள் இன்றேல், திருவருள் இல்லை. - http://tut-temple.blogspot.com/2017/06/blog-post_3.html

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் ! - http://tut-temple.blogspot.com/2017/06/blog-post_14.html

ஞானத்தை யாரிடம் கற்பது? - http://tut-temple.blogspot.com/2017/05/blog-post_71.html

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - http://tut-temple.blogspot.com/2017/07/tut-100.html

No comments:

Post a Comment