Subscribe

BREAKING NEWS

15 July 2018

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 11 ஆம் ஆண்டு விழா

அன்பார்ந்த அடியார் பெருமக்களே,

சென்ற ஆண்டு நாம் சித்தர்கள் யாத்திரை சென்று வந்தோம். அப்போது திருஒற்றியூர் சென்ற போது, அங்கு ஏகப்பட்ட சித்தர்களின் உயிர்நிலை கோயில்களை கண்டோம். பின்னர்தான் புரிந்தது  திருஒற்றியூர் ஒரு ஆன்மிக பூமி. திருஒற்றியூர் வடிவுடையம்மன் கோயில் ஒன்றே போதும். ஆனால் இத்தனையும் தாண்டி இன்னும் ஏகப்பட்ட சித்தர் பெருமக்கள் அருள் செய்து வருகின்றனர்.

தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி, திருவொற்றியூர் டோல் கேட் ரோட்டில் உள்ள பரஞ்சோதி மகான் தர்கா,சங்கர மடத்துறவி மகா தேவேந்திரர் அதிஷ்டானம்,அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குபேரனால் வழிபடப்பட்ட கோவில்,தக்ஷிணாமூர்த்தி கோவில்,எண்ணூரில் பன்னண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு முத்தாரம்மன், சுயம்பு சித்தர்,பாடகச்சேரி பைரவ சுவாமிகள் அப்புடு சுவாமிகள்,ரோமச மகரிஷி சுயம்பு உருவம்,காக புஜண்டர் ஜீவசமாதி,பட்டினத்தார் சுவாமிகள் ஜீவசமாதி,வீரராகவ சித்தர் ஜீவசமாதி, குணங்குடி மஸ்தான் தர்கா என அருள் நிறைந்த ஊரே திருஒற்றியூர். காண கிடைக்க வேண்டுகின்றேன் திருஒற்றியூர் தரிசனம் !!!

வாவி எல்லாம் தீர்த்தம் மணலெல்லாம் வெண்நீறு
காவனங்களெல்லாம் கணநாதர் - பூ உலகில்
ஈது சிவலோகமென் றன்றே மெய்த்தவத்தோர்
ஓதுந் திருவொற்றியூர்

என்று பட்டினத்தார் சொல்கிறார் என்றால் சும்மாவா? மெய்யான தவம் புரிந்த புனிதர்கள் எல்லோரும் போற்றுகின்ற திருத்தலமாம் திருவொற்றியூரில் அமைந்துள்ள நீர்நிலைகள் அனைத்துமே சிவ புண்ணிய தீர்த்தங்களாம்; அந்நகர் எங்கும் பரவிக் கிடக்கும் மணல் யாவும் அவன் அணியும் திருநீறு; மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்கள் அனைத்துமே சிவகணங்களாகும். மொத்தத்தில் திருவொற்றியூர் சிவலோகமாகும்.

சென்ற ஆண்டு தரிசனத்தில் நாம்  ரோம மகரிஷி தரிசனம் பற்றி  மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க !  என்று ஒரு பதிவு சொல்லி இருந்தோம். அடுத்து அப்படியே பயணம் சென்று கொண்டிருக்கின்றது. அதற்கு முன் இதே போல் ஒரு ஒரு நிகழ்வு சாங்கு சித்தர் குருபூசை பதிவில் சொல்லி இருந்தோம். அதாவது சென்ற  ஆண்டு குருபூஜை அழைப்பிதழை இணைத்து பதிவு செய்து இருந்தோம். இந்த ஆண்டு குருபூஜை பற்றியும் நாம் அறியவில்லை. ஆனால் குருவருளால் இரண்டு வாரங்களுக்கு முன்னர், அடியார் ஒருவரின் மூலம் நமக்கு அழைப்பிதழ் கிடைத்தது. வரும் வாரம் வாய்ப்பு கிடைக்கும் போது சென்று தரிசிக்க உள்ளோம். சுருக்கமாக சித்தர்கள் மார்க்கத்தில் வழிபாடு செய்ய நாம் பற்பல புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நாம் பற்பல சித்தர்களை இங்கே அறிந்து வருகின்றோம் என்றால், நம் தளம் சித்தர்களின் அருளாசி பெற்றது என்றே கருதுகின்றோம். இதே போல் தான்   ரோம மகரிஷி தரிசனமும்.

மலேசியாவில் இருந்து நம் அன்பர் திரு.பாலச்சந்திரன் சென்ற வாரம் வியாழக்கிழமை சென்னை வந்து இருந்தார்கள். வந்த உடனே வள்ளலார் கோயிலில் அன்னம்பாலிப்பு நடைபெற்றது.அடுத்து திருஒற்றியூர் தரிசனம், சுமார் 7:30 மணி அளவில் வடிவுடையம்மன்,பட்டினத்தார், வீரராகவ சுவாமிகள் என மணி 8 ஆனது. பின்னர் கூடுவாஞ்சேரி வர முற்பட்ட போது, மயிலாண்டவர் திருக்கோயிலுக்கு அழைத்து, திருநடை நேரம் பற்றி விசாரித்தோம்.இன்னும் 1 மணி நேரம் இருப்பது தெரிந்த உடன், நேராக அங்கு சென்றோம்.

ரோம மகரிசி தரிசனம் செய்து, அங்கிருந்த தர்மகர்த்தாவிடம் பேசினோம் உடனே அவர்  ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 11 ஆம் ஆண்டு விழா  அழைப்பிதழ் கொடுத்தார். நமக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது. சென்ற ஆண்டும் இதே போல் அழைப்பிதழ் கிடைத்தது. இவ்வாண்டும் கிடைத்துள்ளது. எப்படி நமக்கு கிடைக்கின்றது? எப்படி நாம் சரியாக குருபூஜை நேரம் பார்த்து தரிசனம் செய்ய செல்கின்றோம். இதெல்லாம் நமக்கு மேல் உள்ள அந்த ஆண்டவன் கணக்கு தான். இதே போல் மற்றொரு நிகழ்வும் சென்ற வாரம் நடைபெற்றது. அதுவும் விரைவில் தனிப் பதிவாக தருகின்றோம். கொஞ்சம்  ரோம மகரிஷி பற்றி பாப்போம். அழைப்பிதம் இணைப்பில்  உள்ளது.

 இத்தகு சிறப்புமிக்க திருஒற்றியூர் தான் மயிலாண்டவர் திருக்கோவிலைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இது போன்ற கோவில் இருப்பதை யாரும் அறிய மாட்டார்கள். நம்முடைய கடமை இது போன்ற சித்தர் பீடங்கள்,பழந் திருக்கோவில்கள் இவற்றை எல்லாம் அனைவரும் அறியும் வண்ணம் மிளிரச் செய்வதே.





எத்துணையோ மகான்களும் ரிஷிகளும் வந்துபோன பூமியிது .உரோமச மகரிஷி :உரோம ரிஷி 

உரோம ரிஷி சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார். அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது.

உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது.
அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார். அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.
உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும்,

அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும்,

கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம். உரோமபுரியிலிருந்து ஞானத்தை நாடி தென் தமிழ்நாட்டிற்கு வந்தார் எனவே உரோம ரிஷி என்றொரு கருத்தும், இல்லை, இவரின் உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது. 




மகத்துவமான, விசேஷமான ரோமசமகரிஷி என்கிற மிகுந்த மகத்துவம் வாய்ந்த மாமுனிவர் தனது சக்தியின் ஒரு பகுதியை இந்த தர்மம் மிகு சென்னையில் சேமித்து வைத்துள்ளார்.


இந்திரன், பிரும்மா என அனைத்துமே தேவலோகத்தில் இருக்கும் பதவிகள். இந்த பூமியில் பிறந்து மிக அதிகமான புண்ணியம் செய்த ஆற்றல் மிக்க ஆத்மாக்களே இந்திரனாக,பிரும்மாவாக மாறுவார்கள் என்று நமது வேதாகமங்கள் சொல்கின்றன.

நமது அனைவரின் ஆயுளையும் தீர்மானிக்கும். பிரும்மாவின் ஆயுள் 7 கோடியே 20 லக்ஷம்.

ரோம பெயர் காரணம்- ரோமம் என்றால் முடி. கரடியின் உடலில் உள்ள முடியை விட இவர் உடலில் அதிகமாக முடி இருக்கும் என்று மகா பாரதம் போன்ற நூல்கள் சொல்கின்றன.

ரோம மகரிஷியின் மகத்துவம்

ஒரு பிரும்மாவின் ஆயுள் முடிந்ததும். அதாவது 7 கோடியே 20 லக்ஷம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோமச மகரிஷி உடலில் இருந்து ஒரு முடி கீழே உதிருமாம்.

ரோமச மகரிஷி அவராகவே தனது உடலில் இருந்து ஒரு முடியை கிள்ளி எறிந்தால்? அடுத்த நொடியே பிரும்மாவின் ஆயுள் முடிந்தது.

இத்தகைய பேராற்றல் மிகுந்த ரோமச மகரிஷியின் கோவில் திருவொற்றியூரில் இருக்கிறது.

திருவொற்றியூரில் உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் ரோமச மகரிஷி அருள் பாலிக்கிறார். 





மிக முக்கியமான ஒரு விஷயம். இங்கே ரோமச மகரிஷி ஜீவசமாதி அடையவில்லை.

பலகோடி பிரும்மாக்களின் ஆயுளை தனது உடலில் உள்ள முடிகளில் சுமந்து கொண்டிருக்கும் இவர் ஜீவசமாதி அடைய வேண்டிய அவசியம் இல்லை. சிவபெருமான் பல ஸ்தலங்களில் சுயம்புவாக தோன்றியதை போல் ரோமச மகரிஷி இந்த திருவொற்றியூரில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றினார். 


இந்த ரோமச மகரிஷியை அகஸ்திய முனிவர் வழிபட்டு இருக்கிறார்.

ராமபிரான் வழிபட்டு இருக்கிறார்.

பல இடங்களில் ஜீவசமாதி அடைந்த காகபுஜண்ட மகரிஷி ரோமச மகரிஷியை இங்கே வழிபட்டு அதே இடத்தில் ஜீவசமாதியும் அடைந்து இருக்கிறார். மானுட ஆத்மா போல் மகான்களின் ஆத்மா ஒரே இடத்தில் முடங்கி கிடக்காது.

திருவொற்றியூரில் உள்ள சில நாஸ்திக, வேறு மதத்தை சேர்ந்த சில மாபாவிகள் ரோமச மகரிஷி கோவிலையும், கோவிலுக்கு சொந்தமான இடத்தையும் கொள்ளையடிக்க பல முயற்சி செய்தனர்.

அந்த தீய சக்திகளை ரோமச மகரிஷி தூள், தூள் ஆக்கினார்.

அப்பொழுது பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தது.

இதெல்லாம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான்.


என்ன அன்பர்களே..படிக்க படிக்க புல்லரிக்கின்றதா? இது தான் சித்தர்களின் அருள்.அவர்களின் அருளை ஒரு பதிவில் அடக்க முடியுமா? முடியவே முடியாது.இனி இந்த திருக்கோவில் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த மயிலாண்டவர் கோவிலில் அம்பாள் சன்னதி இல்லை. சிவபெருமான் மட்டும் உள்ளார். இந்த சிவ லிங்கமே காக புசுண்டர் ஜீவ சமாதி என்று சொல்லப் படுகின்றது.ரோமச மகரிஷி பஞ்ச பட்சி சாத்திரத்தை எழுதினார். அதில் "மயில் " வெகுவாக குறிப்பிடத்தக்கது.எனவே தான் இந்தக் கோவிலுக்கு மயிலாண்டவர் என்ற பெயர் ஏற்பட்டது.


 இந்த கோவில் பார்ப்பதற்கு மாடம் போல் உள்ளது. அதாவது மாட வடிவில் கோவில் உள்ளது.இந்த மாட கோவிலுனுள் ரோமச மகரிஷி அருள் பாலிக்கின்றார்.சொல்லில் வடிக்க இயலாத நிலையில் ரோமச மகரிஷி  தவ நிலையில் இருக்கின்றார்.சற்று ஏறக்குறைய 3-4 ஆதி உயரத்தில் உள்ளார்.வெகு நீண்ட ஜடாமுடியுடன் உள்ளார்.ஜடாமுடியை நன்கு உற்று பார்த்தால் சிவ லிங்கங்களை பார்க்க முடிகின்றது. மொத்தத்தில் ஜடா முடியில் இரண்டு சிவலிங்கங்களை பொதிந்து வைத்துள்ளார்.

தாடியும் அழகாய்,டிரிம் செய்து காட்சி அளிக்கின்றார்.கழுத்தில் ஒரு உருத்திராக்க மாலை அணிந்து உள்ளார்.வலது கையில் வரத முத்திரையிலும்,இடக் கையில் ஒரு சொம்பும்,கரண்டியும் கொண்டு காட்சி தருகின்றார்.இது நோய்களை தீர்க்க அருள் தரும் நிலையன்றோ? வரத முத்திரையில் எங்களின் பயம் நீக்கவும், இடக்கையில் நோய்,நொடி நீக்கும் வல்லமை கொண்ட முனி நீர் தானே !

அத்தி மரம் இந்த திருத்தலத்தின் தல விருட்சமாக உள்ளது. 





ரோம மகரிஷி - கேட்கக் கிடைத்தவை :


1. கண்ணகி அம்மன் மதுரையை எரித்து விட்டு,சென்னை வந்த போது,அவரை "வட்டப்பாறை அம்மன் " என்ற அருள் நிலையில் ரோம மகரிஷி வடிவுடையம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்.மேலும் அம்மனின் உக்கிரத்தை குறைக்க,ஸ்ரீ ஆதி சங்கரர் இங்கே வந்து,ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து,சாந்த சொரூபிணியாக மாற்றியதாக தகவல்.

2. திருஒற்றியூர் ஆதிபுரீஸ்வர் கோவிலில் லிங்க பிரதிஷ்டை செய்வதற்கு,தொண்டைமான் சக்ரவர்த்திக்கு உதவினார்.

3. படம்பக்கநாதர் என்ற திருப்பெயரை  ஆதிபுரீஸ்வரருக்கு வழங்கியவர் இவரே.

4. மாசி மக நட்சத்திர நாளில், மகரிஷி சித்தர்களின் நெறிமுறைப்படி இந்த பரவெளியில் கலந்து உள்ளார்கள்.

5. உரோம மகரிஷி,இந்த உலகம் படிக்கப்பட்டது முதல் யுகயுகத்தும் வாழ்கின்ற யோகி ஆவார்

6. உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார்கள்.சதுரகிரியில் இப்போதும் இருந்து அருள் வழங்கி வருவதோடு,18 சித்தர் பெருமக்களுக்கும்குருமுகமாய் இருந்து வருகின்றார்கள்(18 சித்தர்களின் பெயர்கள் ஒவ்வொரு சித்தர் வழியில் மாறுபடும் )

7. திருக்கழுக்குன்றத்தில் உள்ள "சங்கு தீர்த்தம்" இவரால் உருவாக்கப்பட்டது.

8. சதுரகிரியில் உள்ள சுயம்பு இரட்டைலிங்கங்களுக்கு சந்தன மஹாலிங்கம் மற்றும் சுந்தர மஹாலிங்கம் என்ற திருப்பெயர் இவரால் வழங்கப் பட்டது.

9. காசி விஸ்வநாதர் மனித உரு கொண்டு, இங்கே வந்து இவரை தரிசித்தார்.மகரிஷி அவரைக் கண்டு,அதன் பொருட்டு தங்கத்தால் ஆன விஸ்வநாதர் கொண்டு,திருஒற்றியூர் கடற்கரையில் சில யுகங்களுக்கு முன்பு, கோவில் காட்டினார்.அந்த கோவில் கடலிலே பல யுகங்களுக்கு முன்பு உள்வாங்கப்பட்டது.

10. ராமர் மற்றும் ராவணர் இவரை த்த்ரேதா யுகத்தில் தரிசித்துள்ளனர்.பாண்டவர்கள் துவாபர யுகத்தில் தரிசனம் செய்துள்ளனர்

11. இவரின் உடலில் இருந்து ஒரு முடி விழுந்தால் பிரம்மவின் ஆயுள் முடிவதற்கு அர்த்தம்.இது நமது கால அளவில் பல கோடி ஆண்டுகளுக்கு சமம்.தற்போது வரை சில முடிகள் விழுந்துள்ளன.

12. இவர் ராஜ ரிஷி ஆவார்.பற்பல கோவில்களை உருவாக்கியுள்ளார்.

13. தற்போது நீர் வறண்டு காணப்படும் பாலாறு,இவரால் உருவாக்கப்பட்டது.

14. மயில்,காகம்,ஆந்தை,கருடன்,சேவல் முதலிய 5 பறவைகளைக் கொண்டு பஞ்ச பட்சி சாஸ்த்திரம் உருவாக்கியுள்ளார்.

15.  ரோமம் என்றே சொல்லடா ! ரோம பிள்ளை சொல்லடா ..தலைநிமிர்ந்து நில்லடா என்ற புகழ் பெற்ற வரிகள், நாம் அனைவரும் அவரின் பிள்ளைகள் என்பதை நினைவூட்டுகின்றது.

16. முடிவாக, மஹாகுரு அகத்தியர் மற்றும் இடைக்காடர் இங்கே வந்து, ரோம மகரிஷியை வழிபட்டுள்ளார்கள்.

கோவில் அமைவிடம் :

#98, எல்லை அம்மன் கோவில் தெரு,திருஒற்றியூர்,சென்னை -19

எப்படி செல்வது?

திருஒற்றியூரில் உள்ள எல்லை அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.முதலில் அங்கே  சென்று,அந்த தெருவிலே சுமார் 50 மீட்டர் தொலைவு சென்றால் அங்கே,பல கடை மற்றும் வீடுகளுக்கு இடையில் ஒரு கோவிலுக்கான வாயில் இருக்கும். அங்கே வழிகாட்டி பலகையும் இருக்கும்.அதனுள்ளே 3 2 அல்லது 3 வீடுகளுகள் தாண்டி சென்றால், நம் துயர் நீக்க, ரோம மகரிஷி காத்துக் கொண்டிருக்கின்றார்.


முக்கிய அறிவிப்பு :

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 9ம் ஆண்டு விழா வரும் 21.07.2018 ம் தேதி அருள்மிகு மயிலாண்டவர் திருக்கோவிலில் நடைபெற உள்ளதால் ,அனைவரும் கலந்து கொண்டு ரோம மஹரிஷியின் அருள் பெறும் படி கேட்டுக் கொள்கின்றோம்.விழா அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.







முந்தைய பதிவுகளுக்கு :

மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க ! - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_24.html

மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_4.html

அருளை அள்ளித்தரும் நவயோகி,தவ யோகி,சிவ யோகி ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_82.html

No comments:

Post a Comment