Friday, July 20, 2018

குதூகலம் அள்ளித் தந்த குழந்தைவேல் சுவாமிகள் உழவாரப் பணி

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மிக மிக குறிப்பிடத் தக்க சேவைகளில் ஒன்று உழவாரப் பணி. என்னப்பா இது? கோயில் கோயிலாக சென்று சுத்தம் செய்வதால் என்ன ஆகிவிடப் போகிறது? எனபது போன்ற கேள்வி "உழவாரம்" என்று சொன்னவுடன் நீங்கள் கேட்கலாம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நம் முன்னோர் சொன்னது. அவர்கள் இதனை ஏதோ போகிற போக்கில் சொல்ல வில்லை. காலத்தின் தேவை கருதியே இதனை சொல்லி உள்ளார்கள். இன்று தலை நிமிர்ந்து இருக்கும் கோயில்கள் உழவாரம் என்ற சொல் கொண்டு தான் நிற்கின்றது. 

நம் உடலும் உள்ளமும் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. ஒன்றில்லாமல் ஒன்று இயங்க முடியாது. அதேபோல், நம் கலாசாரமும் நம் பண்பாடும்  ஒன்றுக்குள் ஒன்றாக இயங்குகின்றன.நம் கலாச்சாரம்,பண்பாடு காக்கப்பட வேண்டுமானால் கோயில்கள் காக்கப்பட வேண்டும். இன்று நாம் காணும் கோயில்களை வைத்தே, நம் முன்னோர் வாழ்ந்த சூழியல், அவர்களின் பண்பாடு,கலாச்சாரம் பற்றி பேச முடிகின்றது. ஆனால் இன்று இது மிகப் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.இது ஒன்றே போதுமே உழவாரப் பணி பற்றி பேசிட...

பெருக்குதல், மெழுகுதல், குப்பைகளை அகற்றுதல், வெள்ளையடித்தல் மட்டுமே உழவாரப் பணி அல்ல. கோயில்கள் எதற்கு வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் உழவாரப் பணி. கோயில்கள் தலைமுறைக்கும் இருந்தால் தான், நம் கலாசாரம் நம் சந்ததியருக்கும் கிடைக்கும்தெள்ளத் தெளிவாக சொல்ல வேண்டுமானால், உழவாரப் பணி என்பது  கோயில்களை பாதுகாக்கவே ஆகும். அப்படி என்றால் ஒரு குழுவாகத் தான் சென்று உழவாரப் பணி  செய்ய வேண்டுமா? என்றால் வாய்ப்பு கிடைத்தால் குழுவில் இணைந்து செய்யுங்கள். இல்லையேல் நீங்கள் கோயில் செல்லும் போது, அங்கே கிடக்கும் தேவையற்ற பொருட்களை குருக்கள் அனுமதி பெற்று சுத்தம் செய்யுங்கள். இறை பிரசாதம் வாங்கி விட்டு, அப்படியே கோயில் தூணில் தடவி இருப்பதை சுத்தம் செய்யலாம். இது போன்று இனி நடக்காதிருக்க,  தூணில் பிரசாதம் மடிக்கும் தாள்களை வைப்பது கூட உழவாரப் பணி  ஆகும். சரி..நம்மை மீண்டும் மீண்டும் அழைக்கும்  குழந்தைவேல் சுவாமிகள் திருக்கோயிலில் நடைபெற்ற உழவாரப் பணி  அனுபவத்தை இங்கே அறியத் தருகின்றோம்.


கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? அது போல் தான் இந்த சித்தர் கோயிலும். சின்ன கோயிலாக இருந்தாலும், மன நிறைவாக பணி இருந்தது. ஜாதகத்தை மாற்றும் சக்தி படைத்தவர் அல்லவா இவர். புதிதாக சுமார் நான்கு நண்பர்கள் பணியில் ஈடுபட்டனர். நாம் முதலில் மிக மிக தேவைப்படும் பணி இங்கு என்ன? என்று கேட்டோம்?


கோயிலின் தரையில் உள்ள கோலத்தை நீக்கும்படி நம்மை கேட்டார்கள். உடனே நாம் அதற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி வந்து கொடுத்தோம். மகளிர் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களும் தம் பங்கிற்கு அனைத்து பாத்திரங்கள், பூசை சாமான்களை தேய்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேரம் ஆக, ஆக முழுவீச்சில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆடவர்கள் தரையில் இருந்த கோலத்தை நீக்க பட்டபாடு..பெரும்பாடு தான்.


கோயிலுக்கு வரும் பாதையில் உள்ள குப்பைகளை நீக்கி, சுத்தம் செய்ய மற்றொரு குழு புறப்பட்டது.

ஏதோ..எங்களால் முடிந்த அளவில் சுத்தம் செய்துள்ளோம். அடுத்து கோயிலின் உள்ளேயும் நீர் ஊற்றி தூய்மை செய்து கொண்டிருந்தார்கள். திரு.சரவணன் வந்ததும் கோயிலின் மேலே ஏறி, அனைத்தும் தூய்மை செய்தார். நீங்களே பாருங்கள். 

அடிக்கின்ற வெயிலில் மேலே ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்த தம்பி சரவணனை பார்க்கும் போது, நமக்கே ஒரு மாதிரி இருந்தது. மிக மிக அர்ப்பணிப்போடு செய்து கொண்டிருந்தார். முதலில் கோயில் மேல் இருந்த அந்த முனிவர் அழுக்காக இருந்தார். நன்கு நீர் ஊற்றி கழுவி தற்போது நாம் பார்க்கும் அளவில் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றார்.


அட..இதென்ன? நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் ஆண்டு விழா படங்களை நமக்கு தொகுத்து தந்திருந்தார் நம் அன்பர் திரு. கந்தசாமி ஐயா. முதலில் இந்த விழாவினை தீர்மானித்த போது, விழாவின் நிகழ்வுகளை படங்களாக எடுக்க நம்மிடம் பொருளாதாரம் இல்லை. ஆனால் இந்த நிகழ்வை நாம் கூறியவுடன் ஊரப்பாக்கத்தை சேர்ந்த திரு.கந்தசாமி ஐயா அவர்கள் முழுப் பொறுப்பேற்று, தொகுப்பாக மாற்றி நமக்கு கொடுத்தார். இந்த நேரத்தில் நாம் அவருக்கு நம் நன்றியைத் தெருவித்துக் கொள்கின்றோம். அழகான படத் தொகுப்பை வழங்கிய திரு.சண்முகம் ஐயாவிற்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த தொகுப்பைத் தான் திருமதி சாந்தா ரோகிணி அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.


மிக மிக நீண்ட நாட்கள் கழித்து, திரு.செந்தில் அண்ணன் அவர்கள் உழவாரப் பணிக்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் அனைவரும் உரையாடினோம். ஏனெனில் காரணமின்றி காரியமில்லை. "தேடல் உள்ள தேனீக்களாய்" உதயம் ஆனது அவன் அருளால் தான்.அதைப் பற்றி நாம் பேசுவதானால், நம் கண்களில் நீர்த்துளி வந்து விடும்.சரி..இது ஒரு புறம் இருக்கட்டும். செந்தில் அண்ணனை சந்தித்தது மகிழ்வாய் இருந்தது.

மேலும் நாம் அன்று என்னென்ன செய்தோம். நம் வழிபாடு எப்படி இருந்தது போன்ற கேள்விகளுக்கு விடை அடுத்தப் பதிவில்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.

மீள்பதிவாக;-

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌