Subscribe

BREAKING NEWS

30 September 2017

TUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் (7)

அன்பர்களே.

TUT தளத்தின் நவராத்திரி தொடர் பதிவில் தினமும் அன்னையின் தரிசனம் பெற்று வருகின்றோம்.
இதற்கு முந்தைய பதிவில் நவராத்திரி பற்றி சில குறிப்புகள் பார்த்தோம்.தேவி மகாத்மியம்,அபிராமி அந்தாதி,துர்க்கா அஷ்டகம்.இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)சகலகலாவல்லி மாலை,சரஸ்வதி அந்தாதி,மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் போன்ற தோத்திரங்களை இந்த நவராத்திரியில் துதிப்பது சிறந்தது என்று பார்த்தோம்.

எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும்.

இந்த தொகுப்பில் சகலகலாவல்லி மாலை பற்றி சிறிது காண்போம். சகலகலாவல்லி மாலை என்ற நூலை கருவாக்கியவர் குமரகுருபரர் ஆவார். யார் இந்த குமரகுருபரர்? இவரைப் பற்றி இந்த நவராத்திரி தினத்தில் அறிந்து கொள்வது சிறப்பாம்.

குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்புதங்களும் செய்தவர். 

குமரகுருபரர் திருவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது தந்தையார் சண்முக சிகாமணிக் கவிராயர்; தாயார் சிவகாமி அம்மையார். குமரகுருபரர் ஐந்து வயதுவரை வாய் பேசாது இருந்தார். தங்கள் மகன் வாய் பேசாது இருப்பதைக் கண்ட குமரகுருபரரின் பெற்றோர் மனம் வருந்தினர்; குமரகுருபரருடன் திருச்செந்தூருக்குச் சென்றனர். அங்கே முருகன் அருளால் குறை நீங்கப் பெற்று முருகனைப் போற்றும் வகையில் கந்தர் கலிவெண்பாப் பாடலைப் பாடினார். இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டு.






இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது எனப்படுகிறது. கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அக்காலத்தில் மேலும் பல நூல்களை எழுதிய குமரகுருபரர்,காசிக்குப் பயணமானார்.

அங்கே காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவிச் சைவ சமயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார்.
கயிலாசபுரத்தில் அடிகள் பிறந்த வீட்டுப் பகுதி அடிகளின் மடமாக 31.8.1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, தவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.
மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய பிற நூல்களாகும்.

இவர் இயற்றிய சகலகலா வல்லி மாலை கீழே தரப்பட்டுள்ளது

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? ஜகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2


அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4


பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5


பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6






பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7


சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8


சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10


ஆறாம் நாள் அன்னையின் தரிசனம் பெறலாமா?










                               சித்தர்கள் போற்றும் வாலைத் தாய் அலங்காரம்











வேலி அம்மன் ஆலயத்தில் அம்மன் அருள் 

- அடுத்த தரிசனத்தில் சிந்திப்போம் 

முந்தைய பதிவுகளுக்கு:-

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html


29 September 2017

கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவம் (6)

நவராத்திரி ஸ்பெஷல் பதிவு என்று இந்த பதிவைச் சொல்லலாம். நம்முடைய நண்பர் சந்தித்து ஆறு மாதங்கள் ஆயிற்று. நால்வரின் பாதையில்  என்றொரு குழுமத்தின் மூலம் பல்வேறு சைவத் தொண்டுகள் ஆற்றி வருகின்றார். திருத்தல யாத்திரை மேற்கொள்வது இந்த குழுவின் முக்கிய நோக்கமாகும். நம்மையும் தொடர்பு கொண்டு அழைப்பு விடுப்பார். நம்முடைய சூழலில், கலந்து கொள்ள இயலாத சூழலே நிலவியது.இருப்பினும் அவரை சந்திக்க வேண்டியும் விரும்பினோம்.அப்போது தான் இந்த நவராத்திரிக்காக கொலு பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.


அழைப்பிதழைக் கண்டதும் மனம் ஆனந்த கூத்தாடியது. நம்மை முதன் முதலாக கொலு பார்க்க அழைத்தவரும் இவரே.சிறு வயதில் சுண்டல் சாப்பிட,கொலு பார்க்க சென்றதாய் நினைவு .சற்று மலரும் நினைவாக மட்டுமே. உடனே சுரேஷ் பிரியன் ஐயாவை தொடர்பு கொண்டு, நாம் பகல் நேரத்தில் கொலு பார்க்க வருவதாக சொன்னோம்.அவரும் கட்டாயம் வாருங்கள் என்று சொன்னார்.மாலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள கோயில் கொலு தரிசனம் பெற்றுக் கொண்டிருப்பதால், இதனை தவறவிடக் கூடாது என்று தோன்றியது.

நம் எண்ணத்தின்படியே சென்ற வாரம் சனிக்கிழமை சுமார் 5 மணி அளவில் சுரேஷ் பிரியன் ஐயாவின் வீட்டிற்கு சென்றோம். வீட்டினுள் நுழைந்த உடனே, நம்மை அவர் வீட்டு கொலு வரவேற்றன என்றே சொல்லலாம். அப்படியே அவர்களின் தாயார்,தந்தையார் அறிமுகம் நடந்தது.வேறொருவர் வீட்டில் இருப்பது போன்ற உணர்வே இல்லை.

நாம் இதுவரை பார்த்த கொலுக்களில்,இது தான் பிரம்மாண்டத்தின் உச்சம். இரண்டு அடுக்காக வைத்து இருந்தார்.சுமார் 28 ஆண்டுகளாக கொலு வைத்து வருவதாகச் சொன்னார்கள்.நமக்கு சற்று மலைப்பு தோன்றியது. ஒவ்வொரு கொலுவையும் அணு அணுவாக கண்டு ரசித்தோம்.அனைத்து கொலுக்களையும் ஒவ்வொன்றாக விளக்கி கூறிய விதம் - வெகுவாக ரசித்தோம்.

அவரது இல்லம் - கொலுக்களின் அணிவகுப்பில் திருமகளின் இல்லமாக திகழ்ந்தது.முதலில் இரண்டு மூன்று காட்சிகளை எடுத்தோம்.பின்பு அவரோடு பேசினோம். மீண்டும் கொலு  பார்த்தோம். கண்களை கவர்ந்து கொண்டிருந்தது. சிவ பக்தர் வீட்டில் கொலு..ஆரம்பமே அட்டகாசம். திருமுறை வழிபாட்டோடு கொலுவைத் தொடங்கி இருந்தார்கள்.



ஆடல் வல்லான், ஆடலரசன் அருளோடு திருமுறை கண்டு , மனம் களிப்புற்றோம். நால்வர் பெருமக்கள் ஆசி பெற்றோம்.நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.







அப்படியே ஒரு விசிட் அடித்தோம். நம்மோடு வாழ்கின்ற பொது மக்களை பிரதிபலிக்கும் கொலு பார்த்தோம்.


நடந்தாய் வாழி காவேரி ...அகத்தியர் பெருமானால் உருவான காவேரி பற்றிய கொலு.அற்புதம்.இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்த இது போன்ற கொலுவும் ஒரு வாய்ப்பு என்று தோன்றுகின்றது.நம்முடைய பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும், அடுத்தடுத்த தலைமுறையினர் மறந்துவிடாமல் இருப்பதற்கும், அவற்றை நம் குழந்தைகளுக்கு புரியவைப்பதற்காகவே கொலு வைக்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. உபதேசங்களாக இல்லாமல் பொம்மைகளாக வைக்கப்படும்போது குழந்தைகளுக்கு அதில் ஆர்வம் உண்டாகும். நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தெய்வங்களையும் பொம்மைகளாக பார்க்கும்போது அவர்களுக்கு அது பற்றிய அறிவு பெருகும்!...இந்த காவேரி பற்றிய கொலுவை பார்க்கும் போது நமக்கு மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகின்றது அல்லவா?



                               ராம..ராம..ராம என்று உள்ளம் உருகிய பொழுது



இது போல் நம்முடைய பண்பாட்டை,கலாச்சாரத்தை அறிய தூண்டச்  செய்வதே கொலு வைப்பதின் தாத்பரியம்.

பல வண்ணங்களில் கொலு. கண்ணை மட்டும் கவரவில்லை. நம் கருத்தையும் சேர்த்து கவர்ந்து கொண்டு உள்ளன என்பதே உண்மை. நம்மைப் பொறுத்தவரை இங்கே கொலு நிகழ்வு,நம்மை கொண்டாட்டம்,கோலாகலம் மன நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது.கொலு வைப்பது எப்படி என்று சுரேஷ் ஐயாவிடம் கேட்கலாம் போன்று அவ்வளவு நேர்த்தி.அலங்காரம் ...











நாம் சொல்வது உங்களுக்கு புரிந்து இருக்கும். நீங்களே உணர்ந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.


ஓம் ..தாயே போற்றி 


அடடே...கல்யாண விருந்தா! சூப்பர். நல்ல வேளை நாற்காலியில் உட்கார்ந்து ஸெல்ப் சர்வீஸ் செய்யாம இருக்குறத பார்க்கும் போது, சூப்பரா இருக்கு. தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுவது நம் ஆரோக்கியம் சார்ந்த விஷயம். தண்ணீர் வைத்து இருப்பது கூட ரொம்ப சூப்பர்.


                                 இதோ..நம் பாரம்பரிய கல்யாண கொலு.

சரி.வாங்க அடுத்த கொலு பார்க்க போலாம்.








மேலே உள்ள காட்சிகளில் சித்தர்களின் பெயர் இருக்கின்றது. சித்தர்களின் தரிசனம் இங்கே பெற்றோம்.நல்ல வேளை ..நாமும் சற்று சுதாரித்து,சித்தர்களை தனித்தனியாக வேண்டி அருள் பெற்றோம்.


நமக்கு இருக்கும் ஒரு சந்தேகம்.இவற்றை எல்லாம் எப்படி பாதுகாக்கிறார்கள் என்பது தான். வீட்டில் உள்ள புத்தகங்களை அப்படியே விட்டு விட்டால்..அதோ கதி தான்.சுரேஷ் பிரியன் ஐயாவிடம் கேட்டோம்.

கொலு வைப்பது சாதாரண விஷயம் அன்று. நம் வைத்து வரும் 28 வருட அனுபவத்தில் , தாம் கற்றுக் கொண்ட விஷயம் வேறு என்றார். முதல் எந்த அளவில் கொலு வைக்கின்றோம் என்று தீர்மானிக்க வேண்டும்.அதற்கேற்றாற் போல்,கொலு படிகள் தயார் செய்ய வேண்டும்.அப்புறம் விரிப்பு மற்றும் அலங்காரம் பற்றியும் குறித்து நடைமுறை படுத்த வேண்டும் என்றார்.இது போன்ற கொலு வைக்கும் போது ,சுமார் 3 நாட்களுக்கு முன்,கொலு பொம்மைகளை எடுத்து துடைத்து,மற்ற ஆயத்த பணிகளை தொடங்க வேண்டும். இதே போன்று கொலு முடிந்த பிறகும் மூன்று நாள் பணிகள் இருக்கு..பொம்மைகளை துடைத்து மீண்டும் சில ரசாயன பூச்சு அடித்து கவனமாக பேக் செய்து வைக்க வேண்டும்.சில பொம்மைகள் வைக்கும் போதே உடைந்து விட வாய்ப்புண்டு.எனவே கவனமாக கையாள வேண்டும் என்றார். அனைத்து கொலு பொம்மைகளையும் அட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்து,படிகள் பிரித்து என நினைக்கும் போதே இது 3 நாள்களுக்கு மேலான  வேலை என்று தான் தோன்றியது.

இவை அனைத்தும் தேநீர் குடித்துக் கொண்டு நம்மிடம் பகிர்ந்த செய்திகள். நமக்கு முழு கொலு படிகளையும் காட்சியாக பதிய வேண்டும் என்றோம். வீட்டு வாசலில் இருந்து முயற்சி செய்யுங்கள் என்றார்.இதோ..தங்களின் பார்வைக்கு.






ஏதோ.நம்மால் முடிந்த வரை முயற்சி செய்து பார்த்தோம் என்று தான் சொல்ல முடியும். சித்தர்கள் கொலுவை ஒவ்வொன்றாக எடுத்தோம். அருமையாக சித்தர்கள் தரிசனம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.


                                        சிவ வாக்கியர் முதல் குதம்பை சித்தர் வரை


                      பாம்பாட்டி சித்தர் முதல் போகர் வரை தரிசனம் பெறுங்களேன்








காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர், சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும், பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி, நந்திதேவர்
கோப்பான கோரக்கர், பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் , சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி,கமலமுனி காப்புதானே என்ற சித்தர் காப்பினை மனதுள் துதித்தோம். சித்தர்கள் தரிசனம் இங்கே நாம் பெற்றது மட்டற்ற மகிழ்வே.









இதோ..மேலும் சில கொலு தங்களின் பார்வைக்காக மேலே. மெதுவாக ஒவ்வொரு கொலுவாக பாருங்கள்.அருமையாய் இருக்கும். கண்களுக்கு விருந்தாய் இருக்கும்.








அப்படியே சில மணித்துளிகள் கழித்து, நால்வரின் பாதையில் யாத்திரை பற்றி பேச ஆரம்பித்தோம். ஏகப்பட்ட விஷயங்களை பரிமாறிக் கொண்டோம். information is wealth என்பதை நம் TUT தளம் மூலம் அறிந்து வருவதாக ஐயா கூறினார். பேச்சினூடே, இனிப்பு,காரம் என்று உபசரிப்பாக வயிற்றுக்கு உணவு..பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அதற்குள் அன்றைய தினம் பூஜை முடித்து, சுண்டல் நைவேத்தியமாக கொடுத்தார்கள். நாம் பார்சல் செய்து கொண்டோம்.

மீண்டும் கொலு பக்கம் திரும்பினோம்.குருவருள் பெற கீழே உள்ள காட்சியை பார்க்கவும்.






கொலு முழுதும் கண்டீர்களா? நல்லதோர் அனுபவம் கிடைத்திருக்கின்றது அல்லவா?







அவரிடம் விடை பெற்றுக் கொண்டு,கூடுவாஞ்சேரி வந்து, தாயார் இருவரையும் சந்தித்து தரிசனம் பெற்றோம்.வீட்டிற்கு சென்று, சுரேஷ் பிரியன் ஐயா கொடுத்த பார்சல் பிரித்து சாப்பிட்டோம்.அடடே..என்ன சுவை. சுண்டல், எலுமிச்சை சாதம் சொல்லவா வேண்டும் ? நல்ல காம்பினேஷன்.சூப்பர் டேஸ்ட். மனதார நன்றி சொன்னோம். இது போல் அழகிய நிகழ்வில் நம்மை அழைத்து,சிறப்பாக உபசரித்து, நவராத்திரி சிறப்பு பற்றி எடுத்துரைத்த சுரேஷ் பிரியன் ஐயா மற்றும் அவர் தம் அன்பு குடும்பத்தார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

நன்றி.திரு.சுரேஷ் பிரியன் ஐயா 

தள வாசகர்கள் அனைவரது இல்லத்திலும் சுபிக்ஷமும் லக்ஷ்மி கடாக்ஷமும் தழைத்தோங்க அம்பாளை பிரார்த்திக்கிறோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

நவராத்திரி சிறப்பு பதிவு - கொலு பொம்மையின் தத்துவம்! (4) - https://tut-temple.blogspot.in/2017/09/4.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html