Subscribe

BREAKING NEWS

21 March 2018

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (8)

அன்பார்ந்த மெய்யன்பர்களே..

தளத்தின் பதிவுகளில் சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளது. சென்ற வாரம் வெள்ளியங்கிரி  சென்று வெள்ளியங்கிரி ஆண்டவர்  தரிசனம் பெற்றோம். இரண்டாம் முறை  பயணம். பயண அனுபவத்தை சிறப்பாக  தர முயற்சிக்கின்றோம்.  இதோ மீண்டும் வாழ்வாங்கு வாழ தொடர்பதிவில் தங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இந்த தொடர்பதிவில் பக்தி,யோகம் என்று சகலவிதமான கருத்துக்களை உள்வாங்கி வருகின்றோம். நாம் எதையும் தீர்மானிப்பதில்லை. அனைத்தும் அவன் அருளாலே தான் நடைபெற்று வருகின்றது. இந்த முறை ஒரு யதார்த்தமான கேள்வி பதில் பதிவை திரு.ராம் மனோகர் அவர்களிடமிருந்து பெற்று தர விரும்புகின்றோம்.

கேள்வி - காமம், கோபம், மோகம், பேராசை என்பதெல்லாம் இரத்தத்திலேயே இருக்கின்றது போலும்! அவற்றை வெல்லவே முடியவில்லையே?

இராம் மனோகர் - அவை இரத்தத்தில் இருக்கிறதோ அல்லது நம் சித்தத்தில் இருக்கிறதோ இங்கே அதுவல்ல பிரச்சனை. நாம் அவற்றை வெல்ல வேண்டும் என்று நினைப்பதுதான் பிரச்சனை. சற்று சிந்தித்துப் பாருங்கள். வெல்லப்பட வேண்டும், அல்லது அழிக்கப்பட வேண்டும் என்றால், பரிணாம வளர்ச்சியின் அர்த்தம்தான் என்ன ? சிருஷ்டியின் நோக்கமே கேள்விக் குறியாகி விடாதா ? இது போன்ற மனப்பான்மைகளால்தானே நாம் இறைவனுக்கே எதிரிகள் இருப்பது போன்ற பல்வேறு கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் !!!? தேவையில்லாமல் இங்கே எதுவும் படைக்கப்படவில்லை. ஏதோ ஒரு தேவை யாருக்கோ, எதற்கோ இருப்பதினால்தான் சிருஷ்டியின் திட்டத்தில் இவைகளெல்லாம் இருக்கின்றன. காமம், கோபம், மோகம், ஆசை அனைத்துமே நம்மைப் பக்குவப்படுத்தும் நிலைகள்தாம்.

ஆனால், கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. இந்தக் காமமானது எழுந்து விட்டால் எளிதில் அடங்காது. கோபம் நம்மையே கூட எரித்து விடும் அக்கினியாகும், மோகமும், ஆசையும் மனதை குழப்பமடையச் செய்து கொண்டே இருக்கக் கூடியவை. எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம், இந்த விகாரங்களில் மனதைச் சலனமடைய விடாமல் பார்த்துக் கொள்ளவது மட்டுமே. காமத்தை சரியான முறையில் பயன்படுத்து, அனுபவி. தேவைப்படும் இடத்தில் கோபத்தைக் காட்டு. அதிலேயே நிலைத்து நிற்காதே. மனதை அடுத்த செயலை நோக்கி நகர்த்தப் பழகிக் கொள். அத்தியாவசியத் தேவைகளுக்கு ஆசைப்படு. அவைகள் மீது மோகம் கொள். அடைந்தவுடன் ஆசையையும், மோகத்தையும் மறந்து வேறு வேலைகளைப் பார்.
யோக சாதனங்கள் என்பது சிறைக் கூடமல்ல. மனதை, அறிவைச் சுதந்திரமாகச் செயல்படுத்த வேண்டிய நுட்பமாகும். ஒரு அறைக்குள் போய் தியானம் செய்கிறேன் என்று நீங்கள் உட்கார்ந்து கொள்வதில் தவறொன்றுமில்லை. ஆனால், அந்த அறையை வெளியே இருந்து யாராவது தாளிட்டு விட்டால், உங்கள் நிலை என்ன ? நாம் அங்கே கைதியாகி விடுகிறோம். அதாவது பிணைக்கப்பட்டு விடுகிறோம். அது போலவே சாதனங்களுக்காக சில கட்டுப்பாடுகளை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் நம் சுதந்திரமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளுக்கு நாம் அடிமையாகி விடக் கூடாது. அடிமைகள் ஒருபோதும் வீடுபேற்றை அடையப் போவதில்லை.

எனவே இந்த உணர்வுகளையெல்லாம் அழிக்க முற்படாதே. ஒரு வீரனைப் போல அவற்றின் ஊடாகவே அவற்றைக் கடந்து செல். அவைகளுக்குக் கட்டுப்படாமல் பீடு நடை நடந்து செல். நம் நிலைமை அப்படி இருப்பதில்லை. காமம் நம்மை விட்டாலும் நாம் அதை விடுவதில்லை. பற்றிப் பிடித்து வைத்துக் கொள்கிறோம். கோபம் வந்தால் அமைதியை இழந்து விடுகிறோம். மோகம் வந்தால் மோகியாகி விடுகிறோம், ஆசை ஏற்பட்டால் அதைப் பேராசையாக வளர்த்துக் கொள்கிறோம். அவைகளைக்கு அடிமையாகி விடுகிறோம். தளைக்கப்படுகிறோம், தடைபட்டு நிற்கிறோம். அதனால்தான் இந்த அவசியமான உணர்வுகள் கூட நமக்கு அவசியமில்லாத, துன்பத்தை ஏற்படுத்தும் விகாரங்களாகத் தோன்றுகிறது.
தவறு படைப்பிலோ, உணர்வுகளிலோ இல்லை.
அவற்றைக் கையாளும் நம்மிடத்தில்தானிருக்கிறது. எனவே காமம், கோபம், மோகம், ஆசை இவற்றையெல்லாம் நாம் அவைகளுக்கு அடிமையாகி விடாமல் உபயோகித்துக் கடக்க வேண்டும். அடிமைப்பட்டவன் வீழ்ந்து கிடப்பான். சுதந்திரமாக அவற்றைக் கடந்து செல்பவன் வீட்டிற்குச் செல்வான். இவைகளெல்லாம் நம் தோட்டத்தில் இருக்கும் கிணறு போன்றவை. தேவைகளுக்காகத்தான் தோண்டப்பட்டது. தேவைப்படும் பொழுது மொண்டு தலையில் ஊற்றிக் கொள்ளலாம், தாகம் தீர்த்துக் கொள்ளலாம், கை கால் கழுவிக் கொள்ளலாம் அவ்வளவே. ஆனால், கிணறு என்பது அதில் விழுந்து உயிரை விடுவதற்காக அல்ல.

அனைவருக்கும் எழக் கூடிய மற்றுமொரு கேள்வி. 

கேள்வி - ஐயா அதிகாலையில் எழுந்து தியானம் செய்ய வேண்டும் என்கிறார்கள். என்னால் 6 மணி வரை எழுந்திரிக்கவே முடியவில்லை. என்னதான் செய்வது?



இராம் மனோகர் - என்ன செய்ய முடியும் ? ஒன்றும் செய்ய முடியாது. ''முடியாது'', ''முடியவில்லை'' என்று சொல்பவர்களால் எதையுமே திறம்பட செய்ய முடியாது. அதிகாலை என்பது மகத்துவமானது. சூரியனின் சஞ்சாரத்தை வைத்துதான் நம் முன்னோர்கள் உயிரின் இயக்கத்தைப் பற்றி ஆராய்ந்து தெளிந்தார்கள். சந்திரனின் இயக்கம் உடலையும், மனதையும் கட்டுப்படுத்துவது. சூரியன்தான் ஆன்மாகாரகன். சூரியன் இல்லை என்றால் சந்திரன் இல்லை. ஆன்மா இல்லை என்றால் உயிர் இல்லை, உடல் இல்லை, மனமுமில்லை. பிரபஞ்ச சக்திகளை நம் பூமிக்கு தன் கதிர்களின் மூலம் கொண்டு வருவது சூரியனே. சூரியன் இல்லை என்றால் எந்த உயிரினங்களோ, தாவரங்களோ பூமியில் இருக்காது. சூரியன் கொண்டு வரும் பல்வேறு பிரபஞ்ச சக்திகளை பூமியில் உள்ள அனைத்தும் தேவைக்கேற்பக் கிரகித்துக் கொண்டு இயங்குகின்றன. எனவேதான் சூரியனையே கடவுளாக ஆதி தமிழர்கள் வணங்கியிருக்கிறார்கள்.

சூரிய கலை, சந்திர கலை என்று மூச்சு மாறி ஓடும் போது நம் உடலின் இயக்கங்கள் எப்படி மாறியமைகின்றதோ, அது போல சூரியன் உதித்து தோற்றத்தில் இருக்கும் பொழுது ஒரு விதமாகவும், மறைந்து விடும் பொழுது வேறு விதமாகவும் பஞ்சபூதங்களின் சூக்கும இயக்கங்கள் மாறி அமைகின்றன. இந்த அடிப்படையில்தான் சிருஷ்டியின் இயக்கம் பூமியில் நடைபெறுகிறது. நம் உடலில் பகல் முழுவதும் உழைப்பு, உணவு போன்ற இயக்கங்கள் நடக்கின்றன. இரவு ஓய்வு மற்றும் சீரமைப்பு பணிகள், கழிவுகளை பிரித்தெடுத்தல் போன்ற பணிகள் நடப்பது போல, பூமியிலும் சூரியனை மையமாகக் கொண்டு இத்தகைய பணிகள் சூக்குமமாக நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய இயக்கங்களுக்குத் தேவையான அடிப்படை ஆதார சக்தியான பிரபஞ்ச சக்தியை பூமிக்குக் கொண்டு வருவது சூரியனே.

அது மறையும் பொழுது சந்திரன் ஓரளவு சூரியன் இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறது. பகல் முழுவதும் சூரியனின் சஞ்சாரத்தால் பூமி வெப்பமடைகிறது. அந்த வெப்பம் சூரியன் மறைந்த பிறகு அதிகாலை நாலு மணி அளவில்தான் குறைந்து பூமி குளிரும். வெப்பம் அதிகமாக இருக்கும்போது பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள பிராண சக்தி (Oxygen) விட குளிரும் பொழுது அதன் மூலக் கூறமைப்பு அதிகமாகி ஓசோனாக இருக்கும். நம் பிராண சக்தியானது சாதாரண நிலையில் இருப்பதை விட ஓசோனாக இருக்கும்போதுதான் மிகவும் சக்தியளிப்பதாக இருக்கும். எனவே, அதிகாலைப் பொழுதில் குளிர்ச்சியான தன்மையால் நம் பூமியின் நிலப்பரப்பில் அதிக அளாவில் ஓசோன் பிராண வாய்வு இருக்கும். இது சூரியன் எழும்பியதும் இந்நிலை மாறிவிடும்.
அதிகாலை 4.30 மணிக்கு நம் பெருங்குடலும், நுரையீரலும் புத்துணர்வு பெற்று செயல்படத் துவங்கும் காலமாக விஞ்ஞானம் சொல்கிறது. அந்த நேரத்தில் நம் பூமிப் பரப்பில் அதிக ஓசோன் வாய்வு கூடியிருக்கும் பொழுது நாம் விழித்து, காலைக் கடன் முடித்து நாம் யோகப் பயிற்சிகள் செய்யும் பொழுது நமக்கு நாள் முழுவற்கும் தேவையான புத்துணர்வு கிடைத்து விடுகிறது என்று சொல்லப்படுகிறது. இதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து சொல்வதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஆனால், நம் முன்னோர்கள் இந்த நுட்பத்தை எப்படி உணர்ந்து, அதிகாலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று சொன்னார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், அவர்கள் அறிவின் திறம் விளங்கும்.
மனிதன் இரவு முழுவதும் தூங்கி விட்டு, அதிகாலையில் எழும்போது அவன் புத்துணர்வு பெற வேண்டும் என்று இயற்கையானது தயாராக காத்திருக்கிறது. ஆனால், மனிதன் இதைப் புரிந்து கொள்ளாமல் தாமதமாக எழுந்து புத்துணர்வை இழந்து சிரமப்படுகிறான், அதிகாலை 3.40 லிருந்து 4.53 வரை ஆகஞாவில் 1000 சுவாசங்கள் ஓடுகின்றன. அதன் பிறகு காலை 6 மணி வரை சகஸ்ராரத்தில் 1000 சுவாசங்கள் நடை பெறுகின்றன.

இதில் ஆக்கினையிலும், சகஸ்ராரத்திலும் சுவாசம் நடைபெறும் பொழுது யோகப் பயிற்சிகள், பிராணாயாமம், ஆசனப் பயிற்சிகள் செய்வதால் பலன் இரட்டிப்பாகும் என்று சொல்லப்படுகிறது. மற்ற எல்லாச் சக்கரங்களையும், நாடிகளையும் கட்டுப்படுத்தும் சுரப்பிகள் இந்த இரண்டு ஆதரங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் நாள் முழுவதும் அவற்றின் இயக்கங்கள் சீராக இருக்கும் என்பது நம் முன்னோர்களின் அறிவுரையாகும். மிர்தம் என்றால் அழிவு. அமிர்தம் என்றால் அழிவற்றது என்பது பொருள். பிரதோச வேளையில் பிரபஞ்ச சக்தி குறைவாகிப் போகிறது. எனவே அந்த வேளையில் பிரபஞ்ச சக்தியை கிரகித்து வழங்கும் கோவில்களுக்குள் இருப்பது நல்லது என்பது கோட்பாடு.

அது போல அதிகாலையில் பிராணவாயுவில் ஆக்சிஜன் மூலக்கூறு அதிகமுடைய ஓசோன் இருப்பதால் இந்த வேளைகளில் சாதனங்களைக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். இதையே அமிர்தக் காற்று என்றும், ப்ரம்மக் காற்று என்றும் சொல்வார்கள். பர்ம்ம சக்தி அதிகமுடைய வேளையையே ப்ரம்ம முகூர்த்தம் என்று சொல்லும் வழக்கம் வந்தது. இதில் ப்ராணாயாமம் மற்றும் யோகம் செய்பவர்களுக்கு அமிர்தம் உண்டால் ஏற்படும் பலன்கள் கிட்டும் என்பது சூட்சுமம். சாதாரண வாயுவில் இரண்டு ஆக்சிஜன் மூலக் கூறுகளே இருக்கும். அதிகாலை ஓசோன் கலந்த வாயுவில் 5 ஆக்சிஜன் மூலக் கூறுகள் இருக்கும். இதில் பஞ்சபூதங்களின் சூக்கும சக்திகளான தன்மாத்திரைகள் கலந்திருக்கும். எனவே அவற்றால் உருவான நம் உடலும், உடல் தத்துவங்களும் இத்த வேளைகளில் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் சிறப்பாகச் செயல்படும்.
அதாவது இரண்டு ஆக்சிஜன் மூலக்கூறு கொண்ட வாயுவில் ப்ருதிவி, அப்பு என்ற இரண்டு பஞ்சபூதத் தன்மாத்திரைகளே கலந்திருக்கும். அதோடு மூன்று ஆக்சிஜன் மூலக்கூறு கொண்ட தேயு, வாயு, ஆகாயம் என்ற மூன்று பஞ்சபூதத் தன்மாத்திரைகள் கலந்த ஓசோன் என்கிற அமிர்தப் ப்ரம்ம வாயு கலந்திடும் போது ஐந்து மூலக் கூறுகள் கொண்ட அமிர்தக் காற்றாக மாறி அதில் ஆகாயம், ப்ருதிவி, அப்பு, தேயு, வாயு ஆகிய ஐந்து பஞ்சபூதத் தன்மாத்திலைகளும் கலந்திருக்கும். இந்த அமிர்தக் காற்றை முறைப்படுத்தி ஏற்றுக் கொள்பவன் தேவர்களுக்கும் மேலானவன் என்பது சித்தர்கள் வாக்கு. விடியலைக் காணாதவன் வாழ்வில் விடிவு காலமே ஏற்படாது என்பதுதான் உண்மை.

மீண்டும் மீண்டும் படித்தால் தான் நாம் உணர முடியும். படித்து பின்பற்றுங்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7) - http://tut-temple.blogspot.in/2018/01/7_22.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html 

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html 

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment